வெள்ளி, 15 ஜூன், 2018

தன்னை உணர்தல் - வாசித்தல் வழியாக.

🌸 தன்னை உணர்தல் - வாசித்தல் வழியாக


வாழ்க்கையில் நமது புரிதல்கள் கால ஓட்டத்தில் மாறிக் கொண்டே வருகிறது.

நமக்கு நன்மை எது, தீமை எது என்பதை அனுபவங்கள்  கற்றுத் தருகின்றன.

துயரமான வருடங்களில், தனிமையில், இழப்புக்களில், ஏமாற்றங்களில், துரோகங்களில், தவறுகளில் இருந்தே நாம் சிறந்த பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம்.

எதையும் நம்பும் மனம் தோல்வியை எதிர் கொள்ளும் போது, ஏமாற்றத்தை  சந்திக்கும் போது வாழ்வின் பல உண்மைகளை கற்றுக் கொள்கிறது.

இத்தகைய மனச் சோர்வான தருணங்களில் இருந்து நம்மை மெல்லத் தூக்கி எடுத்து வாழ்க்கை பாதையில் மீண்டும் நிலை நிறுத்துவதில் சிறந்த புத்தகங்களின் பங்களிப்பு அபாரமானது.

நமது அறிவின் கூர்மை, திறன், புரிதல் நல்ல புத்தகங்களை வாசிப்பதினால் மேம்படுகிறது.

சிறந்த புத்தகம் என்பது மனதில் அன்பை விதைக்க வேண்டும்.

வாசித்தல் நம்மை சக உயிர்களையும் தனது உயிரைப் போல் கருதும் உணர்வை ஊட்ட வேண்டும்.

அகந்தையை அழிக்க வேண்டும்.

பிறர் வலி உணர்ந்து அதைத் துடைக்க வேண்டும் எனும் மன நிலைக்கு உயர்த்த வேண்டும்.

மாறாகப் பிரிவினையை, சக மனிதனை வெறுக்கும் படி வன்முறையைத் தூண்டுகிற எழுத்துக்கள் நஞ்சை விடக் கொடியது.

வாசித்து உணர்ந்த கருத்துக்களை வாழ்வில் அப்பியாசம் செய்யப்படும் போது மட்டுமே அது மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

நல்ல கருத்துக்கள் கடைப்பிடிப்பதன் வழியாக  நம்முடைய
மனசாட்சியானது உயிர்ப்படைகின்றது.

மனசாட்சியை உணர்தல் என்பது சுய வெளிப்பாட்டின் ஒரு உயர்ந்த அனுபவம்.

எளிமையான, தூய்மையான, திறந்த, தன்னலமற்ற மனதை சிறந்த நூல்கள் நம்முள் உருவாக்குகிறது.

உயர்ந்த சிந்தனைகளைப் பெறுவதற்கு நமது மனம் ஏற்றுக் கொள்ளும் தன்மையுடன் இருத்தல் அவசியம்.

ஏதேனும் ஒரு கொள்கையில் தீவிரமாக பற்றுக் கொண்ட மனம் முழுமையான உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியாது.

உண்மையை முழுமையாக அறிய வேண்டும் என்றால் பயமின்றி கற்றுக் கொள்ள விழையும் மனம் அவசியம்.

தூய்மையான அன்பால் நிறைந்த மனம் உண்மையைக் கற்றுக் கொள்ள
எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.

எல்லாம்  எனக்குத் தெரியும் எனும் மனப்போக்கு கற்பதை  தேக்கமடையச் செய்யும்.

நாம் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொண்டபோது மனம் தன்னில்தானே பெருமை கொள்கிறது. தன்னம்பிக்கை அடைகிறது.

இந்த உணர்வு அகந்தையாக மாறும்போது அது தன்னைத்தானே மையப்படுத்தும் எண்ணங்களை
உருவாக்கி விடுகிறது.

இது தொடர்ந்து கற்றலைச் சாத்தியமில்லாமல் செய்துவிடுகிறது.

பரந்து விளங்கும் இந்தப் பிரபஞ்சத்தில் நான் ஒரு துகள் என்ற ஆழமான உணர்வு மனத் தாழ்மையை தரும்.

இந்தப் பிரபஞ்சத்தின் அளவற்ற தன்மையை உணரும்போது  ‘நான்’ என்கிற உணர்வுக்கு அப்பால் மனம் கடந்துவிடுகிறது.

அத்தகைய முதிர்ச்சி அடைந்த மனம் நல்லது, கெட்டது
எனும் பாகுபாட்டை செயல்களையும் அதன் விளைவுகளைக் கொண்டு மட்டுமே தீர்மானிக்கும்.

நல்ல செயல்களை போற்றுகிறது. அந்த செயலைச் செய்தவரை வாழ்த்துகிறது.

தீய செயல்களை வெறுக்கிறது. ஆனால் தீமை செய்பவர்களை பழி தீர்ப்பதில்லை.

முதிர்ச்சி அடைந்த மனம் இறந்த காலத்தின் நினைவுகளில் அலசலடிப்பட்டு உறைந்து போவதில்லை.

எதிர்காலத்தினைக் குறித்த அச்சத்தில் அமிழ்ந்து போவதும் இல்லை.

அது நிகழ்கால தருணத்தின் செயல்களில் மாத்திரம்  முழுமையான கவனம் செலுத்துகிறது.

இதனால் வீணான, தேவையற்ற தொடர்ச்சியான எண்ணங்களின் போராட்டத்திலிருந்து மனம் விடுதலை அடைகிறது.

இது ஒன்று  எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைத் தரும்.

வாழ்வில் வெளிப்புற சூழலை மாற்றுவதை விட உட்புறமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தால் அது மிகச் சிறப்பானது.

இந்த உள்ளான மாற்றத்தின் தாக்கம் செயல்களாக வெளிப்படும்போது சுற்றி வாழும் சமூகத்தை உயர்த்துகிறது.

இந்தப் பயிற்சியில் நாம் எந்த அளவுக்கு நமது சக்தியையும், நேரத்தையும் செலவிடுகிறோமோ, அந்த அளவுக்கு நமது வாழ்க்கை அர்த்தம் நிறைந்ததாக மாறுகிறது.

4 கருத்துகள்: