ஞாயிறு, 17 ஜூன், 2018

வஞ்சகம் பேசேல்.

27 - வஞ்சகம் பேசேல்.

(ஆத்திசூடி - உயிர்மெய் வர்க்கம்.)

தான் வாழ்வதற்காக அடுத்தவரை ஏமாற்றிப் பொய் சொற்களைப் பேசாதே என்பது இதன் பொருள்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உள்ளது என்பதை உணர்த்துவதே நீதி போதனைகளின் அடிப்படை கோட்பாடு.

ஒரு செயலை செய்யாதே என்று அது வலியுறுத்தினால் அதன் பொருள்:

அந்தத் தீய செயலைச் செய்யும் போது  அது பிறருக்கு தீராத மன வேதனையை வருவிக்கும்.

அப்படித் துயரம் பட்டவர் விடும் கண்ணீர் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் கட்டாயம் திரும்பி நம்மை வந்தடையும். 

எனவே தற்காலிகமாக அது அளிக்கும் அற்ப சந்தோஷத்திற்காக உனது விலைமதிப்பற்ற உயர்ந்த வாழ்வை இழந்து விடாதே என்பதாகும்.

இன்றைய காலகட்டத்தில் இந்தக் கருத்தை நாம் மிக அவசியமாகத் தியானிக்க வேண்டும்.

சுயநலம் மிகுந்த ஒரு காலத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

எப்படியாவது பிறரை ஏமாற்றி சுக வாழ்வு வாழ்ந்தால் போதும் என்கிற மனநிலை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

பொய் பேசுதல், ஏமாற்றுதல், நடித்தல் இவை அனைத்தும் வஞ்சகம் மற்றும் சூழ்ச்சி செய்பவர் ஆயுதங்கள். 

இத்தகைய சூழ்ச்சி செய்பவர் முகஸ்துதி செய்வது, ஒரு பொருளை தருவதாக ஆசை காண்பிப்பது, உங்கள் விருப்பத்தை அறிந்து அதைத் தவறான வழியில் அடையும்படி ஊக்குவிப்பது என தங்கள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள கருத்தாக முயல்வார்கள்.

முதலாவது கருத்தில் கொள்ள வேண்டியது: இப்படி பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் மக்கள் ஒரு போதும் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்த வாழ்க்கை வாழ முடியாது. 

நிச்சயமாக அவர்கள் அதற்குரிய தண்டனை அடைவார்கள்  என்பதை நம் மனதில் ஆழமாகப் பதிந்து கொள்ள வேண்டும்.

இந்த நம்பிக்கை நம்மை எந்தச் சூழ்நிலையிலும் பிறரை ஏமாற்றிப் பிழைக்க கூடாது எனும் உணர்வை நம் மனதில் உறுதியாகப் பதித்துவிடும்.

இரண்டாவது நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டியது: ஏமாற்றுபவர்களை விட்டு எவ்வளவு தொலைவு விலகி இருக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலகி வாழவேண்டும்.

"உள்ளோன்று வைத்து புறமொன்று பேசுவார் தம் உறவு கலவாதிருக்க வேண்டும்" என்பது வள்ளலார் வாக்கு.
மிகப் பெரும் பணக்கார உறவினர்  ஒருவர் கதை இது.
எல்லாரையும் சாதுரியமாக ஏமாற்றி மிகப் பெரும் செல்வந்தர் ஆனார். எப்போதும் வாயில் வஞ்சகம். 
வட்டி கொடுப்பது பிரதான தொழில். அவரிடம் சிக்கி கொண்டால் வாங்கியது போல நாலத்தனை பணத்தை இழக்க வேண்டி இருக்கும்.
அவர் இப்படி தவறான வழியில் பொருட்கள் ஈட்டுவதைக் குற்றமாக கருதவில்லை.
அவர் குழந்தைகள் வசதியானவர்கள் படிக்க இயலும் உயர்ந்த கல்விச் சாலைகளில் கற்றனர். தனது குழந்தைகளை பார்த்துப் பார்த்து வளர்த்தார். ஆண்டுகள் பல கழிந்தன.
ஆனால் பிள்ளைகள் வளர்ந்தபோதோ தந்தையின் சொத்துக்கள் அனைத்தையும் குடித்து, தவறான நண்பர்கள், உறவுகள் என  விற்று அழித்தனர். ஏழு தலைமுறைகள் இருக்கும் என நம்ப்பட்ட சொத்துக்களை அவர் கண்முன் முதிர் வயதில் அவர் பிள்ளைகளே  அழித்துக் கரைத்தனர்.

விதி வலியது. 

தனது குழந்தைகளுக்காக அவர் தவறான பாதையில் சேர்த்த பணத்தை அந்தப் பிள்ளைகளை வைத்தே விதி அழித்தது.

கண்முன் நிகழும் அதைத் தடுத்து நிறுத்த யாராலும் முடியாது.
இறைவன் மனதை ஆட்டிப் படைப்பவன்.
செய்த தவற்றை கண்ணீர் விட்டுக் கதற வைக்கும் சூழலை உருவாக்குவார்.
வஞ்சகம் செய்தல் கூடாது.
வஞ்சகரோடு வாழ்தலும் கூடாது.




2 கருத்துகள்: