வெள்ளி, 22 ஜூன், 2018

ஒரு நேரத்தில் ஒரு செயல்

🌸 ஒரு நேரத்தில் ஒரு செயல்.

Thich Nhat Hanh



(இந்து நாளிதழ் (22-06-2018)  என். கௌரி அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து சாரம்)

Thich Nhat Hanh வியட்நாமில்  வாழ்ந்த பவுத்த சமய துறவி.

இவரின் மிகச் சிறந்த வழி காட்டும் நூல்:
‘The Miracle of Mindfulness: An Introduction to the Practice of Meditation’ என்ற புத்தகம்.

இந்தப் புத்தகத்தில் அன்றாட வாழ்க்கையில் நமது எண்ணங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை முன்வைக்கிறார்.

🔹 தற்கண உணர்வு:

(நிகழ்காலத்தில் வாழ்தல் - Living at the moment).

மனிதர்கள் எப்போதும் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருப்பதால் அவர்களுக்கு தற்கண உணர்வுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் சாத்தியப்படவில்லை.

தற்கண உணர்வே இல்லாமல் பொறுமையின்மை, கோபம் போன்றவற்றுடன் ஒரு வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஒரு நேரத்தில் ஒரே ஒரு செயலை மட்டும் செய்வதன் மூலம் தற்கண உணர்வைக் கைக்கொள்ள முடியும்.

இதன் வழியாக அமைதியை உடனடியாகக் கண்டடைய முடியும்.

🔸 தற்கண உணர்வை அடையும் வழிகள்.


தற்கண உணர்வோடு வாழ்வதற்கு எதிராக இருப்பது எது என்றால் மனதில் எழும் நிலையற்ற தன்மையும், மறதியும்.

நம் எண்ணங்கள் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். 

இந்த அலைபாய்ச்சல் நமது சிந்தனையை தடம் புரள செய்யும்.
 
இப்படி மாறி மாறி சிந்தனையை சிதற விடாமல் தற்கண உணர்வைத் தக்கவைப்பதற்கான சிறந்த வழிகள்

▪ மூச்சுப் பயிற்சி

▪ சுய கண்காணிப்பு

▪ புன்னகை

🔹 மூச்சுப் பயிற்சி:


சுவாசத்தைக் கட்டுப்படுத்த கற்றுக்கொண்டால், நம் உடல்களையும் மனங்களையும் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டதாக அர்த்தம்.

சுவாசத்தின் மீது கவனத்தைத் திருப்பும்போதே மன அலைச்சல் இருந்து படிப்படியாக விடுபட்டுவிட முடியும்.

மூச்சுப் பயிற்சியைச் சரியாக மேற்கொள்பவர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க முடியும்.

எண்ணங்கள் தலையில் கூட்டம் கூட்டமாகத் தோன்றிக் கொந்தளிக்கும்போது, உடலுக்குக் கவனத்தைத் திருப்பி பிரக்ஞையுடன் சுவாசத்தை மேற்கொண்டால், மனதுக்கும் உடலுக்கும் ஆறுதல் ஏற்படுவதை உணர முடியும்.

🔸 சுய கண்காணிப்பு:


விழிப்புணர்வு என்பது தியானப் பயிற்சியின்போது மட்டும் இருப்பதில்லை. அது இருபத்துநான்கு மணிநேரமும் நம்மிடம் இருப்பது.

எந்தப் பணியை மேற்கொண்டிருந்தாலும் நமக்குத் தற்கண உணர்வு இருக்க வேண்டும்.

உங்களது எண்ணங்களைத் தொடர்ந்து நீங்கள் கண்காணிக்க வேண்டும்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் உங்களுக்கு நீங்களே அமைதியாக விளக்க வேண்டும்.

உதாரணமாக, “நான் இந்தப் பாதையின் வழியாக என் கிராமத்துக்குச் செல்கிறேன்” என்று சொல்லும்போது, நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியின் அற்புதத்தையும் உங்களால் பாராட்ட முடியும்.

🔹 புன்னகை


காலையில் தூக்கத்திலிருந்து விழிக்கும்போதே புன்னகையுடன் விழிப்பது தற்கண உணர்வை அடைவதற்கான சுவாரசியமான வழி.

இந்தப் புன்னகையை நாள் முழுவதும் தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

கோபமாக இருக்கும் சூழ்நிலையில் இருந்தாலும் சரி, இசை கேட்கும் மன நிலையில் இருந்தாலும் சரி,  நேரம் கிடைக்கும் போதெல்லாம் புன்னகையுங்கள்.

இப்படிப் புன்னகை புரிவதன் மூலம் உங்கள் துக்க அல்லது சந்தோஷ உணர்வுகளில் நீங்கள் கரைந்து விடாமல் உங்களது தற்கணத்தில்  மனதை இருத்த உதவும்.

விழிப்புணர்வுடன் ஒரு நாள்:


ஒரு வாரத்தில் ஒரு நாள் முழுவதும் தற்கண உணர்வைப் பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்துகிறார் நாட் ஹான்.

அந்த நாளில் வீட்டைச் சுத்தப்படுத்துவது, குளிப்பது என எந்தச் செயலைச் செய்தாலும் அந்தச் செயலைப் பொறுமையாகவும் விருப்பத்துடனும் அனுபவித்தும் செய்யச் சொல்கிறார் அவர்.

வாரத்தில் ஒரு நாள் இந்தத் தற்கண உணர்வுப் பயிற்சியை மேற்கொண்டால் அது வாரம் முழுவதும் பெரும் பயனைத் தரும் என்கிறார் அவர்.

♦ இக்கணமே சிறந்தது (டால்ஸ்டாயின் மூன்று முத்தான சிந்தனைகள்)

இந்தப் புத்தகத்தில், டால்ஸ்டாய் சிந்தனையை  Thich  Nhat Hanh மேற்கோள் காட்டுகிறார்.

ஒவ்வொரு செயலைச் செய்வதற்கும்:


  • எது சிறந்த நேரம்? 
  • ஒரு பணியை இணைந்து மேற்கொள்வதற்கான முக்கியமான நபர்கள் யார்?
  • எப்போதுமே செய்ய வேண்டிய முக்கியமான பணி எது?


▪ மிகச் சிறந்த நேரம் என்பது இக்கணம்தான். 

▪ மிக முக்கியமான நபர் என்பவர் எப்போதும் உங்களுடன் இருப்பவர்தான். 

▪ மிக முக்கியமான பணி என்பது உங்களுடன் சேர்ந்து பயணிப்பவரை மகிழ்ச்சிப்படுத்துவதுதான்.

இப்போதும் நாம் இருக்கும் நிலையில், நம் அருகிலிருப்பவர்களுக்கு எதைச் செய்ய இயலுமோ அதைச் செய்வதே சரியான செயல்.

நமக்கு அருகிலிருப்பவர்களின் மகிழ்ச்சிக்கு வழிசெய்யாமல் நம்மால் உலகத்தைச் சிறந்த இடமாக மாற்ற முடியாது.

6 கருத்துகள்: