திங்கள், 18 ஜூன், 2018

தனித்துவம்

தனித்துவம்.



  
ஒவ்வொருவருக்குள்ளும் ஏதாவது ஒரு சிறப்பான திறமை மறைந்து இருக்கும். அதை அடையாளம் கண்டு வளர்த்து எடுத்தால் தனித்துவத்தோடு மிளிர முடியும்.

எந்தவொரு செயலில் ஈடுபடும் போது மனம் தன்னை மறந்து லயித்து அதில் மூழ்கிப் போகிறதோ அந்தச் செயல் தான் இயல்பாக அளிக்கப்பட்ட வரம்.

அந்த செயலைச் செய்யும் போது சூழ இருக்கும் சப்தங்கள் கேட்காது. அந்தச் செயலை செய்துமுடிக்கும் வரை பசி எடுக்காது. நேரம் செல்வது தெரியாது. கவனம் முழுவதும் குவிந்து கிடக்கும்.

இந்தத் தனித்துவத்தை உணர்வதே வெற்றிகரமான வாழ்க்கைக்கு முதல் படி.

தடைகள்:


தனித்துவமான திறமையை உணர்ந்தாலும் அதை வெளிக் கொண்டு வர பல தடைகள் உள்ளன. பல திறமை வாய்ந்த நபர்கள் குடும்ப சூழ்நிலை, உடல் நலம் குறைவு, சமூக அழுத்தம் போன்ற புறக் காரணிகளால் வாய்ப்புகளை இழக்கின்றனர். இவர்களைக் குறித்து வாசிக்கும் போது ஆதங்கப்படுகிறோம்.

ஆனால் மிக மோசமானது அலட்சியகரமான மனோபாவம். தனக்கு அளிக்கப்பட்ட திறமையின் மதிப்பை அறியாது அதை அலட்சியம் செய்து ஒரு சிறு கூட்டுக்குள் அடைத்துக் கொண்டு, சுய கட்டுப்பாடு இல்லாது தனது தனித்துவத்தை பாழ்படுத்தி வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள் ஏராளம்.

இவர்கள் நிதர்சனத்தை உணராது, வெட்டிப் பேச்சு பேசி, தற்பெருமை பிடித்து, பலவீனமான பழக்கங்களுக்கு அடிமையாகி தனது தனித்துவத்தை பாழ்படுத்தி வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள்.

ஆனால் இங்கு வலியுறுத்த விரும்புவது தனித்துவத்தை உணர்ந்து, தன் திறமையை வளர்த்துக் கொள்ள உதவும் சுய கட்டுப்பாடு பற்றியே.




சற்று கவனித்துப் பாருங்கள்:


உறவினர்கள், நட்பு வட்டம், அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் என நமக்கு மிக நெருக்கமாக உள்ளவர்களில் யார் மிகவும் முக்கியமான  மனிதர்களாகப் போற்றப்படுகிறார்கள்?

வெற்றிகரமான நிறுவனங்களில் பொறுப்புகள் யார் வசம் உள்ளது?

சிறந்த குடும்பங்களில் முடிவுகளை எடுக்கும் நபர்களுக்கு என ஏதேனும் பொதுப் பண்புகள் உள்ளதா?

கொஞ்சம் உற்று நோக்கினால் அந்த மதிக்கப்படுகிறவர்களுக்கு என சில பொதுவான பண்புகள் இருக்கும்.

உரையாடல்:


அவர்களிடம் தேவையற்ற பேச்சு இருக்காது. எதையும் மிகைப்படுத்திப் பேச மாட்டார்கள். உண்மையை வெளிப்படுத்த இயலாத நிலையில் அமைதியாக இருப்பார்கள். ஒரு போதும் முடியாத உறுதிமொழியை வாக்கு செய்ய மாட்டார்கள்.

பிறரைத் திருப்தி செய்வதற்காக தவறானவற்றை நியாயப்படுத்த மாட்டார்கள். தன்னால் முடியாத செயல்களை செய்வததற்கு பணித்தால் மிக நிதானமாக அதை மறுத்து விடுவார்கள். எப்போதும் ஏமாற்றிப் பேசுபவர்களிடமிருந்து பிரிந்து விலகி இருப்பார்கள். வீணான விவாதத்தில் தலையிட மாட்டார்கள்.

பணியில் உள்ள ஈடுபாடு:


தனக்கு அளிக்கப்பட்ட வேலைகளை வாய்ப்புகளாகக் கருதி நுட்பமாக உழைப்பார்கள். அது சார்ந்த அனைத்து விபரங்களையும் சேகரித்து செயல்படுவார்கள். குழுவோடு இணக்கமாக இருப்பார்கள். சிறந்த பணியாளர்களை இலகுவாக அடையாளம் காண்பார்கள். ஒவ்வொருவர் பங்களிப்பையும் உணர்ந்து அவர்களை மகிழ்ச்சியான சூழலில் வைத்துப் பராமரிப்பார்கள். வேலைக்கு இடையூறாக இருந்து வீணாகச் செயல் புரிபவர்களைக் களையெடுப்பர். அநதப் பணி முடிந்தாலும் அதை திரும்பவும் கவனமாக ஆராய்ந்து பார்ப்பார்கள்.




ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு:


தனித்துவமான மனிதராக மிளிர ஆசைப் பட்டால் மனதையும் உடலையும் மேம்படுத்தும் வகையில் ஓய்வு நேரங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உடற்பயிற்சி, யோகா, நீச்சல், சைக்கிளிங் போன்றவை ஒரு சில சிறந்த ஆரோக்கியமான பொழுதுபோக்குகள்.

ஏதேனும் ஒரு குழு விளையாட்டில் பங்கு பெறுவது மிக உற்சாகம் தரும்.

உடற்பயிற்சி செய்பவர்கள் இயல்பாகவே உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். நேர நிர்வாகத்திலும் சிறந்து விளங்குவர். உடற்பயிற்சி மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும். மனதை கூர்மைப் படுத்தும்.

உயர்ந்த கருத்துக்களை வலியுறுத்தும் நூல்களை வாசிப்பது மனதைச் செழுமையாக்கும். மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள உதவும். இலக்கை அடையத் தடையாக உள்ள இச்சையை மேற்கொள்ளப் பெலன் அளிக்கும். தன்னடக்கம் தரும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உதவும்.

ஏதேனும் ஒரு பிடித்தமான சமூக அக்கறை கொண்ட குழுக்களில் அங்கம் வகிப்பது மனதிற்கு வலிமையையும் நிறைவையும் தரும்.

இசை, எழுத்து, புகைப்படம் எடுத்தல், கைவினை படைப்புகள் என ஏதாவது ஒரு பிடித்தமான துறையில் ஈடுபாடு கொள்வது வாழ்வை முழுமையானதாக்கும்.

எதிர்பார்ப்புகள்:


ஒரு மனிதர் மதிப்பின் உயரம் அவர் எந்தளவு சுயநலம் இல்லாதவர்களாக இயங்குகிறார் என்பதாலேயே அளக்கப்படுகிறது.

கடமையை செய் பலனை எதிர்பாராதே என்ற வாக்கியம் மிக மிக ஆழ்ந்த பொருள் உடையது. அது பரிபூரணமான இறை நம்பிக்கையின் வெளிப்பாடு.

நல்லதோர் பயன்படுத்தப்பட்ட நிலத்தில் விதையை விதைக்கலாம். பாதுகாப்பாக வேலி அடைத்துக் காப்பாற்ற முடியும். நீரும், உரமுமிட்டு பேண முடியும். எனினும் விதையிலிருந்து ஒரு குருத்து முளைத்து வளருவது நம் கையில் இல்லை.

அந்த விதையிலிருந்து ஓர் உயிரை விளையச் செய்பவர் ஒருவர் உண்டு. அவர் அளிக்கும் பலன் துல்லியமாக இருக்கும். அது சரியான நேரத்தில் இருக்கும்.

தனித்துவமான வாழ்க்கை என்பது இப்படிப்பட்ட நம்பிக்கையோடு எதிர்பார்ப்புகளற்றதாக தனக்கு அளிக்கப்பட்ட சக்தியோடு தனது பொறுப்புகளை நிறைவேற்றுவது.

இத்தகைய மன நிலையில் வாழ்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் எந்த ஒரு பணியில் இருந்தாலும் நிச்சயமாக முக்கியமான நபர்களாகத் தனித்துவமாக இருப்பார்கள்.

தனித்துவத்தின் நிறைவான வெற்றி என்பது தன்னை இழத்தலில் மறைந்து இருக்கிறது.

2 கருத்துகள்: