திங்கள், 11 நவம்பர், 2019

அது - நீ

நீயே அதுவாக இருக்கிறாய். 




சுத்தமான கண்ணாடியின் முன் நின்றால் 
தெரியும் பிம்பம் போல
மனம் தூய்மையெனில் அது துலங்கும், 
புத்தி உறுதியெனில்
அறியாமையும் அகலும். 

கனவில் தோன்றும்
காட்சிகள் போல, 
உறக்கத்தில் அது உதிக்கும், 
விழிக்கும்போதோ விலகி மறையும். 
அந்த விசித்திர வானில். 

நீரில் பார்க்கும் 
பிரதி பிம்பம் போலத் 
தெளிந்தால் அது காட்சிதரும், 
கலங்கினால் அதைக் காணவியலாது. 
கந்தர்வ உலகமது. 

ஒளியும் நிழலுமாக 
உருவத்தில் அது விரிந்து, 
அருவத்தில் மறைந்து, 
பொருளென அறிந்தால் அறியாதது. 
விஷயமாக அறியாததால் அறிந்தது. 

*******   *******   *******   *******   *******


உபநிடதம் - கடோபநிஷத், இரண்டாவது அத்தியாயம் மூன்றாவது வல்லி ஐந்தாவது பாடலில், ஆன்மாவை பூவுலகம், பித்ரு, கந்தர்வ, ப்ரஹ்ம உலகில் எவ்விதம் அறிந்து கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆன்மாவைத் தெளிவாக உணரும் வாய்ப்பு இவ்வுலகில் மட்டுமே. ஆகவே இவ்வாழ்க்கையை ஞானத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதே மையக் கருத்து.

கண்ணாடி சுத்தமாக இருந்தால் முகம் தெளிவாகத் தெரியும். மனம் தூய்மையாக இருந்தால் ஆன்மாவைத் தெளிவாக அறியமுடியும். 

நீயே அதுவாக இருக்கிறாய் (தத் த்வம் அஸி) என்பது நான்கு மஹா வாக்கியங்களில் ஒன்று.

(படம்  இணையத்திலிருந்து) 

2 கருத்துகள்: