செவ்வாய், 19 நவம்பர், 2019

35. கீழ்மை அகற்று.

ஆத்திசூடி : ககர வருக்கம்

இழிவான சிந்தனைகளை நீக்கு. 

கீழ்மை அகற்று : 


தன்னோடு பிறரை ஒப்பிட்டு, அவரை உள்ளத்தில் அற்பமாக நினைப்பதும், அவமதிப்பதும் கீழ்மை ஆகும். 

கீழ்மை எண்ணங்கள் உடையவர்கள் முதலில் இழிவான அவமரியாதைச் சொற்களைப் பேசுவார்கள். பின்பு அது வன்முறையாக  வெளிப்படும்.


"கீழ்மை அகற்று"  என்றால் மனதிலிருந்து அத்தகைய இழிவான அற்பச் சிந்தைகளை, தற்பெருமை எண்ணங்களை அகற்ற விழிப்புடன் போராடு என்பதாகும். 

கீழ்மை செயல்கள் : 

கீழ்மையான இழிச் செயல்கள் பல வகைகளில் வெளிப்படும்.

பிறர் மனம் காயப்படும்படி அமிலச் சொற்களைப் பேசுவது, துன்புறுத்தி இரசிப்பது ஒரு வகை மனநோய். 

ஒருவரை வன்முறையைப் பிரயோகித்து உடலைக் காயப்படுத்துவது என்பது

கட்டுப்படுத்த முடியாத இயலாமையால் எழும் பெரும் கோபத்தின் வெளிப்பாடு. 

கோள் பேசிப் பிற குடும்பங்களைக் கெடுப்பது என்பது பொறாமையின் 

விளைவு.

ஒருவரை ஆசைகாட்டி, ஏமாற்றி சுயலாபத்திற்காக நடித்து வசப்படுத்துவது 

வஞ்சனை. 

சபல உணர்வுகள் இழிவான செய்கையில் சிக்க வைத்து அடிமைப்படுத்தும்.

மனித மனம் கீழ்மை சிந்தனையில் சிறைப்பட்டுள்ளது. மதம், இனம், சாதி, ஆண் பெண் பேதம், நிறம், மொழி, அறிவு, பதவி, அதிகாரம், பொருளாசை  என அது மனித சிந்தையில் பெருமை உணர்வாக ஆழமாக ஊடுருவி ஆட்டிப் படைக்கிறது. 

கீழ்மை சிந்தை காரணம் 


ஆதிக்க செருக்கு, அதிகார மமதை எனப் பல மனப் பாதிப்புகளும் கீழ்மை சிந்தைகளை உருவாக்குகிறது. 

தற்பெருமையும், தான் தான் உயர்ந்தவன் என்கிற பெருமை உணர்வும் பிறரை அற்பமாக நடத்தத் தூண்டுகிறது. தான் சொல்வதே சரி என்கிற சிந்தையுடையவர் பிறரை அவமரியாதை செய்யத் தயங்க மாட்டார்கள். 

ஆழ்மனதில் ஏற்பட்ட வலி, அவமானம்,  குற்றவுணர்வு போன்ற கசப்பான அனுபவங்கள் மனதில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பழிக்குப் பழிவாங்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. 

குறிப்பிட்ட கருத்துக்களில் ஏற்படும் அதீத தீவிரப் பற்று, அறியாமை கீழ்மையான செயல்களைச் செய்ய வழி நடத்துகின்றது. 

நன்கு கற்றுணர்ந்திருந்தவர்களும்  கூடச் சில சமயம் தமது குழுவைச் சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்திற்காகக் கீழ்மையான செயல்கள் செய்கிறவர்களைக் குற்றவுணர்வின்றி ஆதரிக்கும் பொதுப்புத்தி பரவலாக உள்ளது.

சூழலும் சிந்தையும் :


நாம் வாசிக்கும் நூல்கள்,  பார்க்கும் காட்சிகள்  நமது சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

இன்றைய உலகில் ஒவ்வொரு நாளும் பல கருத்துக்கள் நாம் உணராமலேயே நம் மனதில் இயல்பாகப் பதிக்கப் படுகிறது. 

உணவில் ஒரு துளி விஷம் கலந்தால் மொத்த உணவும் நஞ்சாகிவிடுவது போல் தவறான ஒரு கருத்தை நம்புவது முழு மனதையும் பாழக்கிவிடக்கூடும். 

இணையதளம் அளிக்கும் கட்டற்ற சுதந்திரம் இருபுறமும் கூர்மையான கத்தியைப் போன்றது. ஒரு கருத்தைக் குறித்து ஆழமாகச் சிந்திக்க விடாதபடி புது புதுச் செய்திகள் கொட்டப்படுகின்றது. 

சமூக ஊடகத்தின் மூலமாகப் பல கருத்துக்கள் திணிக்கப்படுகின்றன. ஒரு கருத்து நல்லதா அல்லது கெட்டதா என்பது பெரும்பான்மை விருப்பத்தின் அடிப்படையில் இன்று தீர்மானிக்கப்படுகிறது. 

எனவே வாசிப்பதைத் தெரிவு செய்வதில் கருத்தை நம்பி ஏற்றுக் கொள்வதில் மிகுந்த கவனமும் எச்சரிக்கையும் தேவை. 

இன்று அதிக பரந்துபட்ட வாசிப்பைவிட ஆழ்ந்த பொருள் உணர்ந்த வாசிப்பு முக்கியம். சிந்தனையைத் தூண்டாத வாசிப்பு பொருளற்றது. 

நெருக்கமான நண்பர்கள், நம்பிக்கையான உறவுகள், பணிச் சூழல், இறை நம்பிக்கை இவை வழியாகவும் பல கருத்துக்கள் நம்பிக்கைகளாக மனதில் ஆழமாக விதைக்கப் படுகின்றது. 

இவற்றைத் தேர்ந்தெடுப்பதில் மிக மிகக் கவனம் தேவை. நடுநிலையில் உறுதியாக நிற்க நம்மைச் சுற்றி நாம் அமைத்துக் கொள்ளும் சூழல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. 

மனித நேயத்தைக் குலைக்கும் என்று உணர்ந்தால் அவற்றை விட்டு விலகி வாழ வேண்டும். எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை மூலம் தீர்வு காண முடியாது. 

சமய நம்பிக்கை, சாதிய உணர்வு, மொழிப்பற்று, இவை மனித நேயத்தை மீறி வெறியுணர்வாக மாறும் அபாயம் உள்ளது. இத்தகைய சார்புத் தன்மை படுகொலைகளைக்  கூட நியாயப்படுத்த வைக்கும். 

குடும்ப உறவுகளில் அதீத பாசம் வைப்பதும் கண்ணை மறைத்துவிடும். 

கீழ்மை சிந்தை அகற்ற 


பிறரைத் துன்புறுத்தாமல் வாழவேண்டும் எனும் உறுதியான விருப்பம் இருந்தால்தான் மனதிலிருந்து கீழ்மையை அகற்ற முடியும். 

பிறரது மன வேதனையை உணரும் உள்ளம் வேண்டும். அன்பால் நிறைந்த உள்ளம் ஒரு போதும் பிறரைத் துன்புறுத்தாது. 


ஒருவர் தகுதியை அவரது குணத்தைக் கொண்டே மதிப்பிடவேண்டும். 

வாழ்வின் நிலையாமை உணர்ந்தால் தாழ்மையுடன் அடக்கமாக இருப்போம்.

நற்பண்புகளை, நல்லுணர்வுகளை வளர்த்தெடுப்பதன் மூலம் கீழ்மையான சிந்தைகள் நம் மனதில் வேரூன்றா வண்ணம் பாதுகாக்க முடியும். 


மனதை எதிலும் அதீத பற்றின்றி சமநிலையில்  வைத்துக் கொள்ளப் பழக வேண்டும்.

கீழ்மை சிந்தனையை மனதிலிருந்து அகற்றுவது என்பது வாழ்நாள் முழுவதும் சுத்திகரிக்க வேண்டியதொரு தொடர் பணி.

எது முக்கியம்? 


மனித வாழ்க்கை ஒரு அரும்பெரும் கொடை. மனதைப் பீடித்த இருளை அகற்ற அருளப்பட்ட நல்வாய்ப்பு. 

வாழ்வில் இழிவான மனிதர்கள் சந்திப்பதை ஒருபோதும் தவிர்க்க முடியாது. 

இவர்களைப் பொறுமையோடு கையாளுதல் வேண்டும். நமது மனம் பாதிக்காதபடி இவர்களைச் சரியான தூரத்தில்  வைத்து விவேகமாக வாழ்தல் நலம். 

கீழ்மையான சிந்தைகளை அகற்றுவது, தீய வழிகளை விட்டு விலகி வாழ முயல்வது இவற்றை விட மனித வாழ்வில் வேறு பெரிய அரிய சாதனை எதுவும் இல்லை. 


கீழ்மை அகன்றால் அனைத்து நன்மையும் தானாகவேப் பின் தொடரும். 


4 கருத்துகள்:

  1. கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது உங்களிடம்..!

    ஆழ்ந்த கருத்துக்களை தெளிவான வார்த்தைகளைக் கொண்டு விளக்கும் விந்தை அருமை..!

    பதிலளிநீக்கு
  2. சிறந்த சிந்தனைகள். ஒவ்வொன்றும் கருத்தில் கொள்ள வேண்டியவை.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு