சனி, 5 பிப்ரவரி, 2022

39. கேள்வி முயல்

கற்றல் ஒரு தொடர் நிகழ்வு

(ஆத்திசூடி - ககரவர்க்கம்)



கேள்வி முயல்: கற்றவர் சொல்லும் உயர்ந்த  சிந்தனைகளைக் கேட்பதற்கும், புரிந்து கொள்ளவும் தொடர்ந்து முறையாக முயற்சி செய்ய வேண்டும். 

பள்ளிப் பருவங்களில் இலக்கிய மன்றம் நடத்திய பல நிகழ்ச்சிகள் இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது. 

தில் பகிர்ந்த பல நூல் அறிமுகங்கள், நகைச்சுவையுடன் சொல்லப்பட்ட பல உயர்ந்த கருத்துக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. 

பல உயர்ந்த மனிதர்களையும், அவர்களது செழுமையான கருத்துக்களையும் நூலகங்கள் அறிமுகம் செய்தது. 

ஒரு சிந்தனையை நம்பி ஏற்றுக் கொள்ளும் போது அவை மனதில் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அவை விருப்பங்களை மாற்றுகிறதுஎண்ணங்கள், செயல்கள், நடத்தையில் மாற்றம் நிகழ்த்துகிறது

ஆக நல்ல பழக்கங்கள் உருவாக நல்ல  எண்ணங்கள் தேவை. நல்ல எண்ணங்கள் உருவாக, அவற்றை வளர்த்துக் கொள்ளச் சிறந்த நூல்கள், கற்றறிந்தோர் சொற்பொழிவுகள் உதவுகிறது. 

மிகச் சிறந்த இலக்கிய நூல்கள் சிந்தனையை மேம்படுத்தும்.  அவற்றைத் தொடர்ந்து வாசித்தால், நமது முதிர்ச்சிக்கு ஏற்ப பல வித புதிய புரிதல் களை கற்றுக் கொள்ள முடியும்.  

சிறந்த இலக்கிய நூல் வெவ்வேறான பருவங்களில் நமக்கு புது புது பரிமாணத்தை அளிக்கும். இருபது வயதில் வாசித்துப் புரிந்து கொண்டதிற்கும், அதே நூல் நாற்பது வயதில் மறு வாசிப்பில் கற்றுத் தருவதும் மாறுபட்டதாக இருக்கும். 

இணையத்தில் மிகச் சிறந்த நூல்களும் அது தொடர்பான பல்வேறு விளக்கங்களும் கை விரல் அசைவில் கிடைக்கின்றன. ஒலி வடிவிலும்  கேட்டு பயன் பெறலாம். அதற்குத் தேவை விருப்பமும், தொடர் முயற்சியும் மட்டுமே. 

கற்றுத் தேர்ந்தவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் பொருள் பொதிந்தவை. அதைப் புரிந்து கொள்ள முயல்வதும், அதன் உண்மைப் பொருளை உணரும் போது அடையும் மகிழ்ச்சியை விட மேன்மையான மகிழ்ச்சி வேறு ஒன்றும் இல்லை. 

ஒவ்வொரு நாளும் புதிதாக கற்றுக் கொள்ள, நமக்காக ஒன்று  காத்திருக்கிறது. திறந்த மனதுடன் நம்மை தற்பரிசோதித்து ஏற்றுக் கொண்டால், பழைய தவறான நம்பிக்கைகளைத்  திருத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

சான்றோர்கள் வார்த்தைகளைப்  புரிந்து, அவை அனுபவமாக மாறும் போது மட்டுமே மேன்மையான  வளம் நிறைந்த வாழ்க்கை அமையும். அதற்கு இடைவிடாது முயல வேண்டும். 

கற்றல் என்பது ஒரு தொடர் நிகழ்வு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக