வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

நிழலாக தொடரும்

நாலடியார் : நான்கு பாடல்கள் 


1. கண்ணியம் 

பாடல்:

வேற்றுமை  இன்றிக் கலந்திருவர் நட்டக்கால்

தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்

ஆற்றும் துணையும் பொறுக்க பொறானாயின்

தூற்றாதே தூர விடல்

பொருள்:

ஒரே மனதுடன் இரு விதமான சிந்தனை இல்லாத பிரியமான நட்பு ஏற்பட்டாலும்,

அதில் ஒருவர் தவறான தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டால், பொறுத்துக் கொள்ள முடிந்த அளவிற்கு அமைதி காத்து, அந்த நட்பைத் தொடர வேண்டும். 

அவை எல்லை மீறிய  நிலைமைக்கு வந்தால், அவரது தீய நடத்தைகளைப் பிறர் அறியும் படியாகத் தூற்றிப் பேசாமல், அவரை விட்டுத் தூரமாக விலகிவிட வேண்டும். 

2. வினைப் பயன்.

பாடல்:

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலை - தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு. 

பொருள்:

பல பசுக்கள் இருக்கும் மாட்டுக் கொட்டடியில் சின்னஞ்சிறு கன்றுக்குட்டியை அவிழ்த்து விட்டால் அது தன் தாயை நாடிச் சென்று பால் குடிக்கும். 

அதுபோல, பழைய வினையின் பயனும் அந்தச் செயலுக்கு உரியவனை நாடிச் சென்று பற்றிக்கொள்ளும்.

3. எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம். 

பாடல்:

வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை 

அளந்தன போகம் அவரவர் ஆற்றான் 

விளங்காய் திரட்டினார் இல்லை 

களங்கனியைக்காரெனச் செய்தாரும் இல். 

பொருள்: 

இவ்வுலகில் அனைவரு‌ம் உடல் நலம், புத்திக் கூர்மை, செல்வ வளம் நிறைந்த வாழ்க்கை வாழவே விரும்புகின்றனர். 

ஆனால் அது அவரவர் செய்த நல்ல செயல்கள், தீய செயல்கள் ஆகியவற்றின் பயனுக்கேற்ப அமையும். 

நாமாக விளாம்பழம் திரட்டி உருண்டையாக இருக்கும் படி உருவாக்க முடியாது. 

களாப் பழத்தைக் கறுப்பு நிறத்தில்  படைக்கவும் முடியாது. 

அவரவர் செய்த செயலுக்கு ஏற்ப அனுபவிக்க வேண்டிய அளவும்  அது போல சரியாக அளந்து வைக்கப்பட்டிருக்கிறது. 

4. அறத்தின் பயன்: 

பாடல் :

ஆ வேறு உருவின ஆயினும் 

ஆ பயந்த பால் வேறு  உருவின அல்லவாம் 

பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி 

ஆ போல் உருவு பல கொளல் ஈங்கு.  

பொருள்:

பசுக்கள் பலவகையான நிறமும், உருவங்களையும் கொண்டிருந்தாலும், அவைகள் தரும் பாலின் நிறம் பல்வேறாக இருப்பதில்லை. 

அதுபோல மானிடர் பல வகையான நிறமும், உருவமும் கொண்டிருந்தாலும், உள்ளத்தில் அறநெறியைக் கைக் கொண்டு வாழ்ந்தால், அவர்கள் வாழ்வின் தன்மையும் ஒரேவிதமாகப் பயனுடையதாக இருக்கும்.



2 கருத்துகள்: