வாழ்க்கையை வளமை செய்யும் ஐந்து குணநலன்கள்.
இந்த ஐந்து குணங்களும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை வாழ்வதற்கு உதவுவதாக மனித வள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
1. துணிச்சல்:
பய உணர்வு என்பது மகிழ்ச்சிக்கு எதிரான ஒரு மனநிலை.
பய உணர்வு வாழ்க்கையின் சவால்களை எதிர் கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தி மூடிய அறைக்குள் முடக்கி உட்கார வைத்து விடும்.
அது சவால்களை எதிர் கொள்ளும் மன உறுதியைக் குலைத்து விடுகிறது. அத்துடன் அர்ப்பணிப்பு மற்றும் செயல் புரியும் திறனையும் மழுங்கடித்து விடுகிறது.
அதற்கு மாறாக "தைரியம்" என்பது பயத்திற்கு நேரிடையான ஓர் மாற்று எதிர் சக்தி.
அது வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு வெளியேறி, சவாலான சூழ்நிலையை எதிர் கொள்ளும் ஆற்றலை அளிக்கிறது.
அத்துடன் சிக்கல் தரும் மனிதர்களுடனும் இணைந்து வாழவும் உதவுகிறது.
வாழ்வில் வலி என்பது தவிர்க்க முடியாதது. இதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தைத் தைரியம் நமக்கு கற்றுத் தருகிறது.
மனதில் உறுதி இல்லை என்றால் மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது வெறும் கனவு மட்டுமே.
2. பொறுமை:
மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக்கு, பொறுமையில்லாமல் நடந்து கொள்வது முக்கிய தடை. அது சந்தோஷமான சூழலை விரட்டி அடிக்கும்.
அதற்குப் பதிலாகப் பொறுமை, வாழ்வின் ஏமாற்றங்களை எதிர் கொள்ளக் கற்றுத் தருகிறது.
வாழ்வில் நிகழக் கூடும் சில எதிர்பாராத இழப்புகள் கண்டு துவளாமல், தொடர்ந்து வாழ்க்கை ஓட்டத்தில் பயணம் செய்வதற்குப் பொறுமை உதவி செய்கிறது.
வாழ்வில் நடைபெறும் நூறு சதவீத நிகழ்வுகளும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அது எப்போதும் சவாலான மற்றும் எதிர்பாராத வழிகளில் குறுக்கிடுகிறது.
ஆனால் நாம் காத்திருக்க முடியாமல் பொறுமை இழந்து உணர்ச்சி வசப்படுவதால் நிதானத்தை இழக்கிறோம்.
நம்மைச் சுற்றிக் கொதித்து எழும் நிகழ்வுகளின் விளைவுகளை எந்த அளவுக்கு முனைப்புடன் கட்டுப்படுத்த முயல்கிறோமோ, அவ்வளவு விரக்தியையும் உணர்வோம்.
எனவே கணிக்க முடியாத நிச்சயமற்ற தன்மையை ஏற்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு, சில சமயங்களில் சற்று இளைப்பாறி ஓய்வெடுப்பதும் அவசியம். கடினமான சூழ்நிலைகளில் அமைதியாகச் சுவாசிப்போம். ஓய்வெடுப்போம். வாழ்க்கை அதன் போக்கில் நடக்கட்டும்.
நாம் விலகி அதைக் கவனிக்கும் போது வாழ்க்கை மிகவும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
3. நன்றியுணர்வு:
சிறந்த மனிதராக இருப்பது என்பது, கெட்டவற்றின் மத்தியில் நல்லதைக் கவனிப்பதாகும்.
இருள் சூழ்ந்த பின்னணிக்கு எதிராக வண்ணங்களைப் பார்ப்பது. அசிங்கத்தால் சூழப்பட்டிருந்தாலும் அழகானதை இரசிப்பது.
சில சமயங்களில் நாம் திட்டமிட்டபடி காரியங்கள் நடக்காது. அப்போதும் கூட, நமக்கு அருளப்பட்ட ஆசீர்வாதங்களை எண்ணிப் பார்த்து, "வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கிறது" எனும் நன்றி நிறைந்த உள்ளத்துடன் வாழ வேண்டும்.
சிறந்த வாழ்க்கை என்பது எப்போதும் மேலோட்டமாக நுனிப்புல் மேயாமல், "வாழ்வில் மறைந்திருக்கும் நுட்பமான அழகைக் காண"கற்றுக் கொள்வதில் அடங்கி உள்ளது
வாழ்க்கையின் அழகிய கனவுகளைப் பற்றி மீண்டும், மீண்டும் சிந்திப்பதற்கு மனதைப் பயிற்றுவிக்க வேண்டும்.
நமது மனம் இயங்கும் விதம், அது வாழ்க்கையை அனுபவிக்கும் முறை, இவற்றை ஊடுருவப் பார்த்து மன நிறைவு அடையப் பழக வேண்டும்.
நாம் விழிப்புணர்வுடன் இருப்பதால், பிரச்சினைகள் மறைந்துவிடாது. உண்மை தான். ஆனால் அதே வேளை, அவை நம் மனதிலும், வாழ்க்கையிலும் ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைக்க முடியும்.
4. அன்பு:
அன்பின் அவசியத்தை உணர்ந்து கொள்ள, அது இல்லாமல் வாழும் வாழ்க்கையைக் கற்பனை செய்து பாருங்கள். வெறுக்கத்தக்க, அன்பற்ற சூழலில், மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க முடியாது.
அன்பின்றி மகிழ்ச்சி என்பது சாத்தியமற்றது தானே!!!
நமது இதயத்தில் எவ்வளவு அன்பு துடிக்கிறதோ, அந்த அளவுக்கு இதயம் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கும்.
அன்பு பிறரது பலவீனத்தைக் கவனிக்காது. அவரது குறைகளைக் கண்டும் காணாது கண்களை மூடுகிறது. மற்றவர்களிடம் காணப்படும் சிறந்ததை ஏற்றுக்கொள்கிறது. நல்லவற்றைத் தேடுகிறது. பிறரை மதிப்புடன் நடத்துகிறது.
அன்பு பெருகிய இடத்தில் மகிழ்ச்சி வற்றாத நீரூற்று
5. மன்னிப்பு:
பிறர் செய்த தீமையை, அதன் வலியை இதயத்தில் வைத்துச் சுமக்கும் மக்கள் தங்களை தாங்களே மேன்மேலும் காயப்படுத்திக் கொள்கின்றனர்.
தங்கள் மன காயங்களை எண்ணிப் பார்த்து உருகுகிறவர்கள் சுய பச்சாதாபத்தில் சிக்கிக் கொள்வர். மன்னிக்க மறுப்பது நமக்கு நாமே அளித்துக் கொள்ளும் சிறைத் தண்டனை.
சிலர் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காகப் போராடுகின்றனர். ஒருவேளை அந்தப் போரில் அவர்கள் வெற்றியும் பெறலாம். ஆனால் மன்னிப்பதில் அடையும் மகிழ்ச்சி அதில் கிடைக்காது.
பழைய வலியை இருளில் கலைத்து விடுவதன் மூலம் புதிய வாய்ப்புகள் நம்மை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும்.
பழி வாங்க வேண்டும் எனும் உணர்விலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!!!
நமது உறவுகளின் குறைகளை மன்னிக்க முடிகிறதா?
விளையாட்டாக அலட்சியப் படுத்துபவர்கள், பணிபுரியும் இடத்தில் அவமரியாதை செய்பவர்களை மன்னிப்பது சுலபமாக இருக்கிறதா?
சிறு உதவி கூடச் செய்ய மறுக்கும் அண்டை வீட்டாரை மன்னிக்க முடிகிறதா?
நாம் மன்னிக்க வில்லை என்றால் நமது காயங்களை நாமே ஆழப்படுத்துகிறோம். அவை எரிச்சலை மட்டுமே தருகிறது மன அழுத்தம் ஏற்பட்டு அமைதி சீர் குலைகிறது
மாறாக, மன்னிப்பதற்கு நமது இதயத்தைத் திறந்தால் நிறைவான மகிழ்ச்சியினால் உள்ளம் பூரித்துப் பொங்கி மகிழ்ந்து களி கூறும்.
Translation of the Article with thanks:
"5 Character TRAITS That Make You Happy" from the book of "1000+ Little Things Happy, Successful People Do Differently" by Mark & ANGEL CHERNOFF.
Picture Courtesy: From Internet.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக