திருவாசகம் - எல்லாம் இறைமையின் செயல்.
"எந்த ஓன்று தானே தோற்றுவிப்பதாக உள்ளதோ அதுவே ஆனந்த ஸ்வரூபம்."
(யஜுர் வேதம், தைத்திரீயோபநிஷத், ப்ரஹ்மானந்த வல்லி - 7)
41. ஆக்க மளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
42. ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
43. போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
44. நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
45. மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
46. கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
47. சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
48. பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
பொருள் :
துவக்கம், நிலைமை, முடிவு இந்த மூன்றும் இல்லாதவனே!
அனைத்து உலகையும் படைக்கிறாய், காப்பாற்றுகிறாய், அழிக்கிறாய்.
பூவில் வாசமாக மறைந்திருந்து நுட்பமாக வெளிப்படுபவனே.
தொலைவில் இருப்பவனே. அண்மையில் இருப்பவனே.
சொல், மனம் இவற்றைக் கடந்து வேதத்தின் பொருளாய் இருப்பவனே.
சிறந்த அன்பர் மனதில் கறந்த பால், இனிப்பு, நெய் கூடினது போல் ஆனந்தத் தேனாக இன்பமளிப்பவனே.
எம் பிறவித் துயரை அழித்து ஒழிக்கும் எம்பெருமானே.
எனக்கும் இரங்குவாய். எனது அறியாமையை நீக்குவாய்.
உமது அருட் பணியாளராக என்னை உருமாற்றுவாய்.
இப் பாடலில் இறைமையின் சிறப்பு :
உயிரினம் அனைத்தும் பிறக்கிறது. வளர்கிறது. மடிந்து மறைகிறது.
ஆனால் இறைமையைக் குறிப்பிடும்போது பிறத்தல், வளர்தல், மறைதல் இல்லாதவரே என்கிறார் அருளாளர் மாணிக்க வாசகர்.
பிறக்காத, இறக்காத ஒன்றின் இருப்பு எவ்விதம் சாத்தியம்?
அதற்கு உதாரணமாகப் பூவின் வாசனையைக் குறிப்பிடுகிறார்.
மலரைப் பார்க்கிறோம். ஆனால் அதன் வாசனையை உணரத்தான் முடியும். அதன் நறுமணத்தைப் பார்க்க முடியாது. அம்மலர் மறைந்தாலும் அதன் மணம் சிந்தையில் உறைகிறது.
அவ்வாறே உலகின் படைப்புகள் ஒவ்வொன்றிலும் இறைவன் மறைந்திருக்கிறார்.
மலர் அரும்பாக இருக்கும்போது மணம் வீசாது. மொக்கு மலர்ந்தால் மணம் வீசும்.
அதுபோல் ஆன்மா பக்குவப்படும்போது மறைந்திருக்கும் இறைமை வெளிப்படும்.
அதைத்தான் இறைமையை உணரும் வரை தூரத்தில் இருக்கிறான். அறிந்தவுடன் அருகில் தோற்றமளிக்கிறான் எனக் குறிப்பிடுகிறார்.
எனவே என்னை உம் பணியில் புகுத்தி பிறவித் தளை அறுப்பாய் எனச் சரணாகதி அடைகிறார்.
எல்லாம் அவன் செயல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக