திருவாசகம் - மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
மலரின் இதழ்களில்
நீர்த்துளி!
பனித்துளியா? மழைச் சாரலா?
கண்ணீரோ?
பூவிற்கும் வியர்த்திருக்குமோ?
பூவிற்கும் வியர்த்திருக்குமோ?
எதுவாக இருக்கக் கூடும்?
அசரீரியாக ஒரு குரல்
அது பார்ப்பவரின்
மனதில் ஒளிந்திருக்கிறது
மலரோ எப்போதும்
மலராகவே இருக்கின்றது.
திருவாசகம் பாடல் - திருச்சிற்றம்பலம். (62 -83) - இறைவனது பண்புகள்
62. மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
63. தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
64. பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
65. நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
66. பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
67. ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
68. ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
69. நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
70. இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
71. அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
72. சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
73. ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
74. ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
75. கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
76. நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
77. போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
78. காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
79. ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
80. தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
81. மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
82. தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
83. ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
இருக்கிறவராகவே இருக்கிறேன்.
(படம் நன்றியுடன் : ராமலக்ஷ்மி)
நாம் ஆலயத்துக்குப் போகிறோம்.
ஆனால் எப்போதாவது மனம் மறந்து நேரம் போவதே தெரியாமல் இறைவனைக் கும்பிடுகிறோமா?
கடவுளைத் தொழுது கொள்ளும்போது கண்களில் ஈரம் கசிந்ததுண்டா?
வீட்டில் தொழுகை செய்கிறோம். மனம் இலயத்து இன்னும் கொஞ்சம் நேரம் கடவுள் சமூகத்தில் அமர்ந்திருக்க வேண்டும் எனும் ஆசை வருகிறதா?
வேதத்தை, அற நூல்களை வாசிக்கும் நேரத்திற்கும், பிற நூல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வாசிப்பதற்குச் செலவிடும் நேரம் ஒப்புமை அளவில் எப்படி இருக்கிறது?
வேதத்தையும், இறை நூல்களையும் ஆர்வமுடன் வாசிக்கிறோமா? அல்லது கடமைக்காக வாசிக்கிறோமா?
பொதுவாக நாம் துயரத்தில் இருக்கும்போது இறைவனைக் கருத்தாய் தேடுகிறோம்.
எனது இளவயதில் மரணத்துக்குச் சமீபமாக இருந்தேன். மரணத்துக்கும் எனக்கும் ஒரு நூலிழை தான் இடைவெளி.
அப்போது இறைவனது பல நாமங்களைக் குறிப்பிட்டு இடைவிடாமல் வேண்டுதல் செய்வேன்.
வாழ்வில் மீதமுள்ள வருடங்களில் இனிமேல் இப்படித்தான் வாழ வேண்டும் எனப் பல தீர்மானங்களை எடுத்தேன். அப்போது இறை நூல்களை ஒழுங்காக உணர்ந்து வாசிப்பேன். விரதம் இருந்தேன்.
ஆனால் துயரச் சூழல் மாறியவுடன் வருடங்கள் செல்ல செல்ல அனைத்தையும் மறந்து மீண்டும் பழைய வாழ்க்கை முறைக்கு மனம் திரும்புகிறது. இறை வேண்டல், வேதம் வாசிப்பது ஒரு தினசரி கடமை முறையாக மாறி விடுகிறது.
துயரத்திலிருந்தபோது இருந்த உணர்வுப்பூர்வமான அர்ப்பணிப்பு இப்போது இல்லை. இது எவ்வளவு துரதிர்ஷ்டம். நன்றியற்ற தன்மை.
இவ்வாறு நாம் சூழலுக்குத் தக்க மாறுகிறோம். ஆனால் இறைவன் மாறாதவர். அவர் இருக்கிறவராகவே இருக்கிறவர். அவர் அன்பானவர். அவர் தீமையை நம்மிலிருந்து நீக்க விரும்புகிறவர். நல்வழியில் நடக்க உறுதுணையாக உதவி செய்பவர். நம்மை உயர்த்தி மேன்மையாக வாழ வைப்பவர்.
ஒவ்வொரு சமய நூல்களிலும் இறைவனுக்குப் பல பெயர்கள் உண்டு. இறைவனது பிள்ளைகள் நாம். அவரது குணங்கள் நம்மில் உருவாக இறைவன் விரும்புகிறார். அவரது திருப்பெயர்கள் ஒவ்வொன்றும் அவரது குணத்தைச் சொல்கிறது.
ஒவ்வொரு சமய நூல்களிலும் இறைவனுக்குப் பல பெயர்கள் உண்டு. இறைவனது பிள்ளைகள் நாம். அவரது குணங்கள் நம்மில் உருவாக இறைவன் விரும்புகிறார். அவரது திருப்பெயர்கள் ஒவ்வொன்றும் அவரது குணத்தைச் சொல்கிறது.
தொழுகையின் போது ஒவ்வொரு பெயரை மனமுவந்து நன்றியுணர்வுடன் உச்சரிக்கும்போது அப்பண்புகள் நம்மில் உருவாகும்.
நமது மனதை மீண்டும் மீண்டும் இறைவனிடம் அர்ப்பணம் செய்வதன் மூலமாகவே வாழ்க்கைப் பயன் நிறைந்ததாக மாறும்.
அருளாளர் மாணிக்க வாசகர் இப்பாடலில் மனம் கசிந்து இறைவனது அன்பில் தோய்ந்து அவரது பண்புகளை அனுபவித்து உணர்ந்து போற்றிப் பாடுகிறார்.
அவரது மனதில் இறைவனது அன்பு எழுப்பும் உணர்வுகள் அருவியாகக் கொட்டுகிறது.
இப் பாடல் பகுதியில் அருளாளர் எத்தனை விதமாக இறைவனது பண்புகளைப் போற்றிப் பாடுகிறார் பாருங்கள்.
தூய்மையானவரே. களங்கமற்றவரே.
நீர் ஒளியாகப் பிரகாசிப்பவர்.
நீர் தேன் போன்ற இனிமையானவர்.
அரிய அமுதம் போன்று என்னை உயிர்ப்பிப்பவர்.
பாசமாகிய பற்றை அறுத்து என்னைக் காத்து வழி நடத்தும் குருவானவர்.
என் மனதில் உள்ள வஞ்சகத்தை அழிக்கும் பெருங்கருணை நதி.
தெவிட்டாத அமிர்தம்.
எல்லையில்லாதவர்.
மனதில் மறைந்திருக்கும் ஒளி.
என் கல் மனதை உடைத்து நீர் போல் உருகச் செய்பவர்.
எனது ஆருயீர்.
இறைவா! உமக்கென்று இன்பம், துன்பம், சுகம், துக்கம் இயற்கையில் இல்லாதவர்.
எம் போன்று அடியவர்க்கு வரும் இன்ப துன்பங்களை நீர் ஏற்றுக் கொள்வதனால் இன்பமும் துன்பமும் உடையவர்.
உமது அன்பர்களிடத்தில் அன்புள்ளவர்.
எல்லாப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்தவர்.
காரிருளிலும் ஒளியிலும் வாசம் செய்பவர்.
பேரொளியே.
புறத்தில் வெளிப்படாத பெருமையுடையவர். ( இறைவனைக் கண்ணால் காண முடியாது. அறிவினாலும் முழுமையாக அறிய முடியாது. அனுபவத்தால் உணர்ந்து சிந்தனையில் அவர் பெருமையை அனுபவிக்க மட்டுமே முடியும்)
துவக்கமும் முடிவும் இல்லாதவர்.
என்னை மீட்டுக் கொண்டவர்.
எம் அன்பு தந்தையே.
இயற்கையின் நுட்பமான அறிவே.
எப்போதும் காப்பவர். (போகையில், வருகையில், நிற்கையில் என எப்போதும் நிழலாய், மேகமாய் உடனிருந்து காப்பவர்.)
புண்ணியனே.
என்னைக் காப்பாற்றும் அரசரே.
காண்பதற்கு அரிய பேரொளியே
மகாநதி போன்ற ஜீவ நதியே. இன்ப ஊற்றே.
தாய், தந்தையிலும் மேலானவரே.
மாறுதலையுடைய இவ்வுலகத்தில் நிலை பெற்ற தோற்றத்தையுடைய ஒளியாகவும், சொல்லப்படாத நுட்பமாகிய அறிவாகவும் வெவ்வேறு பொருளாய்க் காணப்பட்டு உயிர்களின் மனப் பக்குவத்திற்கேற்ப அருள் பாலிக்கும் தெளிந்த ஞானமே.
என் மனதில் வற்றாத ஜீவ ஊற்று போன்று சுரக்கும் அமிர்தமே.
நன்றாய் இருக்கும். ஒரு சிறு ஆலோசனை - செய்வோம் பணிவோம் என்று சமுதாயமாக மாறி தொடருங்கள். பணி சிறக்கட்டும்
பதிலளிநீக்குநிச்சயமாக. இப்போது இங்கு ஒரு சிறு குழுவாக இணைந்து செயல்படுகிறோம்.
நீக்குஉடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரவி.:)
எல்லா நேரங்களிலும் மனமொன்றிப் பிரார்த்திக்கிறோமா, நம்மை நாமே கேட்டுக் கொள்ள வைக்கிறது பதிவு. நன்றியுணர்ச்சி எப்போதும் வேண்டும். அருமையான விளக்கங்கள்.
பதிலளிநீக்குநன்றியுணர்ச்சி மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
நீக்குமறதி, வேலையில் அதீத ஈடுபாடு, அலட்சியம், சுயநலம், ஆர்வமின்மை, வாழ்க்கை அழுத்தம், பிற கவர்ச்சிகள், சோம்பல், தள்ளிப்போடுதல் என மனமொன்றிப் பிரார்த்தனை செய்யவிடாது வழி விலக வைக்கும் பல காரணங்கள் மனதில் தோன்றுகிறது.
3வது படம் எனது சேமிப்பிலிருந்து பயன்படுத்தினேன். நீங்கள் எடுத்த படமோ எனும் சந்தேகம்? Water mark தென்படவில்லை.:)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.
உண்மைதான். மேலும் மனிதர்களுக்குக் காரணங்களைத் தேடச் சொல்லியா கொடுக்க வேண்டும்? சிந்திக்க வைக்கிறது பதிவு.
பதிலளிநீக்குஆம், எனது படமே. நீங்கள் அசெளகரியமாக உணரக் கூடாதென மீண்டும் குறிப்பிடாதிருந்தேன்:). ஃப்ளிக்கர் தளத்தில் அதை வாட்டர் மார்க் இல்லாமல்தான் பதிந்திருக்கிறேன். சில நேரங்களில் அப்படி விட்டுப் போவதுண்டு.
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/46869750891/
இனி எனது படம் என உங்களுக்குத் தெரியவரும் பட்சத்தில் படத்துக்குக் கீழே ‘ படம்: ராமலக்ஷ்மி ’ எனக் குறிப்பிட்டு விடுங்களேன். பார்க்கும் போது எனக்கும் மகிழ்ச்சியாய் இருக்கும். ஒப்பந்தம் ஓகேதானா :)?
நிச்சயமாக. உறுதியாக :).
நீக்குஎன்னால் உங்கள் படம் என உறுதி செய்ய இயலாததால்தான் சற்றுத் தயக்கமாக இருந்தது.
சரி செய்து விடுகிறேன். :)
மிக்க நன்றி மேடம்.