புதன், 31 ஜூலை, 2019

நமச்சிவாய வாழ்க

1. சிவபுராணம்.

திருச்சிற்றம்பலம்.


1. நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

2. இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

3. கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க

4. ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க

5. ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 

குறிப்பு:


1. "நம" என்றால் வணக்கத்துக்கு உரிய என்று பொருள்.

"சிவம்" என்ற சொல் முதன்மையான ஏக இறைமையைச் சுட்டுவது. 

மாணிக்க வாசகர் தம்முடைய திருவாசகத்தின் முதல் ஒலியாக நமச்சிவாய என்ற திரு ஐந்தெழுத்தைச் சொல்லிப் போற்றி வாழ்த்தித் துவங்குவது மிகவும் இனியது. 

2. இறைவன் எங்கு இருக்கிறார்?  

ஒரு நொடிப்பொழுதும் கூட நம்மை விட்டு நீங்காது நம்முடைய இதயத்தில் வாழ்கிறார்.

"நெஞ்சில் நீங்காதான்" என்று குறிப்பிடுவது தனது அகத்து என்றென்றும் வீற்றிருக்கும் இறைவனை நன்றியுடன் வணங்குகிறார்.

3. "கோகழியாண்ட குருமணி" என்பது இறைவன் மாணிக்க வாசகரை அகத்திலிருந்து மட்டுமல்ல, புறத்தில் திருப்பெருந்துறையிலும்  ஆண்டு அருளினதை நன்றியுடன் நினைவு கூறுகிறார்.

4. இறைவனை எங்குக் காணமுடியும்?

ஆகமங்களில்  இறைவன் வார்த்தைகளாக வெளிப்படுகிறார்.

5. ஏகன் -  இறைவன் ஒருவனே. 

அநேகன் - அவனே ஒவ்வொரு உயிரிலும் கலந்திருந்து பல வடிவங்களாகக் காட்சியளிக்கிறான்.

சாரம்:


இறைவன் ஒருவனே. நீர் வாழ்க!

இதயத்தில் இமைப் பொழுதும் நீங்காது வாசம் செய்கிறீர். 
நீர் வாழ்க!

நீர் உம்மை ஆகமங்களில் சிறப்பாக வெளிப்படுத்துகிறீர். 
நீர் வாழ்க!

இறைவா! 
நீர் தன்மையால் ஒன்று எனினும் ஒவ்வொரு உயிர்களோடும் கலந்திருப்பதால் பல பரிமாணத்திலும் வெளிப்படுகிறீர். 
நீர் வாழ்க!



செவ்வாய், 30 ஜூலை, 2019

திருவாசகம் - வாழ்க்கைப் பயனீடு

திருவாசகம் - வாழ்க்கைப் பயனீடு


மனிதனின் இயல்புத்தன்மை சிற்றியல்புகளில் மிகுதியான விருப்பத்துடன் ஈடுபடுதல் ஆகும்.

இந்த சிற்றின்ப மோகம் படைக்கப்பட்ட நோக்கத்தை மறைத்து, அதனின் மனிதரை விலக்கி, இலக்கை உணர்ந்து கொள்ளாதவாறு வழுவி விலகச் செய்கின்றன.

இந்த சிற்றின்ப நாட்டத்தை மனதிலிருந்து நீக்கும்  முறைகளைத் திருவாசகம் விவரிக்கின்றது.

மனதை ஒரே இறைவனை நோக்கி வழி நடத்துகின்றது.

மனிதரின் வாழ்க்கை நோக்கத்தைத்  தெளிவாக்கி, அவர் அடைய வேண்டிய சிறந்த குணங்களைச் சுட்டிக் காட்டுகிறது.

இறையனுபவத்தில் வளரும் வழிமுறைகளைக் கற்றுத் தருகிறது.

இறையனுபவத்தின் பால் ஈர்ப்பையும், அதில் தீராத வேட்கையையும் உருவாக்குகிறது.

இறையனுபவத்தில் தோய்ந்து அக மகிழவும்,  அவரைக் காண வேண்டும் எனும் வாஞ்சையையும் பெருக்கமாகப் புரண்டு வரச் செய்கிறது.

இறையடியவர் உறவிலும் தொடர்பிலும்  மனம் மகிழச் செய்கிறது.

அந்தமாக இறைமையில் சரணடைதல், பக்தியில் திளைத்தல், இறையடியவராக மறுரூபமாதல், இறைமையில் இரண்டறக் கலத்தல் ஆகியவற்றை  முறையாகக் கூறி இறைப் பாதையில் பயணிக்க வழி காட்டுகின்றது. 

திங்கள், 29 ஜூலை, 2019

மாணிக்க வாசகர் - வரலாறு

மாணிக்க வாசகர் - வரலாறு


வான் கலந்த மாணிக்க வாசக! 
நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே


என்று அருட்ஜோதி இராமலிங்க வள்ளலாரால் உருகி உருகிப் பாராட்டப்பெறும் உயர்வாளர் மாணிக்கவாசகர்.

"அபிதான சிந்தாமணி" என்னும் தல புராணத்திலிருந்து இவரைக் குறித்து தகவல்கள்  திரட்டப்பட்டுள்ளன.

"திருவாதவூரடிகள் புராணம்" எனும் அற்புத நூல் மாணிக்கவாசகப் பெருமானின் வரலாற்றை வெளிப்படுத்தும் ஏழு சருக்கங்களை உடைய செந்தமிழ் நூல்.

மதுரை மாநகரிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்ந சிற்றூர் திருவாதவூர்.

இத்தலத்தில் இறைவன் வாதபூரிசுவரர் என்னும் திருநாமத்தோடு எழுந்தருளியுள்ளார்.

இங்கு வசித்த சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர்  திருவாதவூரார்" என்னும்  திருப்பெயர்ச் சூட்டினார்.

சிறு வயதிலேயே கல்வியிலும், ஞானத்திலும் சிறந்த விளங்கினார் வாதவூரார். 

அவரது அறிவாற்றலை அறிந்த, பாண்டிய மன்னனான அரிமர்த்தன பாண்டின், வாதவூராருக்கு தனது அரசவையில் அமைச்சர் பதவியை வழங்கி கவுரவித்தான். 

உயர் பதவி, நிறைந்த செல்வம் போன்றவை இருந்தும், எதையோ இழந்தது போன்ற உணர்வையே வாதவூரார் உணர்ந்து கொண்டிருந்தார். 

அது பற்றி ஆராய்ந்த போது சைவ சித்தாந்தங்களை கற்றறியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 

அதன்பிறகு இறைவனின் அடிசேர்வதே தன்னுடைய வாழ்வின் இறுதி நோக்கம் என்பதை அவர் புரிந்து கொண்டார். அதனால் சிவ வழிபாட்டை மேற்கொள்ளத் தொடங்கினார்.


மாணிக்க வாசகர் வாழ்ந்த காலம்: 


மாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் கி.பி 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு காலகட்டம் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளன.

இவர் அப்பர், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் மூவருக்கும் முற்பட்டவர் என்றும் சிலர் கருத்துள்ளது.

"நரியைக் குதிரைசெய்" எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் குறிப்பிட்டுள்ளதால்  இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் எனக் கருதப்படுகிறது.

"கிடந்தான் தில்லை அம்பலமுன்றிலில் மாயவனே”

என்று பாடுவதும் இவர்  8ம் நூற்றாண்டுக்குப் பிந்தையவர் என்பதையே காட்டி நிற்கிறது.


சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிற்பட்ட காலத்தவர் என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. 

அதற்கு ஆதாரமாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது “திருத்தொண்டர் தொகையில்” தனது காலத்திலும் தனக்கு முற்பட்ட காலத்திலும் வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றிக் குறிப்பிட்ட போதும் மாணிக்கவாசகர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

இதனால் இப்பதிகத்தையே முதல்நூலாகக் கொண்டு எழுந்த பெரியபுராணத்திலும் மாணிக்கவாசர் சரிதம் இல்லை.

ஆகையால்  மாணிக்கவாசகர் சுந்தரர் பெருமானுக்கு காலத்தால் பிற்பட்டவர் என்ற கருத்து நிறுவப்படுகின்றது.

இவ்வாறு மாணிக்கவாசகர் 9ம் அல்லது 10ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று இன்னிஸ்- நெல்ஸன், கோபிநாதராயர் போன்றோர் கருதியுள்ளனர். 

இதுவே தற்போதைய ஆய்வுகளின் வண்ணம் இம்முடிவு சரியாயிருக்கும் என்று கருதமுடிகிறது.

இவர் வாழ்வில் நிகழ்ந்த அற்புத நிகழ்வுகளாகப் புராணங்களில் குறிப்பிடப்பட்ட. சில முக்கிய நிகழ்வுகள்:


சிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும், மண்சுமந்து அடிபடும் படியும் நடந்து கொண்டது.

பிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணைப் பேசவைத்தமை.

தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்றுக்கொண்டது.

எல்லோரும் காணத்தக்கதாக திருச்சபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது..


பட்டப் பெயர்கள்:


இவருக்கு அருள் வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.

ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சாயுச்சிய முக்தியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்).

தமிழகத்தில்  தெய்வத் திருவாதவூரார் திருத்தலம்



திருவாதவூரராகிய மாணிக்கவாசகருக்கு தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பெருமரியாதையுண்டு. தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூரில் தென்திசை நோக்கி குருவடிவாய் நிற்கும் நிலையில் விளங்கும் மாணிக்கவாசகரை மூலவராகக் கொண்டு ஒரு திருக்கோயில் உள்ளது. ஒவ்வொரு மாதமகநாளிலும் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது.

“அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"


ஞாயிறு, 28 ஜூலை, 2019

திருவாசகம் ஒரு எளிய அறிமுகம் - 2

திருவாசகம் ஒரு எளிய அறிமுகம் - 2


திருவாசகம் நூல் அமைப்பு


திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. 

இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன. 

இந்நூலில் 38 சிவதலங்கள் பாடப் பெற்றுள்ளன. 

சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்னும் நான்கு பெரும் பகுதிகள் இதில் உள்ளன. 

இவற்றைத் தொடர்ந்து திருச்சதகம் 100 பாடல்களும், நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களையும், திருவெம்பாவை 20 பாடல்களையும், திருவம்மானை 20 பாடல்களையும் கொண்டது.

திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரையுள்ள ஆறு பகுதிகள் 20 பாடல்களைக் கொண்டுள்ளன. 

மற்றவை பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகங்களாக உள்ளன.

"திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்." எனும் சொல் வழக்கு இந்நூலின் சிறப்பை பறை சாற்றும்.

மனிதன் இறைவனிடம் இறைஞ்சுவது திருவாசகம்.

இறைவன் மனிதனுக்குப் போதித்தது கீதை.

மனிதன் மானுடத்துக்கு ஒப்புவித்தது திருக்குறள்.

பன்னிரென்டு திருமுறைகளில் சிகரமாகப் போற்றப்படுவது திருவாசகம்.

நன்றி: தமிழ் விக்கி

சனி, 27 ஜூலை, 2019

திருவாசகம் ஒரு எளிய அறிமுகம் - 1.

திருவாசகம் ஒரு எளிய அறிமுகம் - 1.


திருவாசகம் சைவ சமய வழி வாழும் மக்களால் ஒரு தெய்வ நூல் என்று போற்றப்படுகின்றது. இந்த தெய்வநூலை பூஜை அறையில் வைத்து வழிபடுவது மரபு.

இந்நூலை இயற்றியவர் மாணிக்க வாசகர். மாணிக்க வாசகருக்கு இறைவன் காட்சியளித்து தீட்சை வழங்கி மறைந்தார். மறைந்த இறைவனை மீண்டும் தரிசிக்க இறைஞ்சி மனமுருகிப் பாடியது திருவாசகம்.

மாணிக்க வாசகர் இயற்றிய நூல்கள் இரண்டு.

1. திருமுறை.
2. திருக்கோவையார்.

இந்துக்களின் வேத நூல்கள் நான்கும் வட மொழியில் இயற்றப்பட்டவை.

இதற்கு இணையாகத் தமிழில் உள்ள நூல்கள்

1. திருமுறை
2. நாலாயிரத் திவ்விய பிரபந்தம்.

திருமுறை தமிழர்களின்  வேதாகமம் எனப் போற்றப்படுகின்றது. திருமுறை ஏக இறைவனைப் போற்றிப்  புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்கள் ஆகும்.

இதில் சிவ ஆகமங்கள், தத்துவ தரிசனங்கள், சித்தாந்தங்கள் ஆகியவற்றை விளக்கும் நூல்களின் தொகுப்பு ஆகும்.

திருமுறைகள் மொத்தம் பன்னிரெண்டு ஆகும்.

முதல் ஏழு திருமுறைகள் தேவாரப் பாடல்களாக விளங்குகின்றன.

எட்டாம் திருமுறையில்தான் திருவாசகமும், திருக்கோவையும் உள்ளன.