திங்கள், 29 ஜூலை, 2019

மாணிக்க வாசகர் - வரலாறு

மாணிக்க வாசகர் - வரலாறு


வான் கலந்த மாணிக்க வாசக! 
நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து
ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே


என்று அருட்ஜோதி இராமலிங்க வள்ளலாரால் உருகி உருகிப் பாராட்டப்பெறும் உயர்வாளர் மாணிக்கவாசகர்.

"அபிதான சிந்தாமணி" என்னும் தல புராணத்திலிருந்து இவரைக் குறித்து தகவல்கள்  திரட்டப்பட்டுள்ளன.

"திருவாதவூரடிகள் புராணம்" எனும் அற்புத நூல் மாணிக்கவாசகப் பெருமானின் வரலாற்றை வெளிப்படுத்தும் ஏழு சருக்கங்களை உடைய செந்தமிழ் நூல்.

மதுரை மாநகரிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்ந சிற்றூர் திருவாதவூர்.

இத்தலத்தில் இறைவன் வாதபூரிசுவரர் என்னும் திருநாமத்தோடு எழுந்தருளியுள்ளார்.

இங்கு வசித்த சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர்  திருவாதவூரார்" என்னும்  திருப்பெயர்ச் சூட்டினார்.

சிறு வயதிலேயே கல்வியிலும், ஞானத்திலும் சிறந்த விளங்கினார் வாதவூரார். 

அவரது அறிவாற்றலை அறிந்த, பாண்டிய மன்னனான அரிமர்த்தன பாண்டின், வாதவூராருக்கு தனது அரசவையில் அமைச்சர் பதவியை வழங்கி கவுரவித்தான். 

உயர் பதவி, நிறைந்த செல்வம் போன்றவை இருந்தும், எதையோ இழந்தது போன்ற உணர்வையே வாதவூரார் உணர்ந்து கொண்டிருந்தார். 

அது பற்றி ஆராய்ந்த போது சைவ சித்தாந்தங்களை கற்றறியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 

அதன்பிறகு இறைவனின் அடிசேர்வதே தன்னுடைய வாழ்வின் இறுதி நோக்கம் என்பதை அவர் புரிந்து கொண்டார். அதனால் சிவ வழிபாட்டை மேற்கொள்ளத் தொடங்கினார்.


மாணிக்க வாசகர் வாழ்ந்த காலம்: 


மாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் கி.பி 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு காலகட்டம் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளன.

இவர் அப்பர், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் மூவருக்கும் முற்பட்டவர் என்றும் சிலர் கருத்துள்ளது.

"நரியைக் குதிரைசெய்" எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் குறிப்பிட்டுள்ளதால்  இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் எனக் கருதப்படுகிறது.

"கிடந்தான் தில்லை அம்பலமுன்றிலில் மாயவனே”

என்று பாடுவதும் இவர்  8ம் நூற்றாண்டுக்குப் பிந்தையவர் என்பதையே காட்டி நிற்கிறது.


சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிற்பட்ட காலத்தவர் என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. 

அதற்கு ஆதாரமாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது “திருத்தொண்டர் தொகையில்” தனது காலத்திலும் தனக்கு முற்பட்ட காலத்திலும் வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றிக் குறிப்பிட்ட போதும் மாணிக்கவாசகர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

இதனால் இப்பதிகத்தையே முதல்நூலாகக் கொண்டு எழுந்த பெரியபுராணத்திலும் மாணிக்கவாசர் சரிதம் இல்லை.

ஆகையால்  மாணிக்கவாசகர் சுந்தரர் பெருமானுக்கு காலத்தால் பிற்பட்டவர் என்ற கருத்து நிறுவப்படுகின்றது.

இவ்வாறு மாணிக்கவாசகர் 9ம் அல்லது 10ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று இன்னிஸ்- நெல்ஸன், கோபிநாதராயர் போன்றோர் கருதியுள்ளனர். 

இதுவே தற்போதைய ஆய்வுகளின் வண்ணம் இம்முடிவு சரியாயிருக்கும் என்று கருதமுடிகிறது.

இவர் வாழ்வில் நிகழ்ந்த அற்புத நிகழ்வுகளாகப் புராணங்களில் குறிப்பிடப்பட்ட. சில முக்கிய நிகழ்வுகள்:


சிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும், மண்சுமந்து அடிபடும் படியும் நடந்து கொண்டது.

பிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணைப் பேசவைத்தமை.

தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்றுக்கொண்டது.

எல்லோரும் காணத்தக்கதாக திருச்சபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது..


பட்டப் பெயர்கள்:


இவருக்கு அருள் வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.

ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சாயுச்சிய முக்தியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்).

தமிழகத்தில்  தெய்வத் திருவாதவூரார் திருத்தலம்



திருவாதவூரராகிய மாணிக்கவாசகருக்கு தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பெருமரியாதையுண்டு. தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூரில் தென்திசை நோக்கி குருவடிவாய் நிற்கும் நிலையில் விளங்கும் மாணிக்கவாசகரை மூலவராகக் கொண்டு ஒரு திருக்கோயில் உள்ளது. ஒவ்வொரு மாதமகநாளிலும் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது.

“அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"


2 கருத்துகள்: