1. சிவபுராணம்.
திருச்சிற்றம்பலம்.
1. நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
2. இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
3. கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
4. ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
5. ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
குறிப்பு:
1. "நம " என்றால் வணக்கத்துக்கு உரிய என்று பொருள்.
"சிவம்" என்ற சொல் முதன்மையான ஏக இறைமையைச் சுட்டுவது.
மாணிக்க வாசகர் தம்முடைய திருவாசகத்தின் முதல் ஒலியாக நமச்சிவாய என்ற திரு ஐந்தெழுத்தைச் சொல்லிப் போற்றி வாழ்த்தித் துவங்குவது மிகவும் இனியது.
2. இறைவன் எங்கு இருக்கிறார்?
ஒரு நொடிப்பொழுதும் கூட நம்மை விட்டு நீங்காது நம்முடைய இதயத்தில் வாழ்கிறார்.
"நெஞ்சில் நீங்காதான் " என்று குறிப்பிடுவது தனது அகத்து என்றென்றும் வீற்றிருக்கும் இறைவனை நன்றியுடன் வணங்குகிறார்.
3. "கோகழியாண்ட குருமணி" என்பது இறைவன் மாணிக்க வாசகரை அகத்திலிருந்து மட்டுமல்ல, புறத்தில் திருப்பெருந்துறையிலும் ஆண்டு அருளினதை நன்றியுடன் நினைவு கூறுகிறார்.
4. இறைவனை எங்குக் காணமுடியும்?
ஆகமங்களில் இறைவன் வார்த்தைகளாக வெளிப்படுகிறார்.
5. ஏகன் - இறைவன் ஒருவனே.
அநேகன் - அவனே ஒவ்வொரு உயிரிலும் கலந்திருந்து பல வடிவங்களாகக் காட்சியளிக்கிறான்.
சாரம்:
இறைவன் ஒருவனே. நீர் வாழ்க!
இதயத்தில் இமைப் பொழுதும் நீங்காது வாசம் செய்கிறீர்.
நீர் வாழ்க!
நீர் உம்மை ஆகமங்களில் சிறப்பாக வெளிப்படுத்துகிறீர்.
நீர் வாழ்க!
இறைவா!
நீர் தன்மையால் ஒன்று எனினும் ஒவ்வொரு உயிர்களோடும் கலந்திருப்பதால் பல பரிமாணத்திலும் வெளிப்படுகிறீர்.
நீர் வாழ்க!
அருமை
பதிலளிநீக்குநன்றி ரவி.
பதிலளிநீக்கு