சனி, 10 செப்டம்பர், 2022

குறை ஒன்றும் இல்லை

 பிறர் மீது பழி பேசுவது நன்மை தராது.

உறவுகள் தேவை: 

நல்ல உறவுகள் மனித வாழ்விற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. சிறந்த நட்பு வட்டம் உடையவர்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ந்து கொண்டாடுகின்றனர். 

நல்ல நட்புகள் வாழ்க்கையை இனிமையாக மாற்றுகிறது. வாழ்வின் சிக்கல்களை மேற்கொள்ள உறுதுணையாக இருக்கிறது. அவர்கள் எந்த சூழ்நிலையிலும் மனம் சோர்ந்து போகாமல் இருக்க முடிகிறது.  

எனினும் சில சமயங்களில், சில உறவுகள் சுமையாகவும் மாறுகின்றது. சிலர் நம்பிக்கைக்கு மாறாக நடக்கும் போது மனம் உடைந்து போகிறது. அதனால் சந்தேகம், அவநம்பிக்கை ஏற்படுகிறது. பிறருடன் பழகுவதற்குக் கடந்த கால அனுபவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது. உறவுகள் மீது வெறுப்பு உண்டாகிறது.

இந்த உலகில் நூறு சதவீதம் குறைவில்லாத மனிதர்கள் என்று  யாரும் கிடையாது. 

"குற்றம் பார்கின் சுற்றம் இல்லை" என்பது முதுமொழி. 

ஒவ்வொருவருடைய குறையையும் நாம் பெரிது படுத்திப் பேசிக் கொண்டே இருந்தால் கடைசியில் தனி மரமாகி விடுவோம்.

நாமும் குறைவு உடையவர்கள். பல தவறுகளை உணர்ந்து திருத்திக் கொண்டதால் தான் பல நிலைகளில் வளர்ச்சி அடைந்து உள்ளோம். நல்ல முறையில் உறவுகளை நிர்வகிக்க, அவர்களின் இயல்பான தன்மையை அறிந்து நட்பு பாராட்டுவது  நல்லது. 

அது சரியான இடைவெளியைக் கடைப் பிடிக்க உதவும். பட்டுத் தெளிய வேண்டிய தேவை இல்லை.

குறள் நெறி:

புறம் கூறாமை எனும் அதிகாரம் குறை கூறி பிறரைப் பழித்துப் பேசுவது குறித்து விரிவாக விளக்குகிறது.

அதில் ஒரு குறள் இவ்வுலகில் உறவுகளுடன் துன்பம் இல்லாமல் வாழ வழி சொல்கிறது.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பிறரது குற்றங்களைப் பார்ப்பது போல ஒருவர் தனது தவறுகளை உணர்ந்து கொள்ள முடிந்தால் அவருக்கு இவ்வுலகில் துன்பம் இல்லை. 

ஏதிலார் என்பது பகைவர், அன்னியர், அயலார் இவர்களைக் குறிக்கும். 

இந்த குறள் வலியுறுத்தும் கருத்து:

பிறர் நம்மைக் குறை கூறி பழித்துப் பேசினாலும் மனம் அமைதி இழக்கக் கூடாது. நடு நிலையிலிருந்து தவறக் கூடாது. நான் எதுவும் தவறு செய்துள்ளோனா எனத் தன்னைத் தானே ஆராய்ந்து பார்க்கும் தன்மை வேண்டும். ஒருபோதும் அவசரப்பட்டுக் குறை கூறி பழித்துப் பேசுவது கூடாது. 

அதனால் உறவுகள் உடையாது. துன்பம் இல்லை.

குறை கூறி பேசுவது ஏன்?

உள்ளத்தில் வெறுப்பு உணர்வுகள் மேலோங்கி இருந்தால் குறை பேசுவது தொடங்குகிறது. குறை கூறி பழித்துப் பேசுவது தவறு. 

பொறாமை: இந்த உணர்வு மேலோங்கி இருந்தால், தன்னை விட உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் கண்டு அவதூறு பேசுவார்கள்.

ஏமாற்றம்:  ஒன்றை எதிர்பார்த்து அந்த  எதிர்பார்ப்பு நிறைவேறாமல் ஏமாற்றம் அடையும் போது குறை கூறி பேசுவர்.

சுய மதிப்பு: தன் மதிப்பைப் பாதுகாக்க, தனது தவறுகளை மறைத்து பிறர் மீது பழி சொல்லிப்  பேசுவர்.

பேராசை: பணம், பொருள் இவற்றை அடைய விரும்புபவர், அதற்காகக் குறை கூறி பழித்துப் பேசுவர்.

அதிகாரம்: பதவியை அடைய அல்லது அதைத் தக்க வைக்கும் ஆசையில்  அபாண்டமாகப் பொய் பேசுவர்.

இச்சை: உடலின்பம், பொழுது போக்குக்காகப் பழகுபவர், அந்த நோக்கம் முடிந்தவுடன் குறை கூறிப் பழித்துப் பேசி விலகி விடுவார்கள்.

சோம்பேறி: உழைப்பில்லாமல் சுகமாக வாழ்பவர் எல்லாவற்றையும் குறை கூறி இகழ்ச்சியாக, ஏளனம் பேசுவர்.

இயலாமை: தன்னால் செய்ய இயலாத இயலாமையில் குறை சொல்வார் உண்டு.

பொதுவாக தன் மனதில் நல்ல பண்புகள் இல்லாதவர்களே பிறர் குறைகளைப் பெரிது படுத்திப் பேசுவார்கள்.

பிறர் தவற்றை எப்படிச் சுட்டி காண்பிக்க வேண்டும்?

ஒருவருக்கு ஆயிரம் உதவிகள் செய்து இருக்கலாம். ஆனால் அவர் நம்மிடம் ஒரு குறை கண்டு பிடித்துவிட்டால் அந்த நொடியில் நாம் செய்த உதவிகள் அனைத்தும் மறந்து போய் விடும். இது உலகத்தின் இயல்பு.

உண்மையிலேயே தவறு எதுவும் செய்யாமல் பழி பேச்சுக்கு ஆளாக நேரிடலாம். ஆனாலும் நிதானம் தேவை.

அவ்விதம் விரோதமாய் தவறாகப் பேசி இருந்தால், அதைக் குறித்து அவரிடமே நேரிடையாகப் பேச வேண்டும். அல்லது இருவரும் மதிக்கும் பொதுவான மனிதர் மூலம் பேச வேண்டும்.

அதை விடுத்து பொது வெளியில் குறை சொல்வது, விமர்சிப்பது, தரம் குறைந்து பேசுவது முடிவில் நமக்கே வெட்கத்தை ஏற்படுத்தும். 

இத்தகைய குணம் நம் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும். தொடர்புகளை அறுத்து விடும். உறவுகளை அழித்து விடும். 

மனமும் உடலும்;

நமது உடலும் உள்ளமும் ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குவது. 

குறை கூறி பழித்துப் பேசும் மனிதர் பேசியதை குறித்து கவலைப் படக் கூடாது. இவர்கள் பேசியதை அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டு இருப்பது மன அமைதியைக் கெடுக்கும். மன அழுத்தம் ஏற்படும்.

நம் உடல் குறிப்பிட்ட அளவு மட்டுமே மன அழுத்தத்தைத் தாங்கும். அது வரம்பு மீறும் போது உடல் நலத்தைக் கடுமையாகப் பாதிக்கும். சிந்திக்கும் திறனில் பாதிப்பு ஏற்படும். செயல் பட முடியாத அளவிற்கு முடக்கி விடலாம்.

நமது மன விருப்பங்கள், தேடல், வாழ்க்கை முறை இவற்றுக்கு ஒத்திசைவாக இருப்பவர்களுடன் மட்டுமே மிக நெருக்கமாகப் பழக முடியும். 

நல்ல உறவிற்கு ஒத்த அலை வரிசை மிக முக்கியம். எதிர் குணம் கொண்டவருடன் கொள்ளும் நெருங்கிய நட்பு நீண்ட கால முடிவில் மன அமைதியைக் கெடுக்கும். 

மாற்றத்தை விரும்பாதவர், தனது கருத்து மட்டுமே சரி என்று வாதிடுபவர், பிறரை ஆளுகை செய்ய விரும்புபவர், பிறர் கஷ்டம் கண்டு வருந்தாதவர், கடினமான வார்த்தைகளைப் பேசுபவர், தற்பெருமை பேசுபவர், பிறர் உழைப்பை ஏமாற்றி மோசம் செய்பவர், ஏமாற்றுபவர்..,  இவர்களிடம் சுய சிந்தனை, சுய மதிப்பு இல்லாதவர்கள் மட்டுமே நெருங்கிய உறவைப் பேண முடியும்.

உறவுகள் தொடர்கதை:

உறவுகள் தொடர சில பண்புகள் வேண்டும். உறவுகள் சிறப்பாகத் தொடர முயற்சிகள் எடுக்க வேண்டும். நேரம் ஒதுக்க வேண்டும். சுக துக்கங்களில் கலந்து கொள்ள வேண்டும். 

பணத்திற்கு ஆசைப்பட்டு பழகக் கூடாது. பொருள் அடிப்படையில் உருவாகும் உறவுகள் ஒருபோதும் நிலைக்காது. இறுதியில் ஒருவரை ஒருவர் தூற்றி பேச நேரிடும். 

மன உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒன்றை அடைவதற்காகப் பழகுவது மிக மோசமானது. எந்த சூழ்நிலையிலும் ஒரு காரியத்திற்காக நட்பு கொள்ளாதீர். காரியத்திற்காகப் பழகுபவர் அது நிறைவேறியவுடன் கழட்டி விட்டுப் பழிச் சொல் பேசுவார்கள். பிறருக்கு உதவி செய்ய விரும்பி நட்பு கொள்ளவும்.

பொறாமை குணம் அழிவை ஏற்படுத்தும். நம்மை விடச் சிறப்பாகச் செயல் புரிபவர் பார்த்து பொறாமையில் அவர்களை அவதூறு பேசக் கூடாது. இறுதியில் அது நம்மை அழித்து விடும். 

சிறப்பாகச் செயல் புரிபவர்களைப் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். பாராட்டிப் பேசுபவர்களுக்கு நட்பு வட்டம் பெரிதாக இருக்கும்.

அளவுக்கு அதிகமாக எவரிடமும் எதிர்பார்ப்பு வேண்டாம். இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். நமது குழந்தைகளிடம் இருந்தும் கூட பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் அந்த ஏமாற்றம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எவ்வித எதிர்பார்ப்பின்றி அன்பு செலுத்துங்கள். 

உங்களுக்கு நன்மை செய்தவர்களை ஒரு போதும் மறக்கக் கூடாது. நன்றி உணர்ச்சி உடையவர்களுக்குச் சிறந்த நட்பு இயல்பாக அமையும். அவர்கள் உறவுகளை மிக நேர்த்தியாகப் பாதுகாப்பார்கள்.

குறை பேசும் பழக்கத்திலிருந்து விடுபடலாம்:

பிரார்த்தனை செய்யுங்கள். மனமுருகி வேண்டுதல் செய்யும் போது பல தீய சுபாவங்கள் நீங்கும். நாம் செய்த பல குற்றங்களை உணர்வோம். 

சிறந்த நூல்களை வாசியுங்கள். நல்ல எண்ணங்களை மனதில் விதையுங்கள். மனதில் நல்ல சிந்தனைகள் ஊற்று போலப் பெருகும். மேலும் பல நல்ல விருப்பங்களை உருவாக்கும்.

தியானம். மனம் ஒருமை நிலை அடையத் தியானம் உதவும். மனம் அமைதி அடையும். மன அமைதி நிலையில் விருப்பு வெறுப்புகளைக் கடந்து சிந்திக்க முடியும். நமது குறைகள் இருந்தால் அதை உணர முடியும். மனம் வலிமை பெறும்.

மன்னிப்பு. பிறர் தவறுகளை மன்னிக்கும் போது நமக்கு நாமே அதிக நன்மை செய்து கொள்கிறோம். நம் மனதிலிருந்து கோபம் அகலுகிறது. தீய எண்ணங்கள் அகலுகிறது. கொலை பாதக சிந்தனைகள் நீங்குகிறது. அன்பு பிறக்கிறது.

அன்பு செலுத்துங்கள். நிபந்தனையற்ற அன்பு மிகச் சிறந்தது. அது எந்த பிரதி பலனும் கிடைக்கும் என எண்ணிச் செய்யப்படுவது கிடையாது.  அது தன்னலமற்றது. அன்பு சகலத்தையும் சகிக்கும். எல்லாவற்றையும் மன்னிக்கும். எதையும் ஏற்றுக் கொள்ளும்.

இதமான வார்த்தைகளால் பேசுங்கள். பேசுவது குறைவாக இருக்கட்டும். பயனுள்ளதாக இருக்கட்டும். கனிவான வார்த்தைகளாக இருக்கட்டும். அன்பு நிறைந்த சொற்களாக இருக்கட்டும். 

வளர்ச்சி என்பது சிந்தனையில் ஏற்படும் மாற்றத்தில் தான் தொடங்குகிறது. நமது தவறுகளை ஒத்துக் கொண்டு சரி செய்யும் போது முன்னேற்றம் அடைகிறோம்.

சில தொடர்புடைய மேற்கோள்கள்:

See if you can catch yourself complaining, in either speech or thought, about a situation you find yourself in, what other people do or say, your surroundings, your life situation, even the weather. To complain is always non acceptance of what is. It invariably carries an unconscious negative charge. When you complain, you make yourself into a victim. When you speak out, you are in your power. So change the situation by taking action or by speaking out if necessary or possible; leave the situation or accept it. All else is madness. - Eckhart Tolle.

குறை கூறி பேசுவது ஒருவரின் ஆற்றலை முழுவதுமாக வீணடிப்பதாகும். அதிகம் குறை கூறுபவர்கள் மிகக் குறைவாகவே சாதிக்கிறார்கள் - Robert Tee.

What you're supposed to do when you don't like a thing is change it. If you can't change it, change the way you think about it. Don't complain. - Maya Angelo

படம் இணையத்திலிருந்து நன்றியுடன் .

2 கருத்துகள்: