நிதானம் எனும் நற்குணம்
நிதானம் தேவை:
நிதானம் நமக்குத் தேவையான ஓர் முக்கியமான குணம். இந்த நற்பண்பு வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாததாகும்.
மனம் அமைதியாக இருக்கும் போது நிதானமாகச் செயல் படுவோம். அது சிறந்த முடிவுகளை எடுக்க உதவி செய்கிறது.
ஒரு செயலை நிதானமாகச் செய்கிற போது, அந்த காரியம் முழுமையாகவும், சிறப்பாகவும் அமைகிறது.
குணங்களின் ஆதிக்கம்:
நாம் எப்படி செயல் படுகிறோம் எனக் கவனித்துப் பார்த்தது உண்டா?
நாம் செயல் புரியும் விதம் (our attitude & actions), நமது குணங்களால் (influenced by behaviour) தான் தீர்மானிக்கப்படுகிறது.
குணங்கள் நம் நடத்தையைக் கட்டுப் படுத்துகின்றது. அவை நமக்குள்ளே மறைவாக இருந்து நம்மை இயக்குகிறது.
பல சமயங்களில் நாம் கற்றுக் கொண்ட நல்ல அறிவுரைகளின் படி செயல்களைச் செய்வதில்லை. நமது இயல்பான குணத்தின் படியே உடனடியாக எதிர் வினை ஆற்றுகிறோம்.
ஆம். நாம் விரும்புவதைச் செய்யாமல் வெறுப்பதைத் தான் பல நேரங்களில் செய்கிறோம். இதற்கு நமது இயல்பான குணத்தின் ஆதிக்கம் (In born Nature) தான் காரணம்.
குணங்கள் உணர்வுகள் எனும் தளங்களிலிருந்து உருவாகி இயங்குகிறது. அறிவை விட உணர்வு மிக வலிமையானது. பெரும்பாலான முடிவுகளை இந்த உணர்வு தளத்திலிருந்து தான் நாம் எடுக்கிறோம்.
எனவே ஒவ்வொரு செயலுக்குப் பின்னர் மறைந்திருந்து நம்மை இயக்குகிற குணத்தைச் சீர் தூக்கிப் பார்த்துச் சரி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது.
வாழ்வின் உயர்வும் தாழ்வும் நம் குணங்களின் தன்மை பொறுத்தே அமைகிறது.
குணங்களின் தன்மை:
குணங்களில் நல்லது, கெட்டது இரண்டும் கலந்து உள்ளது.
தீய குணங்கள் நம்முடன் ஒட்டிக் கொண்டு பிறக்கின்றன. அது இயல்பாக நமக்குள் பதிந்துள்ளது. வளரும் போதும், தீய பழக்கங்கள் நம்மை ஈர்க்கின்றன. அதை அடைய முயற்சி செய்ய வேண்டிய தேவை இல்லை. தேடிச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அவை தாமாக நம்மை நாடி வந்து அடிமைப் படுத்துகின்றன. இறுதியாக வாழ்வைக் கறைப் படுத்துகின்றது.
மாறாக நல்ல குணங்களைத் தேடி வலிந்து போய் கற்க வேண்டும். தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். அதைப் பராமரிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும்.
நற் குணங்கள் எவை, தீய குணங்கள் எவை என்று அற நூல்களைத் தொடர்ந்து வாசிப்பது வழியாகக் கண்டு உணர முடியும்.
எளிமையாக, நமக்குப் பிறர் எதைச் செய்யக்கூடாது என நினைக்கிறோமோ அவை தீயவை.
பிறர் பார்த்து விடக் கூடாது (அவமானப் படுத்தி எடுக்கும்) எனப் பயந்து மறைவாகச் செய்ய என்னும் செயல்கள் தீய குணங்கள் உண்டு பண்ணுகிறது.
குணங்கள் எப்படி உருவாகின்றன?
இதை வரையறுப்பது எளிதானதல்ல. அது மிக மிகச் சிக்கலானது.
ஆனால் ஒரு நல்ல செய்தி உள்ளது. நம் விருப்பம், நம்பிக்கை மற்றும் தொடர் பயிற்சி வழியாக நாம் விரும்பும் நற் குணங்களை அடைய முடியும்!!!
அதற்கு முதலில் நல்ல விருப்பங்கள் மீது மனதில் ஆசை உருவாக வேண்டும். இறையருள் விருப்பங்களை ஏற்படுத்துகிறது.
நிதானம் என்றால் என்ன?
நிதானம் என்று குறிப்பிடுவது மன அமைதியை இழக்காத அறிவு நிலையில் செயல் புரிவது.
நிதானம் பொறுமை என்கிற அஸ்திவாரம் மேல் அமைந்த ஒரு பண்பு.
நிதானம் என்பது ஆசைகள், துன்பங்கள் மற்றும் இன்பங்கள் ஏற்படுத்தும் எழுச்சி மிகு உணர்வு நிலையால் பாதிக்கப்படாது, நடுநிலையிலிருந்து முடிவுகள் எடுப்பது.
நிதானம் என்பது உள்ளுணர்வுகளின் மயக்கங்களுக்கு ஆட்படாமல், விழிப்புணர்வுடன் அந்த உணர்வு அலைகளுக்கு எதிராகப் பொறுமையுடன், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது.
சில சமயங்களில், அதிக மகிழ்ச்சி நிறைந்த இன்பங்களை எதிர்கொள்ளும் போதும் தலை கால் புரியாமல் தடுமாறிப் போய் விடுவோம்.
அப்பொழுது நிதானம் தவறி எடுக்கும் முடிவுகள் பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதன் தாக்கங்கள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.
அரிஸ்டாட்டில் தனது "The Great Morals" என்ற புத்தகத்தில் நிதானம் என்பது இரண்டு எதிர் உச்சநிலை உணர்வுகளுக்கு இடையேயான மையப்பகுதியிலிருந்து செயல் புரிவதைக் குறிக்கிறது என்கிறார்.
நிதானம் இழக்க நேரிடும் சில சூழல்கள்:
- உணர்வு கட்டுக்கடங்காமல் மீறி எழும் போது,
- நம்பியவர் ஏமாற்றி மோசம் செய்யும் போது,
- நல்ல வாய்ப்புகள் பறி போய் விடுவோமோ எனும் பயத்தில்,
- ஒரு செயலில் ஈடுபடும் போது தவறான விளைவுகள் ஏற்படும் போது,
- நம் மேல் குற்றம் சுமத்தப் படும் சூழலில்,
- நாம் அதிகமாக நேசிப்பவர்கள் கடினமான சூழலில் துயரப்படும் போது,
- பணம், பொருள் எதிர் பாராது இழக்க நேரிடும் பொழுது,
- உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் காரியங்கள் நேரிடும் பொழுது,
- பொது வெளியில் பேச வேண்டும் என்று அழைக்கப்படுகிற போது,
ஆக எதிர்பாராத கடினமான சூழலில் எதிர் வினை ஆற்ற வேண்டிய கட்டாய சூழலில் நிதானம் இழக்கிறோம்.
உடல் ரீதியிலான அறிகுறிகள்:
நிதானமில்லாமல் இருப்பது உடல் மொழியில் வெளிப்படும்.
படபடப்பு, நா வறட்சி, அடிக்கடி உதட்டை ஈரமாக்குவது, எச்சில் விழுங்குவது, வேகமாகவும் மேலோட்டமாகவும் சுவாசிப்பது, கண்களைப் பார்த்துப் பேசத் தயங்குவது கால்கள் சோர்வாக உணர்வது, பலவீனமாகக் குனிந்தபடி நிற்பது - இவையனைத்தும் நிதானம் இழந்திருப்பதைக் காட்டுகின்றன.
நிதானத்தின் மேன்மை:
மனம் அமைதியாக இருக்கும் போது நிதானமாகச் செயல் புரிவோம்.
அப்போது விழிப்புணர்வு, சிந்திக்கும் திறன், எச்சரிக்கை உணர்வு மேலோங்கி நிற்கிறது.
அந்த அறிவு நிலையிலிருந்து எடுக்கப் படும் முடிவுகள் சிறப்பாக இருக்கும்.
ஒரு செயலில் அவசரம் காட்டினால் அதில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் அந்த தவறுகள் மோசமான பின் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். ஆக எந்த செயலிலும் நிதானமாகவும், பொறுமையாகவும் செயல்பட்டால் தான் அந்த காரியத்தில் வெற்றிபெற முடியும்.
உயர்ந்த அறிவும், தைரியமும், எப்படி மனிதனை உயர்த்த முடியுமோ அதேபோல், நிதானமாக யோசித்து செயல் புரிபவர், வாழ்கையை அளவுகடந்து வளப்படுத்த முடியும்.
நினைவில் வைத்திருக்க :
இறுதியாக இதை மனதில் பதிய வைக்க வேண்டும்.
நாம் எதன் மீது அதிகப் பற்று வைக்கிறோமோ அதுவே அதிக அளவில் சஞ்சலத்தையும் தரும்.
அதிக அளவில் ஆர்வம், ஈடுபாடு இல்லாத விசயங்களில் நாம் ஒருபோதும் நிதானம் இழப்பதில்லை.
சில மேற்கோள்கள்:
“எல்லோரையும் நம்பாமல் கவனமாக இருங்கள். எச்சரிக்கையும் நிதானமும் சிறந்த அலங்காரமாகும்." - அனடோலி ஆப்டின்ஸ்கி..
அடக்கம் என்பது கடவுளின் ஆடை. அடக்கமுள்ளவனுக்கு எல்லா நற்பண்புகளும் உண்டு." - புனித. எப்ரைம் சிரின்.
"நிதானம் மற்றும் மன அமைதியை உங்கள் உயர்ந்த இலக்காக அமைத்து, அதைச் சுற்றி உங்கள் வாழ்க்கையை ஒழுங்கமைக்கவும்.” - Brian Tracey.
“அமைதியில் உண்மையான இன்பம் இருக்கிறது.” - Victor Hugo.
“அமைதியான மனம் உள் வலிமையையும் தன்னம்பிக்கையையும் தருகிறது, எனவே இது நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.” - Dalai Lama.
“வெளி அழுத்தங்களிலிருந்து விடுபட்டு, கலங்காமல் இருக்கும்போது தெளிவும் அமைதியும் இருக்கும்” - Bruce Lee.
“உங்கள் மனதின் தெளிவில் உங்கள் அமைதியே உங்கள் பலம். எதிர்விளைவுகளை எதிர்க்காமல் ஒதுக்கி வைப்பதால் பலம் வரும். அமைதியாக, உணர்வில், சமநிலையில் வெற்றி பெறுங்கள்". - யோகி அம்ரித் தேசாய்.
“மறுமைக்கான செயல்களைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் நிதானத்துடனும் காலதாமதம் செய்தும் நடந்து கொள்ளுங்கள்.” - நபி மொழி..
திரு
மிகச் சீக்கிரத்தில் கோபங்கொள்கிறவர்களோடு நட்பு கொள்ளாதே. விரைவில் நிதானம் இழப்பவர்கள் பக்கத்தில் போகாதே. நீ அவ்வாறு செய்தால், நீயும் அவர்களைப்போன்று ஆகக் கற்றுக்கொள்வாய். பிறகு அவர்களுக்குரிய அதே துன்பம் உனக்கும் வரும். (The Bible).
கவனத்தில் கொள்ள வேண்டிய சிறந்த கருத்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்கு