சனி, 24 செப்டம்பர், 2022

மனதில் உறுதி வேண்டும்.

மனம் வலிமை அடைய உதவும் 

8 - பழக்கங்கள்

(Eight habits that help become mentally strong.) 



புதிய தொழில்நுட்பங்கள் காரணமாக வேலை செய்யும் சூழல் அடிக்கடி மாற்றம் பெறுகிறதுபல சமயங்களில் கஷ்டப்பட்டு உழைத்தாலும், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடிவதில்லை. உடன் பணிபுரிபவர்களுடன் உறவுகளைப் பேணுவதும் கடினமாக இருக்கிறது.

அத்துடன் அன்றாடக் குடும்பத் தேவைகள் பாரமாக அழுத்துகிறது. அனுதினம் பல எதிர்பாராத நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. வாழ்க்கை எளிமையாக இல்லை. அது ஒரு சவாலாக இருக்கிறது. பலருக்கும் இந்த சவாலைச் சந்திக்கத் தயக்கம். போட்டியை எதிர் கொள்ளப் பயம். தோல்வியைக் கையாள இயலாத நிலைஇது விரக்தியை ஏற்படுத்துகிறது.

இந்தச் சூழலை எதிர் கொள்ள மன வலிமை தேவை. வெற்றி பெறுவதற்கு நம் மீதும், நமது திறன்களின் மீதும் நம்பிக்கை வைத்து, இழந்த மன உறுதியை மீட்டெடுப்பது மிகவும் முக்கியம். பிறக்கும் போதே தைரியம், தன்னம்பிக்கை ஒட்டிக் கொண்டு யாரும் பிறப்பதில்லை. அதற்காக அர்ப்பணிப்புடன் நேரம் ஒதுக்கி முயற்சி செய்தால் இந்தப் பண்புகளை வளர்த்துக் கொள்ள முடியும்

இந்த கட்டுரை மனம் வலிமை பெற உதவும் 8  பண்புகளைக் குறிப்பிடுகிறது. 

குறிப்பாக நீங்கள் பணியிடத்தில் மனரீதியாக வலுவாகவும், சுயச்சார்பு உடையவராக்கவும் வளர இந்த பண்புகள் உதவலாம்.

1. சுய கட்டுப்பாடு அவசியம் -(Engage in self-discipline): 

வெற்றிகரமாகச் செயல் புரிவதற்கு ஓர் ஒழுங்கு முறையில் செயல் புரிவது அவசியம் (Organized). வெற்றிகரமான நபர்கள் தங்கள் வேலையைச் சரியாகப் புரிந்து கொள்வார்கள். அந்தப் பணியை முழுமையாக முடிக்கும் வரை அவர்கள் கவனம் சிதறாது (Concentration). எதையும் அலட்சியமாக அல்லது அரை குறையாகச் செய்ய மாட்டார்கள்.

அடுத்ததாக, பணியில் ஏற்படும் தோல்விக்கு மற்றவர்களைக் குறை கூறி தப்பிக்கக் கூடாது. பிறர் மீது எளிதாகப் புகார் கூறி சில காலம் ஓட்ட முடியும். ஆனால் அது நீண்ட காலத்திற்கு உதவாதுவாழ்க்கையில் முன்னேற விரும்பினால் செயலுக்கான விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் (Responsibility).

செய்ய வேண்டிய பணிகளில்எது முதலில் செய்ய வேண்டியது, பின்னர் எவை என வரிசைப் படுத்திப் பணி புரிவது அவசியம் (Priority).

செய்ய வேண்டிய பணியின் செயல் வழி முறைகளை முன் தயாரிப்பு செய்வது அவசியம் (Preparations). ஒழுங்கு முறையுடன் பணி புரிவதைக் கவனமாகத் தொடர்ந்து பின் பற்ற வேண்டும். அது இயல்பான  பழக்கமாக மாற வேண்டும்இதனால் செய்யும் வேலையில் எதிர்பாராத தவறுகள் நிகழாது.

இவை பணியைச் சிறப்பாகச் செய்து முடிக்க உதவும். ஒழுங்கு முறையுடன் பணி செய்யும் பண்பை நேரம் ஒதுக்கித் தொடர் முயற்சி செய்தால் வளர்த்துக் கொள்ள முடியும். 

2. பாதுகாப்பு  வளையிலிருந்து வெளியேறவும் - (Step out of your comfort zone): 

கப்பல் துறைமுகத்தில் நிற்பது பாதுகாப்பானது தான்ஆனால் அது  அதற்காகக் கட்டப்படவில்லை

நமக்குப் பாதுகாப்பானதாக உள்ள குழுவுடன் இருப்பதால் வசதியாக உணரலாம். ஆனால் அங்குதான் நமது திறன் மற்றும் வளர்ச்சிக்குத்  தடையைப் போடுகிறோம்.

இதன் விளைவாக நமக்குப் பழக்கமில்லாத  சூழ்நிலை அல்லது  ஒரு பணி கொடுக்கப் படும் போது அப்படிப்பட்ட திடீர் நிகழ்வை எதிர் கொள்ள முடியாமல் தவிக்க நேரிடுகிறது. மனதில் ஒரு பாரம் ஏற்படுகிறது. அதைக் கையாள முடியாமல் தோல்வி அடைய நேரிடுகிறது.

இதற்குத் தீர்வு, நம்மைப் பயமுறுத்தும் சிறிய விஷயங்களைச் செய்வது. அங்கிருந்து தொடங்கி மனதில் நம்பிக்கையை உருவாக்குவது.  

தனியாகப் பயணம் செய்யப் பயப்படுகிறீர்கள் என்றால் முதலில் சிறிய தொலைவு பயணம் மேற்கொள்ளவும். சக ஊழியர்களுடன் வெளிப்புறப் பணிகளுக்குச் செல்லுங்கள். அலுவலக பணி முறைகளை முயற்சி செய்து கற்றுக் கொள்ளுங்கள்

முக்கிய விஷயம் என்னவென்றால், அச்சங்களை மேற்கொள்வது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் எல்லாவற்றையும் செய்யத் துணிவு பெறுவீர்கள்.

3. தவறுகளை உணர்வது தவிர்க்கக் கற்பது - (Realize your mistakes and find ways to improve) 

வெற்றிகரமாக வளர உதவும் மற்றொரு பழக்கம்  தவறுகளைப் பகுப்பாய்வு செய்வதாகும்சில நேரங்களில் தவறு நிகழ்வது தவிர்க்க முடியாதுஆனால் அவற்றுக்கான நமது  எதிர்வினை தான் மிக முக்கியம். 

தவறுகளின் பின் விளைவுகளைக் கண்டு பயந்து ஓடி ஒளிவது அல்லது அதை மறைப்பது பலவீனத்தையே தரும். எந்த இடத்தில் தவறு செய்கிறோம் எனப் புரிந்து கொள்ளவில்லை என்றால் மீண்டும் அதே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்ய நேரிடும். இறுதியில் தன்னம்பிக்கையை இழப்போம்எனவே தவறு நிகழ்ந்த ஒவ்வொரு சூழ்நிலையையும் கவனமாக உங்கள் பார்வையிலிருந்து ஆராய்ந்து பாருங்கள்.

எதனால் தவறு நிகழ்கிறது, அது எங்கிருந்து தொடங்குகிறது என்பதைக் கண்டறிய முயலவும். அதனால் அடுத்த முறை அதே போன்றதொரு சூழ்நிலையை எதிர் கொள்ளும் போது எப்படி செயல் புரிய வேண்டும் என அதிக நிச்சயமாகத் தெரியும். இது புத்தியுடன்  நடந்து கொள்ள உதவுகிறது.

4. ‘இல்லைஎன்று சொல்லிப் பழகுங்கள் - (Practice saying ‘NO’):

'இல்லை' என்று சொல்வது' எளிதானது போலத் தோன்றினாலும் சில சூழ்நிலைகளில் அது மிகக் கடினமானதுகுறிப்பாக உங்கள் மேலதிகாரியின் கருத்தை மறுப்பது எளிதானதல்ல. நீங்கள் புதிதாக பணியில் சேர்ந்தவர் அல்லது இளகிய மனம் படைத்தவராக இருந்தால் இல்லை என்று சொல்லத் தயங்குவீர். 

நீங்கள் எந்த வேலை செய்யச் சொன்னாலும் மறுக்கமாட்டீர்கள் எனும் உங்கள் இயலாமை விரைவில் எல்லோருக்கும் தெரிய வரும். இதன் விளைவாக, நீங்கள் செய்யத் தேவை இல்லாத பணிகள் உங்கள் மீது விழும். இது தேவையற்ற கடினமான சூழலில் உங்களைச் சிக்கித் தவிக்க வைக்கிறது. 

அதனால் மற்றவர்கள் உங்கள் நேரத்தையும், முயற்சியையும், ஆற்றலையும் பயன்படுத்தி அவர்களது தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதைக் காணலாம்.

ஒவ்வொரு முறையும் 'ஆம்' என்று சொல்வது மிகவும் ஆரோக்கியமற்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்உங்களால் முடியாதவற்றை ‘முடியாது’என்று சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

5. நச்சு உறவுகளிலிருந்து விலகி ஓடுங்கள் - (Distant yourself from toxic relationships):

உறவுகளில் மிக மிகக் கடினமானது சுய நல விரும்பிகளுடன் பழகுவது. அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எவரையும் பலி கொடுக்க தயங்க மாட்டார்கள். அவர்களுக்கு நன்கு நடிக்கத் தெரியும். அவர்கள் விரும்பும் சூழலைச் சுலபமாக உருவாக்கி விடுவார்கள்மிகச் சுலபமாக  மற்றவர்கள் மீது பழி சுமத்தி விடுவார்கள். இவர்கள் நச்சுத் தன்மை உடையவர்கள். இவர்களுடன் பழகுவது பாம்புடன் பழகுவதற்குச் சமம்.

நச்சுத்தன்மையுள்ளவர்களால் உங்கள் ஆற்றலை அழித்து விட முடியும்நீங்கள் அறியாத வகையில் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை  நுட்பமாக அறிந்து கொள்வார்கள். பின்னர் அவர்கள் நினைப்பதை உணர்ச்சிகரமான வகையில் ஏமாற்றி அல்லது பயமுறுத்திச் சாதித்துக் கொள்வார்கள்

அதை நீங்கள் உணரும் போது மனம் உடைந்து விடும். அதைக் கண்டு உணராமல் இருந்தது உங்கள் தவறு. அதற்காக அவர்களைக் குறை கூற முடியாது. விழிப்புடன் இருப்பது நமது பொறுப்பு.

அதைப் போல நம்முடன் நீண்ட கால தொடர்பில் உள்ள சில நபர்கள் காலப் போக்கில் நமது "தவிர்க்க முடியாத பலவீனமாக" மாறி, நம்மைப் பயன்படுத்திக் கொள்ள விரைவாகக் கற்றுக் கொள்கிறார்கள்

இத்தகைய நச்சு உறவுகள் ஏற்படுத்தும் பாதிப்பு கடுமையான மன அழுத்தத்தை உருவாக்கி விடும். பின்னர் அது நீண்ட கால துயரமாக ஆகி உங்கள் மனதில் ஆறா காயமாக மாறிவிடும். 

எனவே, உங்கள் மன அமைதிக்காக நட்பு/உறவுகளை மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்வது மிகவும் முக்கியம்நீங்கள் அதைப் புறக்கணித்தால், காலப்போக்கில் சரி செய்ய முடியாத அளவு சேதம் ஏற்பட்டு விடும். 

உங்கள் நட்பு/ உறவு வட்டத்தைச் சுத்தம் செய்வதன் மூலம், உங்கள் ஆற்றலை மேம்படுத்த முடியும்உறவுகளை வைக்க வேண்டிய தூரத்தில் வைத்தால்நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை நீங்கள் விரும்பும் வகையில் செய்திட போதுமான சுதந்திரம் உங்களுக்குக் கிடைக்கும்

6. உங்கள் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்ளவும். (Learn your strengths and weakness and try to play around with it.

புத்திசாலித்தனமான மனதை உடையவர்கள் வாழ்க்கை அவர்களை நோக்கி வீசும் எந்த சவால்களையும் சந்திக்க நன்கு தயாராக உள்ளனர்

ஏனெனில் அவர்களுக்கு தங்கள் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன என்பது நன்கு தெரியும். அவற்றை தங்கள் நன்மைக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள்.

"என்னை யாராலும் வெல்ல முடியாது" என்று நினைப்பது முட்டாள்தனம். அத்தகைய மனநிலை உங்களை ஒரு பெரும் வீழ்ச்சிக்கு (மனதளவில்) தயார்ப் படுத்துகிறது. வீழ்ந்த பின்னர் மனதை உடைவிலிருந்து மீட்டெடுப்பது எளிதானதல்ல.

உங்கள் பலவீனங்கள் எவை என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். திரும்பத் திரும்பச் செய்யும் தவறுகள் அனைத்தும் ஆழ் மனதில் இன்பமாக  / இயலாமையாக உணர்வதால் மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறதுஉங்கள் தோல்விகளைப் பகுப்பாய்வு செய்து குறை (weakness) எது என உணர்ந்தால் மட்டும் போதாதுஅதை ஏற்றுக் கொண்டு, சரி செய்யக் கற்றுக்கொண்டால் மட்டுமே சாதிக்க முடியும்.  

7. உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள் - (Keep your emotions in check):

உணர்ச்சிவசப்படுவது இயல்பானது. கட்டுப்பாடு  மிக்கவராக இருப்பதற்காக, உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் மறைக்க வேண்டாம். உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக் கொள்ளாதீர்கள்சில சமயங்களில், அடக்கப்பட்ட உணர்வை வெளியிடுவது மனதிற்கு நிவாரணம் தருகிறது

மனதின் காயங்களுக்கு ஆறுதல் அளிக்கவும் உதவுகிறது. மேலும் மனம் வலிமை அடைகிறதுஉள்ளத்தின் உணர்ச்சிகளை வரம்பு மீறி அடக்கும் போது முடிவு செய்யும் திறன் பாதிக்கப்படுகிறது. எதிர்வினை உணர்ச்சியற்றதாக இருக்கக்கூடாது, நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் உங்களுக்கு எதிரிடையான செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும். 

உண்மையில், மனரீதியாக வலிமையானவர்கள் மீண்டும் மீண்டும் எப்படி கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு மற்றவர்களை விட அதிக உணர்ச்சி வசப்படுவார்கள்

8. பெரிய சவால்களைப் பகுதிகளாகப் பிரிக்கவும் - (Break down challenges into parts) 

எப்பொழுதும் பெரிய திட்டப் பணிகள் மலைப்பாக இருக்கும். அதை முழுவதுமாகப் பார்ப்பது பயமுறுத்தலாம்

பெரும் பணிகளை முதலில் சிறு சிறு வேலையாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு சிறிய வேலைக்கும் நேரத்தை நிர்ணயிக்க வேண்டும்

அடைய வேண்டிய இலக்கை அடைவதற்குத் தேவைப்படும் கால அட்டவணைகள் உருவாக்க வேண்டும்ஒரு நேரத்தில் ஒரு பகுதியில் மட்டுமே கவனம் செலுத்தினால், நீங்கள் நீண்ட தூரம் செல்லலாம்

சிறிய வேலைக்கு ஒதுக்கப் பட்ட கால அளவில் அதை முடிப்பது எனும் திட்ட அளவில் மட்டும் கவனமாகச் செயல் புரியு வேண்டும்தீவிர முயற்சிகள், கடின உழைப்பு, நேர நிர்வாகம் செய்தால் படிப்படியாகச் சென்று இறுதி இலக்கை  அடைய முடியும்.  


Written based on the article influence with thanks: 8 habits that help become mentally strong written by Rachna : https://www.pixstory.com/story/habits-that-help-become-mentally-strong/139621

படம் இணையத்திலிருந்து நன்றியுடன் .


6 கருத்துகள்:

  1. உண்மை, முக்கியமாக நச்சு உறவுகளிலிருந்து விலகி ஓடுங்கள் என்பது, அவர்கள் நம் சக்தியை முழுவதுமாக உறுஞ்சி விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஏற்றுக்கொள்வது மற்றும் தவிர்ப்பது இரண்டையும் கற்றுக்கொண்டால் நிறைய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்...

    பதிலளிநீக்கு