வெள்ளி, 29 மே, 2020

மன்னிப்பின் மாண்பு

 மீள்தல். 



[இந்தக் கட்டுரை Olivia Delong எழுதிய "How to forgive someone, Even when it feels impossible.  Forgiveness is something you do for yourself" எனும் ஆங்கிலக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு தன் அனுபவம் சார்ந்து எழுதப்பட்டது.]

மன்னித்தல் நன்மையானது :



ஏமாற்றியவரை மன்னிக்க முடியுமா?
மன்னித்தல் என்றால் என்ன?
மன்னிப்பதால் மனதில் உடலில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது? 
எது மன்னிப்பு?
எது  மன்னிப்பில்லை?
மன்னிப்பைச் சொல்லவேண்டுமா?

இக் கட்டுரை இது போன்ற சில கேள்விகளுக்கு எளிமையான விளக்கம் அளிக்கிறது.

ஏமாற்றுபவர் பல விதம்.

ஓர் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக நடித்து நம்பவைத்து ஏமாற்றுபவர் உண்டு. சுய இலாபத்துக்காக மோசடி செய்பவரைச் சந்தித்திருப்போம். ஆதாயத்திற்காக உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாகப் பொய் பேசுதல் இன்று சர்வசாதாரணம். தனது குறையை மறைப்பதற்காகப் பிறர் மீது பழி போடுதல் உறவுகளில், பணியிடத்தில் எதிர் கொள்கிறோம்.

இப்படிச் செய்பவர்களை மனதார மன்னிக்க முடியுமா?

மன்னிக்க வேண்டும். ஏனெனில் மன்னிப்பதால் அதிக நன்மை நிகழ்கிறது.

மன்னிப்பதால் மனம் மற்றும் உடல் இவற்றில் நிகழும் வேதியியல் மாற்றங்களை ஆழமாகப் புரிந்து கொண்டால் அதைப் பற்றி ஒரு புதிய பார்வை கிடைக்கும். அப்போது மன்னிப்பின் மாண்பை உணர்வோம்.

மன்னிப்பு : உடலும் - மனமும் :



கொஞ்சம் கவனமாகப் பார்ப்போம். ஏமாற்றப்பட்டது தெரிய வரும்போது மனதில் என்ன விதமான உணர்வுகள் ஏற்படுகிறது?

கோபம் கொந்தளிக்கும். அந்த எண்ணம் நினைவில் எழும் போதெல்லாம் மன அமைதி கெடும். மனப்பதற்றம் தொடரும். பழி வாங்கும் உணர்வு மேலிடும். தீமை செய்தவர்க்குத் தீங்கு நேரிட வேண்டுமென மனம் துடிக்கும். கவனம் சிதறும். தன்னிரக்கம், சுயபச்சாதாபம் மிகும். தனிமையை விரும்பும். இயல்பாகப் பணி செய்ய முடியாது.

இந்த கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை எண்ணங்கள் உடலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது?

இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதயத்தின் படபடப்பு கூடும். உடல் சோர்வாகும். நா வறளும். தலைவலி ஏற்படும். உணவு பிடிக்காது. தனிமையை விரும்பும். எதிலும் ஈடுபாடு இருக்காது. ஒரு வித வெறுமை மனதை ஆக்கிரமிக்கும். கண்ணீரும் சோகமும் தொடர்கதையாகும்.

இந்த மாய உணர்வுகளைச் சரியாகக் கையாளாவிட்டால் அவை மனதில், உடலில், நடத்தையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஏமாற்ற உணர்வுகளிலிருந்து மீளாவிடில் அது மனச் சோர்வு, உறக்கமின்மை, இதய நோய், பக்க வாதம், மூல நோய், சர்க்கரை வியாதி என உடல் உபாதையாக மாறும். நோயெதிர்ப்பு திறனை வெகுவாகக் குறைத்து விடும். சமூக கூட்டுறவை விட்டு விலகத் தூண்டும். பணித்திறனை இழக்கச் செய்யும்

மன்னிக்காத தன்மை மனம், உடல் இரண்டையும் கூடுதலாகப் பாதிக்கும்.


மன்னிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் :




மன்னிப்பதால் மனதில், உடலில் நிகழும் வேதியியல் மாற்றங்களைத் தெரிந்து கொண்டால் மிக ஆச்சரியமாக இருக்கும். மாற்றங்களின் விளைவுகள் சில :
  • எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுதலை.
  • கோபம் நீங்கும். 
  • மனப் பதற்றம் நீங்கும்.
  • மன அழுத்தம் சீராகும்.
  • மனச் சோர்வு அகலும்.
  • மன அமைதி.
  • நல்ல உறக்கம்.
  • நிதர்சனம் மெல்லப் புரியும்.
  • மன வலிமை அதிகரிக்கும்.
  • எதிர்பார்ப்பு குறையும்.
  • சூழல் மாறும் எனும் புதிய நம்பிக்கை பிறக்கும். 
  • நன்றாக இருக்கிறேன் எனும் பாதுகாப்புணர்வு கிடைக்கும்.
  • முடக்கத்திலிருந்து விடுதலை.   
  • புதிய வாய்ப்புகளைத் தேடுதல்.. 
  • உண்மையான நட்பை அடையாளம் காணுதல்.
  • உடலில் உயர் இரத்த அழுத்தம் குறையும். 
  • இதயம் வலிமை பெறும். 
  • நோயெதிர்ப்பு திறன் கூடும்.   
மன்னிப்பதால் கிடைக்கும் இந்த நல் உணர்வுகளை நன்கு மனதில் பதிந்து கொள்ள வேண்டும்.

எது மன்னிப்பு? 



"இது எனக்கு நிகழ்ந்து விட்டது. இதை நான் பொறுமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்தச் சூழல் சகிக்க முடியாத வேதனை தான். எனினும் இதிலிருந்து விடுபட்டு எனது வாழ்வைத் தொடரப் போகிறேன். இதற்காக நான் யாரையும் குறை சொல்லப் போவதில்லை. இது ஏன் நிகழ்ந்தது எனும் காரண காரியங்களை நிதானமாகப் புரிந்து கொள்ள முயல்வேன். இது ஒரு வாழ்க்கைப் படிப்பினை. இவ்விதம் மீண்டும் நிகழாதவாறு எச்சரிக்கையாக இருப்பேன். ஒரு போதும் இவ்விதமாகப் பிறரை ஏமாற்றமாட்டேன். ஏனெனில் இதன் வலி எனக்குத் தெரியும். இந்த நிதர்சனத்தைப் புரிவது தான் எனது உடலுக்கும். மனதுக்கும் நல்லது. துரோகத்தை நினைக்கும்போது ஆவேசம் வருகிறது. அவர்களும் இவ்விதம்  வேதனை அனுபவிக்க வேண்டும் என மனம் துடிக்கிறது. ஆனால் தீய உணர்வுகள் ஒருபோதும் நன்மை தராது. மனதாலும் பிறர்க்குத் தீங்கு எண்ணுதல் கூடாது. கோபம், எரிச்சல், பகையுணர்வு முற்றிலும்  பயனற்றது. எனவே நான் மன்னிக்கிறேன்."

இவ்விதம் ஆழ்ந்த உண்மைகளைப் புரிந்த மனநிலையில் ஒருவர் தனக்கு இழைக்கப்பட்ட தனிப்பட்ட அநீதியைத் திருப்பித் தாக்காது பொறுத்துக் கொள்வதே மன்னிப்பு.

எது மன்னிப்பில்லை?





தீங்கு நடந்தும் "எனக்கு ஒன்றும் ஆகவில்லை" என எதுவுமே நடக்காதது போலத் தீமை செய்தவரோடு மீண்டும் சகஜமாகப் பழகுதல் மன்னிப்பு இல்லை. தொடர்ந்து தவறுகள் செய்பவருடன் அனுசரித்துப் போவது மன்னிப்பு இல்லை

இவ்விதம் நடப்பது பெருந்தன்மை என்பது தவறான புரிதல். இத்தகைய "தாராள மனநிலை" தீமை செய்தவரைத் தொடர்ந்து தவறு செய்யும்படி ஊக்கப்படுத்தும்.

தீயவர் செய்த தவற்றைச் சுட்டிக் காண்பிக்க வேண்டும். அவர் திருத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும். அவர் தமது தவற்றை உணர்ந்து மனம் வருந்தினால் மீண்டும் சேரலாம். அது ஒப்புரவாகுதல்.

ஆனால் தவறு என்று தெரிந்தும் அதை நியாயப்படுத்துபவருடன் தொடர்ந்து  சிநேகம் பாராட்டுவது மன்னிப்பல்ல. அது பொருளற்றது.

தெரிந்தும் திருந்த மறுப்பவரை  மாற்றவோ, புரிய வைக்கவோ கடும் முயற்சி எடுப்பது வீண் வேலை. அந்தச் சூழலில் அமைதியாக விலகி நிற்பது நல்லது. காலம் அவர்களுக்கு ஏற்ற விதத்தில் கற்றுக் கொடுக்கும்.

அன்பு செலுத்துங்கள். மன்னியுங்கள். ஆனால் தீயவர் நட்பு என்றும் வீழ்ச்சியை அளிக்கும். தீமையை விட்டு விலகியிருக்க வேண்டும்.

மன்னிப்பைச் சொல்ல வேண்டுமா?




மன்னித்தல் என்பது இறைவனுடன் ஆன்மா நிகழ்த்தும் உரையாடல்.

மன்னியுங்கள். உங்கள் பணியை நேர்மையாகத் தொடருங்கள். பொறுமையாகக் காத்திருங்கள். அவர்களுக்காகவும் இறைவனிடம் வேண்டுதல் செய்யுங்கள். அவர்களை மனதார வாழ்த்துங்கள். ஒரு நாள் தவறிழைத்தவர் உணர்வு அடைவர்

தாங்கள் செய்தது தவறு என்றே உணராதவரிடம் போய் மன்னித்துவிட்டேன் என்று சொல்வது பரிதாபம். திருந்த மறுப்பவரிடம் மன்னித்து விட்டேன் எனச் சொல்வது அர்த்தமற்றது.

ஏமாற்றியவரிடம் சென்று சொல்வதால் மன்னிப்பு முழுமையாவதில்லை. தவறு செய்தவர் அதை உணரும்போதே மன்னிப்பு பரிபூரணமாகிறது. அதுவே வாழ்வின் ஓர் அற்புதமான தருணம்.

உண்மை, பொய் இரண்டையும் மறைக்க முடியாது. அது ஓர் நாள் வெளியரங்கமாகும். அப்போது உங்களது மன்னிப்பின் மாண்பு வெளிப்படும்.

மன்னிப்பின் பாதை : 




மன்னித்தல் என்பது ஓர் தெய்வீக பண்பு. அதைக் கடைப்பிடிப்பது எளிதானதல்ல. நீடிய பொறுமை தேவை. மன்னிப்பை உறுதிப்படுத்த ஓர் வழி.

கடிதம் ஒன்றை எழுதுவோம். அதை யாருக்கும் காண்பிக்கத் தேவையில்லை. எதிர்பார்ப்புகளைப் பட்டியலிடுவோம். ஏமாற்றங்களைப் பதிவு செய்வோம். நமது குற்றங்களை ஆராய்வோம். செய்த சில தவறுகள் கண்ணீர் சிந்த வைக்கும். கண்ணீர் தீமையை அழிக்கும்.  இதயத்திலிருந்து எழும் எண்ணங்களை, உணர்வுகளை  அதில் கொட்டி விட வேண்டும். எதையும் மனதில் சுமக்க வேண்டாம். மறைக்கவும் வேண்டாம். எவை வலி ஏற்படுத்துகிறது? எதனால் வெகுண்டு எழுகிறோம்? எதை மறக்க முடியாது தவிக்கிறோம்?  திரும்பத் திரும்ப நினைவில் எழும்பி எவை வாட்டுகிறது? இவை ஒன்று விடாமல் எழுத வேண்டும். எழுதியதை மீண்டும் வாசித்துப் பார்த்தால் நம் கோப உணர்வை எவைத் தூண்டுகிறது எனப் புரியும்.

இப்போது காகிதத்தை எரித்து விடலாம். கோபத்தைத் தூண்டும் உணர்வு மீண்டும் எழுந்தால் அது நமக்கு முன்பே தெரியும் என மனதிடம் சொல்லுங்கள். மனம் சிறிது நேரத்தில் அமைதியாகிவிடும். புரிந்து கொள்ளப்பட்ட உணர்வுகளுக்கு வீரியம் அவ்வளவுதான்!.

மன்னிப்பும் காலமும் :


பயணத்தில் தவறுதலாக மிதித்து விட்டவரை விரைவாக மன்னித்து விட முடியும். ஆனால் ஓர் பாலியல் துன்புறுத்தலை அவ்வளவு எளிதாக மன்னித்து விட முடியாது. மனக் காயத்தின் ஆழத்திற்கேற்ப வலியும் இருக்கும்.

சில துரோகங்களைக் கஷ்டப்பட்டு மன்னித்து விடலாம். ஆனால் எளிதில் மறக்க முடியாது. ஆயினும் ஒருபோதும் பகையுணர்ச்சி வேண்டாம். பழி வாங்கும் உணர்வுக்கு இடம் கொடாது இருங்கள். அது மனதைக் காயப்படுத்தும். தீர்ப்பை அளிக்க வேண்டாம்.

சில கசப்பான நினைவுகள் மறைய காலம் பிடிக்கும். மன்னித்து விட்டாலும் மறக்க காலம் ஆகும். சில சமயம் மனதில் நம்மை மீறி ஆவேச கோப உணர்வுகள் எழும். ஏமாற்றுபவரைத் தண்டிக்கும் உணர்வு எழும். அது இயல்பானது. அதற்கு வருந்த வேண்டாம். உணர்வுகளால் மனதைக் காயப்படாது வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். காலம் ஒன்றே மாமருந்து.

ஏமாற்றியவரைத் தண்டிக்க இன்னும் ஓர்  சிறந்த வழி உள்ளது. தலை நிமிர்ந்து வாழ்ந்து காட்டுங்கள். ஓர் உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து காண்பிப்பதே அவர்களுக்கு அளிக்கும் சிறந்த தண்டனை.

இறுதியாக இறையருள் உதவியுடன் மன்னியுங்கள். மனதை ஒருமுகப்படுத்தி மன சஞ்சலங்களிலிருந்து மீண்டு வாருங்கள். அது மிகச் சிறந்த முடிவு.

*******   *******   *******

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge. 

6 கருத்துகள்:

  1. தவறு செய்தவர் அதை உணரும்போதே மன்னிப்பு பரிபூரணமாகிறது. அதுவே வாழ்வின் ஓர் அற்புதமான தருணம்.

    பயனுள்ள பதிவு.. நன்றி..

    பதிலளிநீக்கு
  2. நமஸ்காரம். ஏமாற்றம் என்பது எதிர்பார்ப்பின் ஒரு நிலை. அதனால் எதிர்பார்ப்பை ஓத்தி வைக்கவும் ஓரம் கட்டவும் பழகலாம். உதவியும் ஒத்துழைப்பும் செய்வதை இறைவனிடம் சமர்ப்பிக்க பழகலாம். கொஞ்சம் கொஞ்சமாக எதிர்பார்ப்பு இன்றி கைங்கரியம் செய்ய பழக முயல்வோம். அது நம்மை செய்யும் யாவும் அவரிடம் சமர்ப்பிக்க பழக்கும். அது ஏமாற்றம் இல்லா வாழ்க்கையை காட்டும். இவ்விதம் செய்யும் பொது நம் முன்னே நடக்கும் யாவும் நமக்கு சொல்லும் பாடங்களை புரிந்து கொள்ளவும் நம்மோடு எடுத்து செல்லவும் நம்மிடமிருந்து விட்டு செல்லவும் உதவி புரியும். எதிர்மறை எண்ணமே இல்லா வாழ்வை வாழ்வோம் வாழ்ந்து காட்டுவோம். மன்னிப்பு என்ற விஷயத்தை அவர் கையில் கொடுத்து விடுவோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் சிறப்பான பதிவு... பின்பற்றுவோம்... 👍🙏

    பதிலளிநீக்கு