சனி, 20 ஆகஸ்ட், 2022

நீங்கள் மகிழ்ச்சிக்கு தகுதியானவர்,

சுய தண்டனை 

(Self Punishment)

சுய தண்டனை (Self Punishment) அல்லது சுய-தீங்கு (Self Harming) என்பது தன்னை தானே காயப்படுத்திக் கொள்ளும் ஒரு செயல்.

இது மன ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும் ஓர் உளவியல் சிக்கல்.

வாழ்வில் ஏற்படும் இயலாமை, ஏமாற்றம், கையறுநிலை, விரக்தி இவற்றின் விளைவாக ஒருவர் தனக்கு தானே துன்பம் விளைவித்துக் கொள்ளும் செயல் என இதை வரையறுக்கலாம். 

இதைக் கட்டுப்படுத்தாது விட்டு விட்டால்  மன ஆரோக்கியத்திற்கு கடும் தீங்கை விளைவிக்கும்.

சுய தண்டனை (Self Punishment) - அது எங்கிருந்து வருகிறது?

அதற்கு முதலில் மனதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

மனம் இடைவிடாமல் தனக்குள் உரையாடிக் கொண்டே இருக்கிறது. அது எப்போதும் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தொடர் வினை.

மகிழ்ச்சி நிறைந்த கடந்த கால தருணங்கள், எதிர்கால திட்டங்கள், மற்றும் நம்பிக்கை தரும் கனவுகள்..,  இது போன்ற குதுகலம் நிறைந்த எண்ணங்களால் நிறைந்து இருக்கும் போது, மனதின் உரையாடல் உற்சாகமாக இருக்கும்.

ஆனால், கடந்த கால தவறுகள், குற்ற உணர்வு, எதிர்மறையான சூழல்கள், இழப்பு, அவமானம்.., இவை போன்ற சம்பவங்களால் மனம் ஆக்கிரமிக்கப் படும் போது; அதில் நிகழும் சுய உரையாடுதல் குற்றவுணர்வைத் தூண்டுகிறது. 

இத்தகைய குற்ற மன நிலையில் பீடிக்கப்படுபவர், தமக்குத் தாமே தண்டனையை விதித்து அதன் வழியாக அமைதி அடைய முயற்சி செய்கிறார்கள்.

பெரும்பாலும் தங்களைத் தாங்களே தண்டித்துக் கொள்ளும் நபர்களின் அறிகுறிகள்:

1. அவர்கள் என்ன செய்தாலும் திருப்தி இருக்காது (No matter what they do, it's never enough).

2. அவர்கள் தொடர்ந்து தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்கள் (Put themselves down constantly).

3. அவர்கள் எப்பொழுதும் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் குறைவாக மதிப்பிடுகின்றனர் (always comparing themselves to others and coming up short).

4. அவர்கள் பரிபூரண வாதிகள். செய்யும் எதிலும் திருப்தியடைய மாட்டார்கள் (Perfectionists who are never satisfied with anything they do).

5. அவர்கள் எப்பொழுதும் தங்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு ஏதாவது ஒன்றை நிரூபிக்க முயற்சி செய்கிறார்கள் (Always trying to prove something to themselves or others).

6. கடந்த காலத்தில் செய்த செயல்களுக்கான மோசமான தண்டனை தான், இப்போது தங்களுக்கு நிகழும் துன்பத்திற்கான காரணம் என்று நம்புகிறார்கள் (Think that the bad things that happen to them are a punishment for their bad behavior in the past).

7. சுயமரியாதை இருப்பது இல்லை. ஆகவே தன்னை தானே காயப்படுத்திக் கொள்ளுதல் அல்லது போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்ற சுய அழிவு நடத்தைகளில் ஈடுபட அது அவர்களை வழிவகுக்கிறது. (Low self-esteem leads them to engage in self-destructive behaviors like self-injury or substance abuse.).

கோடு எங்கே வரைய வேண்டும்:

சுய மதிப்பிற்கும், சுய-தண்டனைக்கும் இடையில் எங்கே கோட்டை வரைய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். 

நமது கடந்த காலத்தில் நிகழ்ந்த அனுபவங்கள் மற்றும்  மன ஆரோக்கியத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. அதன் தாக்கத்தை அறிந்து கொள்வது மிக முக்கியமானது.

நாம் நடந்து கொள்ளும் விதம் (behaviour patterns) ஆழ் மன உணர்வுகளின் (deep emotional experiences) வெளிப்பாடு ஆகும்.

நமது சுய மதிப்பற்ற நடத்தைக்குக் காரணமான உணர்வுகளுக்கான உந்துதல் எங்கிருந்து  வெளிப்படுகிறது?  

இதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

அதற்குப் பங்களிக்கக்கூடிய காரணம் எது என்பதைக் கண்டுபிடிக்கக் கவனம் செலுத்த வேண்டும்.

பொதுவாகக் குழந்தைப் பருவ கசப்பான அனுபவங்கள், பாலியல் துஷ்பிரயோகம், வன்முறை, இழிவு படுத்தப் பட்ட நிகழ்வுகள், அடக்குமுறை, வார்த்தை மோதல்கள், தனிமைப் படுத்த படுதல் போன்றவை குற்ற உணர்விற்குக் காரணமாக இருக்கலாம்.

ஆக 

நமக்கு நிகழ்ந்த அனுபவங்கள் எண்ணங்களைத் தேர்ந்து எடுக்க முனைகிறது. 

அந்த எண்ணங்கள் செயல்களை உருவாக்குகின்றது. 

அவை நடத்தையாக வெளிப்படுகிறது.

ஆக ஆழ் மனதின் உணர்வுகள் நடத்தையை கட்டுப்படுத்துகிறுது.

இப்போது நம்மையே நாம் மதிப்பு குறைவாக நினைக்க வைக்கும் நடத்தைக்கு எது உந்துதல்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

மனதை ஈர்க்கும் ஒவ்வொரு சிந்தனையும் ஆராய்ந்து கவனமாகப் பார்ப்பது முக்கியம்.

இது ஆக்கப்பூர்வமானதா? 

இது நம்மை நேர்மறையான வழியில் ஊக்குவிக்கிறதா? 

அல்லது 

இது ஒட்டுமொத்தமாக நம்மைப் பற்றி மோசமாக உணர வைக்கிறதா? 

இது நம் சுய மதிப்பை இழக்க வைக்குமா?

மனதை ஊக்குவிக்கவும் நமது செயல்திறனை மேம்படுத்தவும் உதவும் வழிகள்:

குற்றவுணர்வு, அவமானம் இவற்றுக்கு நம் வாழ்வில் இடம் தரக் கூடாது. ஏனென்றால் அவை நம் வாழ்வில் அடையக் கூடிய அனைத்து விதமான வளர்ச்சிகளையும்  தடுக்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மை நாமே ஏற்றுக் கொள்ள வில்லை என்றால் நாம் எப்படி முன்னேற முடியும்? 

சுய குற்ற உணர்வையும், தேவைப்படும்போது அவமானத்தையும் தூக்கி எறிய வேண்டும்! 

மேலும் நேர்மறையான சிந்தனை முறைகளை ஊக்குவிக்கும் விஷயங்களை மனதில் பதிய வைக்க முயற்சி செய்ய வேண்டும்.

அது நமக்குத் துன்பத்தைத் தாங்கும் திறன் மற்றும் தனிப்பட்ட செயல்திறன் திறன்களை மேம்படுத்தக் கற்றுக்கொடுக்கிறது.

1. உங்களை நீங்களே தண்டிப்பதை நிறுத்துங்கள்:

நம்மை நாமே தண்டிப்பதை நிறுத்துவதே முதல் படி. 

நம்மை நாமே தண்டித்துக் கொள்ளும்போது, ​​எதிர்மறை உணர்ச்சிகளையும், பலவீனமான எண்ணங்களையும் அதிகப்படுத்துகிறோம். அது நம்மைத் தகுதியற்றவர்களாக உணர வைக்கிறது. 

சுய-தண்டனை என்பது வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களின் காரணமாகக் காலப்போக்கில்  உருவாக்கப்பட்ட இயல்பான நடத்தை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நம்மை நாமே காயப்படுத்திக் கொள்வது வளர்ச்சிக்கு அல்லது குணமடைய வழிவகுக்காது. இது அதிக வலியையும் வேதனையையும் மட்டுமே உருவாக்குகிறது.

மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முதலில் நம்மை நாமே நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அறியாமல் நிகழ்ந்த தவறுகளை மன்னித்துக் குற்ற உணர்விலிருந்து விடுபட வேண்டும் (self-love and forgiveness). 

தவறு இழைத்தவருக்குப் பரிகாரம் செய்வதன் மூலமும் சுய அன்பைப் பயிற்சி செய்ய முடியும்.

2. உங்கள் சுய பேச்சு பற்றி அறிந்து கொள்ளுங்கள்:

இரண்டாவதாக, நம்மைப் பற்றி நாம் பேசுவது குறித்து அறிந்து கொள்ளத் தொடங்க வேண்டும். 

தன்னை தானே தாழ்த்தி பேசும் பழக்கம், சுய மரியாதை குறித்த விழிப்புணர்வற்ற நிலையிலிருந்து உருவாகிறது.

சிறுமைப் படுத்திப் பேசப்படுவது அவமானம் மற்றும் விரக்தி போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். அத்துடன் கவலை மற்றும் மனச்சோர்வையும் ஏற்படுத்தும். நாம் மதிப்பற்றவர்கள் எனும் மனப்பான்மை வளரும்.

அவமானப் படுத்திப் பேசப்படும் ஒவ்வொரு உரையாடலும் மனதைப் பெரிதும் பாதிக்கிறது. 

ஆகவே நம்மை நாமே மதிப்புடன் பேசப் பயிற்சி செய்வதன் மூலம் தாழ்த்தி பேசும் பழக்கச் சுழற்சியை நிறுத்த வேண்டும். 

3. ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் கவனம் செலுத்துங்கள்:

மூன்றாவதாக உடலைக் கவனித்துக் கொள்ளுங்கள். உயிருள்ளவரை உடலும் உள்ளமும் பிரிக்க முடியாது.

மன ஆரோக்கியத்துக்கு நல்ல உடல் நலம் இன்றியமையாதது. சரியான முறையில் சரிவிகித உணவை உண்பது நல்லது. 

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். 

4. நல்ல தூக்கம்:

நான்காவது, ஒவ்வொரு இரவும் போதுமான அளவு தூங்குங்கள், அதனால் பகலில் நாம் அனுபவிக்கும் அனைத்து அழுத்தங்களிலிருந்தும்  மூளை விடுபட்டு மீண்டும் புத்துணர்ச்சி பெறும்.

5. நேர்மறை உறவுகளை உருவாக்குங்கள்:

இறுதியாக, உங்களை நேசிக்கும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நபர்களுடன் நேர்மறையான உறவுகளை உருவாக்குங்கள். 

நம்மை ஊக்குவிக்கும் நண்பர்கள் நமக்குத் தேவை. நீங்கள் நம்பும் மற்றும் மனம் திறந்து பேசுவதற்கு வசதியாக இருக்கும் ஒரு நண்பரைக் கண்டுபிடிப்பது முக்கியம்!

சுருக்கமாக 

சுய தண்டனை உங்கள் மன ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். நீங்கள் மகிழ்ச்சிக்குத் தகுதியானவர், உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களுக்கு உங்களை நீங்களே தண்டிப்பதை நிறுத்த வேண்டும்.

உங்களை நீங்களே தண்டிக்கும் நடத்தைகளில் மனம் ஈடுபடுவதைக் கண்டால், தொழில்முறை உதவியை நாட வேண்டியது அவசியம். 

இது கடினமாக இருந்தாலும், சிகிச்சையை நாடுபவர்கள் நீண்ட காலத்திற்குச் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. 


Influenced by:

https://www.thewellnesscorner.com/blog/self-punishment-effects-on-mental-health

4 கருத்துகள்: