வியாழன், 25 மே, 2017

மகிழ்ச்சி மனநிலையின் ஒரு நிலைப்பாடு.

மகிழ்ச்சி மனநிலையின் ஒரு நிலைப்பாடு.


"If you want to live a happy life, tie it to a goal, not to people (or) things."

Albert Einstein. 






அறத்தினூங் (கு) ஆக்கமும் இல்லை ; அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

அறத்தைப்போல நல்லது (மகிழ்ச்சி)   தருவது எதுவுமில்லை ; அறத்தை மறந்து செய்யும் அதர்ம செயல்கள் போல துன்பம் விளைவிப்பதும் இல்லை.

மகிழ்ச்சியைத் தேடியே மக்கள் ஓடுகிறார்கள். 

அதை அடையத்தான் எத்தனை வேஷங்கள்?  

🚫  கேளிக்கை விடுதி, மதுபானக் கடை முன்பு  தள்ளாடித் திரிகின்றனர்.

🚫  உணவகம், திரையரங்கு, வணிக வளாகம் கூட்டத்தால் நிறைந்து வழிகிறது.

🚫  விடுமுறை தினங்களில் சுற்றுலாத் தளங்களில் வாகனங்களின் நெரிசல்.

🚫 தொலைக்காட்சி விளம்பரங்கள் பொருட்களை வாங்கிக் குவிக்கத் தூண்டுகிறது.

🚫 விலையுயர்ந்த உடை, நவ நாகரிகமான Cell Phone, வாகனங்கள் வைத்திருப்பது போன்ற பகட்டான வாழ்வே மகிழ்ச்சியான வாழ்வாக முன்னிறுத்தப் படுகிறது. 

🚫 தனிப்பட்ட வாழ்வில் தோல்வியுற்ற, மனநிம்மதி இழந்த,  போதைக்கு அடிமையான மனிதர்கள் (So called celebrities)  வெற்றி பெற்ற முன் மாதிரிகளாகச் சித்தரிக்கப் படுகின்றனர்.

🚫 பிற மனிதர்களின் அங்கீகாரம், மதிப்பீடு, புகழ்ச்சி, பாராட்டுக்காக மக்கள் ஏங்கித் தவிக்கிறார்கள்.

இவை எதுவும் உண்மையான மகிழ்ச்சி அல்ல.

மகிழ்ச்சி என்பது  நாம் விரும்பும் செயல்களை செய்யும் போது ஏற்படும் வெறும் உணர்வு எழுச்சி  மாத்திரம் அல்ல. 

மகிழ்வான தருணங்கள் என்பது நம் நினைவுகளில் இருந்துக்   கிளர்ந்து  எழும்பும்போது, அந்நிகழ்வுகள் சந்தோஷத்தையும், மனநிறைவையும் அள்ளித்தருபவை.

மெய்யான மகிழ்ச்சி என்பது  நம் நினைவுகளில் வாசம் செய்கின்றது. 

மகிழ்ச்சியின் தேடல் சுயநலம் சார்ந்தே தொடங்குகிறது.

உண்மையான ஆனந்தம் எது எனக் கண்டு பிடிப்பதும், உணர்ந்து கொள்வதும் அவ்வளவு எளிதல்ல. இது ஒரு கசப்பான உண்மை.

சந்தோஷத்திற்கான காரணங்கள் வயது வளர்ச்சியுடன் வேறுபடுகின்றன.

ஒரே வீட்டுக்குள் வாழ்ந்தாலும் குழந்தைகள், வாலிபர், பெரியவர், முதியோர் உலகங்கள் வெவ்வேறானது.

பருவம் மாறும்போது மகிழ்வை ஏற்படுத்தும் என நம்புகின்ற காரணங்களும் மாறுபடுகின்றன.

குழந்தைப் பருவத்தில் குதுகலத்தை ஏற்படுத்திய பல சம்பவங்களை, தேடல்களை  இப்போது நினைத்துப் பார்த்தால் அநேகமாக அவை நகைப்பைத் தரும்.

இளம்பிராயத்தில் மகிழ்ச்சி தரும் எனத் தீவிரமாக ஆசையுடன் பின்தொடர்ந்தவை தற்போது மிகப் பெரும் அபத்தமாக உணர்வோம்.

அநேகமாக அவை நமது பிள்ளைகள் வாழ்வில் செய்து விடக்கூடாதே  என்று அஞ்சுகிறோம்.

நடுத்தர வயதில் மகிழ்ச்சி என்பது அநேகமாகப் பொருளீட்டலே. 

வாழ்வின் முன்னேற்றத்திற்காக ஏற்றெடுத்த பல முயற்சிகள், உயரதிகாரிகள் கவனத்தை ஈர்க்கச் செய்த உபாயங்கள், கடந்து வந்த கடினமான பாதைகள், சந்தித்த அவமானங்கள், பெற்ற அனுபவங்கள் மகிழ்ச்சி குறித்து பல புதிய புரிதல்களை நமக்குள் உருவாக்கும்.

முதிர் வயதில் நாம் கடந்து வந்த பாதையை உணர்ச்சி ஆதிக்கம் இல்லாது நிதானமாய் திரும்பி பார்க்க முடிகிறது. 

வாழ்வின் இறுதிக்காலம் உண்மையான மகிழ்ச்சி, வெற்றி எது என்பதைத் தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

உங்களைச் சுற்றி வாழும் குடும்பங்களை கவனித்துப் பாருங்கள்.

பிறரை ஏய்த்து  வாழ்ந்த தலைமுறையினரின் தற்போதைய நிலை எத்தனை உண்மைகளைச் சொல்லாமல் சொல்லுகிறது?


உண்மையான மகிழ்ச்சிக்கு சில குறிப்புதவி :


🌺     மகிழ்ச்சி என்பது நமது  கடமைகளை உணர்ந்து நிறைவேற்றுவது.

🌺மகிழ்ச்சி என்பது பிறரது அபிப்பிராயங்களுக்காக,மதிப்பீடுகளுக்காக  வாழாது, அறநெறி சார்ந்து வாழ முற்படுவது.

🌺வெளிவேஷம் போடாது உண்மையாய் வாழத் தீர்மானிக்கும் தருணம்தான் மகிழ்ச்சியான வாழ்வின் தொடக்கப் புள்ளி.

🌺 எந்தச் சூழ்நிலையிலும் நடிக்கக்கூடாது. சுயநலத்திற்காக,   பிறரை ஏமாற்றக்கூடாது. ஏமாற்ற நினைத்தால் ஏமாற்றப்படுவோம்.

🌺 உண்மையாக உழைத்து ஈட்டும் செல்வமே மகிழ்ச்சியைத் தரும். உண்மையுடன் கைப்பாடாய், பிரயாசத்துடன், திட்டமிட்டு, தொடர் உழைப்பில் காத்திருந்து நாம் பெற்றவை நன்மையும், மகிழ்ச்சியும் மன நிறைவையும் அளிக்கும்.

🌺  பிறர் பொருட்கள், உடைமைகள் மீது  ஒரு போதும் ஆசைப்படக்கூடாது. பிறரை வஞ்சித்துப் பெற்ற செல்வம் கடும் துயரத்தையும், மன வேதனையும் ஈடு செய்ய முடியாத இழப்புகளையும் ஏற்படுத்தும்.

🌺 ஒரு நபர் இல்லாத போது அவரைக் குறித்து அவதூறு பேசக்கூடாது. பிற்பாடு அவரை நாம் சந்திக்கும் போது குற்றவுணர்வில் வெட்கம் உண்டாகும்.

🌺 நமது நம்பிக்கை தான் சரியானது என எண்ணுவது தவறு. குறிப்பாகச் சமயம், மொழி இவற்றை நேசிக்கலாம். ஆனால் இது தான் உயர்ந்தது மற்றவை குறைவானது என ஒப்புமை தேவையற்றது. நினைவில் கொள்ளுவோம், மொழி, சமயங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து நிலை நிற்பவை. நூறு வருஷம் முன்பு நமது இருப்பு எத்தகையது என்பது நமக்குத்  தெரியாது. நாளைய தினம் என்ன நிகழும் என்பதையும் அறுதியிட்டுக் கூற இயலாது.

🌺 இயல்பாகவும், எளிமையாகவும் வாழ்வதே நிறைவான மகிழ்ச்சி. பகட்டும், ஆடம்பரமும் தேவையற்ற நட்புக்கு வழி வகுக்கும்.

🌺 பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், முதியோர் வாக்கு, புனிதமாக எண்ணப்படும் நூல்கள் குறித்து அபிப்பிராயபேதம் இருப்பினும் தரக்குறைவாக விமரிசிப்பது நல்லதல்ல. தவறான புரிதல் மனக்கண்களைக் குருடாக்கி இழிவான இச்சை ரோகத்தில் நம்மைக் கொண்டு சேர்த்து விடும். உணர்வற்றவர்களாகி விடுவோம்.

🌺 வாக்கு கொடுப்பதற்கு முன்பு நம்மால் முடியுமா என யோசித்து உறுதி கூறுவோம். வாக்கு தவறும்போது அவமானப்படுவோம். தொடர்ச்சியான வாக்குத்  தவறுதல் மேன்மையானவர்களின் நட்பினை இழக்கச் செய்யும்.


உண்மையின் பாதை கடினமானதாயினும் மனநிறைவும், மகிழ்வும் உறுதி.

அவை நம்முடன் இறுதி வரை   நிலைத்திருக்கும்.

சனி, 20 மே, 2017

மரணமும் அழகாக இருக்க முடியும்.

மரணமும் அழகாக இருக்க முடியும்.

"Death is nothing to us, since when we are, death has not come, and when death has come, we are not "

                                                                                                                 Epicurus.


மரணமும் அழகாக இருக்க முடியும்.



உறங்குவது போலும் சாக்கா (டு) உறங்கி 
விழிப்பது  போலும் பிறப்பு.

மரணம் தூக்கத்தைப் போன்றது ; பிறப்பு தூங்கி எழுவது போன்றது. இரண்டும் இயற்கை.

அனுதினம் செய்தித்தாள்களில் பல துயரச் செய்திகளை வாசிக்கிறோம். அவை மனதை சில நிமிடங்கள் பதைபதைக்கச் செய்கிறது. மனம் துயரம் அடைகிறது. அதைக் குறித்துக் குடும்பத்தினர், நண்பர்களிடம் பேசும்போது மனம் இலேசாகிறது. மீண்டும் மற்றுமொரு புதியதொரு  துயர செய்தியை வாசிக்கும் போது பழையவை புள்ளிவிவரங்களாக மாறுகின்றன.

இரண்டாவதாக நமக்கு அறிமுகமானவர்கள், தூரத்து உறவினர்கள், நட்பு வட்டத்தின் எல்லையில் இருப்பவர்கள் இவ்வுலகைக் விட்டுக் கடந்து செல்லும் போது மன வேதனையும், ஆற்றாமையும் ஏற்படுகின்றது. அது தொடர்பாகக் கூடுதல் தகவல்களை விசாரிக்கிறோம். துயரத்தில் பங்கெடுக்கிறோம். ஆறுதல் வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்கிறோம். நீண்ட நாட்கள் நம் நினைவில் அத் துயரம் தங்குகிறது. நினைவு நாட்களில் சில வருடங்களுக்காவது அவர்கள் குறித்துப் பேசுகிறோம்.

மூணாவது நிலை நம் இரத்த சம்பந்தம், நெருங்கிய நட்பு தொடர்புடைய இழப்புகள். இவை நம்மை நிலைகுலையச் செய்கிறது. மனம் துடிதுடிக்கிறது. அங்கலாய்க்கிறோம். அரற்றுகிறோம். ஏன் இது நிகழ்ந்தது எனும் கேள்விகளை எழுப்புகிறோம். இது நிகழாமல் இருந்திருக்கக்கூடாத எனும் நப்பாசை மனதில் எழும்புகிறது. குடும்பத்தின் விசேஷமான நிகழ்வுகளில்  இவர்கள் இல்லாததை
தவறாமல் நினைவு கூறுகிறோம். இவர்களின் இழப்பு வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. 

மரணம் எனும் ஒற்றை விளைவு எத்தனை விதமான எதிர்விளைவுகளை மனதில் உருவாக்குகிறது! 

நமது அன்பின் வட்டத்தின் அருகில் வாழ்ந்து, தொட்டு, கண்டு, உண்டு, பேசி, உணர்ந்து, பழகிய உறவுகளின் பிரிவுகள் ஏற்படுத்தும் துயரங்கள் வலி மிகுந்தது.

அன்பின் வட்டம் விரிவடையும் போது மரணம் இயற்கையின் நியதி என உணரலாம்.

1994. ம் ஆண்டில் கடுமையான நோய் நிமித்தம் மரணத்தின் மிக அருகில் பயணித்தேன். ஏறக்குறைய 15 நாட்கள் மருந்தும், Drips -ம் தான் உணவு.

அப்போது பெற்ற பாடங்கள் எந்தக் கல்வி சாலையும் கற்றுத் தர முடியாது.

எது வாழ்வில் முக்கியமானது?

வாழ்க்கையின் பயனும் நோக்கமும் யாது?
எவை நிரந்தரம்?
மரணத்தில் கூட வருவது எது?
எவற்றை நாம் விட்டுச் செல்கிறோம்?

எனும்  கேள்விகள் இயல்பாக எழுந்தன.

மரணமும் நெருப்பைப் போன்ற இயல்புடையது.

சந்தனம் என்றாலும் சரி, சகதியில் கலந்த பொருள் என்றாலும் சரி தீயில் இடும் போது சாம்பல் தான் மிஞ்சும்.

படித்தவர் -  படிக்காதவர்,
ஏழை  - செல்வந்தர்,
உயர்ந்தவர் - தாழ்ந்தவர்,
ஆண் - பெண்,
அதிகாரமுடையோர் - பாமரன்,
ஞானி - மூடன்,
இவர்கள்  எவராயினும் மரணம் வித்தியாசமின்றி மேய்ந்து போடுகிறது.

பல மனிதர்களை மனம்போல மமதையுடன் வாழ, இந்தத் தவறான புரிதலும் காரணம்.

சமய நம்பிக்கையின் படி மரணம் என்பது முற்றுப்புள்ளி அல்ல. அஃது ஒரு மாறும் முறை (Transition) . ஓர் உருமாற்றம் (Transformation) . சிந்தனையாளர், அறிவியலாளர் கூட மரணம் என்பதை ஒரு முடிவாகக் கருதுவது இல்லை. உயிரினம் தமது அனுபவங்களை,  பாரம்பரியங்கள் இனக்கீற்று அமிலம் (DNA) மூலமாக உயிர் வளர்ச்சிக்கான  மரபு கட்டளைகளாக அவற்றின் சந்ததிகளுக்குக் கடத்தப்படுவதை உறுதி செய்துள்ளது.

தத்துவ ஞானி எபிக்கூரஸ் (Epicurus - BC 341 - 270) மிகச் சிறந்த சிந்தனையாளர். அவரது முக்கியக் கோட்பாடு : "அச்சத்திலிருந்து விடுதலை - Freedom from fears (ataraxia) " மற்றும் " உடல் துன்பத்திலிருந்து விடுதலை - Absence from body pain (aponia)". விதிகளின் மீது நம்பிக்கை இல்லாதவர்.

அவரது வாழ்வின் இறுதி நாளில் நிகழ்ந்த சம்பவம் இது. முதிர் வயதில் மரணத் தருவாயில் தமது சீடர்களிடம் குளியல் தொட்டியை வெதுவெதுப்பான நீரால் நிரப்பச் சொன்னார். அதில் இளைப்பாறியபடி சீடர்களுக்குக் குறிப்புகளைக் கொடுத்தார்.

என்ன குறிப்புகள் தெரியுமா?

மனிதனது உயிர் பிரிகையில் அவனது உடலில், மனதில் நிகழும் மாற்றங்கள் குறித்த அவதானிப்புகள் !

வெற்றியுள்ள வாழ்வு குறித்து இரு நிலைப்பாடுகள் உண்டு.

அதிகாரம், செல்வம், ஆளுமை நிறைந்த வாழ்வின் அடிப்படையில் அளவிட்டு வெற்றியைப் பலர் அளவிடுகின்றனர்.

அன்பு, எளிமை, தியாகம், சேவை, தாழ்மை இவற்றின் மதிப்பீட்டின் படி சிலர்     வெற்றியுள்ள வாழ்வு இது தான் எனத்  தரம் பிரித்துப் பின்பற்றுகின்றனர்.

எனினும் வெற்றியுள்ள வாழ்க்கையை இப்படியும் வகைப்படுத்தலாம்.

இயற்கையில் நிகழும் மரணம் குறித்து அஞ்சாது, அதை இயல்பாக எதிர்கொள்வதும்  வெற்றியுள்ள வாழ்வின் ஓர் அம்சம்.

வாழ்வில் தமது கடமைகளை உணர்ந்து, மிகக் கவனமுடன் உண்மையாக வாழ்ந்து நிறைவேற்றுபவர்கள் மரணத்தைக் குறித்து அச்சப்படுவதில்லை. அவர்கள் முதிர் வயதின் சிரமங்களுக்காக முறுமுறுப்பதில்லை. பெரும்பாலும் அவர்கள் கவலையெல்லாம் பிறர்க்கு பாரமாகிவிடக்கூடாதே என்பது தான்.

என்  முதிர்  வயதான நண்பர் அடிக்கடி சொல்வதுண்டு,  "குளித்து விட்டு தலையைத் துவட்டிவிட்டு  பின்பு துண்டை உதறிச் செல்வது போல் உடலை உதறிக் கடந்து செல்லவேண்டும் என்று ". அப்படி வாழ்பவர்கள் மரணமும் கூட அழகு தான்!

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் (பு) உடைத்து.

ஆமைத் தன் உறுப்புகளை ஓட்டுக்குள் அடக்கி தன்னைக் காத்துக் கொள்வது போல ஒருவன் ஐம்பொறிகள் அடக்கினால், ஏழு தலைமுறைக்கும் சிறப்பைச் சேர்ப்பான். 

செவ்வாய், 16 மே, 2017

உண்மைகளே என்றும் அழகானவைகள்.

"Pretty much all honest truth telling in the world is done by Children "

- Oliver Wendell Holmes.


அஃது ஒர் இனிமையான நாள். மழை மெலிதாகக் கசிந்து கொண்டிருக்கிறது. பல வருடங்கள் கடந்து கல்லூரி நண்பர்களை சந்தித்து விட்டு கோவையிலிருந்து சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். 

சாரல் மழையில் இரயிலில் பயணம் செய்வது எண்பது கூடுதல் உற்சாகம். மழையில் நனைந்த மரங்களும், காட்டுச்செடிகளும் கடந்து செல்கின்றன. 

இரயில் சிநேகங்கள் அலாதியானவை.  என் எதிரில் ஒர் இளம் தம்பதி   அழகிய பெண் குழந்தையுடன்.  நட்புப் புன்னகையுடன் இனிய அறிமுகம்.  

பயணங்களில் குழந்தைகள் முகங்களில்  ஒரு தனித்த உற்சாகம் கொப்பளிக்கும். இதை நீங்களும் கவனித்து இருக்கலாம். 

கண்களில் மலர்ச்சி, உதடுகளில் வழியும் புன்னகை, முகத்தில் துள்ளல் என அந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

அந்தச் சிறுமி  எளிதாக என்னுடன் ஒட்டிக்கொண்டு சிரித்து மழலை மொழியில் பேசினாள்.

மனதினில் பல எண்ண ஓட்டங்கள்.

அந்தக் கொள்ளைக் கொள்ளும் சிரிப்பை நாம் எங்குத் தொலைத்தோம்?
அந்த உன்னதமான தருணங்களை நம்மால்  மீட்டு எடுக்க முடியுமா? 

வயது கூடக் கூட நாம் மனம் திறந்துச் சிரிப்பதற்கே அச்சப்படுகிறோம்.

சிரித்துச் சிநேகம் பாரட்டினால் ஏதேனும் உதவியை கேட்டு விடுவார்களோ எனப் பயப்படுகிறோம். 

இனிக்க இனிக்கப் பேசி நம்மை ஏமாற்றியவர்களை மன்னித்து  விட்டாலும் அவர்கள் ஏற்படுத்திய காயங்களை நம்மால்  மறக்க முடிவதில்லை.

நமது உரையாடல்கள், புன்னகை பெரும்பாலும் ஏதேனும் ஒர் ஆதாயம் கருதியே நிகழ்கிறது.

நமது ஒவ்வொரு புன்னகைக்கும் பின்பாகவும் ஏதேனும் ஒர் எதிர்பார்ப்புத் தொக்கி நிற்கிறது. சுயநலம் ஒளிந்திருக்கிறது. 

சில நேரங்களில் பிறரை ஏமாற்றி நம் இச்சைகளைப் பூர்த்திச் செய்யவும் நடித்து நகைக்கிறோம். அஃது இயல்பை விடத் தேர்ந்ததாக இருக்கிறது.

போலித்தனங்களே வாழ்க்கையை வெறுமையும், சலிப்புமாக மாற்றிவிட்டது.

நமது ஒவ்வொரு பொய்களும், போலித்தனங்களும் வாழ்க்கையைக் கசப்பானதாகவும், ஏமாற்றம்  நிறைந்ததாகவும், வெறுமையாகவும் ஆக்கிவிட்டது. 


மகிழ்ச்சி எங்கே ஒளிந்திருக்கிறது?

நம் வாழ்வில் குறுக்கிடும் ஒவ்வொரு சம்பவமும் ஏதாவது ஒரு பாடத்தைக் கற்றுத் தருகிறது.

குழந்தையின் குதூகலம் கற்றுத்தருவது என்ன? 

ஆனந்தம் எண்பது வாழ்வின்  உண்மையான நடத்தையில் மறைந்திருக்கிறது!

இந்த உலகம்  ஏமாற்றுக்காரர், சுயநலமுடையோர், பேராசைக்காரர், வஞ்சகர், பொறாமைக்காரர், மரியாதையற்றோர், நன்றி மறந்தோர், எத்தர்களால் நிறைந்தது.

இவர்களை  நம்மால் மாற்ற இயலாது. இவர்களோடு தான் நாம் வாழ வேண்டும்.  நாமும் எதாவது ஒரு கால கட்டத்தில் இப்படிப்பட்டவர்களாக வாழ்ந்திருப்போம்!

நாம் வாழப்போகும் எஞ்சிய வருடங்களில் ஏன் வஞ்சகம் இல்லாத நெஞ்சத்துடன் வாழ முயற்சிக்கூடாது?

நல் முயற்சி மன அமைதி, மன நிறைவு, மன திருப்தியை நிச்சயம் அளிக்கும்.

குழந்தைகளைப் போல்  சுயநலமற்ற அன்பையும், உற்சாகத்தையும் பிறருடன் பகிர்ந்து கொள்வோம்.

எந்தவித எதிர்பார்ப்புமின்றித் தோழமை கொள்வோம்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதிருக்கப் பழகுவோம்.

பொய்கள் தரும் மாய்மாலமான வாழ்வை விட உண்மையின் எளிமை அழகானது.

உண்மைகளே என்றும் அழகானது! முழுமையானது. குறைவற்றது.

வெள்ளி, 12 மே, 2017

திசை காட்டும் பயணங்கள்.

திசை காட்டும் பயணங்கள்.

"A Wise man travels to discover himself "

- James Russell Lowell.


வாழ்க்கையின் புரிதல்கள், அறிவு அடைதல், மனத்திடம் இவற்றைப் பெற்றுக் கொள்ளுதல் என்பது  நான்கு சுவர்களைக் கடந்து,  அனுபவங்கள் வழியாகத் தொடங்குகிறது.

பொதுவாகப் பயணங்கள் உற்சாகத்தை, உத்வேகத்தை, புதிய அறிமுகங்களை, சிந்தனை மாற்றங்களை, புரிதல்களை, இனிமையான நினைவுகளை அள்ளிக் கொடுக்கிறது. 

பயணங்கள் மாத்திரமே அறிவை விசாலப் படுத்தி விடுமா?

நிச்சயமாக இல்லை! 

மாறாகக் குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்து அதன் எல்லையைக் கூட தாண்டாது பயனுடைய வாழ்வு வாழ்ந்தவர், வாழ்பவர் பலர் உண்டு. 

பல தேசங்கள் சுற்றி வெறுமையான வாழ்வை வாழ்ந்தவர்களும் உண்டு.

உல்லாச பயணங்கள் குதூகலத்தை நிச்சயம் அளிக்கும். ஆனால் அறிவை விசாலமாக்கும் என உறுதிப்படக் கூற முடியாது. 

தேடல், கற்றுக்கொள்ளும் ஆர்வம், புதிய சிந்தனை எற்று கொள்ளும் மன விருப்பம், வாழ்வைப் பயனுடையதாக வாழ வேண்டும் என்கிற மனவுறுதி உள்ளவர்கள் பயணிக்கும் போது அந்தப் பயண அனுபவங்கள் வாழ்வின்         
திசைகாட்டியாக அமையும்.

1996  தொடங்கி 2003 ம் ஆண்டு  வரை இடைப்பட்ட காலம் எனது வாழ்வில் உன்னமான வருடங்கள்!

ஒரு சமய சமூக மேம்பாடு நிறுவனத்தில் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணி புரியும் வாய்ப்பு பெற்றேன். இந்தியாவின் 19 மாநிலங்களில் மிகவும் பின்தங்கிய   அடர்ந்த காடுகளின் உட்  பகுதியில் வாழும் பழங்குடியினர் மக்கள் மத்தியில் முன்னேற்றப் பணிகள் செய்தோம். அவற்றுள் கல்வி, மருத்துவம், தொழில் பயிற்றுவிப்பு பணிகள் முக்கியமானவை.

கல்விகூட கட்டிடம், மருத்துவமனை, மாணவர்  விடுதிகள், தொழிற் பயிற்சி மையம், ஆலயங்கள், குடியிருப்புகள் எனப் பல திட்டப் பணிகள் உருவாக்குதல் மற்றும் கண்காணிப்பது எனது பொறுப்பு.


பல நாட்கள் பயணங்களே வாழ்க்கையாக இருந்தது. பல சுற்றுலா தளங்கள், மலை வாசஸ்தலங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க  அரண்மனைகள், திருக்கோவில்கள், நீர்த் தேக்கங்கள், எழில் நிறைந்த பூங்காவனங்கள், மாமனிதர்களின்  நினைவு இடங்கள், எனக் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் போது சில குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று வந்ததைத் பொக்கிஷமாக கருதுகிறேன்.


இதில் நான் பெற்ற நன்மைகளின் அடிப்படையில் சிறந்த சில பயணங்களை குறித்துப்  பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

வருடத்திற்கு ஒரு முறையாவது இப்படிப்பட்ட இடங்களுக்குச் செல்லுவது வாழ்க்கையை  அர்த்தமுள்ளதாக்கும்!


1. எளிய மனிதர்கள் வாழும் இடங்கள்.


கருணை இல்லம், ஆதரவற்றோர் மையம், முதியோர் இல்லம் போன்றவற்றிற்கு பண உதவி செய்வது நல்லது. அத்துடன் வருடத்திற்கு ஒரு முறையாவது ஒரு நாளை இவர்களுடன் செலவிடுவது மாபெரும் பாக்கியம். 

மதுரை மற்றும் கொல்கத்தாவில் அமைந்துள்ள Missionaries of charities நடத்தும் Home for dying patients இல் செலவிட்ட தருணங்கள் மறக்கவே முடியாது. 

இப்படிப்பட்ட இடங்கள் வாழ்க்கையின் உண்மையான பொருளை நம் கண்முன் நிறுத்தும். 

அற்பமான காரியங்களுக்காக நாம் போடும் வேஷங்கள், சுயநலம், ஏமாற்றுதல் இவற்றிலிருந்து நம்மை விடுவித்து உண்மையின் பாதையில் நடக்கத் தூண்டும்.

இப்பொழுதும் குழந்தைகளின் பிறந்த நாட்களில், விசேஷமான தினங்களில் அருகில் உள்ள இல்லங்களுக்குச் செல்ல தவறுவது இல்லை.

2. மாமனிதர்கள் வாழ்ந்த இடங்கள்.


எந்த எதிர்பார்ப்பும் இன்றி பிரதிபலன் பாராது தன்னையே சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்து வாழ்ந்தோர் நம் மண்ணில் பலர்.

அன்பும், கருணையும், எளிமையும், உண்மையாய் வாழ்ந்த அடியவர்கள் இந்திய தேசம் முழுமையும் காணலாம்.

அவர்களுடைய நினைவிடங்கள் சென்று வருவது நமது வாழ்வைப் பயனுள்ள வாழ்வாக வாழ வேண்டும் என்கிற உந்துதலைத் தரும். 

பஞ்சாப்   மாநிலம்   நாவன்ஷகர் அருகில் அமைந்துள்ள   மாவீரன்  பகத்சிங் நினைவிடத்தில் அவர் கைப்பட எழுதிய குறிப்பேடு தாள்கள் பார்வையிட்டது   இன்றும் கண் முன்பு நிழலாடுகிறது.

உங்களைக் கவர்ந்த பத்து மாமனிதர்களைப் பட்டியலிடுங்கள். அவர்கள் நினைவிடங்களுக்கு சென்று வாருங்கள். வாழ்விற்கு புது அர்த்தம் பிறக்கும்.

3. புனிதமாகக் கருதப்படும் இடங்கள்.


புனிதமாகக் கருதப்படும் இடங்கள் சென்று வருதல் மனதின் எதிர்மறை எண்ணங்களை மாற்றும். மன அமைதியைத் தரும். நமது தவறுகளை உணர்த்தும். மனச் சோர்வுகள் நீங்கி  புதிய நம்பிக்கை பிறக்கும். சரியான முடிவுகளை எடுக்க நம்மை வழி நடத்தும்.

எனது வாழ்வில் முக்கியமானதாக நான் கருதுபவற்றை முடிவெடுக்கும் முன்பாக குறிப்பிட்ட சில ஸ்தலங்களுக்கு தனித்துச் செல்வது வழக்கம். மனிதர்கள் முன்பாக மண்டியிடுவதைப் பார்க்கையிலும் கடவுளின் முன்னிலையில் அமர்ந்திருப்பது சாலச் சிறந்தது.

வாழ்க்கை  என்பது ஒரு வகையில் நகர்தலே! 

நமது வாழ்வின் இறுதி இடத்தின் இலக்கு (Final place of destination) பற்றிய சரிதானா புரிதல் ஏற்படும்போதும், அதுவே நம் மனதின் திட சங்கல்பமாக அர்ப்பணிக்கப் படும்போது :
நாம் பயணிக்கும் பாதைகளின் திசைகள் சரியான பாதையினை நோக்கி நம்மை வழி நடத்தும்.

“Travel is fatal to prejudice, bigotry, and narrow-mindedness, and many of our people need it sorely on these accounts. Broad, wholesome, charitable views of men and things cannot be acquired by vegetating in one little corner of the earth all one's lifetime.

       - Mark Twain.                

திங்கள், 8 மே, 2017

நீங்கள் எங்கு நிற்கிறீர்கள்?

நீங்கள் எங்கு நிற்கிறீர்கள்? 

மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு 

Abraham Maslow (1908 - 1970) 


முக்கியமான சில கேள்விகள்!!! 

வாழ்க்கையில்  நாம் தற்போது எந்த நிலையில் இருக்கிறோம் (Where we stands)? 

எதிர் காலத்தில் எந்தத் திசையில் செல்வது? 

வாழ்க்கையின் முன்னேற்றம் எந்த அடிப்படையில் நிகழ்கிறது ?

எவை முன்னேற்றத்திற்கான உந்து சக்தி? (Motivational factors).

என்பதைப் புரிந்து கொள்ள இந்தப் பகிர்வு உதவும்.

இந்தக் கேள்விகளுக்கான பதில் மிக எளிமையானது! 

தேவைகள் மற்றும் விருப்பங்களே!!!


தேவைகள் மற்றும் விருப்பங்களே வாழ்வினை இயக்கும் எரிபொருளாகும். விருப்பங்கள் முடிவில்லாதவை. ஒரு தேவை நிறைவேறி மனம் திருப்தியுற்றதும்   மற்றொரு விருப்பம் பிறக்கும். இவற்றைப் பூர்த்தி செய்வதே வாழ்க்கை பயணம்.

இவ்வித  பல தொடர்  தேவைகளை Maslow அவர்கள் 5 நிலைகளாக வகைப்படுத்தி ஒரு பிரமிடு வரைபட வடிவில் கட்டமைத்தார்.

இதை நாம் புரிந்து கொண்டால்  சரியான திசையில்  பயணிக்கலாம்.   நமது  விருப்பங்களினை  தரவரிசைபடுத்திடவும், முன்னுரிமைகளைத் தீர்மானிக்கவும் செயல்படுத்தவும் முடியும்.




மாஸ்லோவின் வரையறை 


இந்த பிரமிட் வரைபடத்தில்  காணப்படும் மூன்று நிலைகள்,  தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ள.

A. அடிப்படைத்  தேவைகள்.(Basis Needs)
B. உளவியல் தேவைகள் (Psychological Needs)
C. தன்னுணர்வு தேவைகள் (Self fulfilment Needs)


இந்தப் படிநிலை வரிசையில் பயணிக்கும் மனிதன் கீழ்நிலை தேவைகள் பூர்த்தியானவுடன் அதனை அடுத்துள்ள உயர்நிலை விருப்ப தேர்வுகள் நோக்கி உந்தப்படுவான். 

மக்களின் எண்ணிக்கையையும்,  தேவைகளின் படிநிலைக்கும் ஒரு எளியத் தொடர்பு உண்டு. 

தேவைகள், விருப்பங்கள்  உயர உயர,  மக்களின் எண்ணிக்கை குறையும்.  

A - அடிப்படைத்  தேவைகள் (Basis Needs).


1. உடலியல் தேவைகள் (Biological Needs).


முதல் கட்டமாக  மனிதர்களின் தேடுதல் இங்குத் துவங்குகிறது. காற்று, நீர், உணவு, பாலுறவு, தூக்கம், கழிவு வெளியேற்றம் மற்றும் ஏகநிலமை (Homostasis) இவையே அடிப்படைத்  தேவைகள்.
இந்தத் தேடல் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதும் கூட.  இதை அடைய எந்தவித ஊக்குவிப்பும் (Motivational) தேவையில்லை.

2. பாதுகாப்பு தேவைகள் (Safety Needs).


அடிப்படைத் தேவைகளை தொடர்ந்து மனிதர்கள் இரண்டாவது நகர்வாகப் பாதுகாப்பு சூழல் நோக்கிப் பயணிக்கின்றனர். பாதுகாப்பு தொடர்பான காரியங்களை பொதுவாக தொழில் பாதுகாப்பு, உயிருக்குப் பாதுகாப்பு, உடைமைக்குப் பாதுகாப்பு, வன்முறை அற்ற இடம்  என வகைப்படுத்தலாம்.

i. உடல் பாதுகாப்பு
ii. வேலைவாய்ப்பு
iii. அறநெறி
iv. குடும்ப உறவுகள்
v. ஆரோக்கியம்
vi. வள வாழ்வு ஆதாரங்கள்

B. உளவியல் தேவைகள் (Psychological Needs).


3. சமூகத் தேவைகள்( Love/Belonging needs).


குழுவாக,  ஒரு கூட்டத்துடன் தன்னை அடையாளப்படுத்தி வாழ்வது மனிதனின் அடிப்படை பண்பு. அது ஒரு உளவியல் தேவை. அடிப்படைத் தேவைகள், பாதுகாப்பை  உறுதிப்படுத்திய பின்பு  மூன்றாவதாக மனிதன் குடும்பம், நண்பர்கள், உறவினர் எனத் தனது வட்டத்தை விரிவுபடுத்துவான்.

நண்பர்கள் தெரிவு, உறவினர்கள் ஜக்கியம் பெரும்பாலும் சமூக அந்தஸ்தின் அடிப்படையிலேயே இருக்கும்.  விதிவிலக்குகள் இருக்கலாம். 
தனது பாலியல் நெருக்கத்தை (Sexual Intimacy) பகிர விரும்புவதே இதன் உளவியல் அடிப்படை. 


4. சமூக மேன்மை தேடுதல் (Esteem Needs).

 

நான்காம்  கட்ட நிலையில்   தான் என்கிற உணர்வு, தனித்த அடையாளம், தனது இருப்பு நிலை முன்னிருத்தல், சாதிக்க முற்படுதல், தன்னைக் கூட்டத்தில் இருந்து வேறுபடுத்துதல், பிறரை மதித்தல், பிறரால் மதிக்கப்படுதல் எனச் சமூக மேன்மையை நோக்கிச் செல்ல ஆர்வமும் முயற்சியும் வரும்.

உயர்பதவியினை விரும்புதல், சொத்துக்கள், வாகனங்கள் வைத்திருக்க ஆசைப்படுதல் போன்றவையும் இதில் அடங்கும்.

C. தன்னுணர்வு தேவைகள் (Self fulfilment Needs)


5. தன்னலத் தேவை (Self-actualization).


முழுமையான வாழ்க்கை மகிழ்ச்சி என்பது பொறுப்புகளை  ஏற்பதிலும் அதை நிறைவேற்றுவதிலும் அடங்கியிருக்கிறது. கடமைகளைச்  செய்து முடிப்பது மன அமைதி மற்றும் திருப்தியை அளிக்கிறது.

வாழ்க்கை தேடலின் இறுதி நிலை  தன்னல தேவையாகும். தன்னையுணர்தல் என்பது ஓர் மன முதிர்வு நிலை.

 கீழ்க் கண்ட நடத்தைகளில்  ஏற்படும் நாட்டங்களின் மூலம் மன முதிர்ச்சியை உணரலாம்.

  • அறநெறி நடத்தல் (Morality) , 
  • படைப்புகளை நேசித்தல், படைப்பாற்றல் (Creativity), 
  • தன்னிச்சை மறுமொழி  (Spontaneity), 
  • சிக்கல்களுக்குத் தீர்வு காணும் ஆற்றல் (Problem Solving), 
  • பாரபட்சம் இல்லாத தன்மை (lack of prejudice),
  • வாக்குறுதி (Assurance),
  • தவறுகளை மன்னித்தல் (Kindnesses),
  • உண்மை நிலை எற்பு (acceptance of facts).

மனிதனுக்கு கடைசியாகத் தோன்றக்கூடிய தேவைத் தன்னல தேவை (Self-actualization) ஆகும். இதன் பின் அவனுக்குத் தேவைகள் இருக்காது என மாஸ்லோ கோட்பாட்டில் கூறுகின்றார்.

மன முதிர்ச்சிக்கும்  வயது வளர்ச்சியையும் தொடர்பு படுத்துவது கடினம். முதிர்ந்த வயதிலும் வாழ்வின் அடிப்படைத் தேவைகளை கூடப் பூர்த்தி செய்ய இயலாது தவிப்பவர்கள் ஏராளம் உண்டு.

இடைவிடாத முயற்சிகளும்,  சரியான விருப்பங்களை முன்னிலை செய்வதன் மூலமும்  ஊக்கத்தையும் வாழ்விற்கு நல்லதொரு அர்த்தத்தையும் பெற்று கொள்ளமுடியும்.

வாழ்க்கை என்பது சந்தர்ங்களினால்  ஆனது அல்ல. அது  தேவைகள் மற்றும் விருப்பங்களின் தெரிந்தெடுப்புகளால் தீர்மானிக்கப்படுகிறது !!!.



மனித சிந்தனையில் ஏற்படுத்தப்படும் மயக்கங்கள்.

மனித சிந்தனையில் ஏற்படுத்தப்படும்  மயக்கங்கள்.

Ivan Pavlov - (1849 - 1936) 

சில கேள்விகள் :


🔸 மனிதர்களின் சிந்தனை மற்றும் நடத்தையைக் கட்டுப்படுத்த முடியுமா?
🔸பொதுப்புத்தி எப்படிக் கட்டமைக்கப்படுகின்றது?
🔸நமது தேவைகள், விருப்பங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன?
🔸 நல்லது, சிறந்தது, மேன்மையானது அல்லது தீமையானது, இழிவானது கீழ்மையானது என எப்படித் தீர்மானிக்கிறோம்?

Ivan Pavlov அவர்களின்  நடத்தைச் சார்ந்த ஆய்வின் சாரம்.


ஒரு எதிர்பார்க்கப்படும் நிகழ்வை உருவாக்குவதற்கு மற்றொரு துணை நிகழ்வை ஏற்படுத்துவதன் மூலம் விரும்பும் விளைவை அடைய முடியும்.


உதாரணம்.

எதிர்பார்க்கும் நிகழ்வு : மக்கள் மனதைப் பிரச்சினையிலிருந்து திசைதிருப்புதல்.

துணை  நிகழ்வு : ஆபாசமான காட்சிகள், பாடல்கள், குற்றப் பின்னணி உடையப் பரபரப்பு செய்திகளைக் கசியவிடுதல்.


The Pavlo's Classical experiments on Dog's 


பாவ்லோவ் நாயின் உணர்வுகள் மற்றும் நடத்தைகளைத் தொடர்  நிகழ்வுகளின் ஊடக கட்டுப்படுத்த முடியும் என்பதைப்  பரிசோதனைகள் மூலமாக உறுதிப்படுத்தினார்.

நல்ல இரம்மியமான சூழல் கொண்ட அறையில் ஒரு நாய் அடைக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சமயத்தில் அறையின் கதவு திறக்கப்பட்டது.
மணியின் ஓசை எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து சுவையான உணவு வழங்கப்பட்டது. ஒவ்வொரு நிகழ்வின் போதும் அதின் உமிழ்நீர் அளவு பதிவு செய்யப்பட்டது.

இந்தப் பரிசோதனை  தொடர்ந்த சில நாட்கள் கடந்த உடன் அறைக் கதவு திறக்கப்படும் போதே, மணி ஒலி கேட்டவுடன், உணவு அளிக்காமலேயே நாயின் உமிழ்நீர் முழு அளவை எட்டியது.

இதன் மூலமாக ஒரு துணை நிகழ்வின் வழியாக (கதவைத் திறத்தல், மணி ஓசை ஏற்படுத்துதல் -(Neutral stimulus), போன்ற தூண்டுதல்கள் வழியாக  நாயின் நடத்தையைக் (உமிழ்நீர் நீர் - Biological stimulus) கட்டுப்படுத்த முடியும்.


John.S.Watson 1920 ம் ஆண்டில் இப்பரிசோதனை அடிப்படையில் மனிதர்களின் சிந்தனை மற்றும் நடத்தையைக் கட்டுப்படுத்தும் ஆய்வை (Little Albert experiment) மேற்கொண்டார்.

அந்த ஆய்வின் நீட்சியே   மனிதர்களின் சுய சிந்தை, நடத்தைத் தன்மை கடடுப்படுத்தப்பட  தொடர்ந்து முன்னெடுக்கப்படும்

🔸வர்த்தக  விளம்பரங்கள்
🔸தனி மனித பிம்பங்களை கட்டமைத்தல்
🔸கருத்துருவாக்கம்
🔸கல்வி பாடத்திட்டங்கள் /பயிற்றுவிக்கும் முறைகள்.
🔸புத்தகங்கள், பாடல்கள், திரைப்படங்கள், சமூக வலைத்தளங்கள்,  விழாக்கள்

பயன்படுத்தப் படுகின்றன. இதில் குறிப்பாக இசை, மன உணர்வைத் தூண்டும் ஓசைகள், இயற்கை காட்சிகள், பாலுணர்வை ஈர்க்கும் தன்மைகள், மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், மனதை வருடும் உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் என மனதை மயக்கும் தூண்டுதல்கள் (Neutral Stimulus)  முதன்மைப் படுத்தப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாக நாம் வாழ்க்கை முறை, வாங்க வேண்டிய பொருட்கள், உணவு, உடை, தொடங்கி இது நல்ல தேசம், இந்த மக்கள் கூட்டம் வன்முறையாளர்கள்,   குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் தீவிரவாதிகள்  என மிக நுணுக்கமாக்க  நமது சிந்தனை  கட்டமைக்கப்படுகிறது. நம் சுய சிந்தனை மயங்கி பொதுப்புத்தியை சார்ந்து முடிவுகளை எடுக்கிறோம்.

வரும் காலங்களில் இந்த மாய பிம்பங்களை உடைத்து, பின்னப்படும் வலைகளைக் கடந்து உண்மையை உணர பகீர பிரயத்தனம் தேவை!

பிறவிப் பயன்

பிறவிப் பயன்.


ஆன்மீகத்தின் சாரம் :

  • வாழ்வின் முதன்மை நோக்கம் கடவுளை அறிதல், 

         அவரில் அன்பு கூருதல்.

  • தன்னை போல் அனைத்து உயிர்களையும் நேசித்தல்.


கற்றதனால் ஆய பயனென்கொல்? வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

கல்வியின் நோக்கமும் பயனும் கடவுளை உணர்ந்து வணங்குவதே.

உங்களுக்கு மிகவும் பிடித்தமான சொல் எது எனக் கேட்டால்  என் உடனடி பதில் "சிந்தனை "!

சுவாரஸ்யமான தேடல் நிறைந்த வார்த்தை சிந்தனை.

சிந்தனை எப்படி உருவாகிறது? எப்படிச் செயல்படுகிறது?
என்பதை அறியாமல் வாழ்வின் போக்கை கட்டுப்படுத்த இயலாது.

வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் மேல் நமக்கு எந்த வித அதிகாரமோ,
ஆளுமையோ இருக்காது.

நீர் வழி மிதந்து செல்லும் தக்கை போல் வாழ்க்கை பயணம் அமைந்திடும்!

மனிதர்களின் சிந்தனை பலவித உணர்வு நிலைகளால் கட்டுப்படுத்தப்பட்டு
வழிநடத்தப்படுகின்றன.

உணர்வுகள் அனுபவித்தல் மூலமாக மனதில் பதியப்படுகிறது.

அதாவது நமக்கு இன்பமும், திருப்தி அளிப்பவை நல்லது என்றும்
துன்பமும், அதிருப்தி அளிப்பவை தீமை என்றும் மனதில்
பதியப்படுகிறது.

இந்த நம்பிக்கை அடிப்படையிலேயே நாம் செயலாற்றுகிறோம்.

நமது நம்பிக்கை அனைத்தும் சரியானவையா?

இல்லை என்பது அனைவரும் அறிந்த பதில்.

வயதும், அனுபவங்களும் நம் தவறான நம்பிக்கைகளை
உணர்த்துகின்றன.

காலம் கடந்த உணர்வடைதல் பல தனிப்பட்ட இழப்புகளையும்,
நம்மைச் சார்ந்து வாழ்பவர்களுக்கு மன வேதனையையும், வருத்தத்தையும்,
துயரத்தையும் அளிக்கிறது.

அப்படியென்றால் சிந்தனையை நெறிப்படுத்த முடியுமா?

நிச்சயமாக முடியும்!

சிந்தனையைக் கட்டமைக்க பலவிதமான வழி முறைகள் போதிக்கப்படுகின்றன.

அவற்றுள் முதன்மையானது ஆன்மீகம்.

ஆன்மபோதம் நம்பிக்கையை, சிந்தனையை ஓழுங்கு படுத்த உதவுகின்றது.

ஆன்மசுத்தி விருப்பங்கள் - தேடல் - நம்பிக்கை - சிந்தனை - சொல் - செய்கை
எனப் பரிணமிக்கிறது.

பலவித வாழ்க்கை சூழலே ஆன்மீக தேடலின் துவக்கத்திற்குக் காரணமாகிறது.

பொதுவாக

🔸 துயரம்,
🔸 தவறுகளை உணர்ந்தோர் அதற்காக வருந்துதல்,
🔸 தனிமை உணர்வு ஏற்படுத்தும் அச்சம்,
🔸 மரணம் குறித்து பயம்,
🔸சமயம் சார்ந்த பற்றுதல்,
🔸 ஆன்மீக குழுக்கள் தொடர்பு,
🔸 சேவை செய்தல் ஏற்படும் ஆர்வம்,
🔸 செல்வம், வள வாழ்வு தொடர,
🔸 சமூக மேன்மை, மதிப்பை பெற்றிட,
🔸 குற்றவுணர்விலிருந்து விடுபடல்
🔸 தற்செயல் ஈடுபாடு

என ஏதோ ஓர் ஈர்ப்பு ஆன்மீகம் நோக்கித் தள்ளுகிறது.

இளம் வயதில் நம் பெற்றோரை நேசிப்பதற்கும், அவர்களுடைய முதிர்ந்த வயதில் நாம் அவர்கள் மேல் அன்புகூர்தலுக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு?

ஆன்மீக தேடலும் அப்படித்தான்!

கடவுளின் மாசற்ற (Holy) , நிபந்தனையற்ற (Un Conditional) அன்பை உணரும்போது மட்டுமே உண்மையான ஆன்மீக தேடல் நம்முள் துவங்குகின்றது!

உண்மையான ஆன்மீக தேடல் சில பண்புகளை சிந்தனையில் உருவாக்கும்..

🔹 தவறுகளை உணர்தல், தவறுகளுக்காக வருந்துதல்.
🔹நல் எண்ணமுடையோர் தொடர்பை நாடுதல், அவர் கூட்டுறவு பேனுதல்,
🔹 மதமாச்சரியங்கள் கடந்து அனைத்துச் சமயங்களின் கருத்துக்களையும் மதித்தல்,
🔹 உண்மையின் மீது அளவு கடந்த நாட்டம்,
🔹பேசுவதில் கவனம், மௌனத்தில் பிரியம்,
🔹வாக்குறுதி, பொறுப்புணர்வு,
🔹மன உறுதி, தெளிந்த அறிவு,
🔹கற்றது கையளவு எனும் தெளிதல்,
🔹 உடல் நலம், மன நலம் பேணுதல்,
🔹 கோபம் நீக்கி அன்பு, அமைதி  விருப்பம்,
🔹 பெருமை அகன்று தாழ்மை,
🔹 பாரபட்சமின்றி நேசித்தல்,
🔹பிறர் குற்றம் பொறுத்தல், மன்னித்தல்
🔹எந்தச் சூழ்நிலையிலும் திருப்தி
🔹 தன்னை முன்னிறுத்த தயங்குதல்,

இத்தகைய மன மாற்றங்களை, குண நலன்களை  உண்மையான ஆன்மீக தேடலை நம்மில் உருவாக்கும்.

ஆன்மீக பாதையின் பயணிக்கும்போது     இடறல்கள் வரும். காமம், பெருமை, பொறாமை, கோபம், பேராசை உணர்வுகள் ஆழிப் பேரலை போல் நம்மை  தாக்கும்.

ஆன்மீக பயணம் சுலபமானதல்ல! கடினமானதும் அல்ல!!

நம் சுய பெலன் கொண்டு முயற்சித்தால் வழி தவறி விடுவோம்.

கடவுளின் அருளும், குருவின் துணையுடனும் நடந்தால் பாதையை கடப்பது மிகச் சுலபம்.
தூய்மை, உண்மை, எளிமை, அர்ப்பணம் இவற்றின் வழியே கடவுளிடம்
அன்பு கூறுவோம்.

கோள்இல் பொறியில் குணமிலவே ; எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

அருள், அறிவு, ஆற்றல் முதலிய எட்டு குணங்களை உடைய 
கடவுளைப்போற்றி வணங்கவே வழங்கப்பட்ட மனித உடலுறுப்புகள் 
அவ்வாறு செய்யாவிட்டால் அவற்றால் பயன் எதுவுமில்லை.