மரணமும் அழகாக இருக்க முடியும்.
"Death is nothing to us, since when we are, death has not come, and when death has come, we are not "
Epicurus.
உறங்குவது போலும் சாக்கா (டு) உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
மரணம் தூக்கத்தைப் போன்றது ; பிறப்பு தூங்கி எழுவது போன்றது. இரண்டும் இயற்கை.
அனுதினம் செய்தித்தாள்களில் பல துயரச் செய்திகளை வாசிக்கிறோம். அவை மனதை சில நிமிடங்கள் பதைபதைக்கச் செய்கிறது. மனம் துயரம் அடைகிறது. அதைக் குறித்துக் குடும்பத்தினர், நண்பர்களிடம் பேசும்போது மனம் இலேசாகிறது. மீண்டும் மற்றுமொரு புதியதொரு துயர செய்தியை வாசிக்கும் போது பழையவை புள்ளிவிவரங்களாக மாறுகின்றன.
இரண்டாவதாக நமக்கு அறிமுகமானவர்கள், தூரத்து உறவினர்கள், நட்பு வட்டத்தின் எல்லையில் இருப்பவர்கள் இவ்வுலகைக் விட்டுக் கடந்து செல்லும் போது மன வேதனையும், ஆற்றாமையும் ஏற்படுகின்றது. அது தொடர்பாகக் கூடுதல் தகவல்களை விசாரிக்கிறோம். துயரத்தில் பங்கெடுக்கிறோம். ஆறுதல் வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்கிறோம். நீண்ட நாட்கள் நம் நினைவில் அத் துயரம் தங்குகிறது. நினைவு நாட்களில் சில வருடங்களுக்காவது அவர்கள் குறித்துப் பேசுகிறோம்.
மூணாவது நிலை நம் இரத்த சம்பந்தம், நெருங்கிய நட்பு தொடர்புடைய இழப்புகள். இவை நம்மை நிலைகுலையச் செய்கிறது. மனம் துடிதுடிக்கிறது. அங்கலாய்க்கிறோம். அரற்றுகிறோம். ஏன் இது நிகழ்ந்தது எனும் கேள்விகளை எழுப்புகிறோம். இது நிகழாமல் இருந்திருக்கக்கூடாத எனும் நப்பாசை மனதில் எழும்புகிறது. குடும்பத்தின் விசேஷமான நிகழ்வுகளில் இவர்கள் இல்லாததை
தவறாமல் நினைவு கூறுகிறோம். இவர்களின் இழப்பு வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது.
மரணம் எனும் ஒற்றை விளைவு எத்தனை விதமான எதிர்விளைவுகளை மனதில் உருவாக்குகிறது!
நமது அன்பின் வட்டத்தின் அருகில் வாழ்ந்து, தொட்டு, கண்டு, உண்டு, பேசி, உணர்ந்து, பழகிய உறவுகளின் பிரிவுகள் ஏற்படுத்தும் துயரங்கள் வலி மிகுந்தது.
அன்பின் வட்டம் விரிவடையும் போது மரணம் இயற்கையின் நியதி என உணரலாம்.
1994. ம் ஆண்டில் கடுமையான நோய் நிமித்தம் மரணத்தின் மிக அருகில் பயணித்தேன். ஏறக்குறைய 15 நாட்கள் மருந்தும், Drips -ம் தான் உணவு.
அப்போது பெற்ற பாடங்கள் எந்தக் கல்வி சாலையும் கற்றுத் தர முடியாது.
எது வாழ்வில் முக்கியமானது?
வாழ்க்கையின் பயனும் நோக்கமும் யாது?
எவை நிரந்தரம்?
மரணத்தில் கூட வருவது எது?
எவற்றை நாம் விட்டுச் செல்கிறோம்?
எனும் கேள்விகள் இயல்பாக எழுந்தன.
மரணமும் நெருப்பைப் போன்ற இயல்புடையது.
சந்தனம் என்றாலும் சரி, சகதியில் கலந்த பொருள் என்றாலும் சரி தீயில் இடும் போது சாம்பல் தான் மிஞ்சும்.
படித்தவர் - படிக்காதவர்,
ஏழை - செல்வந்தர்,
உயர்ந்தவர் - தாழ்ந்தவர்,
ஆண் - பெண்,
அதிகாரமுடையோர் - பாமரன்,
ஞானி - மூடன்,
இவர்கள் எவராயினும் மரணம் வித்தியாசமின்றி மேய்ந்து போடுகிறது.
பல மனிதர்களை மனம்போல மமதையுடன் வாழ, இந்தத் தவறான புரிதலும் காரணம்.
சமய நம்பிக்கையின் படி மரணம் என்பது முற்றுப்புள்ளி அல்ல. அஃது ஒரு மாறும் முறை (Transition) . ஓர் உருமாற்றம் (Transformation) . சிந்தனையாளர், அறிவியலாளர் கூட மரணம் என்பதை ஒரு முடிவாகக் கருதுவது இல்லை. உயிரினம் தமது அனுபவங்களை, பாரம்பரியங்கள் இனக்கீற்று அமிலம் (DNA) மூலமாக உயிர் வளர்ச்சிக்கான மரபு கட்டளைகளாக அவற்றின் சந்ததிகளுக்குக் கடத்தப்படுவதை உறுதி செய்துள்ளது.
தத்துவ ஞானி எபிக்கூரஸ் (Epicurus - BC 341 - 270) மிகச் சிறந்த சிந்தனையாளர். அவரது முக்கியக் கோட்பாடு : "அச்சத்திலிருந்து விடுதலை - Freedom from fears (ataraxia) " மற்றும் " உடல் துன்பத்திலிருந்து விடுதலை - Absence from body pain (aponia)". விதிகளின் மீது நம்பிக்கை இல்லாதவர்.
அவரது வாழ்வின் இறுதி நாளில் நிகழ்ந்த சம்பவம் இது. முதிர் வயதில் மரணத் தருவாயில் தமது சீடர்களிடம் குளியல் தொட்டியை வெதுவெதுப்பான நீரால் நிரப்பச் சொன்னார். அதில் இளைப்பாறியபடி சீடர்களுக்குக் குறிப்புகளைக் கொடுத்தார்.
என்ன குறிப்புகள் தெரியுமா?
மனிதனது உயிர் பிரிகையில் அவனது உடலில், மனதில் நிகழும் மாற்றங்கள் குறித்த அவதானிப்புகள் !
வெற்றியுள்ள வாழ்வு குறித்து இரு நிலைப்பாடுகள் உண்டு.
அதிகாரம், செல்வம், ஆளுமை நிறைந்த வாழ்வின் அடிப்படையில் அளவிட்டு வெற்றியைப் பலர் அளவிடுகின்றனர்.
அன்பு, எளிமை, தியாகம், சேவை, தாழ்மை இவற்றின் மதிப்பீட்டின் படி சிலர் வெற்றியுள்ள வாழ்வு இது தான் எனத் தரம் பிரித்துப் பின்பற்றுகின்றனர்.
எனினும் வெற்றியுள்ள வாழ்க்கையை இப்படியும் வகைப்படுத்தலாம்.
இயற்கையில் நிகழும் மரணம் குறித்து அஞ்சாது, அதை இயல்பாக எதிர்கொள்வதும் வெற்றியுள்ள வாழ்வின் ஓர் அம்சம்.
வாழ்வில் தமது கடமைகளை உணர்ந்து, மிகக் கவனமுடன் உண்மையாக வாழ்ந்து நிறைவேற்றுபவர்கள் மரணத்தைக் குறித்து அச்சப்படுவதில்லை. அவர்கள் முதிர் வயதின் சிரமங்களுக்காக முறுமுறுப்பதில்லை. பெரும்பாலும் அவர்கள் கவலையெல்லாம் பிறர்க்கு பாரமாகிவிடக்கூடாதே என்பது தான்.
என் முதிர் வயதான நண்பர் அடிக்கடி சொல்வதுண்டு, "குளித்து விட்டு தலையைத் துவட்டிவிட்டு பின்பு துண்டை உதறிச் செல்வது போல் உடலை உதறிக் கடந்து செல்லவேண்டும் என்று ". அப்படி வாழ்பவர்கள் மரணமும் கூட அழகு தான்!
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் (பு) உடைத்து.
ஆமைத் தன் உறுப்புகளை ஓட்டுக்குள் அடக்கி தன்னைக் காத்துக் கொள்வது போல ஒருவன் ஐம்பொறிகள் அடக்கினால், ஏழு தலைமுறைக்கும் சிறப்பைச் சேர்ப்பான்.
அருமையாக, சரியாகச் சொல்லி உள்ளீர்கள்...
பதிலளிநீக்குஉங்கள் உடனடி வருகைக்கும் கருத்துக்கும்
நீக்குநன்றி திரு.தனபாலன்.
ஆஹா அருமை நண்பா
பதிலளிநீக்குதொடர்ந்த உற்சாகம் ஊட்டும் வார்த்தைகளுக்காக நன்றி ரவி.
நீக்கு//வாழ்வில் தமது கடமைகளை உணர்ந்து, மிகக் கவனமுடன் உண்மையாக வாழ்ந்து நிறைவேற்றுபவர்கள் மரணத்தைக் குறித்து அச்சப்படுவதில்லை.// உண்மையான வரிகள்.விடை தெரியாமல் தேடிக்கொண்டிருந்த கேள்விக்கு விடை தேடி போகும் ஒரு இனிய சுவாரசிய பயணமே மரணம் என்றால் மரணம் அழகாகத்தனே இருக்க முடியும்.
பதிலளிநீக்குஅருமையான மறுமொழி. வருகைக்கும் மிக்க நன்றி.
நீக்கு