செவ்வாய், 16 மே, 2017

உண்மைகளே என்றும் அழகானவைகள்.

"Pretty much all honest truth telling in the world is done by Children "

- Oliver Wendell Holmes.


அஃது ஒர் இனிமையான நாள். மழை மெலிதாகக் கசிந்து கொண்டிருக்கிறது. பல வருடங்கள் கடந்து கல்லூரி நண்பர்களை சந்தித்து விட்டு கோவையிலிருந்து சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். 

சாரல் மழையில் இரயிலில் பயணம் செய்வது எண்பது கூடுதல் உற்சாகம். மழையில் நனைந்த மரங்களும், காட்டுச்செடிகளும் கடந்து செல்கின்றன. 

இரயில் சிநேகங்கள் அலாதியானவை.  என் எதிரில் ஒர் இளம் தம்பதி   அழகிய பெண் குழந்தையுடன்.  நட்புப் புன்னகையுடன் இனிய அறிமுகம்.  

பயணங்களில் குழந்தைகள் முகங்களில்  ஒரு தனித்த உற்சாகம் கொப்பளிக்கும். இதை நீங்களும் கவனித்து இருக்கலாம். 

கண்களில் மலர்ச்சி, உதடுகளில் வழியும் புன்னகை, முகத்தில் துள்ளல் என அந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

அந்தச் சிறுமி  எளிதாக என்னுடன் ஒட்டிக்கொண்டு சிரித்து மழலை மொழியில் பேசினாள்.

மனதினில் பல எண்ண ஓட்டங்கள்.

அந்தக் கொள்ளைக் கொள்ளும் சிரிப்பை நாம் எங்குத் தொலைத்தோம்?
அந்த உன்னதமான தருணங்களை நம்மால்  மீட்டு எடுக்க முடியுமா? 

வயது கூடக் கூட நாம் மனம் திறந்துச் சிரிப்பதற்கே அச்சப்படுகிறோம்.

சிரித்துச் சிநேகம் பாரட்டினால் ஏதேனும் உதவியை கேட்டு விடுவார்களோ எனப் பயப்படுகிறோம். 

இனிக்க இனிக்கப் பேசி நம்மை ஏமாற்றியவர்களை மன்னித்து  விட்டாலும் அவர்கள் ஏற்படுத்திய காயங்களை நம்மால்  மறக்க முடிவதில்லை.

நமது உரையாடல்கள், புன்னகை பெரும்பாலும் ஏதேனும் ஒர் ஆதாயம் கருதியே நிகழ்கிறது.

நமது ஒவ்வொரு புன்னகைக்கும் பின்பாகவும் ஏதேனும் ஒர் எதிர்பார்ப்புத் தொக்கி நிற்கிறது. சுயநலம் ஒளிந்திருக்கிறது. 

சில நேரங்களில் பிறரை ஏமாற்றி நம் இச்சைகளைப் பூர்த்திச் செய்யவும் நடித்து நகைக்கிறோம். அஃது இயல்பை விடத் தேர்ந்ததாக இருக்கிறது.

போலித்தனங்களே வாழ்க்கையை வெறுமையும், சலிப்புமாக மாற்றிவிட்டது.

நமது ஒவ்வொரு பொய்களும், போலித்தனங்களும் வாழ்க்கையைக் கசப்பானதாகவும், ஏமாற்றம்  நிறைந்ததாகவும், வெறுமையாகவும் ஆக்கிவிட்டது. 


மகிழ்ச்சி எங்கே ஒளிந்திருக்கிறது?

நம் வாழ்வில் குறுக்கிடும் ஒவ்வொரு சம்பவமும் ஏதாவது ஒரு பாடத்தைக் கற்றுத் தருகிறது.

குழந்தையின் குதூகலம் கற்றுத்தருவது என்ன? 

ஆனந்தம் எண்பது வாழ்வின்  உண்மையான நடத்தையில் மறைந்திருக்கிறது!

இந்த உலகம்  ஏமாற்றுக்காரர், சுயநலமுடையோர், பேராசைக்காரர், வஞ்சகர், பொறாமைக்காரர், மரியாதையற்றோர், நன்றி மறந்தோர், எத்தர்களால் நிறைந்தது.

இவர்களை  நம்மால் மாற்ற இயலாது. இவர்களோடு தான் நாம் வாழ வேண்டும்.  நாமும் எதாவது ஒரு கால கட்டத்தில் இப்படிப்பட்டவர்களாக வாழ்ந்திருப்போம்!

நாம் வாழப்போகும் எஞ்சிய வருடங்களில் ஏன் வஞ்சகம் இல்லாத நெஞ்சத்துடன் வாழ முயற்சிக்கூடாது?

நல் முயற்சி மன அமைதி, மன நிறைவு, மன திருப்தியை நிச்சயம் அளிக்கும்.

குழந்தைகளைப் போல்  சுயநலமற்ற அன்பையும், உற்சாகத்தையும் பிறருடன் பகிர்ந்து கொள்வோம்.

எந்தவித எதிர்பார்ப்புமின்றித் தோழமை கொள்வோம்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதிருக்கப் பழகுவோம்.

பொய்கள் தரும் மாய்மாலமான வாழ்வை விட உண்மையின் எளிமை அழகானது.

உண்மைகளே என்றும் அழகானது! முழுமையானது. குறைவற்றது.

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு.தனபாலன்.

      நீக்கு
  2. உண்மையான விடயங்கள் அனைத்தும்
    வாழ்க வளமுடன் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு.கில்லர்ஜி.

      நீக்கு
  3. ஆனால், எப்போது வேணடுமானாலும் இழந்த மகிழ்ச்சியை மீட்டெடுக்க முடியும் என்பதே அறிஞர்கள் கருத்து.

    இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு