வியாழன், 25 மே, 2017

மகிழ்ச்சி மனநிலையின் ஒரு நிலைப்பாடு.

மகிழ்ச்சி மனநிலையின் ஒரு நிலைப்பாடு.


"If you want to live a happy life, tie it to a goal, not to people (or) things."

Albert Einstein. 






அறத்தினூங் (கு) ஆக்கமும் இல்லை ; அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

அறத்தைப்போல நல்லது (மகிழ்ச்சி)   தருவது எதுவுமில்லை ; அறத்தை மறந்து செய்யும் அதர்ம செயல்கள் போல துன்பம் விளைவிப்பதும் இல்லை.

மகிழ்ச்சியைத் தேடியே மக்கள் ஓடுகிறார்கள். 

அதை அடையத்தான் எத்தனை வேஷங்கள்?  

🚫  கேளிக்கை விடுதி, மதுபானக் கடை முன்பு  தள்ளாடித் திரிகின்றனர்.

🚫  உணவகம், திரையரங்கு, வணிக வளாகம் கூட்டத்தால் நிறைந்து வழிகிறது.

🚫  விடுமுறை தினங்களில் சுற்றுலாத் தளங்களில் வாகனங்களின் நெரிசல்.

🚫 தொலைக்காட்சி விளம்பரங்கள் பொருட்களை வாங்கிக் குவிக்கத் தூண்டுகிறது.

🚫 விலையுயர்ந்த உடை, நவ நாகரிகமான Cell Phone, வாகனங்கள் வைத்திருப்பது போன்ற பகட்டான வாழ்வே மகிழ்ச்சியான வாழ்வாக முன்னிறுத்தப் படுகிறது. 

🚫 தனிப்பட்ட வாழ்வில் தோல்வியுற்ற, மனநிம்மதி இழந்த,  போதைக்கு அடிமையான மனிதர்கள் (So called celebrities)  வெற்றி பெற்ற முன் மாதிரிகளாகச் சித்தரிக்கப் படுகின்றனர்.

🚫 பிற மனிதர்களின் அங்கீகாரம், மதிப்பீடு, புகழ்ச்சி, பாராட்டுக்காக மக்கள் ஏங்கித் தவிக்கிறார்கள்.

இவை எதுவும் உண்மையான மகிழ்ச்சி அல்ல.

மகிழ்ச்சி என்பது  நாம் விரும்பும் செயல்களை செய்யும் போது ஏற்படும் வெறும் உணர்வு எழுச்சி  மாத்திரம் அல்ல. 

மகிழ்வான தருணங்கள் என்பது நம் நினைவுகளில் இருந்துக்   கிளர்ந்து  எழும்பும்போது, அந்நிகழ்வுகள் சந்தோஷத்தையும், மனநிறைவையும் அள்ளித்தருபவை.

மெய்யான மகிழ்ச்சி என்பது  நம் நினைவுகளில் வாசம் செய்கின்றது. 

மகிழ்ச்சியின் தேடல் சுயநலம் சார்ந்தே தொடங்குகிறது.

உண்மையான ஆனந்தம் எது எனக் கண்டு பிடிப்பதும், உணர்ந்து கொள்வதும் அவ்வளவு எளிதல்ல. இது ஒரு கசப்பான உண்மை.

சந்தோஷத்திற்கான காரணங்கள் வயது வளர்ச்சியுடன் வேறுபடுகின்றன.

ஒரே வீட்டுக்குள் வாழ்ந்தாலும் குழந்தைகள், வாலிபர், பெரியவர், முதியோர் உலகங்கள் வெவ்வேறானது.

பருவம் மாறும்போது மகிழ்வை ஏற்படுத்தும் என நம்புகின்ற காரணங்களும் மாறுபடுகின்றன.

குழந்தைப் பருவத்தில் குதுகலத்தை ஏற்படுத்திய பல சம்பவங்களை, தேடல்களை  இப்போது நினைத்துப் பார்த்தால் அநேகமாக அவை நகைப்பைத் தரும்.

இளம்பிராயத்தில் மகிழ்ச்சி தரும் எனத் தீவிரமாக ஆசையுடன் பின்தொடர்ந்தவை தற்போது மிகப் பெரும் அபத்தமாக உணர்வோம்.

அநேகமாக அவை நமது பிள்ளைகள் வாழ்வில் செய்து விடக்கூடாதே  என்று அஞ்சுகிறோம்.

நடுத்தர வயதில் மகிழ்ச்சி என்பது அநேகமாகப் பொருளீட்டலே. 

வாழ்வின் முன்னேற்றத்திற்காக ஏற்றெடுத்த பல முயற்சிகள், உயரதிகாரிகள் கவனத்தை ஈர்க்கச் செய்த உபாயங்கள், கடந்து வந்த கடினமான பாதைகள், சந்தித்த அவமானங்கள், பெற்ற அனுபவங்கள் மகிழ்ச்சி குறித்து பல புதிய புரிதல்களை நமக்குள் உருவாக்கும்.

முதிர் வயதில் நாம் கடந்து வந்த பாதையை உணர்ச்சி ஆதிக்கம் இல்லாது நிதானமாய் திரும்பி பார்க்க முடிகிறது. 

வாழ்வின் இறுதிக்காலம் உண்மையான மகிழ்ச்சி, வெற்றி எது என்பதைத் தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

உங்களைச் சுற்றி வாழும் குடும்பங்களை கவனித்துப் பாருங்கள்.

பிறரை ஏய்த்து  வாழ்ந்த தலைமுறையினரின் தற்போதைய நிலை எத்தனை உண்மைகளைச் சொல்லாமல் சொல்லுகிறது?


உண்மையான மகிழ்ச்சிக்கு சில குறிப்புதவி :


🌺     மகிழ்ச்சி என்பது நமது  கடமைகளை உணர்ந்து நிறைவேற்றுவது.

🌺மகிழ்ச்சி என்பது பிறரது அபிப்பிராயங்களுக்காக,மதிப்பீடுகளுக்காக  வாழாது, அறநெறி சார்ந்து வாழ முற்படுவது.

🌺வெளிவேஷம் போடாது உண்மையாய் வாழத் தீர்மானிக்கும் தருணம்தான் மகிழ்ச்சியான வாழ்வின் தொடக்கப் புள்ளி.

🌺 எந்தச் சூழ்நிலையிலும் நடிக்கக்கூடாது. சுயநலத்திற்காக,   பிறரை ஏமாற்றக்கூடாது. ஏமாற்ற நினைத்தால் ஏமாற்றப்படுவோம்.

🌺 உண்மையாக உழைத்து ஈட்டும் செல்வமே மகிழ்ச்சியைத் தரும். உண்மையுடன் கைப்பாடாய், பிரயாசத்துடன், திட்டமிட்டு, தொடர் உழைப்பில் காத்திருந்து நாம் பெற்றவை நன்மையும், மகிழ்ச்சியும் மன நிறைவையும் அளிக்கும்.

🌺  பிறர் பொருட்கள், உடைமைகள் மீது  ஒரு போதும் ஆசைப்படக்கூடாது. பிறரை வஞ்சித்துப் பெற்ற செல்வம் கடும் துயரத்தையும், மன வேதனையும் ஈடு செய்ய முடியாத இழப்புகளையும் ஏற்படுத்தும்.

🌺 ஒரு நபர் இல்லாத போது அவரைக் குறித்து அவதூறு பேசக்கூடாது. பிற்பாடு அவரை நாம் சந்திக்கும் போது குற்றவுணர்வில் வெட்கம் உண்டாகும்.

🌺 நமது நம்பிக்கை தான் சரியானது என எண்ணுவது தவறு. குறிப்பாகச் சமயம், மொழி இவற்றை நேசிக்கலாம். ஆனால் இது தான் உயர்ந்தது மற்றவை குறைவானது என ஒப்புமை தேவையற்றது. நினைவில் கொள்ளுவோம், மொழி, சமயங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து நிலை நிற்பவை. நூறு வருஷம் முன்பு நமது இருப்பு எத்தகையது என்பது நமக்குத்  தெரியாது. நாளைய தினம் என்ன நிகழும் என்பதையும் அறுதியிட்டுக் கூற இயலாது.

🌺 இயல்பாகவும், எளிமையாகவும் வாழ்வதே நிறைவான மகிழ்ச்சி. பகட்டும், ஆடம்பரமும் தேவையற்ற நட்புக்கு வழி வகுக்கும்.

🌺 பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், முதியோர் வாக்கு, புனிதமாக எண்ணப்படும் நூல்கள் குறித்து அபிப்பிராயபேதம் இருப்பினும் தரக்குறைவாக விமரிசிப்பது நல்லதல்ல. தவறான புரிதல் மனக்கண்களைக் குருடாக்கி இழிவான இச்சை ரோகத்தில் நம்மைக் கொண்டு சேர்த்து விடும். உணர்வற்றவர்களாகி விடுவோம்.

🌺 வாக்கு கொடுப்பதற்கு முன்பு நம்மால் முடியுமா என யோசித்து உறுதி கூறுவோம். வாக்கு தவறும்போது அவமானப்படுவோம். தொடர்ச்சியான வாக்குத்  தவறுதல் மேன்மையானவர்களின் நட்பினை இழக்கச் செய்யும்.


உண்மையின் பாதை கடினமானதாயினும் மனநிறைவும், மகிழ்வும் உறுதி.

அவை நம்முடன் இறுதி வரை   நிலைத்திருக்கும்.

8 கருத்துகள்:

  1. அடுத்தவர் மகிழ்ச்சியே நம் மகிழ்ச்சி என்று உணர்ந்தால், என்றும் மகிழ்ச்சியே...

    பதிலளிநீக்கு
  2. ஆஹா... அருமை நண்பா... நல்ல எண்ணம்...நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. .வாழ்க..வளர்க..அன்புடன் ஸ்ரீநாத். ஒரு மூத்த சாமான்ய எழுத்தாளன்.

    பதிலளிநீக்கு
  4. எதிர் பார்ப்பு குறைந்தாலே எப்போதும் மகிழ்ச்சி தான். ...
    நல்ல சிந்தனை... 👏👏

    பதிலளிநீக்கு