இறைவனது வெற்றித் தன்மைகளைப் போற்றிப் பாடுதல்.
6. வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க
7. பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
8. புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
9. கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
10. சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க
பொருள்:
6. அலைபாயும் மனதின் வேகத்தை நிறுத்தி உமது திருவடிக்கு அடிமையாக
என்னை ஆட்கொண்ட அரசே நீர் உயர்த்தப்படுவீராக.
(பிஞ்ஞகன்றன் - தலைக்கோலம்; தலையில் பிறை, கங்கை, பாம்பு முதலியன தலைக்கோலங்கள்.)
7. பிறவி என்னும் தளையை அறுத்து (தளை என்பது ஆணவம், கன்மம், மாயை)
என்னை விடுவிக்கும் வீரக்கழல் அணிந்த உம் திருப்பாதம் போற்றப்படுவதாக.
8. இறைவா! உம்மை புறக்கணித்து வணங்காது வாழ்பவருக்கு நீர் ஒருபோதும்
உம்மை விளங்கப் பண்ணுவதில்லை. ஆகையால் உமது தாமரை மலர் போன்ற
திருவடிகள் அர்ச்சிக்கப்படுவதாக.
9. கை கூப்பி உம்மைப் பணிந்து தொழுபவர்க்கு மனம் மகிழ்ந்து இறையருள்
அருளும் அருளாளரே நீர் போற்றப்படுவீராக.
10. தனது உடல் பணிந்து, தன்னை தாழ்த்தி, தலை மேல் கை கூப்பித் தொழுது
கொள்ளுபவரை உயரப் பண்ணுகிற சிறப்புடையவனது திருவடி போற்றப்படுவதாக.
சாரம்.
இறைவா நீர் எப்போதும் ஜெயம் கொள்கிறவர். வெற்றி சிறக்கப் போற்றப்படுபவர்.
ஏனெனில்
அலைபாயும் அடியவரின் மனதை ஆட் கொண்டு உமது திருவடி
சரணடையச் செய்கிறவர்.
உமது அடியவரின் பிறவித் துயரிலிருந்து விடுவிக்கிறவர்.
உம்மை அசட்டை செய்பவர்களைப் புறக்கணித்து விலகி நிற்பவர்.
உம்மை பணிந்து தொழுது கொள்பவர்களை கை தூக்கிவிடுபவர்.
நீர் தாழ்மை உள்ளவர்களுக்குக் கிருபையாக இறங்கி, உமது அடியவரைச்
சிறப்புற உயர்த்தி மகிழ்பவர்.
நீர் எப்போதும் வெல்க!
இறையடி பணிவோம் நிஜ இன்பம் உணர்வோம்
பதிலளிநீக்குநன்றி ரவி.
பதிலளிநீக்குஅற்புதமான வரிகளுக்கு அழகான விளக்கங்கள். தொடருங்கள்.
பதிலளிநீக்குநன்றி மேடம்.
நீக்கு