புதன், 30 அக்டோபர், 2019

மார்கஸ் அரேலியஸ் : வாழ்வியல் சிந்தனைகள் - 1.

மனம்.

பேரரசர் மார்கஸ் அரேலியஸ்.
(கி.பி. 121 - கி.பி. 180)

மனதை உறுதிப்படுத்து :


  • எந்தப் பொருள்களைப் பற்றி நீ இடைவிடாமல் சிந்திக்கிறாயோ, அவற்றின் தன்மையை உன் மனம் அடைகிறது. சாயத்தில் தோயும் துணியைப்போல், உள்ளத்திலுள்ள எண்ணங்களில் தோய்ந்த ஆத்மா நிறம் மாறும்.
  • தத்துவங்கள் தம் வழியே நேராகச் செல்லும். அதன் போக்கை நம் இஷ்டப்படி மாற்றமுடியாது. இதனால்தான் தரும வாழ்வுக்கு நேர்மை என்பது பெயர்.
  • மற்றவர்கள் உள்ளத்தில் என்ன நடைபெறுகிறது? அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? எதைத் திட்டமிடுகிறார்கள்? என்று யோசித்துக் கொண்டு இருந்தால் மனதில் கவலையும் துக்கமுமே வரும். உள்ளத்தைச் சுத்தமாகவும், தெளிவாகவும் வைத்துக் கொள்வதே சுகம்.
  • அரண்மனை வாழ்க்கையிலும்கூட ஒருவன் உண்மை வாழ்வு வாழ முடியும்.
  • எந்தப் பொருளாலும் ஆன்மா பாதிப்படைவதில்லை. ஆன்மாவைத் தீண்ட ஒரு பொருளாலும் முடியாது. ஆன்மா சுதந்திரமாகத் தனது முடிவுகளை அதுவே எடுக்கும். அது தன்னைத் தானே வழி நடத்தும். ஆனால் பொருள்களைப் பற்றியும், நிகழ்ச்சிகளைப் பற்றியும் உள்ளத்தில் நாம் எவ்விதம் எண்ணம் கொள்கிறோமோ, அதுதான் ஆன்மாவைப் பாதிக்கும்.
  • நன்மை செய்வதும், இடர்களைப் பொறுப்பதும் மனிதரின் கடமை. இடையூறுகள் உள்ளத்தின் சக்தியையாவது சுபாவத்தையாவது பாதிக்கக்கூடாது.
  • இன்பமும் துன்பமும் மனத்துக்குள் உள்வசத்திலேயே இருக்கின்றன. புறத்தில் ஒன்றுமில்லை. உள்ளத்தின் எண்ணங்களே அவைகளுக்குக் காரணம்.
  • இவ்வுலகில் அடையக்கூடிய மேன்மை ஒன்றே. சத்தியமும் நடுநிலைமையும் கொண்டு வாழ்வதும், பொய்யரிடமும், அநீதி செய்பவரிடமும், வெறுப்பின்றி அன்புடன் நடந்து கொள்வதுமே.
  • நாம் இடங்கொடுக்காமல், விருப்பப்படாமல் எந்த ஒரு விஷயமும் மனதில் நுழைய முடியாது.


  • மனதின் சுத்தம் என்பது எது?

தீடிரென ஒருவர், "நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? " என்று கேட்டால் "இது என் மனதிலுள்ள எண்ணம்" என்று எளிதில் சொல்லும் படி மனம் இருக்க வேண்டும்.

பிறரிடம் சொல்ல இயலாத தவறான எண்ணங்கள் மனதில் உதிக்காமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். 

எந்தக் காலத்திலும் உள்ளத்தில் இருப்பதைப் பலர் அறிய வெளிப்பட்டாலும், அதில் வெட்கப் படக்கூடியது எதுவும் இல்லாதபடி மனதை வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி மனதைப் பழக்கப் படுத்திக் கொண்டு நன்மையே நாடி வரும் மனிதன், தன் சரீரத்தில் குடி கொண்டிருக்கும் கடவுளின் உண்மை அடியவர் ஆவான்.

அப்போது மனதுக்குள் குடியிருக்கும் இறையம்சமான ஆன்மாவை, எந்த இன்பமும் மாசுபடுத்தாமலும், எந்த துன்பமும் துயர் படுத்த விடாமலும் இறைவன் காப்பார். 

இவ்விதம் மனம் உறுதிப்பட்டவன் பிறர் சொல், செயல், எண்ணம் என்னவென்று கவலைப்படாமல் தன் கடமையை மட்டும் கருதி வாழ்வான்.

*******   *******   *******   *******   *******

பேரரசர் மார்கஸ் அரேலியஸ் :

மார்கஸ் அரேலியஸ் ரோமாபுரியில் அரச குடும்பத்தில் பிறந்தவர். அவர் கி.பி. 121 ஆம் ஆண்டு முதல் கி.பி.180 ஆம் ஆண்டு வாழ்ந்தார். மார்கஸ் அரேலியஸ் ரோம் பேரரசர் மட்டுமல்ல மிகச்சிறந்த தத்துவஞானியும் கூட.

மனம் மற்றும் எண்ணம் குறித்த இவரது போதனைகள் உலகப் புகழ்பெற்றவை. ரோமானியர் வரலாற்றில் இவரது ஆட்சி பொற்காலமாகக் கருதப்படுகிறது. ரோமப் பேரரசர்களில் மிகவும் மரியாதைக்குரிய ஒருவராகப் போற்றப்படுகிறார். அவர் எழுதி வைத்த சிந்தனைகள் நூல் வடிவம் பெற்றுப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  

தமிழில் மூதறிஞர் ராஜாஜியால்  "ஆத்ம சிந்தனைகள்'  என்ற பெயரிலும், திரு. பொ.திரிகூடசுந்தரத்தால் "இதய உணர்ச்சி' என்கிற பெயரிலும், திரு. என்.ஸ்ரீநிவாசன் அவர்களால் "மார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள்" என்கிற பெயரிலும் வெளியிடப்பட்டுள்ளன.

திங்கள், 28 அக்டோபர், 2019

உண்மை தன்மை

நேர்மை மனிதரின் நடத்தை பண்புகள்.




தனிப்பட்ட வாழ்க்கை அல்லது பணியிடத்தில் மிகச் சிறந்த உண்மையான மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு அரிதாகவே  கிடைக்கும். 

அப்படிப்பட்ட பண்புடைய நபர்கள் வாழ்வில் இடைப்பட்டால் கவனமாக அவர்களது உறவைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

உண்மை விரும்பிகளிடம் காணப்படும் பொதுவான நடத்தை பண்புகள்.

1.  பிறர் கவனத்தை அவர்கள் ஈர்க்க விரும்பமாட்டார்கள்.

2. பிறரால் விரும்பப்பட வேண்டும் என்பதற்காக முனைப்புக் காட்டமாட்டார்கள்.

3. மற்றவர்களின் நோக்கம், புரிதல் எந்தளவு  என்பது அவர்களுக்குத் தெரியும்.

4. தங்களது திறமையைச் சார்ந்து மகிழ்ச்சியுடன்  இருப்பார்கள்.

5. எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே சொல்லுவார்கள். அவர்களுக்குச் சொல்லப்படும் வார்த்தை மதிப்பு மிக்கது.

6. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள அவர்களுக்குச் சுருக்கமான விளக்கம் போதும். 

7. அவர்கள் மனவலிமையுடையவர்கள். எளிதில் உணர்வு வயப்பட மாட்டார்கள்.

8. தங்களை மிகுந்த அடக்கமுடையவராகக் காண்பிக்கமாட்டார்கள் அதே சமயம் பெருமை மிக்கவரும் இல்லை. 

9. அவர்கள் நடத்தை சீரானதாக இருக்கும்.

10. அவர்கள் எதைப் பேசுகிறார்களோ அதைக்  கடைப்பிடிப்பார்கள்.

சிறந்த பண்புகளை உருவாக்கிக் கொள்வோம்.



வெள்ளி, 25 அக்டோபர், 2019

எப்போதும் அழகான தருணங்களை மறக்க முடியாது.

சாதனை பெண் மரியகே வெர்வூர்ட்.





Marieke Vervoort  Gold Medalist Paralympic
1979 - 2019
(Image: Isopix/REX) 

பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை மரியகே வெர்வூர்ட்.  அவரது 40வது வயதில் செவ்வாய்க்கிழமை (22.10.2019) அன்று தனது சாதனை ஓட்டத்தை நிறைவு செய்தார்.

வெர்வூர்ட் குணப்படுத்த இயலாத தசை நோயினால் (degenerative muscle disease) பாதிக்கப்பட்டவர். அவரது முதுகுத் தண்டுவடத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது cerebral vertebrae இடையில் ஏற்பட்ட குறைபாட்டால் இந்நோய் அவரைத் தாக்கியது.  இது மூளைக்கும் தசைகளுக்கும் இடையில் உள்ள செயல்பாட்டைச் சீர்குலைக்கும் ஒரு அரிதான குணப்படுத்த இயலாத நோய். இது கால்களில் இடைவிடாத நிலையான வலியை ஏற்படுத்தும். தூக்கம் வராது. சிறிது சிறிதாக உடல் பக்கவாதத்தால் செயலிழந்து மரணத்தைத் தழுவ நேரிடும்.














மனதை முடக்கும் இத்தகைய சூழலில் உள்ளம் தளராது நோயை எதிர்த்து இவர் போராடினார். தடகள போட்டியில் வீல்சேர் பிரிவில் தீவிர பயிற்சி மேற்கொண்டார். விளையாட்டின் மீது இருந்த காதல் அவருக்கு மரணத்தைக் குறித்த அச்சத்தைக் குறைத்தது. எனினும் கடும்  தசை வலியால் அவதியுற்றார். தாங்க முடியாத வலி, உறங்க முடியாத இரவுகள் இவை எல்லாம் தகர்த்து 2012, 2016 Paralympics மற்றும் 2015 உலக சாம்பியன் போட்டிகளில் சாதனை நிகழ்த்தினார். 

2012ல் லண்டனில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் வீல் சேர் பிரிவில் 100 மீ., தங்கம் வென்றார். 200 மீ., ஓட்டத்தில் வெள்ளி கைப்பற்றினார். 2015ல் தோஹாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் 100 மீ., 200 மீ., 400., மீ பிரிவுகளில் மூன்று தங்கம் வென்றுள்ளார். 2016ல் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் 400 மீ., பிரிவில் வெள்ளி, 100 மீ., பிரிவில் வெண்கலம் கைப்பற்றினார். இதுவே இவர் பங்குபெற்ற கடைசி போட்டி. 

Marieke Vervoort
Vervoort with her gold medal at the London 2012 Paralympics 
(Image: Getty Images)


இத்தனை வேதனை சூழ்ந்திருந்தாலும் அவர் நகைச்சுவை உணர்வைத் தக்கவைத்துக் கொண்டார். அரசியல் தலைவர்களைக் கிண்டல் செய்தார். தனது செல்ல ஜென் நாயுடன் அபரிமிதமான அன்பைச் செலுத்தினார். அது அவரது வாழ்க்கை தோழமையாக வலம் வந்தது. மைதானத்தில் அவருக்கு உதவியது. அவரோடு மருத்துவமனையில் சிகிச்சையிலும் உடனிருந்தது. அவர் நினைவு தவறும்போது குரைத்து செவிலியரை அழைக்கும். நினைவு திரும்பும்வரை கண்ணத்தை நாக்கால் வருடிவிடும். அவர் விழிக்கும்போது ஜென்னைப் பார்த்துச் சிரிப்பார். "ஜென் இல்லாத வாழ்வை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை." என்றார். 



அவர் வாழ்க்கை அனுபவங்களை "The Other Side of the Coin." எனும் நூலாக வெளியிட்டார். அவர் தன்னை ஒரு "Tarus" என்றே குறிப்பிட்டார். "நான் ஒன்றை அடைய விரும்பினால் அதை நோக்கியே செல்வேன். அதை எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டேன். எனது வாழ்க்கை சக்கர நாற்காலியில் முடங்கிவிட நான் அனுமதிக்க மாட்டேன்." என வாழ்ந்து காட்டினார். ஒரு சமயம் வலியோடு தற்கொலை எண்ணத்திலிருந்தவர் பின்பு தீவிர மனஉறுதியுடன் நோயை இறுதிவரை எதிர்த்துப் போராடுவது என முடிவு செய்தார். 

வலி மிகுந்த இறுதிக்காலம் : 

பெல்ஜியத்தில் கருணைக் கொலை சட்டப்பூர்வமானது. 2008ம் ஆண்டில் கருணைக் கொலைக்கான சட்டப்பூர்வமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அது அவருக்கு அமைதியைத் தந்தது. அதை அவர் தற்கொலையாகக் கருதவில்லை. வலியால் அவதியுறும் நபருக்கு முடிவான ஓய்வின் வழியாகக் கருதினார். அதன்பின் தன் உடல் செயல்படும் வரை மனம் தளராது வலியுடன் போராடி சாதனை முத்தாக ஜொலித்தார். Rio Paralympics ன் வதன முகமாக வலம் வந்தார். 


King Philippe and Queen Mathilde of Belgium talk to Marieke Vervoort 
(Image: Photonews via Getty Images) 

2017ம் ஆண்டுக்குப் பின் அவரது பார்வைத்திறன் மங்கியது. உடலின் மார்பகத்திற்குக் கீழ்ப்பகுதி செயலிழந்தது. வலி மிகுந்த தசைப்பிடிப்பால் கடும் வேதனை அனுபவித்தார். பத்து நிமிடம் கூட அவரால் தூங்க முடியவில்லை. சாப்பிடுவதற்கும் மிகவும் சிரமப்பட்டார். அப்போது தன்னை பேட்டி கண்ட Telegraph நிருபரிடம் "நான்  மிகக் கடினமாக உணர்கிறேன். இனி மேலும் மேலும் என்னைக் கஷ்டப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. நான் மிக மனச்சோர்வு அடைந்து விட்டேன். வாழ்ந்தது போதும் என எண்ணுகிறேன். எனது இறுதி விருப்பத்தை நிறைவேற்றுங்கள்" என அமைதியாக அறிவித்தார். 

அமைதியான நீண்ட நெடிய உறக்கம். 

கடந்த செவ்வாய்க் கிழமை (22.10.2019) மாலை தனது இறுதி விருப்பத்துக்கு அமைதியாக ஒப்புதல் அளித்தார். "நான் அன்று  அழகானது என்று அதை அழைத்தது போல் அது அழகானதும், தெய்வீகமானதும், அமைதியான பிரியாவிடையாகவும் உணர்கிறேன்." என்றார். 

சட்டத்தின்படி மூன்று மருத்துவநிபுனர்கள் இறுதிப்பரிசோதனை செய்து கையொப்பமிட்டனர். ஒரு நரம்பியல் நிபுணர் அவருடன் இரவு முழுவதும் அமர்ந்திருந்தார். அவர் அழவில்லை. "முன்பு நிறைய அழுதிருக்கிறேன். ஆனால் இப்போது எனக்கு அந்த அழுகை உணர்வுகள் இல்லை" என்று அமைதியாகக் கூறினார். 

"இது உடல் வலிப்பு அல்ல. ஆனால் உடல் வேதனையில் கதறுகிறது. நான் அதைப் பார்க்கிறேன். நான் அதை முடித்து விட்டேன்." 


"நீங்கள் உறங்கச் செல்லுகிறீர்கள். மீண்டும்  விழித்து எழவில்லை எனில் அதன் பெயர்தான் மரணம்." 

"என் மரணத்திற்குப் பின் "விளையாட்டுத்தனமாகப் புன்னகையுடன் வலம்வரும் பெண் என நான் நினைவு கூறப்பட வேண்டும்." 

"எப்போதும் சிரித்துக் கொண்டு இருக்க விரும்பியவள்" . 

இதுவே அவரது இறுதி வார்த்தைகள். 

அந்த இறுதி நிமிடங்கள் பற்றி அவரது நண்பர் குறிப்பிடும்போது, "அவள் அதை மிக விழிப்புணர்வுடன் அனுபவித்தாள். அதில் கண்ணீர் இருந்தது. மகிழ்ச்சியும் இருந்தது. இது துயரமான கடினமான ஆனால் தவிர்க்க இயலாத முடிவு" என அவள் நன்கு உணர்ந்திருந்தாள். 

தனது இறுதி Instagram பதிவில் தனது படத்துடன் அவர் பதிவிட்ட கடைசி வாக்கியம் : "எப்போதும் அழகான தருணங்களை மறக்க முடியாது".

சனி, 19 அக்டோபர், 2019

இளைப்பாறல்

 ஓய்வில் மகிழ்ந்து களிகூறு 
(By William Henry Davies) 


என்ன  வாழ்க்கை இது? எங்கும் பரபரப்பில்தான் கவனம்.
நின்று நிதானித்து இரசித்து வாழத்தான்
எங்களுக்குக் கால அவகாசமில்லை.

பசும்புல்தனில் ஆடுகளும் மாடுகளும் மேய்ந்து திரியும்
அழகை மரத்தடியில் அமர்ந்து இரசிக்க நேரமில்லை.

காடுகளைக் கடந்து செல்லும்போது அணில்கள் 
தங்கள் புசித்துத் தீர்த்த பழ விதைகளைப் 
புல்லுக்குள் புதைப்பதைக் கவனிக்க நேரமில்லை.

பட்டப் பகலிலும், இரவின் நீல வான ஓடையில் 
மின்னும் நட்சத்திரங்கள் போல 
சிற்றோடையில் மின்னிச் சிதறும் ஒளிக்கற்றையின் 
பிரதிபலிப்பை இரசித்துப் பார்க்க நேரமில்லை.

இயற்கை கன்னியின் வனப்பு மிக்க  அழகிய பாதங்கள்  
நடனம் புரியும் அழகை வியந்து பார்க்க நேரமில்லை.

அவள் கண்களில் கசிந்து இதழ்களில் மலர்ந்து 
விரியும் புன்னகையை கான காத்திருக்க நேரமில்லை.

 பரபரப்பில் மட்டும் கவனம் குவிந்த 
பரிதாபம் நிறைந்த ஏழ்மை மிகு வாழ்வு இது. 
நின்று நிதானித்து இரசித்து வாழத்தான்
எங்களுக்குக் கால அவகாசமில்லை.


 *******   *******   *******    ********   *******   *******   ******* 



W.H. Daves அவர்களால் ஏழு சரணங்களில் இசையைப் போல் பாடப்பட்ட சிறு பாடல் "The Leisure ". நாம் மிகக் கவனம் நிறைந்த பராமரிப்பான வாழ்க்கை வாழ்வதாக நினைக்கிறோம். 

ஆனால் கவிஞரின் பார்வையில் இது துயரமான ஏழ்மை வாழ்க்கை.  நம்மைச் சுற்றி அமைந்துள்ள இயற்கையின் படைப்புகளின் அழகைக் கூர்ந்து கவனித்து நாம் அதை இரசிப்பதில்லை. 

ஆடு, மாடுகள் கூட அமைதியாக இளைப்பாறி புல்வெளியில் மேய்கின்றன. ஆனால் நம்மால் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஓய்வை அனுபவிக்க முடிவதில்லை.


குளிர்காலத்திற்காக விதைகளை மண்ணில் புதைத்து வைக்கும் அணில்கள் நம்மை ஆச்சரியப்படுத்துவதில்லை.


இன்றைய அவசர உலகிற்கு இந்த சிறு கவிதை பரியாசமாகக் கூடத் தோன்றலாம். இது பொருத்தமற்றது, நடைமுறைக்கு ஒவ்வாதது என முடிவு செய்யக்கூடும். 


ஆனால் இந்த கவிதை கூறும் ஆலோசனைகளைக் கூர்ந்து கவனித்தால் தான் உண்மை புரியும். வேறுவிதமாகக் கூறினால், நம்மைச் சுற்றியுள்ள இயற்கைப் படைப்புகளின் அத்தனை அழகுகளையும்  மெதுவாக ரசித்துக் கவனிக்க இது கற்றுக் கொடுக்கிறது.


அவசர உலகின் அழுத்தத்திற்குள் சிக்கி மூழ்கிட வேண்டாம். கொஞ்சம் கண்களைத் திறந்து இயற்கையின் அழகை இரசிப்போம். வாருங்கள் கொஞ்சம் இளைப்பாறுவோம். 
ஆசிரியர் குறிப்பு :

                                                               William Henry Davies

மூலப்பாடல் :



  Leisure
(William Henry Davies)

What is this life if, full of care, 
We have no time to stand and stare. 

No time to stand beneath the boughs
And stare as long as sheep or cows.

No time to see, when woods we pass,
Where squirrels hide their nuts in grass.

No time to see, in broad daylight,
Streams full of stars, like skies at night.

No time to turn at Beauty’s glance,
And watch her feet, how they can dance.

No time to wait till her mouth can
Enrich that smile her eyes began.

A poor life this if, full of care,
We have no time to stand and stare.



செவ்வாய், 15 அக்டோபர், 2019

வேற்று விகார விடக்கு

திருவாசகம் : வேற்று விகார விடக்கு - வேறு வேறு உருவங்களில்.




காலப் பெருவெளியின் சமுத்திரத்தில் 
அலை அலையாக எழும்புகிறது 
மானுடத் தலைமுறைகள்! 
தனி வாழ்வு அதிலோர் அனுவிலும் 
சிறிதான நீர்த்துளிச் சிதறல்.  

கவனச்சிதறலாக கடந்துபோன 
வாழ்வில்தான் 
எத்தனை விருதாவன 
உட்கிடக்கைகள். 

தவறவிட்ட வாய்ப்புகளும் 
தவறி விழுந்த தடுமாற்றங்களும்
தந்திட்ட தீரா வலிதானே
தவத்திற்கு விதையானது. 


வயதானால் உடலின் புறத் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுகிறது. கறுத்த முடி வெண்மையாகிறது. பற்கள் உதிர்கிறது. தோல் சுருக்கம் அடைகிறது. முதுகு வளைந்து கூன் விழுகிறது. உடல் விகாரமாகிறது. எனினும் இவ்வுடம்புடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறோம். 
ஆனால் மாணிக்க வாசகர் அவர்கள் "ஆற்றேன்" என்கிறார். "ஆற்றேன்" என்ற சொல்லுக்கு "பொறுக்க முடியவில்லையே" என்பது பொருள். தாங்கமுடியாத வேதனையுடன் இந்த உடலுக்குள் என்னால் இருக்க முடியவில்லையே என முறையிடுகிறார் அருளாளர்.
ஐம்புலன்களை ஏமாற்றும் வஞ்சகன் என்கிறார். 
ஏன்? புலன்களே தவறு செய்ய நம்மைத் தூண்டுகின்றன. அதனால் மனம் சஞ்சலம் அடைகிறது. அவை குற்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. 
அதை மீண்டும் செய்யாது இருக்கப் புலன்களே யோசனை சொல்கின்றன. அதை நம்புகிறோம். கீழ்ப்படிந்து கடைப் பிடிக்கிறோம். சிறிது நாள் சென்ற பின்பு குற்றவுணர்வு மங்குகிறது. 
இப்போது புலன்களே ஆசையை மீண்டும் துளிர்க்கச் செய்கின்றது. அவற்றால் மீண்டும் உணர்வுகள் தூண்டப்படுகிறது. எதைச் செய்ததால் மனம் வருந்தியதோ, எதைச் செய்யக்கூடாது என மனதில் நினைத்தோமோ அதையே மீண்டும் துணிகரமாகச் செய்கிறோம். 
ஆக புலன்களே நம்மை மீண்டும் மீண்டும் தவற்றில் விழவைத்து மனதைப் பலவீனப்படுத்திச் சிறைபிடிக்கின்றன. எனவே புலன்களை ஏமாற்றும் வஞ்சகம் என்கிறார்.
புலன்கள் அளிக்கும் சிற்றின்ப உணர்வுகள் என்பது பொய்ப் பொருள். அது அறியாமை எனும் இருள். அது மயக்கும் இயல்புடையது. திரும்பத் திரும்ப அனுபவிக்க வேண்டும் எனும் தீரா வேட்கையை எழுப்பக்கூடியது. மனதை அடிமைப்படுத்தும். கவனச் சிதறலை ஏற்படுத்தும். வாழ்வின் நோக்கத்தை மறக்கடிக்கும். இறுதியில் காலத்தில் வாழ்க்கையை வீணடித்து விட்டோமே எனும் தீரா துயரத்தையும் மன வேதனையும் அளிக்கும்.
இந்தச் சிற்றின்பச் சேற்றிலிருந்து மீட்கப்பட இறைமையின் ஒத்தாசை தேவை. 
நாமாக உளைச் சேற்றிலிருந்து விடுபட முடியாது. சொந்த முயற்சியில் விடுபட முயன்றால் இன்னும் அமிழ்ந்து போய் விடுவோம்.
அதிலிருந்து வெளியேற நமக்கு உதவி தேவை. கைதூக்கி விடப்பட வேண்டும்.  இந்த அறிவை அறிவது மெய்ப்பொருள். இவ்வாறு உணர்வது புத்தி.
எனவே மெய் அறிவு அடைந்தவர்கள் இந்த உடம்புடன் நெடுநாட்கள் உயிர்வாழ வேண்டும் என்பதை முக்கியமாகக் கருதக்கூடாது.
மாறாக, வினைச் சுழற்சிக் கட்டிலிருந்து அறுத்து என்னை விடுவிக்க  இறைவனே உம்மால் மட்டுமே முடியும் என அவரிடம் சரணாகதி ஆவதே உயிர் வாழ்தலின் முக்கிய பயன் என உணர்தல் வேண்டும்.




திருவாசகம் பாடல் : 

84. வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப 
85. ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று 
86. போற்றி புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானார்,
87. மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
88. கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே 
89. நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே 
90. தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே  
91. அல்லல் பிறவி அறுப்பானே ஓ வென்று 
92. சொல்லற் கரியானைச் சொல்லி திருவடிக் கீழ்ச் 
93. சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் 
94. செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவன் அடிக்கீழ் செல்வர் 
95. பல்லோரும் ஏத்த பணிந்து
இவ்வுலகில் இறைவன் திருவிளையாடல் புரிந்த இடம் தென்பாண்டிய நாட்டின் தலைநகரம் மதுரை. நள்ளிரவிலும் இறைவன் விரும்பி ஆடும் இடம் தில்லை. இது இறைமையின் இருப்பையும், உடலின் அகத்தையும் குறிப்பது.
இந்தப் பாடலின் பொருளையுணர்ந்து உடலினுள் உறைந்து சர்வ காலமும் நடனம் புரியும் இறைவனை இடைவிடாது துதித்தல் வேண்டும். 
அவ்வாறு இறைவனை இடைவிடாது துதிப்பவர் ஏக இறைவன் வாழும் சிவபுரத்துக்குச் செல்வர். சிவபெருமானது திருவடிக்கீழ் சென்று நிலைபெறுவர்.

வெள்ளி, 11 அக்டோபர், 2019

The Alchemist




வளர் இளம் பருவத்தில் Fantasy நாவல் வாசிப்பது ஒரு உற்சாகமான அனுபவம்.

ஆனால் நடுத்தர வயதில் ஏன் முதிர் வயதில் அத்தகைய நாவல் வாசிப்பு சுவாரஸ்யம் தருமா?

Paulo Coelho அவர்கள் எழுதிய The Alchemist அதற்குப் பதில் தருகிறது.

1988 ஆம் ஆண்டு இந்த நாவல் போர்த்துகீசிய மொழியில் வெளியிடப்பட்டது.

8.5 கோடி பிரதிகள் விற்பனை! 70க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு!

தமிழிலும் "ரசவாதி" எனும் தலைப்பில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

எனக்கு தமிழ் மொழியாக்கம் வாசிக்கும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை. தமிழில் வாசிக்க வேண்டும் எனும் விருப்பம் உண்டு.

இது ஒரு மாயாஜாலக் கதை போல் தோற்றமளித்தாலும் வாசிப்பவரின் கற்பனைகளை விரியச் செய்யும் மறைபொருள் தத்துவங்களை உள்ளடக்கியது.

 Paulo Coelho

கதை மிக எளிமையானது.

Spain தேசத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஆடு மேய்க்கும் Santiago என்னும் மனிதனின் கதை இது. அது மலைகள் பசும் புல்வெளி சூழ்ந்த கிராமம்.

ஒரு பாழடைந்த தேவாலயம் அவனது வசிப்பிடம். அவன் அடிக்கடி ஒரு கனவு காண்கிறான். அதில்  எகிப்தில் உள்ள பிரமிடுகளைப் பார்த்தால் மிகப் பெரிய தங்கப் புதையல் கிடைக்கும் என்பதாகக் கனவு வருகிறது.

அவனது கனவு நிச்சயம் நிறைவேறும் என நாடோடி குழுவின் பெண்ணொருத்தி  எகிப்தை நோக்கிப் பயணப்பட உற்சாகப்படுத்துகிறாள்.

"நீங்கள் எதையாவது அடைய விரும்பினால், இந்த பிரபஞ்சத்தின் சக்தி அத்தனையும் அதை அடைவதற்குரிய சூழலை உருவாக்கி உனக்கு உதவும்" என ஒரு அரசனும் ஊக்கப்படுத்தி இரண்டு மாணிக்கக் கற்களைப் பரிசாக அளிக்கிறான்.

Spain இலிருந்து சான்டியாகோ Morocco பயணமாகிறான். அங்கு அவனது பணம் திருடப்படுகிறது. நிர்க்கதியான நிலையில் ஒரு அலங்கார கண்ணாடி கடையில் பணியில் சேர்கிறான். பயணத்திற்கான பணத்தை சில மாதங்களில் சேர்க்கிறான். அக்கடை  உரிமையாளர் வருந்தி அவருடன் இருக்குமாறு கேட்டும், தயவாய் மறுத்து எகிப்து நோக்கி தனது பயணத்தைத் தொடர்கிறான்.

பாலைவனம் வழியான பயணத்தில் ஒரு ஆங்கிலேயரின் நட்பு கிடைக்கிறது. அவர் 200 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் இரசவாதியைச் சந்திக்கும் வேட்கையில் பயணிப்பவர். அவர்களுக்கு இடையில் நிகழும் உரையாடல் தத்துவார்த்தமானது.

பாலைவனப் பயணம் நீண்ட நாளாகத் தொடர்கிறது. அங்கு இரு நாடோடி குழுக்களுக்கிடையில் போர் நடக்கிறது. அவர்கள் ஒரு பாலைவனச்சோலையில் தங்குகின்றனர். அங்கு ஒரு நாடோடி குழுவின் தலைவர் மகள் ஃபாத்திமாவுக்கும், சான்டியாகோவுக்கும் காதல் மலர்கிறது.

சான்டியாகோ வின் எச்சரிப்பால் மாற்று இனக் குழுவின் யுத்தத்திலிருந்து பாலைவனச்சோலை காப்பாற்றப்படுகிறது. அந்த நாடோடிக் குழுவின் ஆலோசகராக சான்டியாகோ நியமிக்கப்படுகிறான்.

நிம்மதியான சுகவாழ்வு, அழகிய காதலி என அமைந்தாலும் தனது கனவை நிறைவேற்ற மீண்டும் பயணத்தைத் தொடரப் போவதாகக் கூறுகிறான்.

அதுதான் பாலைவனப் பெண்களின் காத்திருக்கும் கனவு வாழ்க்கை எனக் கூறும் ஃபாத்திமா, அவனது மீள் வருகைக்காகக் காத்திருப்பதாகக் கண்ணீரோடு கூறுகிறாள்.

அந்த தொடர் பயணத்தில் இரசவாதி இவனுக்கு எதிர்ப்படுகிறார். இவனுக்கு எகிப்து பிரமிடுகளை நோக்கிப் பயணப்பட உதவுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் நிகழும் உரையாடல் அற்புதமானது.

இறுதியில் அவன் புதையலை கண்டடைந்தானா? எது உண்மையான புதையல்? அது எங்கிருந்தது?  என்பதை அழகாகச் சொல்லியிருப்பார் Paulo.

இந்த கதை எளிமையாக தோற்றமளித்தாலும் வாக்கியங்களுக்கிடையில் எழுதப்படாமல் மறைந்திருக்கும் மறைபொருளை கண்டறிவதுதான் சுவாரஸ்யம். 



ஒவ்வொருவருக்கும் ஒரு அழகிய கனவு உண்டு.

ஆனால் பயணத்தின் நடுவில் கிடைக்கும் அற்ப சுகத்தில் அல்லது கடும் போராட்டத்தில் கனவைத் துறந்து அங்கேயே பலர் தரித்து விடுகின்றனர்.

ஆனால் இதயத்தின் குரலுக்கு மட்டும் செவி சாய்த்து இழப்பு, காதல், சுகவாழ்வு, உயிர் போராட்டம் எதுவரினும் மயங்காது, தயங்காது, போராடி முன்னேறுபவருக்குப் பிரபஞ்சமே வந்து வழி அமைத்துக் கொடுக்கும்.

மனிதாபிமானம், அன்பு, குழந்தை மனம், தூய்மை மட்டும் இருந்தால் போதும். கனவு மெய்ப்படும்.

கனவை அடைய ஆசைப்படுபவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு Fantasy நாவல் இது.

புதன், 9 அக்டோபர், 2019

34. கிழமைப்பட வாழ்.

ஆத்திசூடி : ககர வருக்கம்.

உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்.




நல்ல வாழ்க்கை என்றால் என்ன? 

எது நல்ல வாழ்க்கை? 

நல் வாழ்முறை எதை உள்ளடக்கியது? 

நான் நல்வாழ்வு வாழ என்ன செய்யவேண்டும்?

வாழ்க்கை ஏற்கனவே விதிக்கப்பட்ட ஒன்றா?

இதில் விதியின் பங்கு என்ன?

நல்வாழ்வுக்கும் பணத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?

ஒரு நல் வாழ்க்கை வாழ்வது என்பது மனம் தொடர்பானதா?

நல் வாழ்க்கை என்பது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு கடைப்பிடித்து வாழ்வதா?

அல்லது ஒரு உறுதியான வாழ்க்கை இலக்கை நிர்ணயித்து அதை அடைய முயல்வதா? 

இத்தனைக் கேள்விகளுக்கும் ஒரு எளிமையான பதிலைத் தருகிறது ஆத்திசூடி. 

எப்போதும் உன்னைச் சுற்றி வாழ்பவர்களுக்கு நன்மை செய்.

அதுதான் நல்ல வாழ்க்கை.

எப்படி நன்மை செய்வது? 

ஆத்திசூடி கற்றுத் தருகிறது : கிழமைப்பட வாழ்.

உன் அறிவால் நன்மை செய்.

உன் உழைப்பால் நன்மை செய்.

உன் நேரத்தைச் செலவிடு.

உன் பணத்தைப் பகிர்ந்து கொடு.

தனக்காக வாழாமல் சமூகத்துக்காக தங்களை அர்ப்பணித்தவர்களையே வரலாறு பதிந்து கொள்கிறது.

குடும்பத்திற்காக தங்களைக் கரைத்துக் கொண்டவர்களையே குடும்பம் கொண்டாடுகிறது.




தென்னாப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் இது.

நீண்ட போராட்டம் முடிவுற்று அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்டபின்பு ஒரு உணவகத்தில் பாதுகாப்புப் படையினர் சூழ உணவருந்தச் சென்றார்.

அவரவர் தமக்கு விரும்பிய உணவைப் பதிவு செய்து விட்டுக் காத்திருந்தனர்.

அப்போது எதிர் மேஜையில் ஒருவர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். 

மண்டேலா அவர்கள் தம் படைவீரர் ஒருவரை அனுப்பி அவரைத் தம்முடன் இணைந்து உணவருந்தும்படி அழைத்தார்.

அந்த மனிதரும் கொஞ்சம் தயங்கிப் பின்பு  இணைந்து அவர்களுடன் உணவருந்தி அங்கிருந்து மகிழ்வுடன் புறப்பட்டுச் சென்றார்.

அப்போது படை வீரனொருவன் "அந்த மனிதர் பார்க்க நோய்வாய்ப்பட்டவர் போல் தெரிகிறது. உண்ணும்போது அவரது கைகள் மிகவும் நடுங்கின" என்றார்.

அதற்கு மண்டேலா புன்னகையுடன் குறுக்கிட்டு " உண்மை அதுவல்ல வீரனே! ...., நான் முன்பு சிறையிலிருந்தபோது இந்த மனிதர் என் சிறைக் காவலராக இருந்தார். என்னைக் கடுமையாகக் கொடுமைப் படுத்துவார். நான் கூக்குரலிட்டுக் களைத்துப் போவேன். களைப்பின் மிகுதியில் நீர் அருந்தக் கேட்டுக் கெஞ்சுவேன். அப்போது என் தலையில் சிறுநீர் கழித்து விட்டு இகழ்ச்சியாகச் செல்வது வழக்கம்."

"இப்போது என்னை ஜனாதிபதியாக அடையாளம் கண்டு கொண்டுவிட்டார். நான் பதிலடியாகப் பழிவாங்குவேன் எனும் அச்சத்தில் அவர் கைகள் நடுங்கின".

ஆனால் அது எனது குணமல்ல. பழிக்குப் பழி வாங்குதல் ஒரு தேசத்தையோ, ஒரு குடும்பத்தையோ, ஒரு தனி மனிதரையோ கட்டியெழுப்பாது".

"அதேநேரம் மனதில் தோன்றும் அன்பும், சகிப்புத்தன்மையும், விட்டுக் கொடுத்தலும் உறவைக் கட்டியெழுப்பும்" என புன்முறுவலோடு அமைதியாகச் சொன்னார்.

நல் வாழ்க்கை என்பது தீமை செய்பவருக்கும் நல்லது செய்வது.

செவ்வாய், 1 அக்டோபர், 2019

தீர்ப்புகள் திருத்தப்படலாம்

மதிப்பீடு எளிதல்ல



(Our College batchmates reunion at Mangarai near Coimbatore - 13th Jan ' 2018)


"சிந்து" வகுப்பில் எப்போதும் முதலிடம்,
படு சுட்டி, கற்பூரம். 
இன்று மகிழ்ச்சியான இல்லத்தரசி! 

கடைசி பெஞ்ச் "கதிர்", 
நூறு குடும்பங்களை வாழ வைக்கும்
தொழில் முனைவர்!  

வளாகத்தில் அலங்காரமாகச்
செல்லக் குழந்தையாக
வளைய வளைய வலம் வந்த "வர்ஷினி",
கண்டிப்பு மிக்க கடுகடு ஆசிரியை!  

பெரும்பாலும் கண்டு கொள்ளாது 
அனைவராலும்
புறக்கணிக்கப்பட்ட "ஜோ",
நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்!  

கணிதத்தில் தேர்ச்சியடையாத "கார்த்தி"'
வெற்றிகரமான ஆடை வடிவமைப்பாளர்!  

வகுப்புக்கு வெளியே 
வாடிக்கையாக நிறுத்தப்படும் "ரவி",
எல்லையில் பணியாற்றும்
மதிப்புமிக்க இராணுவ அதிகாரி!  

பல வருடங்கள் கழித்து 
நாங்கள் மீண்டும் சந்தித்த
அந்த மகிழ்ச்சி நிறைந்த இனிய நன்னாள்
எனக்கு கற்றுத் தந்தது எல்லாம் : 

வாழ்க்கை தனது 
ஒவ்வொரு அடுக்குகளிலும்
மனிதர்களை மாற்றித்தகவமைக்கிறது என்பதே!  

அதிர்ச்சியும் ஆச்சரியத்திலும்
உறைந்து, அமைதியாக
இருந்த எனது காதோரத்தில்
இயற்கை மெலிதாக கிசுகிசுத்தது :

"ஒரு புத்தகத்தின் அட்டைப்படத்தை வைத்து 
அதன் உள்ளடக்கத்தை ஒரு போதும்
மதிப்பீடு செய்து விடாதே." 

ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் 
ஒரு வெற்றிக்கதையை
இயற்கை பொதிந்து வைத்திருக்கிறது.

*******   *******   ******* *******   *******


* Written Inspired by a English Poem shared by my friend.