புதன், 9 அக்டோபர், 2019

34. கிழமைப்பட வாழ்.

ஆத்திசூடி : ககர வருக்கம்.

உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்.




நல்ல வாழ்க்கை என்றால் என்ன? 

எது நல்ல வாழ்க்கை? 

நல் வாழ்முறை எதை உள்ளடக்கியது? 

நான் நல்வாழ்வு வாழ என்ன செய்யவேண்டும்?

வாழ்க்கை ஏற்கனவே விதிக்கப்பட்ட ஒன்றா?

இதில் விதியின் பங்கு என்ன?

நல்வாழ்வுக்கும் பணத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?

ஒரு நல் வாழ்க்கை வாழ்வது என்பது மனம் தொடர்பானதா?

நல் வாழ்க்கை என்பது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு கடைப்பிடித்து வாழ்வதா?

அல்லது ஒரு உறுதியான வாழ்க்கை இலக்கை நிர்ணயித்து அதை அடைய முயல்வதா? 

இத்தனைக் கேள்விகளுக்கும் ஒரு எளிமையான பதிலைத் தருகிறது ஆத்திசூடி. 

எப்போதும் உன்னைச் சுற்றி வாழ்பவர்களுக்கு நன்மை செய்.

அதுதான் நல்ல வாழ்க்கை.

எப்படி நன்மை செய்வது? 

ஆத்திசூடி கற்றுத் தருகிறது : கிழமைப்பட வாழ்.

உன் அறிவால் நன்மை செய்.

உன் உழைப்பால் நன்மை செய்.

உன் நேரத்தைச் செலவிடு.

உன் பணத்தைப் பகிர்ந்து கொடு.

தனக்காக வாழாமல் சமூகத்துக்காக தங்களை அர்ப்பணித்தவர்களையே வரலாறு பதிந்து கொள்கிறது.

குடும்பத்திற்காக தங்களைக் கரைத்துக் கொண்டவர்களையே குடும்பம் கொண்டாடுகிறது.




தென்னாப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் இது.

நீண்ட போராட்டம் முடிவுற்று அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்டபின்பு ஒரு உணவகத்தில் பாதுகாப்புப் படையினர் சூழ உணவருந்தச் சென்றார்.

அவரவர் தமக்கு விரும்பிய உணவைப் பதிவு செய்து விட்டுக் காத்திருந்தனர்.

அப்போது எதிர் மேஜையில் ஒருவர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். 

மண்டேலா அவர்கள் தம் படைவீரர் ஒருவரை அனுப்பி அவரைத் தம்முடன் இணைந்து உணவருந்தும்படி அழைத்தார்.

அந்த மனிதரும் கொஞ்சம் தயங்கிப் பின்பு  இணைந்து அவர்களுடன் உணவருந்தி அங்கிருந்து மகிழ்வுடன் புறப்பட்டுச் சென்றார்.

அப்போது படை வீரனொருவன் "அந்த மனிதர் பார்க்க நோய்வாய்ப்பட்டவர் போல் தெரிகிறது. உண்ணும்போது அவரது கைகள் மிகவும் நடுங்கின" என்றார்.

அதற்கு மண்டேலா புன்னகையுடன் குறுக்கிட்டு " உண்மை அதுவல்ல வீரனே! ...., நான் முன்பு சிறையிலிருந்தபோது இந்த மனிதர் என் சிறைக் காவலராக இருந்தார். என்னைக் கடுமையாகக் கொடுமைப் படுத்துவார். நான் கூக்குரலிட்டுக் களைத்துப் போவேன். களைப்பின் மிகுதியில் நீர் அருந்தக் கேட்டுக் கெஞ்சுவேன். அப்போது என் தலையில் சிறுநீர் கழித்து விட்டு இகழ்ச்சியாகச் செல்வது வழக்கம்."

"இப்போது என்னை ஜனாதிபதியாக அடையாளம் கண்டு கொண்டுவிட்டார். நான் பதிலடியாகப் பழிவாங்குவேன் எனும் அச்சத்தில் அவர் கைகள் நடுங்கின".

ஆனால் அது எனது குணமல்ல. பழிக்குப் பழி வாங்குதல் ஒரு தேசத்தையோ, ஒரு குடும்பத்தையோ, ஒரு தனி மனிதரையோ கட்டியெழுப்பாது".

"அதேநேரம் மனதில் தோன்றும் அன்பும், சகிப்புத்தன்மையும், விட்டுக் கொடுத்தலும் உறவைக் கட்டியெழுப்பும்" என புன்முறுவலோடு அமைதியாகச் சொன்னார்.

நல் வாழ்க்கை என்பது தீமை செய்பவருக்கும் நல்லது செய்வது.

4 கருத்துகள்: