வெள்ளி, 11 அக்டோபர், 2019

The Alchemist




வளர் இளம் பருவத்தில் Fantasy நாவல் வாசிப்பது ஒரு உற்சாகமான அனுபவம்.

ஆனால் நடுத்தர வயதில் ஏன் முதிர் வயதில் அத்தகைய நாவல் வாசிப்பு சுவாரஸ்யம் தருமா?

Paulo Coelho அவர்கள் எழுதிய The Alchemist அதற்குப் பதில் தருகிறது.

1988 ஆம் ஆண்டு இந்த நாவல் போர்த்துகீசிய மொழியில் வெளியிடப்பட்டது.

8.5 கோடி பிரதிகள் விற்பனை! 70க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு!

தமிழிலும் "ரசவாதி" எனும் தலைப்பில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

எனக்கு தமிழ் மொழியாக்கம் வாசிக்கும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை. தமிழில் வாசிக்க வேண்டும் எனும் விருப்பம் உண்டு.

இது ஒரு மாயாஜாலக் கதை போல் தோற்றமளித்தாலும் வாசிப்பவரின் கற்பனைகளை விரியச் செய்யும் மறைபொருள் தத்துவங்களை உள்ளடக்கியது.

 Paulo Coelho

கதை மிக எளிமையானது.

Spain தேசத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஆடு மேய்க்கும் Santiago என்னும் மனிதனின் கதை இது. அது மலைகள் பசும் புல்வெளி சூழ்ந்த கிராமம்.

ஒரு பாழடைந்த தேவாலயம் அவனது வசிப்பிடம். அவன் அடிக்கடி ஒரு கனவு காண்கிறான். அதில்  எகிப்தில் உள்ள பிரமிடுகளைப் பார்த்தால் மிகப் பெரிய தங்கப் புதையல் கிடைக்கும் என்பதாகக் கனவு வருகிறது.

அவனது கனவு நிச்சயம் நிறைவேறும் என நாடோடி குழுவின் பெண்ணொருத்தி  எகிப்தை நோக்கிப் பயணப்பட உற்சாகப்படுத்துகிறாள்.

"நீங்கள் எதையாவது அடைய விரும்பினால், இந்த பிரபஞ்சத்தின் சக்தி அத்தனையும் அதை அடைவதற்குரிய சூழலை உருவாக்கி உனக்கு உதவும்" என ஒரு அரசனும் ஊக்கப்படுத்தி இரண்டு மாணிக்கக் கற்களைப் பரிசாக அளிக்கிறான்.

Spain இலிருந்து சான்டியாகோ Morocco பயணமாகிறான். அங்கு அவனது பணம் திருடப்படுகிறது. நிர்க்கதியான நிலையில் ஒரு அலங்கார கண்ணாடி கடையில் பணியில் சேர்கிறான். பயணத்திற்கான பணத்தை சில மாதங்களில் சேர்க்கிறான். அக்கடை  உரிமையாளர் வருந்தி அவருடன் இருக்குமாறு கேட்டும், தயவாய் மறுத்து எகிப்து நோக்கி தனது பயணத்தைத் தொடர்கிறான்.

பாலைவனம் வழியான பயணத்தில் ஒரு ஆங்கிலேயரின் நட்பு கிடைக்கிறது. அவர் 200 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் இரசவாதியைச் சந்திக்கும் வேட்கையில் பயணிப்பவர். அவர்களுக்கு இடையில் நிகழும் உரையாடல் தத்துவார்த்தமானது.

பாலைவனப் பயணம் நீண்ட நாளாகத் தொடர்கிறது. அங்கு இரு நாடோடி குழுக்களுக்கிடையில் போர் நடக்கிறது. அவர்கள் ஒரு பாலைவனச்சோலையில் தங்குகின்றனர். அங்கு ஒரு நாடோடி குழுவின் தலைவர் மகள் ஃபாத்திமாவுக்கும், சான்டியாகோவுக்கும் காதல் மலர்கிறது.

சான்டியாகோ வின் எச்சரிப்பால் மாற்று இனக் குழுவின் யுத்தத்திலிருந்து பாலைவனச்சோலை காப்பாற்றப்படுகிறது. அந்த நாடோடிக் குழுவின் ஆலோசகராக சான்டியாகோ நியமிக்கப்படுகிறான்.

நிம்மதியான சுகவாழ்வு, அழகிய காதலி என அமைந்தாலும் தனது கனவை நிறைவேற்ற மீண்டும் பயணத்தைத் தொடரப் போவதாகக் கூறுகிறான்.

அதுதான் பாலைவனப் பெண்களின் காத்திருக்கும் கனவு வாழ்க்கை எனக் கூறும் ஃபாத்திமா, அவனது மீள் வருகைக்காகக் காத்திருப்பதாகக் கண்ணீரோடு கூறுகிறாள்.

அந்த தொடர் பயணத்தில் இரசவாதி இவனுக்கு எதிர்ப்படுகிறார். இவனுக்கு எகிப்து பிரமிடுகளை நோக்கிப் பயணப்பட உதவுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் நிகழும் உரையாடல் அற்புதமானது.

இறுதியில் அவன் புதையலை கண்டடைந்தானா? எது உண்மையான புதையல்? அது எங்கிருந்தது?  என்பதை அழகாகச் சொல்லியிருப்பார் Paulo.

இந்த கதை எளிமையாக தோற்றமளித்தாலும் வாக்கியங்களுக்கிடையில் எழுதப்படாமல் மறைந்திருக்கும் மறைபொருளை கண்டறிவதுதான் சுவாரஸ்யம். 



ஒவ்வொருவருக்கும் ஒரு அழகிய கனவு உண்டு.

ஆனால் பயணத்தின் நடுவில் கிடைக்கும் அற்ப சுகத்தில் அல்லது கடும் போராட்டத்தில் கனவைத் துறந்து அங்கேயே பலர் தரித்து விடுகின்றனர்.

ஆனால் இதயத்தின் குரலுக்கு மட்டும் செவி சாய்த்து இழப்பு, காதல், சுகவாழ்வு, உயிர் போராட்டம் எதுவரினும் மயங்காது, தயங்காது, போராடி முன்னேறுபவருக்குப் பிரபஞ்சமே வந்து வழி அமைத்துக் கொடுக்கும்.

மனிதாபிமானம், அன்பு, குழந்தை மனம், தூய்மை மட்டும் இருந்தால் போதும். கனவு மெய்ப்படும்.

கனவை அடைய ஆசைப்படுபவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு Fantasy நாவல் இது.

2 கருத்துகள்: