வெள்ளி, 25 அக்டோபர், 2019

எப்போதும் அழகான தருணங்களை மறக்க முடியாது.

சாதனை பெண் மரியகே வெர்வூர்ட்.





Marieke Vervoort  Gold Medalist Paralympic
1979 - 2019
(Image: Isopix/REX) 

பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை மரியகே வெர்வூர்ட்.  அவரது 40வது வயதில் செவ்வாய்க்கிழமை (22.10.2019) அன்று தனது சாதனை ஓட்டத்தை நிறைவு செய்தார்.

வெர்வூர்ட் குணப்படுத்த இயலாத தசை நோயினால் (degenerative muscle disease) பாதிக்கப்பட்டவர். அவரது முதுகுத் தண்டுவடத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது cerebral vertebrae இடையில் ஏற்பட்ட குறைபாட்டால் இந்நோய் அவரைத் தாக்கியது.  இது மூளைக்கும் தசைகளுக்கும் இடையில் உள்ள செயல்பாட்டைச் சீர்குலைக்கும் ஒரு அரிதான குணப்படுத்த இயலாத நோய். இது கால்களில் இடைவிடாத நிலையான வலியை ஏற்படுத்தும். தூக்கம் வராது. சிறிது சிறிதாக உடல் பக்கவாதத்தால் செயலிழந்து மரணத்தைத் தழுவ நேரிடும்.














மனதை முடக்கும் இத்தகைய சூழலில் உள்ளம் தளராது நோயை எதிர்த்து இவர் போராடினார். தடகள போட்டியில் வீல்சேர் பிரிவில் தீவிர பயிற்சி மேற்கொண்டார். விளையாட்டின் மீது இருந்த காதல் அவருக்கு மரணத்தைக் குறித்த அச்சத்தைக் குறைத்தது. எனினும் கடும்  தசை வலியால் அவதியுற்றார். தாங்க முடியாத வலி, உறங்க முடியாத இரவுகள் இவை எல்லாம் தகர்த்து 2012, 2016 Paralympics மற்றும் 2015 உலக சாம்பியன் போட்டிகளில் சாதனை நிகழ்த்தினார். 

2012ல் லண்டனில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் வீல் சேர் பிரிவில் 100 மீ., தங்கம் வென்றார். 200 மீ., ஓட்டத்தில் வெள்ளி கைப்பற்றினார். 2015ல் தோஹாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் 100 மீ., 200 மீ., 400., மீ பிரிவுகளில் மூன்று தங்கம் வென்றுள்ளார். 2016ல் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் 400 மீ., பிரிவில் வெள்ளி, 100 மீ., பிரிவில் வெண்கலம் கைப்பற்றினார். இதுவே இவர் பங்குபெற்ற கடைசி போட்டி. 

Marieke Vervoort
Vervoort with her gold medal at the London 2012 Paralympics 
(Image: Getty Images)


இத்தனை வேதனை சூழ்ந்திருந்தாலும் அவர் நகைச்சுவை உணர்வைத் தக்கவைத்துக் கொண்டார். அரசியல் தலைவர்களைக் கிண்டல் செய்தார். தனது செல்ல ஜென் நாயுடன் அபரிமிதமான அன்பைச் செலுத்தினார். அது அவரது வாழ்க்கை தோழமையாக வலம் வந்தது. மைதானத்தில் அவருக்கு உதவியது. அவரோடு மருத்துவமனையில் சிகிச்சையிலும் உடனிருந்தது. அவர் நினைவு தவறும்போது குரைத்து செவிலியரை அழைக்கும். நினைவு திரும்பும்வரை கண்ணத்தை நாக்கால் வருடிவிடும். அவர் விழிக்கும்போது ஜென்னைப் பார்த்துச் சிரிப்பார். "ஜென் இல்லாத வாழ்வை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை." என்றார். 



அவர் வாழ்க்கை அனுபவங்களை "The Other Side of the Coin." எனும் நூலாக வெளியிட்டார். அவர் தன்னை ஒரு "Tarus" என்றே குறிப்பிட்டார். "நான் ஒன்றை அடைய விரும்பினால் அதை நோக்கியே செல்வேன். அதை எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டேன். எனது வாழ்க்கை சக்கர நாற்காலியில் முடங்கிவிட நான் அனுமதிக்க மாட்டேன்." என வாழ்ந்து காட்டினார். ஒரு சமயம் வலியோடு தற்கொலை எண்ணத்திலிருந்தவர் பின்பு தீவிர மனஉறுதியுடன் நோயை இறுதிவரை எதிர்த்துப் போராடுவது என முடிவு செய்தார். 

வலி மிகுந்த இறுதிக்காலம் : 

பெல்ஜியத்தில் கருணைக் கொலை சட்டப்பூர்வமானது. 2008ம் ஆண்டில் கருணைக் கொலைக்கான சட்டப்பூர்வமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அது அவருக்கு அமைதியைத் தந்தது. அதை அவர் தற்கொலையாகக் கருதவில்லை. வலியால் அவதியுறும் நபருக்கு முடிவான ஓய்வின் வழியாகக் கருதினார். அதன்பின் தன் உடல் செயல்படும் வரை மனம் தளராது வலியுடன் போராடி சாதனை முத்தாக ஜொலித்தார். Rio Paralympics ன் வதன முகமாக வலம் வந்தார். 


King Philippe and Queen Mathilde of Belgium talk to Marieke Vervoort 
(Image: Photonews via Getty Images) 

2017ம் ஆண்டுக்குப் பின் அவரது பார்வைத்திறன் மங்கியது. உடலின் மார்பகத்திற்குக் கீழ்ப்பகுதி செயலிழந்தது. வலி மிகுந்த தசைப்பிடிப்பால் கடும் வேதனை அனுபவித்தார். பத்து நிமிடம் கூட அவரால் தூங்க முடியவில்லை. சாப்பிடுவதற்கும் மிகவும் சிரமப்பட்டார். அப்போது தன்னை பேட்டி கண்ட Telegraph நிருபரிடம் "நான்  மிகக் கடினமாக உணர்கிறேன். இனி மேலும் மேலும் என்னைக் கஷ்டப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. நான் மிக மனச்சோர்வு அடைந்து விட்டேன். வாழ்ந்தது போதும் என எண்ணுகிறேன். எனது இறுதி விருப்பத்தை நிறைவேற்றுங்கள்" என அமைதியாக அறிவித்தார். 

அமைதியான நீண்ட நெடிய உறக்கம். 

கடந்த செவ்வாய்க் கிழமை (22.10.2019) மாலை தனது இறுதி விருப்பத்துக்கு அமைதியாக ஒப்புதல் அளித்தார். "நான் அன்று  அழகானது என்று அதை அழைத்தது போல் அது அழகானதும், தெய்வீகமானதும், அமைதியான பிரியாவிடையாகவும் உணர்கிறேன்." என்றார். 

சட்டத்தின்படி மூன்று மருத்துவநிபுனர்கள் இறுதிப்பரிசோதனை செய்து கையொப்பமிட்டனர். ஒரு நரம்பியல் நிபுணர் அவருடன் இரவு முழுவதும் அமர்ந்திருந்தார். அவர் அழவில்லை. "முன்பு நிறைய அழுதிருக்கிறேன். ஆனால் இப்போது எனக்கு அந்த அழுகை உணர்வுகள் இல்லை" என்று அமைதியாகக் கூறினார். 

"இது உடல் வலிப்பு அல்ல. ஆனால் உடல் வேதனையில் கதறுகிறது. நான் அதைப் பார்க்கிறேன். நான் அதை முடித்து விட்டேன்." 


"நீங்கள் உறங்கச் செல்லுகிறீர்கள். மீண்டும்  விழித்து எழவில்லை எனில் அதன் பெயர்தான் மரணம்." 

"என் மரணத்திற்குப் பின் "விளையாட்டுத்தனமாகப் புன்னகையுடன் வலம்வரும் பெண் என நான் நினைவு கூறப்பட வேண்டும்." 

"எப்போதும் சிரித்துக் கொண்டு இருக்க விரும்பியவள்" . 

இதுவே அவரது இறுதி வார்த்தைகள். 

அந்த இறுதி நிமிடங்கள் பற்றி அவரது நண்பர் குறிப்பிடும்போது, "அவள் அதை மிக விழிப்புணர்வுடன் அனுபவித்தாள். அதில் கண்ணீர் இருந்தது. மகிழ்ச்சியும் இருந்தது. இது துயரமான கடினமான ஆனால் தவிர்க்க இயலாத முடிவு" என அவள் நன்கு உணர்ந்திருந்தாள். 

தனது இறுதி Instagram பதிவில் தனது படத்துடன் அவர் பதிவிட்ட கடைசி வாக்கியம் : "எப்போதும் அழகான தருணங்களை மறக்க முடியாது".

2 கருத்துகள்:

  1. சென்ற வாரம் இதை ஒரு செய்தியாக வாசிக்கும் போதே மிகவும் வருத்தமாக இருந்தது.

    ராஜன்.சே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலி மிகுந்த வாழ்க்கையை அவர் புன்னகையோடு எதிர்கொண்டவிதம் பிரமிப்பைத் தருகிறது. சோர்வான தருணங்களில் வாசித்தால் உத்வேகம் தரும் எனப் பதிவு செய்தேன். நன்றி Sir.

      நீக்கு