புதன், 15 ஏப்ரல், 2020

36. குணமது கைவிடேல்

நற்பண்புகள் பின்பற்றுவதை நிறுத்திவிடாதே

(ஆத்திசூடி - ககரவர்க்கம்)



நன்மை தரக்கூடிய நல்ல செயல்களை இனி கிரமமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என "விசேஷ தினங்களில்" வெகு சாதாரணமாக நாம் தீர்மானிப்போம்.

"புது வருடம்" அல்லது "பிறந்த நாள்" என்பது தீர்மானங்களின் காலம்.

எனினும் அந்தத் தீர்மானம் சிறிது நாட்கள் அல்லது சில வாரங்களில்  கரைந்து காணாமல் போய்விடும்.

வாழ்வில் தான் எத்தனை தீர்மானங்கள்!
எவ்வளவு  பிரதிக்கினைகள்!!
எத்தனை சங்கல்பங்கள்!!!

சில உதாரணங்கள்!!!!

"உடற்பயிற்சி ", "உணவுக் கட்டுப்பாடு", "நேர நிர்வாகம்" ...,
என உடல் நலம் அல்லது தொழில் முன்னேற்றம் சார்ந்தவை

அல்லது

"கவனமாகப் பேசுதல்", "கோபத்தைத் தவிர்த்தல்", "சிற்றினம் சேராமை"...,
எனும் மன நலம் சார்ந்தவை.

இவை நிச்சயமாகவே "நற்செயல்கள்" தான் என்பதும் மிக நன்றாகவே புரிகிறது.

பின் ஏன் அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவதில்லை?

எங்குத் தோற்றுப் போகிறோம்?

இதற்கான பதில் மிகவும் எளிமையானது.

"எந்தவொரு பண்பு, நம் ஆழ்மனதின் அசைக்க முடியாத விருப்பமாக உருவாகிறதோ, அவை பிறப்பிக்கும் செயல்கள் மட்டுமே நம்மால் இயல்பாகத் தொடர்ந்து செய்ய முடியும்."

அப்படியென்றால், ஒரு செயல் எவ்விதம் ஆழ்மனதின் விருப்பமாக உருவாகும்?

விருப்பங்கள்  அறிவுப்பூர்வமாக அறிவதால் மட்டும் தோன்றுவதில்லை.  அவை நம் மனதில்  ஒரு உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சி தரும் அனுபவமாகப் பதிவதால் ஏற்படுகிறது.

மனதில் அந்த அனுபவத்திற்கானதொரு ஏக்கம் தொடர வேண்டும்.

மகிழ்ச்சி தரும் அனுபவங்களே ஆழ்மன விருப்பமாக மலரும். 

அதுமட்டுமல்ல ; "புத்தி தெளிந்து" செய்த தவற்றை உணர்வதால் ஏற்படுத்தும் வலி மிகு துயர அனுபவமும் நற்பண்புகளை உருவாக்கும்.



ஒரு விதை விதைத்தவுடன் கனி தராது. அதற்கு உரமிடப் பட வேண்டும். நீர் பாய்ச்ச வேண்டும். வேலியடைத்துப் பாதுகாக்கப் பட வேண்டும். ஏற்ற சமயத்தில் தேவையற்ற பகுதிகள் நீக்கப் பட வேண்டும். அது தொடர்ந்து பராமரிக்கப் படவேண்டும்.

தீய செயல்கள் தரும் மகிழ்ச்சி உடனடியாக கிடைக்கும். முடிவில் அழிவைத் தரும்.

நற்கனி வேண்டுமெனில் பொறுமை, காத்திருப்பு, விடாமுயற்சி வேண்டும்.

நற்செயல்களைத் தொடர்ந்து செய்வதால் வாழ்வில் மகிழ்ச்சி, மேன்மை, உயர்வு, சிறப்பை, அது நமக்கு அளிக்கும் எனும் "விசுவாசம்" இருக்க வேண்டும்.

விசுவாசம் என்பது நம்பிக்கையிலும் மேன்மையானது.

அகக் கண்களால் பார்க்காமல், மனக் கண்களால் நம்பிக்கையுடன் பற்றித் தொடர்வது விசுவாசம்.



புறக் கட்டுப்பாடுகளினால் நற்பண்புகளை உருவாக்குவது கடினம். கட்டுப்பாடுகள் தளரும்போது மனதின் இயல்பான குணம் வெளிப்பட்டுவிடும்.

நமது வாழ்விலும் கூட "ஒரு தேவைக்காக" நல்லவர்கள் போல நடிப்பவர்கள் எத்தனை பேரைச் சந்தித்திருப்போம்! "காரியம் முடிந்தவுடன்" அவர்கள் உண்மை சுபாவம் வெளிப்பட்டுவிடும். முகமூடி விலகி சுயரூபம் தெரியும்.

நம்மைச் சுற்றியுள்ள உலகம் ஏமாற்றுபவரால் நிரம்பியிருக்கலாம். எத்தர்கள் தான் வாழ்ந்து சுகிப்பதுபோல் தோற்றமளிக்கலாம்.

பொறாமை நிறைந்த மனிதர்கள் நம்மைக் காயப்படுத்தலாம்.

சுயநல மிக்கவர்கள் நமது உரிமைகளை அபகரித்துக் கொள்ளக் கூடும்.

எனினும் ஆத்திசூடி சொல்கிறது :"குணமது கைவிடேல்"

அதன் பொருள் : "மேன்மை தரக்கூடிய நல்ல பண்புகளைப் பின்பற்றுவதை நிறுத்திவிடாதே"

ஆழ்மனதின் விருப்பங்களே சிந்தனையாக, சொற்களாக, செயல்களாக, குணமாகப் பரிணமிக்கின்றன.

நமது நம்பிக்கைகளே ஆழ்மன விருப்பங்களை உருவாக்குகின்றன.

நல்ல நீதி நூல்கள் மனதில் நல்ல நம்பிக்கையை விதைக்கிறது.

நல்ல மனிதர்களின் கூட்டுறவு நல் நம்பிக்கையை வளர்க்கிறது.

நல்ல செயல்கள் மன நிறைவை அளிக்கின்றன. அவை மகிழ் நிறை அனுபவங்களாகின்றன.

அந்த தொடர் அனுபவங்களே நம்பிக்கைகளைத் தீர்மானிக்கிறது.

இறுதியாக எது நல்லது? எது கெட்டது என்பதை வாழ்க்கையும் 
அனுபவங்கள் வழியாக நமக்குக் கற்றுக் கொடுக்கும்.

எனவே நற்செயல்கள் செய்வதில் தோல்வியடைந்தாலும் "குணமது கைவிடேல்"

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.



8 கருத்துகள்:

  1. நல்ல மனிதர்களின் கூட்டுறவு நல் நம்பிக்கையை வளர்க்கிறது.👌👌👌

    பதிலளிநீக்கு
  2. Nice article insisting inner cleanliness. Even the Lord Jesus Christ told whatever is filling our heart will manifest in our words. So we need to care inner man.

    பதிலளிநீக்கு