சனி, 18 ஏப்ரல், 2020

பார்வையின் மறு பக்கம்

விஷயங்களை உணரும் திறன்.

(The abilty to see the things as they are)


(The Young woman and Old woman - illusion)
(William Ely Hill 1887 - 1962)
First published in the Magazine Path in 1915


அந்த பார்வையற்ற வயதான மனிதன் சிறந்த பாடகன். அவன் மாலைப் பொழுதுகளில் நகரத்து வீதிகள் தோறும் சுற்றித் திரிந்து பாடுவது வழக்கம். அவனது கைத்தடியொசை முன்னே கேட்கப் பாடல் பின் தொடரும். பாட்டைக் கேட்கக் கூடும் மக்கள் அவன் விற்கும் சிறு பொருட்களையும் மனமுவந்து வாங்கிச் செல்வர். அதில் வரும் சிறு வருவாயில் அவன் மகிழ்ச்சியாக  வாழ்ந்தான்.

செல்வந்தரானதொரு வணிகர் அந்தப் பார்வையற்ற மனிதன் மேல் இரக்கம் கொண்டார். அவனைப் பார்த்து "இந்த வயதான காலத்தில் சிரமப்படாதே. எனது வீட்டில் ஓய்வாக இரு.  உனது தேவைகளை நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். அங்கு நீ ஒரு பகுதியில் வசதியாகத் தங்கிக் கொள்ளலாம்" என்றார்.

அவனுக்கு அந்த யோசனை மகிழ்ச்சியாக இருந்தது. அவன் குடி  பெயர்ந்தான். ஆனால் சில வாரங்களுக்குள் அவன் மிகவும் சோர்வடைந்து போனான். எந்த வேலையும் செய்யாது உணவை உண்பதும் உறங்குவதும் சலிப்புத் தட்டியது. கையும் காலும் நன்றாகச் செயல்படும்போது முடங்கிக் கிடப்பது சரியெனப் படவில்லை.

அவன் அந்த வணிகரிடம், "ஐயா! உங்கள் உதவிக்கு மிக்க நன்றி. என்னால் சும்மா உட்கார்ந்து உண்பதற்கு மனமில்லை. எனவே நான் மீண்டும் என் பழைய வாழ்க்கை வாழவே விரும்புகிறேன்" என்றான்.

அந்த முடிவு அவரது மனதுக்கு வருத்தமாக இருந்தாலும், அவனது முடிவை மதித்தார். அப்போது மாலை நேரம் முடிந்து இரவாயிற்று. எனவே இருட்டில் அவனை அனுப்ப மனதில்லாது, "நாளை காலை நீ போகலாம்" என்றார்.

அதற்கு அவன் சிரித்துக் கொண்டே, "ஐயா உங்களுக்குத்தான் இருட்டும் வெளிச்சமும், எனக்கு எல்லாம் ஒன்றுதான்" என்றான்.

அப்போதுதான் செல்வந்தருக்கும் சிறு பொறி தட்டியது. "எந்தவொரு பிரச்சினைகளுக்கானத் தீர்வையும் நமது நிலையிலிருந்து மட்டும் பார்ப்பது தவறு" எனப் புரிந்தது.

நமக்கு வருத்தமாகத் தோற்றமளிக்கும் பிறரது வாழ்க்கைப் பிரச்சினை அவர்களுக்கு இயல்பானதும் மகிழ்ச்சியானதாகவும்கூட  இருக்கக்கூடும். ஒவ்வொருவருக்கான தேவைகளும், துயரங்களும் வேறுபட்டவை.

அதை உணர்ந்தவாறு அவனிடம், சரிப்பா! "நீ போகலாம். ஆனால் இதுவோ இரவு நேரம். இந்த விளக்கையாவது வழித் துணைக்குக் கொண்டு செல்" என்றார்.

அவன் மறுபடியும் புன்னகைத்து, "இந்த விளக்கின் வெளிச்சத்தால் எனக்குப் பயனில்லை" என்றான்.

அவர் மறுமொழியாக, ஆமாம்! உண்மைதான். "உனக்கு இதனால் எவ்வித பயனுமில்லை தான், ஆனால் எதிரில் வருபவர் உன்மேல் மோதாமல் இருக்கும்படி இது உன்னைக் காக்குமல்லவா?" என்றார்.

அது அவனுக்குச் சரியெனப்பட்டது.

அவன் விளக்கோடு தனது இருப்பிடம் நோக்கி நகர்ந்தான். சற்று நேரத்தில் சாலையில் எதிர்ப்பட்ட மனிதன் இவன்மேல் மோதினான்.

பார்வையற்றவன் கோபமாக "எனக்குத்தான் பார்வையில்லை. உனக்கென்ன? என்னைத்தான் தெரியவில்லை, இந்த விளக்கின் வெளிச்சம்கூட உன் கண்ணில் படவில்லையா? " எனக் கடுமையாகக் கேட்டான்.

அவனோ பொறுமையுடன் மறுமொழியாக "விளக்கா? அது எரியவில்லையே. அது அணைந்து வெகு நேரமாகி விட்டது போலத் தெரிகிறது" என்றான்.

தெளிவடைந்த பார்வையற்றவன் அந்த விளக்கைத் தூர எறிந்து விட்டு தனக்கு ஒத்தாசை தரும் ஒரு கைத்தடியை எடுத்துக் கொண்டான்.

ஒவ்வொருவர் கை ரேகையும் தனித்துவமானது. ஒவ்வொருவர் வாழ்வும் ஒரே வழிப் பாதையில் செல்வதுபோலத் தோன்றினாலும் ஒவ்வொருவர் பயணமும் வித்தியாசமானது. இங்கு எல்லாருடைய வாழ்வியல் சிக்கல்களுக்கும் ஒற்றைத் தீர்வு பதிலாக முடியாது.

எல்லோருக்கும் உணவு தேவையாக இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் ஒரே சுவை விருப்பமாக இருக்க வாய்ப்பில்லை.

அவரவர் அனுபவங்கள் வழியாகத் தீர்வை உணர்வது ஒரு நிலை. பிறரது முடிவுகளிலும் மறைந்திருக்கும் உண்மையை உணர்வதோ முழு நிலை.


Notes:

The Original story from "zen thoughts". The theme : Perception. 

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations towards spread the knowledge.


7 கருத்துகள்:

  1. எந்தவொரு பிரச்சினைகளுக்கானத் தீர்வையும் நமது நிலையிலிருந்து மட்டும் பார்ப்பது தவறு"

    எல்லோருக்கும் உணவு தேவையாக இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் ஒரே சுவை விருப்பமாக இருக்க வாய்ப்பில்லை.

    அவரவர் அனுபவங்கள் வழியாகத் தீர்வை உணர்வது ஒரு நிலை. பிறரது முடிவுகளிலும் மறைந்திருக்கும் உண்மையை உணர்வதோ முழு நிலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியான வரிகளை அடையாளம் கண்டு தொகுத்துள்ளீர்கள். எதிர்த்தரப்பு நியாயங்களை உணர்வது அவ்வளவு சுலபமல்ல :). மிக்க நன்றி குமாரவேல்.

      நீக்கு