நாலடியார் - நான்கு பாடல்கள்
1.தீயவருடன் பழகாதே:
பாடல்:
சான்றோர் என மதித்துச் சார்ந்தாய்மன்
சார்ந்தாய்க்குச் சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் -
சார்ந்தோய் கேள் சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பு கண்டன்ன துடைத்து.
பொருள்:
நண்பனே!
ஒருவரை நல்லவர் என நினைத்து, நம்பிக்கையுடன் பழகினாய்.
ஆனால், நீ உயர்வாகக் கருதிய அவரிடமோ உண்மை இல்லை.
இப்போது நீ என்ன செய்ய வேண்டும்?
கேள்! சொல்கிறேன்.
உடலில் பூசிக் கொள்ளும் நறுமணத் தைலம் இருக்கிறது என்று நினைத்து ஒருவன் பெட்டியைத் திறந்தான். ஆனால் அந்த பெட்டியிலோ ஒரு பாம்பு இருந்தது.
அதைக் கண்டவுடன் அவன் என்ன செய்வான்?
தலை தெறிக்க அந்த இடத்தை விட்டு விட்டு ஓடிவிடுவான் அல்லவா?.
நீயும் அந்தப்படியே செய்.
2. காரியவாத நட்பு:
பாடல்:
உள்ளத்தால் நள்ளாது உறுதித் தொழிலராய்
கள்ளத்தால் நட்டார் கழிகேண்மை -
தெள்ளிப் புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட
மனத்துக்கண் மாசாய் விடும்.
பொருள்:
அழகிய மலைகளிலிருந்து பாய்ந்து இறங்கி வரும் அருவி நீரானது சேற்றினால் கலங்காமல் தெளிவாக மாசற்றதாக வழிந்தோடுகிறது.
ஆனால் சிலர் உள்ளம் இது போன்று மாசற்றதாக இருக்காது. தாங்கள் விரும்பும் காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு வஞ்சகமாக நட்பு பாராட்டிப் பழகுவார்கள்.
அது ஏமாற்றும் கள்ளத்தனமாக நட்பு. அந்த நட்பு மனம் ஒன்றி பழகாததால் நிலைத்து நிற்காமல் கழிந்து போகும். இத்தகைய அன்பு மனத்தில் தோன்றிய மாசாகக் கருதப்படும்.
3. சிரத்தையுடன் கற்றுக் கொள்:
பாடல்:
கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணிபல -
தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே
நீர் ஒழியப் பாலுண் குருகின் தெரிந்து
பொருள்:
கடலுக்கும் கரை உண்டு. ஆனால் கல்விக்குக் கரை இல்லை.
ஆகவே மெதுவாக கற்றுக் கொள்வோம் எனச் சிரத்தை இல்லாமல் இருக்காதீர்கள். சில சமயம் நோயினால் நலிவுற்று கற்க முடியாமலும் போகலாம்.
நமக்குக் கொடுக்கப்பட்ட காலம் சொற்பமே என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆகவே வாழ்க்கைக்கு மேன்மை தரும் கல்வியை ஆராய்ந்து, தெளிவாகப் புரிந்து கற்க வேண்டும்.
நீரும் பாலும் கலந்திருக்கும்போது நீரை ஒதுக்கிவிட்டுப் பாலை மட்டும் பருகும் குருகுப் பறவை போல நல்லனவற்றை மட்டும் கற்க வேண்டும்.
4. குடிப்பிறப்பு :
பாடல்:
நல்லவை செய்யின் இயல்பாகும்
தீயவை பல்லவர் தூற்றும் பழியாகும் -
எல்லாம் உணரும் குடிப்பிறப்பின் ஊதியம்
என்னோ புணரும் ஒருவர்க்கு எனின்
பொருள்:
நல்ல செயல்கள் செய்யும்போது அதை யாரும் பொருட் படுத்த மாட்டார்கள். அது இயல்பான செயல் எனக் கண்டு கொள்ள மாட்டார்கள்.
ஆனால் ஒரு தீய செயல் செய்து விட்டால், அதைக் குறித்து பலரும் இழிவாகப் பேசுவார்கள்.
இதுதான் நல்ல செயல்கள், தீய செயல்கள் செய்வதால் கிடைக்கும் பலன்.
இதைப் புரிந்து, உணர்ந்து வாழ்பவர் இல்லம் நல்ல குடும்பமாக அமைகிறது. அந்த குடும்பத்தில் பிறப்பவர்கள் நல்ல செயல்கள் செய்யக் கவனமாக இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக