வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

கவனச்சிதறல்


அலை பாயும் மனதை ஒரு முகப் படுத்துவது எப்படி?


கவனச் சிதறலைக் களைவதற்கு உதவும் சில வழி முறைகளைப் பார்க்கலாம். 

ஆய்வுகள் அடிப்படையில் சில ஆலோசனைகள் கண்டறியப் பட்டுள்ளன. இவற்றைப் பின்பற்றுவதன் வழியாக மனம் அலை பாயும் நேரத்தைக் குறைத்திடலாம். கவனத்தையும் கூர்மையாக்க முடியும்.

மனம் ஏன் அலை பாய்கிறது?

மனம் எப்போதும் ஒரே நிலையில் இயங்காது. அது அதன் இயல்பு. அதன் கவனம் எளிதாகத் திசை திருப்பப்படும். அதில் உதிக்கும் எண்ணங்கள் நொடிக்கு நொடி தாவிச் செல்லும். 

இவ்விதம் எண்ணங்கள் மாறி மாறிப் பயணிக்கப் பல காரணங்கள் உள்ளன. 

ஒரே விதமான வேலையினால் ஏற்படும் சலிப்பு (Monotony), அல்லது அதீத ஆர்வம் (Over active), அல்லது மன அழுத்தம் (Stress), அல்லது சோர்வு (Tired)  அல்லது குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, 

அத்துடன் எதிர் காலத்தில் என்ன நிகழும் எனத் தொடர்ந்து சிந்திப்பது, கடந்த காலத்தில் நடந்த கசப்பான நிகழ்வுகளை அசை போடுவது, சமூக உறவுகள் குறித்து கவலை..,

இப்படிப் பல காரணங்கள் இருக்க முடியும்.

பல சமயங்களில், எவ்வித நோக்கமும் இல்லாது மனம்  சுற்றிச் சுற்றித் திரியும். அவை நாம் உணராமலேயே இயல்பாக நிகழும்.

மன அமைதி: 

சிறந்த முடிவுகளைக் கண்டுணர மனம் அமைதியாக இருக்க வேண்டும். ஆழ்ந்த அமைதியில் எண்ணங்களின் சலனம் குறைவாக இருக்கும். அப்போது உள்ளத்தின் ஆழத்திலிருந்து தெளிவான முடிவுகள் எடுக்க முடியும். 

பொதுவாகத் தியானம், மூச்சுப் பயிற்சிகள், மனதுடன் செய்யும் உறுதி மொழிகள் எண்ணங்களைக் கூர்மையாக்கும். கவனச் சிதறலை அகற்றும்.

அத்துடன் இந்த 7 வகை பயிற்சிகளை முறையாகக் கடைப் பிடிப்பது மனதை ஒரு நிலைப்படுத்த உதவும்.

1. ஒரு சமயத்தில் ஒரு பணி: 

தற்போது எந்த பணியைச் செய்கிறோமோ, அவற்றில் மட்டும் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வது கூடாது. அது கவனச் சிதறலை ஏற்படுத்தும்.

ஒரு பணியை முழுமையாகச் செய்து முடிக்க, அந்த வேலையை மட்டும் கூர்ந்து கவனித்துச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நாளிலும் திட்டமிட்டுப் பணி செய்ய வேண்டும். அந்த நாளில் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஒரு பட்டியல் தயாரிப்பது மிக முக்கியமானது. அவற்றில் எவை முக்கியம், எதை முதலாவதாகச் செய்ய வேண்டும் என வரிசைப் படுத்த வேண்டும். 

எந்த அளவுக்குச் செய்யப்பட வேண்டிய வேலையில் கவனம் குவிகின்றதோ, அந்த அளவிற்கு அது சிறப்பாக அமையும்.

அதற்குத் தேவைப்படும் நேரத்தை ஒதுக்கி வைத்து செயல் புரிந்தால் பணி சிறப்பாக அமையும்.

2. சிறு ஓய்வு நல்லது:

கடினமான பணி இடையில் சிறு ஓய்வு எடுப்பது நல்லது. அது மனதிற்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.

பணி இடத்திலிருந்து எழுந்து ஓர் சிறிய நடை உலாவல், உடலைத் தளர்த்துவது, எளிய சிற்றுண்டி இவை மனதின் களைப்பை நீக்கும்.

இவை உற்சாகத்தையும் கவன குவிப்பையும் அதிகரிக்கும்.

சிறு ஓய்வு எடுத்துத் திரும்பி வரும்போது, ​​மனதில் புதிய  எண்ணங்கள், வழி முறைகள் உதிக்கும்.

சில நிமிடங்களே இருந்தாலும், அவ்வப்போது ஓய்வு கொடுத்து உங்களைக் கவனித்துக் கொள்ள மறக்காதீர்கள்.

3. சிறியவை பெரியது: 

பொதுவாகப் பெரிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். அத்தகைய பணியில் சிக்கிக் கொள்வது இயல்பாக இருக்கும்.

ஆனால், நமது அன்றாட வாழ்வில் பெரும்பாலும் சிறிய விஷயங்கள் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மகிழ்ச்சியைத் தருகிறது.

எனவே நம்மை மகிழ்ச்சியடையச் செய்யும் சிறிய விஷயங்களைக் கவனித்து, அவற்றைப் பத்திரமாக நினைவில் வைத்திருக்க வேண்டும்.

அத்துடன் நாம் திரும்பத் திரும்ப,  ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்திற்கு விரைந்து கவனம் செலுத்துவதில் மிகவும் பரபரப்பாக இருக்கிறோம்.

நாம் என்ன செய்கிறோம்? அல்லது 

எதை அனுபவிக்கிறோம்? 

என்பதை ரசித்துப் பார்ப்பது கூட  கிடையாது.

சிறிய மகிழ்ச்சி தரும் செயல்களுக்கு நேரத்தை ஒதுக்குவது மற்றும் பரபரப்பின்றி ரசிப்பது மிகவும் மதிப்புக்குரியது. ஏனெனில் அவை மனதுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது.

நமக்கு மகிழ்ச்சியைத் தரும் சிறிய விஷயங்களைக் கவனிக்க மறந்து விடக் கூடாது. 

4.  உணர்ச்சிகளை அடையாளம் காணல்:

சலிப்பு, பதட்டம், அமைதியின்மை, ஏமாற்றம், விரக்தி, பயம்.., இவை போன்ற பல உணர்ச்சிகள் மனதின் கவனத்தைத் திசை திருப்பும்:

இந்த உணர்வுகள் ஒருமுகமாகப் பணி செய்வதில் கவனம் செலுத்துவதைக் கடினமாக்கும்.

உணர்வு அலையில் சிக்காமல் மனதைப் பாதுகாக்கச் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன.

அதில் மிக முக்கியமானது, மனதை அலைக்கழிக்கும் உணர்ச்சிகளை அடையாளம் காண்பது.

ஏன் அந்த குறிப்பிட்ட உணர்ச்சி  ஒருமுகத் தன்மையைப் பாதிக்கிறது? என்பதைக் கண்டுபிடிக்க முயலவும்.

அதில் தான் அந்த உணர்வின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடையும் வழி மறைந்து உள்ளது.

5. தியானம்:

மனதிற்கு நாம் செய்யக்கூடிய சிறந்த காரியங்களில் ஒன்று தியானம் செய்வது.

தியானம் செய்யும்போது, மனம் ​​ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தப் பயிற்றுவிக்கப் படுகிறது. தலையில் சுழலும் மற்ற எண்ணங்களின் ஆதிக்கம் விலகுகிறது.  

ஒரு குறிப்பிட்ட வேலையைச் கூர்ந்து செய்ய முயலும்போது, இது நம்பமுடியாத அளவிற்குக் கவனச் சிதறலைத் தவிர்க்க உதவும்.

மேலும், தியானம் மன அழுத்தத்தைக் குறைத்துத் தூக்கத்தை மேம்படுத்தும். 

6.  கனிவுடன் இருங்கள்:

பணியில் தவறு நேர்ந்தால், அல்லது கவனம் செலுத்த முடியாவிட்டால், குற்ற உணர்வு அடைய வேண்டாம். 

மனதைக் குற்றப்படுத்தி கடினமாகத் தண்டனை அளிக்கக் கூடாது. 

அதற்குப் பதிலாக, இது ஏன் நடக்கிறது? என்பதைப் புரிந்து கொள்ள முயலவும். 

எதிர்காலத்தில் அதே தவறு மீண்டும் நிகழாதவாறு உதவ ஏதாவது படிப்பினை இருக்கிறதா? என்பதைப் பார்க்கவும்.

உங்களைச் சுற்றி யாராவது இடையூறு விளைவித்தால், அவர்களுடன் கோபப்படுவதற்கு முன்பு அவர்கள் அதை ஏன் செய்கிறார்கள்? என்பதைப் புரிந்துகொள்ள முயலவும்.

மனது கனிவுடன் இருப்பது மிக முக்கியம். மற்றவர்களிடமும் கருணை காட்டுவதும் முக்கியம்.

7. எண்ணங்கள் எங்குச் செல்கிறது?

எண்ணங்கள் எப்போதும் நம்மை எங்கோ அழைத்துச் செல்கின்றன. நாம் கவனமாகக் கடிவாளம் போட விட்டால், அவை நம்மை எல்லாவிதமான எதிர்மறையான சிந்தனைகளுக்கும் கூட வழிநடத்தும்.

ஆனால் நம் எண்ணங்கள் எங்குச் செல்ல வேண்டும் என்பதைக் கற்பனை செய்யக் கற்றுக்கொண்டால், அலைந்து திரியும் மனதைக் கட்டுப்படுத்தி, நேர்மறையான சிந்தனைக்கான பாதையில் பயணிக்க வைக்க முடியும்.

எடுத்துக்காட்டாக, இன்று வேலையில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் கோபமாக உணரும்போது, ​​ஒரு கணம் நிறுத்தி, இந்த சிந்தனைத் தொடரின் எதிர்கால தாக்கங்களைப் பார்க்க முயலவும்.

உங்கள் நேரத்தையும் சக்தியையும் இதற்காகச் செலவிடுவது மதிப்புள்ளதா?

எந்த வழிகளில் இது உங்கள் வாழ்க்கையைச் சிறப்பாக அல்லது மோசமாக்கும்?

உங்கள் இலக்குகளை நோக்கி உங்களை நகர்த்துவதில் இது ஏதேனும் நோக்கத்திற்கு உதவுமா?

மறுபுறம், இது உங்கள் கனவுகளைத் தொடருவதிலிருந்து உங்களைத் திசை திருப்புமா?

இந்த சம்பவம் வேறு யாருடனும் விவாதிக்கப்பட வேண்டும்

இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம், பல அழிவைத் தரும் எண்ணங்கள் மனதில் வேர்விடும் முன் அவற்றைத் தவிர்க்க உதவும்.

இந்த 7 வழி முறைகள் கவனமுடன் பயிற்சி செய்வது சிறந்த முடிவுகளை எடுக்க உதவும்.

2 கருத்துகள்: