சனி, 3 ஆகஸ்ட், 2019

நான் மாறிக் கொண்டே இருக்கிறேன்






எனது அன்பு நண்பர் தனது 50 வயதைக் கடந்து வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கிறார்.

அவரிடம் வாழ்க்கையை அணுகும் முறையில் இப்போது ஏதேனும் மாற்றத்தை உணருகிறீர்களா? என வினவினேன்.

அவரின் பதில் :


ஆம் சகா! நான் என்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறேன்.

எனக்காக:


இத்தனை வருடங்களாக, எனது அன்பு, நேசம், உழைப்பு அனைத்துமே, பெற்றோர், உடன்பிறப்பு, வாழ்க்கைத்துணை, குழந்தைகள் என இவர்களைச் சுற்றியே வட்டமிட்டு வந்தது.

இப்போதுதான் முதன்முறையாக நான் எனக்காக வாழ வேண்டும் எனும் ஆசைத் துளிர்க்கிறது. இன்று நான் என்னையும் நேசிக்கிறேன். 

தற்போது புரிகிறது. நான் ஒன்றும் "ATLAS" இல்லை, எல்லா சுமைகளையும் என் தோளிலேயே சுமந்து திரிவதற்கு.


பணமும் ; மனமும்:


இப்போதெல்லாம் நடைபாதை வியாபாரிகளிடம் பேரம் பேசுவதே கிடையாது. அந்த சொற்ப பணத்தை வைத்து நான் என்ன மாட மாளிகையா கட்டப் போகிறேன்? 

ஐயோ போகட்டும். 

அந்தச் சிறு தொகை அவர்கள் குழந்தைகள் பள்ளிக் கட்டணத்துக்கு ஒருவேளை உதவக் கூடும் இல்லையா?

அது போல் பயணத்தில் Auto/ Taxi driver இடம் கட்டணத் தொகை கொடுத்தால், மீதம் உள்ள சில்லறையை எதிர்பார்ப்பது இல்லை. 

"வச்சுக்கோப்பா" என்கிறேன். 

அப்போது அவர்கள் முகம் மலர்வதைப் பார்க்க வேண்டுமே!!. 

அத்தனை மலர்ச்சி. 

பாவம் அவர்கள். 

உண்மையில் எளிய மக்களின் வாழ்க்கையும், உழைப்பும் எனது வாழ்வைவிடப் பல மடங்கு கடினமானது.

அவர்களின் மலர்ச்சியில் மனம் மகிழ்கிறது.

கரிசனையும் ; கவனமும்: 


இப்போதெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் திரும்பத் திரும்ப சொல்லும் அதே கதைகளை ஆர்வமுடன் கேட்கிறேன்.

அந்தக் கதைகளைச் சொல்லும் போதெல்லாம் அவர்கள் தாங்கள் வாழ்ந்த அந்த இனிமையான நாட்களுக்குள் நினைவுகளின் வழியே பயணிக்கிறார்கள். 

அதில் தான் அவர்களுக்கு எத்தனைப் பரவசம்.

மாற்றம் என்னில் மட்டும்:


ஒன்று தெரியுமா? இப்போது புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டுள்ளேன்.!!! 

அதாவது  எனக்கு நன்கு  தெரிந்தாலும்  தவறுகளைக் கண்டு கொள்வதில்லை.!!! 

நானே முனைந்து அதைத் திருத்தவும் முற்படுவதில்லை. 

அது சரி, உலகில் உள்ள ஒவ்வொருவரையும் பரிபூரணப் படுத்திச் சரி செய்யவா நான் பிறந்திருக்கிறேன். 

மற்றவரைச் சீர் செய்வதை விட எனது அமைதி முக்கியமானது.

பாராட்டு:


அனைவரின் தாலந்துகள், திறமைகளை மனம் திறந்து பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். ஊக்கப்படுத்துகிறேன். 

இதனால் பாராட்டைப் பெறுபவர் மாத்திரம் அல்ல. என்னையும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.

உள் அழகு:


என் ஆடைகளில் தென்படும் சிறு கரை, கசங்கிய உடை இதெல்லாம் பற்றி நான் இப்போது அலட்டிக் கொள்வது கிடையாது. 

எனக்கு நன்கு புரிந்துவிட்டது. 

தோற்றத்தை விட நடத்தையே நம்மைக் குறித்து அதிகமாகப் பேசுகிறது.

நட்பு ; உறவு ; விமர்சனம்:


எனது தகுதியைக் குறைத்து மதிப்பிடுபவர்களைக் கண்டால் புன்னகைத்து விலகி விடுகிறேன். பாவம், என் மதிப்பையும் தகுதியையும் அவர்கள் அறியவில்லை. ஆனால் நான் அதை உணர்ந்திருக்கிறேன். 

என் உயர்வில் பொறாமை கொண்டு குழுக்களைச் சேர்த்துக் கொண்டு சில்லறை அரசியல் செய்து போட்டிப் போடுபவர்களைப் பார்த்தால் மெலிதாக முறுவலிக்கிறேன். 

பாவம் அவர்கள். என்னைத் தனிமைப் படுத்த திட்டம் தீட்டுகிறார்கள். உண்மையில் எனக்கும் அவர்களுக்கும் பொதுவான பந்தயம் என்று எதுவும் கிடையாது. 

அவர்கள் பாதை வேறு. எனது பாதை வேறு.

நான் எனது இயல்பான உணர்வுகளான அழுகை, கோபம், விருப்பம் குறித்து மறைக்கவோ, வெட்கப்படவோ கூடாது எனக் கற்றுக் கொண்டிருக்கிறேன். 

ஏனெனில் அந்த உணர்வுகள்தான் எனது மனிதத்ன்மையின் பிரதிபலிப்பு.

உறவா? எனது சுய பெருமையா? 

எது முக்கியம் எனும் கேள்வி எழுந்தால் உறவைக் காப்பாற்ற எனது Ego வை விட்டுக் கொடுக்கிறேன். 

உறவுகளே கர்வத்தை விட முக்கியம். 

பிழையை உணர்ந்து மன்னிப்பு கேட்பது தவறில்லை. 

தனிமையை விடக் கூட்டாளி முக்கியம்.

இறுதியாக ...,


இப்போது நான் கற்றுக்கொண்ட சிறந்ததொரு உண்மையை உன்னிடம் சொல்கிறேன்.

ஒவ்வொரு நாளையும் இதுதான் எனது வாழ்வின் கடைசி நாள் என் உணர்வோடு வாழக் கற்றுக் கொண்டுள்ளேன். 

ஏனெனில் ஒருவேளை உண்மையிலே அது கடைசி நாளாகவும் கூட இருக்க கூடும்!!!

யாருக்குத் தெரியும்?

பிரிய சகா!


எது எனக்கு அமைதியைத் தருகிறதோ அதையே நான் தொடருகிறேன்.

எனது வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு நானே பொறுப்பு என உணர்கிறேன்.

மகிழ்ச்சியும், அமைதியும் என் கையில் தான் இருக்கிறது.

அன்பு மித்ரு

நான் என்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும்!!!


(ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

(படம் நன்றியுடன் :  ராமலக்ஷ்மி  - http://tamilamudam.blogspot.com/  )

10 கருத்துகள்:

  1. நாம் நம்மை புதுப்பித்துக் கொண்டே இருப்போம்

    பதிலளிநீக்கு
  2. அருமையான கட்டுரை...

    இன்றைய எனது பதிவும் இதை நோக்கியே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி. உங்கள் பதிவை வாசிக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு. தனபாலன்.

      நீக்கு
  3. இது போதும் என்கிற எண்ணம்
    வரும்போது மகிழ்ச்சியும்
    தானே வந்துவிடுகிறது.
    அந்த மகிழ்ச்சியின்
    வெளிப்பாடு தான்
    இந்தக் கட்டுரை.

    ஐம்பதுகளின் எண்ண ஓட்டம் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

    அருமையான பதிவு.


    ராஜன்.சே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "போதும் என்கிற மனமே மகிழ்ச்சிக்கான விதை". உண்மை தான். கருத்துக்கு மிக்க நன்றி Rajan Sir.

      நீக்கு
  4. அருமையாகச் சொல்லப்பட்டுள்ள கருத்துகள். கவனத்தில் கொள்ள வேண்டியவை. நல்ல பகிர்வு. Ego முக்கியமா, நட்பு, உறவுகள் முக்கியமா என்பதைப் பற்றி சொல்லியிருப்பது சிறப்பு.

    தகவலுக்காக: கட்டுரைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒளிப்படம் நான் எடுத்தது:). இலங்கை விகரமகாதேவி பூங்காவில் அதிகாலை ஏழுமணி அளவில் தனித்து அமர்ந்திருந்த முதியவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைக் கவர்ந்த படங்களை எனது சேமிப்பில் வைத்துள்ளேன்.

      இந்தப் படம் பொருத்தமாக இருந்ததால் பயன்படுத்தினேன்.

      உங்களது படம் என்பது எனது கவனத்தில் பதிவிடும்போது நினைவுக்கு வரவில்லை.

      அனுமதியின்றி பயன்படுத்தியதற்குத்
      தயவாய் பொறுத்துக் கொள்ளவும்.

      கருத்துரைக்கு மிக்க நன்றி மேடம்.

      நீக்கு
    2. பொதுவாக நாம் அனைவரும் பதிவுகளுக்கு இணையத்திலிருந்து படங்களைப் பயன்படுத்துவது வழக்கம்தானே. ஒரு தகவலாகவே பகிர்ந்து கொண்டேன். உங்கள் கட்டுரைக்குப் பொருத்தமாகப் பயன்பட்டதில் மகிழ்ச்சியே. எனது எந்தப் படங்களை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

      நீக்கு