செவ்வாய், 15 அக்டோபர், 2019

வேற்று விகார விடக்கு

திருவாசகம் : வேற்று விகார விடக்கு - வேறு வேறு உருவங்களில்.




காலப் பெருவெளியின் சமுத்திரத்தில் 
அலை அலையாக எழும்புகிறது 
மானுடத் தலைமுறைகள்! 
தனி வாழ்வு அதிலோர் அனுவிலும் 
சிறிதான நீர்த்துளிச் சிதறல்.  

கவனச்சிதறலாக கடந்துபோன 
வாழ்வில்தான் 
எத்தனை விருதாவன 
உட்கிடக்கைகள். 

தவறவிட்ட வாய்ப்புகளும் 
தவறி விழுந்த தடுமாற்றங்களும்
தந்திட்ட தீரா வலிதானே
தவத்திற்கு விதையானது. 


வயதானால் உடலின் புறத் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுகிறது. கறுத்த முடி வெண்மையாகிறது. பற்கள் உதிர்கிறது. தோல் சுருக்கம் அடைகிறது. முதுகு வளைந்து கூன் விழுகிறது. உடல் விகாரமாகிறது. எனினும் இவ்வுடம்புடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறோம். 
ஆனால் மாணிக்க வாசகர் அவர்கள் "ஆற்றேன்" என்கிறார். "ஆற்றேன்" என்ற சொல்லுக்கு "பொறுக்க முடியவில்லையே" என்பது பொருள். தாங்கமுடியாத வேதனையுடன் இந்த உடலுக்குள் என்னால் இருக்க முடியவில்லையே என முறையிடுகிறார் அருளாளர்.
ஐம்புலன்களை ஏமாற்றும் வஞ்சகன் என்கிறார். 
ஏன்? புலன்களே தவறு செய்ய நம்மைத் தூண்டுகின்றன. அதனால் மனம் சஞ்சலம் அடைகிறது. அவை குற்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. 
அதை மீண்டும் செய்யாது இருக்கப் புலன்களே யோசனை சொல்கின்றன. அதை நம்புகிறோம். கீழ்ப்படிந்து கடைப் பிடிக்கிறோம். சிறிது நாள் சென்ற பின்பு குற்றவுணர்வு மங்குகிறது. 
இப்போது புலன்களே ஆசையை மீண்டும் துளிர்க்கச் செய்கின்றது. அவற்றால் மீண்டும் உணர்வுகள் தூண்டப்படுகிறது. எதைச் செய்ததால் மனம் வருந்தியதோ, எதைச் செய்யக்கூடாது என மனதில் நினைத்தோமோ அதையே மீண்டும் துணிகரமாகச் செய்கிறோம். 
ஆக புலன்களே நம்மை மீண்டும் மீண்டும் தவற்றில் விழவைத்து மனதைப் பலவீனப்படுத்திச் சிறைபிடிக்கின்றன. எனவே புலன்களை ஏமாற்றும் வஞ்சகம் என்கிறார்.
புலன்கள் அளிக்கும் சிற்றின்ப உணர்வுகள் என்பது பொய்ப் பொருள். அது அறியாமை எனும் இருள். அது மயக்கும் இயல்புடையது. திரும்பத் திரும்ப அனுபவிக்க வேண்டும் எனும் தீரா வேட்கையை எழுப்பக்கூடியது. மனதை அடிமைப்படுத்தும். கவனச் சிதறலை ஏற்படுத்தும். வாழ்வின் நோக்கத்தை மறக்கடிக்கும். இறுதியில் காலத்தில் வாழ்க்கையை வீணடித்து விட்டோமே எனும் தீரா துயரத்தையும் மன வேதனையும் அளிக்கும்.
இந்தச் சிற்றின்பச் சேற்றிலிருந்து மீட்கப்பட இறைமையின் ஒத்தாசை தேவை. 
நாமாக உளைச் சேற்றிலிருந்து விடுபட முடியாது. சொந்த முயற்சியில் விடுபட முயன்றால் இன்னும் அமிழ்ந்து போய் விடுவோம்.
அதிலிருந்து வெளியேற நமக்கு உதவி தேவை. கைதூக்கி விடப்பட வேண்டும்.  இந்த அறிவை அறிவது மெய்ப்பொருள். இவ்வாறு உணர்வது புத்தி.
எனவே மெய் அறிவு அடைந்தவர்கள் இந்த உடம்புடன் நெடுநாட்கள் உயிர்வாழ வேண்டும் என்பதை முக்கியமாகக் கருதக்கூடாது.
மாறாக, வினைச் சுழற்சிக் கட்டிலிருந்து அறுத்து என்னை விடுவிக்க  இறைவனே உம்மால் மட்டுமே முடியும் என அவரிடம் சரணாகதி ஆவதே உயிர் வாழ்தலின் முக்கிய பயன் என உணர்தல் வேண்டும்.




திருவாசகம் பாடல் : 

84. வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப 
85. ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று 
86. போற்றி புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானார்,
87. மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
88. கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே 
89. நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே 
90. தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே  
91. அல்லல் பிறவி அறுப்பானே ஓ வென்று 
92. சொல்லற் கரியானைச் சொல்லி திருவடிக் கீழ்ச் 
93. சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் 
94. செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவன் அடிக்கீழ் செல்வர் 
95. பல்லோரும் ஏத்த பணிந்து
இவ்வுலகில் இறைவன் திருவிளையாடல் புரிந்த இடம் தென்பாண்டிய நாட்டின் தலைநகரம் மதுரை. நள்ளிரவிலும் இறைவன் விரும்பி ஆடும் இடம் தில்லை. இது இறைமையின் இருப்பையும், உடலின் அகத்தையும் குறிப்பது.
இந்தப் பாடலின் பொருளையுணர்ந்து உடலினுள் உறைந்து சர்வ காலமும் நடனம் புரியும் இறைவனை இடைவிடாது துதித்தல் வேண்டும். 
அவ்வாறு இறைவனை இடைவிடாது துதிப்பவர் ஏக இறைவன் வாழும் சிவபுரத்துக்குச் செல்வர். சிவபெருமானது திருவடிக்கீழ் சென்று நிலைபெறுவர்.

4 கருத்துகள்:

  1. ஆக புலன்கள் நம்மை கட்டுப்படுத்த முயல நாம் இறைவன் துணையோடு அதிலிருந்து விடுபட்டு இறைவனடி சேர முயல்வோம்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான விளக்கம். மெய்ப்பொருள் அறிவோம். ஆரம்பக் கவிதை வரிகளும் நன்று.

    பதிலளிநீக்கு