திங்கள், 8 மே, 2017

பிறவிப் பயன்

பிறவிப் பயன்.


ஆன்மீகத்தின் சாரம் :

  • வாழ்வின் முதன்மை நோக்கம் கடவுளை அறிதல், 

         அவரில் அன்பு கூருதல்.

  • தன்னை போல் அனைத்து உயிர்களையும் நேசித்தல்.


கற்றதனால் ஆய பயனென்கொல்? வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

கல்வியின் நோக்கமும் பயனும் கடவுளை உணர்ந்து வணங்குவதே.

உங்களுக்கு மிகவும் பிடித்தமான சொல் எது எனக் கேட்டால்  என் உடனடி பதில் "சிந்தனை "!

சுவாரஸ்யமான தேடல் நிறைந்த வார்த்தை சிந்தனை.

சிந்தனை எப்படி உருவாகிறது? எப்படிச் செயல்படுகிறது?
என்பதை அறியாமல் வாழ்வின் போக்கை கட்டுப்படுத்த இயலாது.

வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் மேல் நமக்கு எந்த வித அதிகாரமோ,
ஆளுமையோ இருக்காது.

நீர் வழி மிதந்து செல்லும் தக்கை போல் வாழ்க்கை பயணம் அமைந்திடும்!

மனிதர்களின் சிந்தனை பலவித உணர்வு நிலைகளால் கட்டுப்படுத்தப்பட்டு
வழிநடத்தப்படுகின்றன.

உணர்வுகள் அனுபவித்தல் மூலமாக மனதில் பதியப்படுகிறது.

அதாவது நமக்கு இன்பமும், திருப்தி அளிப்பவை நல்லது என்றும்
துன்பமும், அதிருப்தி அளிப்பவை தீமை என்றும் மனதில்
பதியப்படுகிறது.

இந்த நம்பிக்கை அடிப்படையிலேயே நாம் செயலாற்றுகிறோம்.

நமது நம்பிக்கை அனைத்தும் சரியானவையா?

இல்லை என்பது அனைவரும் அறிந்த பதில்.

வயதும், அனுபவங்களும் நம் தவறான நம்பிக்கைகளை
உணர்த்துகின்றன.

காலம் கடந்த உணர்வடைதல் பல தனிப்பட்ட இழப்புகளையும்,
நம்மைச் சார்ந்து வாழ்பவர்களுக்கு மன வேதனையையும், வருத்தத்தையும்,
துயரத்தையும் அளிக்கிறது.

அப்படியென்றால் சிந்தனையை நெறிப்படுத்த முடியுமா?

நிச்சயமாக முடியும்!

சிந்தனையைக் கட்டமைக்க பலவிதமான வழி முறைகள் போதிக்கப்படுகின்றன.

அவற்றுள் முதன்மையானது ஆன்மீகம்.

ஆன்மபோதம் நம்பிக்கையை, சிந்தனையை ஓழுங்கு படுத்த உதவுகின்றது.

ஆன்மசுத்தி விருப்பங்கள் - தேடல் - நம்பிக்கை - சிந்தனை - சொல் - செய்கை
எனப் பரிணமிக்கிறது.

பலவித வாழ்க்கை சூழலே ஆன்மீக தேடலின் துவக்கத்திற்குக் காரணமாகிறது.

பொதுவாக

🔸 துயரம்,
🔸 தவறுகளை உணர்ந்தோர் அதற்காக வருந்துதல்,
🔸 தனிமை உணர்வு ஏற்படுத்தும் அச்சம்,
🔸 மரணம் குறித்து பயம்,
🔸சமயம் சார்ந்த பற்றுதல்,
🔸 ஆன்மீக குழுக்கள் தொடர்பு,
🔸 சேவை செய்தல் ஏற்படும் ஆர்வம்,
🔸 செல்வம், வள வாழ்வு தொடர,
🔸 சமூக மேன்மை, மதிப்பை பெற்றிட,
🔸 குற்றவுணர்விலிருந்து விடுபடல்
🔸 தற்செயல் ஈடுபாடு

என ஏதோ ஓர் ஈர்ப்பு ஆன்மீகம் நோக்கித் தள்ளுகிறது.

இளம் வயதில் நம் பெற்றோரை நேசிப்பதற்கும், அவர்களுடைய முதிர்ந்த வயதில் நாம் அவர்கள் மேல் அன்புகூர்தலுக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு?

ஆன்மீக தேடலும் அப்படித்தான்!

கடவுளின் மாசற்ற (Holy) , நிபந்தனையற்ற (Un Conditional) அன்பை உணரும்போது மட்டுமே உண்மையான ஆன்மீக தேடல் நம்முள் துவங்குகின்றது!

உண்மையான ஆன்மீக தேடல் சில பண்புகளை சிந்தனையில் உருவாக்கும்..

🔹 தவறுகளை உணர்தல், தவறுகளுக்காக வருந்துதல்.
🔹நல் எண்ணமுடையோர் தொடர்பை நாடுதல், அவர் கூட்டுறவு பேனுதல்,
🔹 மதமாச்சரியங்கள் கடந்து அனைத்துச் சமயங்களின் கருத்துக்களையும் மதித்தல்,
🔹 உண்மையின் மீது அளவு கடந்த நாட்டம்,
🔹பேசுவதில் கவனம், மௌனத்தில் பிரியம்,
🔹வாக்குறுதி, பொறுப்புணர்வு,
🔹மன உறுதி, தெளிந்த அறிவு,
🔹கற்றது கையளவு எனும் தெளிதல்,
🔹 உடல் நலம், மன நலம் பேணுதல்,
🔹 கோபம் நீக்கி அன்பு, அமைதி  விருப்பம்,
🔹 பெருமை அகன்று தாழ்மை,
🔹 பாரபட்சமின்றி நேசித்தல்,
🔹பிறர் குற்றம் பொறுத்தல், மன்னித்தல்
🔹எந்தச் சூழ்நிலையிலும் திருப்தி
🔹 தன்னை முன்னிறுத்த தயங்குதல்,

இத்தகைய மன மாற்றங்களை, குண நலன்களை  உண்மையான ஆன்மீக தேடலை நம்மில் உருவாக்கும்.

ஆன்மீக பாதையின் பயணிக்கும்போது     இடறல்கள் வரும். காமம், பெருமை, பொறாமை, கோபம், பேராசை உணர்வுகள் ஆழிப் பேரலை போல் நம்மை  தாக்கும்.

ஆன்மீக பயணம் சுலபமானதல்ல! கடினமானதும் அல்ல!!

நம் சுய பெலன் கொண்டு முயற்சித்தால் வழி தவறி விடுவோம்.

கடவுளின் அருளும், குருவின் துணையுடனும் நடந்தால் பாதையை கடப்பது மிகச் சுலபம்.
தூய்மை, உண்மை, எளிமை, அர்ப்பணம் இவற்றின் வழியே கடவுளிடம்
அன்பு கூறுவோம்.

கோள்இல் பொறியில் குணமிலவே ; எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

அருள், அறிவு, ஆற்றல் முதலிய எட்டு குணங்களை உடைய 
கடவுளைப்போற்றி வணங்கவே வழங்கப்பட்ட மனித உடலுறுப்புகள் 
அவ்வாறு செய்யாவிட்டால் அவற்றால் பயன் எதுவுமில்லை.


4 கருத்துகள்: