வியாழன், 26 செப்டம்பர், 2019

உயிரின் பாடல்

வாழ்வின் சங்கீதம். 

(A Psalm of Life).


கவிதையின் சாராம்சம் :


Psalm என்பது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடும் திருப்பாடல்களைக் குறிக்கும் ஓர் சொல். கவிஞரின் பார்வையில் வாழ்க்கை என்பதும் போற்றிக்  கொண்டாடப்பட வேண்டிய ஒரு அற்புதமான சங்கீதம். 

இந்தக் கவிதை நேர்மறை எண்ணங்களின் தொகுப்பு. 

வாழ்வு இயற்கை அளிக்கும் ஒரு உயர்ந்த பொக்கிஷம். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு சாதனை புரிய வேண்டும் என்ற ஆவல் இருக்கும். வாழ்ந்ததற்கான அடையாளத்தைப் பதிக்க ஆசைப்படுவோம். 

நெஞ்சில் கனன்று கொண்டிருக்கும் இந்த நெருப்பை, தீ மூட்டிவிடும் நெருப்புப்பொறி தான் இந்தக் கவிதையின் வார்த்தைகள். 

கவிதை சொல்லும் அற்புதமான கருத்துக்கள் :

உலகம் வாய்ப்புகளால் நிறைந்துள்ளது. மானுட வாழ்வு குறுகிய கால அளவு உடையது. நேரத்தை வீணடிக்காது திறம்படச் செயல்படுவதே முக்கியம்.
புலம்பல்களை வீசியெறிந்துவிட்டு,  நேர்மையோடும், நீதியோடும் இதயத்தின் சத்தத்துக்குச் செவிமடுத்து அயராது ஒவ்வொரு கணமும் உழைத்தால் வாழ்க்கை வரலாறாக மாறும்.

வாழ்க்கை என்பது கல்லறை நோக்கிய பயணம் அல்ல. இறந்தகாலத்தின் இனிப்பான,  கசப்பான எச்சங்களும் அல்ல. எதிர்காலத்தின் ஏக்கமும் அல்ல. நிகழ்காலத்தில் திறம்பட உழைப்பது. அது அழியாததொரு தடத்தை வரலாற்றில் பதிக்கக் கிடைக்கும் அரிய வாய்ப்பு. 

உடல் அழியும். ஆனால் ஆன்மா எழுதிய கதை சிறப்பாக இருந்தால் அது என்றென்றும் நிலை நிற்கும்.

ஆசிரியர் வரலாறு :


(Henry Wadsworth Longfellow - February 27, 1807 – March  24, 1882
ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ என்பவர் ஒரு உலகப்புகழ் பெற்ற கவிஞர், கல்வியாளர் ஆவார். 

இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் இயற்கை, கலாச்சாரம், தார்மிக மதிப்பீடுகள், மக்களின் பொருள் தேடும் பயணம் முதலானவை குறித்து இருந்தன. 

புகழ்பெற்ற பிற மொழிப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். மொழிபெயர்ப்பாளர்களை ஊக்கப்படுத்தியவர். இவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1836-ல் ஹார்வர்டு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பேராசிரியர் பணியிலிருந்து 1853-ல் ஓய்வு பெற்று முழுநேர எழுத்துப் பணியில் ஈடுபட்டார்.

‘எ பில்கிரிமேஜ் பியாண்ட் த ஸீ’ (A Pilgrimage Beyond the Sea)  என்ற பயண நூலை 1839இல் எழுதியுள்ளார். 

பின்பு ‘வாய்சஸ் ஆப் த நைட்’ (Voices of the Night) என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 

இதைத் தொடர்ந்து ‘தி வில்லேஜ் ஆஃப் பிளாக்ஸ்மித்’, ( The Vilage of Blacksmith),  ‘த ரெக் ஆஃப் த ஹெஸ்பெரஸ்’ (The Wreck of the Hesperus), உள்ளிட்ட இவரது கவிதைத் தொகுப்புகள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றன. 

ஐரோப்பா, ஆசியா, அரேபிய நாடுகளை சேர்ந்த பல புகழ்பெற்ற கவிதைகளைத் தொகுத்து 31 தொகுதிகளாக ‘போயம்ஸ் ஆஃப் பிளேசஸ்’ (Poems of Places) என்ற பெயரில் 1874-ல் வெளியிட்டார்.
1861-ல் உடையில் தீப்பற்றியதில் மனைவி இறந்தார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு மழிக்க முடியாமல் போனதால் நீண்ட தாடி வளர்ந்தது. நாளடைவில் அதுவே அவரது அடையாளமானது. லாங்ஃபெல்லோ 75 வயதில் (1882) மறைந்தார்.
(ஆசிரியர் பற்றிய குறிப்பு தமிழ் விக்கிபீடியா வில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.)

கவிதையின் அழகு :




இக் கவிதையின் ஒவ்வொரு பத்தியிலும் முதல் மற்றும் மூன்றாம் வரிகளின் கடைசி வார்த்தை Rhyming இல் அமைந்திருக்கும். (Numbers, slumbers ; earnest,  returnest ; sorrow,  morrow...,)

அது போல்  இரண்டாம் மற்றும் நான்காம் வரிகளின் கடைசிச் சொற்கள் Rhyming ஆக இருக்கும்.(dream, seem ; goal, soul ; way, day...,)


*******   *******   *******

உயிரின் பாடல் 



நிறுத்துங்கள்! துயர் மிகுந்து புலம்பியது போதும்.
ஆன்மா மரித்து நித்திரையடைந்தது, 
வாழ்வு ஓர் வெற்றுக் கனவு, 
தோற்றமெல்லாம் மாயை 
எனும் சோக கீதங்கள் இசைத்தது போதும்.

வாழ்வு உண்மை! வாழ்வு ஊக்கம்!
வாழ்வின் இலக்கு கல்லறை அல்ல. 
மண்ணில் உருவாகி புழுதியில் புதைவது 
உடல் மட்டுமே ; ஆன்மா அல்ல.

மகிழ்ச்சியும் துயரமும் மட்டுமல்ல வாழ்வு. 
முடிவு அது அன்று ; இன்னும் கொஞ்சம், 
இன்னும் கொஞ்சம் என முன்னேறத் 
துடிக்கும் ஏக்கத்தின் தேடலால் நிரப்பு. 

வாய்ப்புகள் ஏராளம். 
நேரமோ சிறகை விரித்துப் பறக்கிறது.  
இதயம் வலிமையுடன் தைரியமாகத் துடிக்கிறது. 
இருப்பினும் மரண அச்சம் துளிர்க்கையில் 
இதயத்துடிப்பு பறையோசயின் இலயமாக இசைக்கிறது. 

உலகின் அகன்றதொரு போர்க்களத்தில் 
வாழ்க்கைப் போராட்டம் தற்காலிகம்.
இதில் ஊமையாகவோ, உந்தப்பட்டு 
வழிநடத்தப்படும் கால்நடையாகவோ வாழாதே. 
நாயகனாகப் போர் புரி.

வனப்புடன் வசப்படுத்தத் துடிக்கும் எதிர்காலம் இருக்கட்டும். 
இறந்த காலத்தின் மரித்த நினைவுகளை மரித்தவரோடு அடக்கம் செய். 
தற்கணச் சூழலில் செயலாற்று. நிகழ்காலம் மட்டும் நிஜம். 
இதயத்தின் குரலுக்குச் செவிமடு, இறைவன் அதனுள்ளே.

வரலாற்றின் சிறந்த சாதனையாளர்கள் 
நினைவூட்டுவது எல்லாம் 
நமது கதைகளும் விழுமியங்களாகட்டும்.
கடந்து செல்லும்முன் காலத்தின் மணற் பரப்பில் 
அழுத்தமான கால்தடத்தை அழியாதவாறு பதித்துவிட்டுச் செல்.


உனது தடம் புனித முத்திரையாகட்டும்.
கப்பல் உடைந்து, கடினமான பயணத்தின் 
நொறுங்கிய இதயத்துடன் தவிக்கும் மனதுக்கு 
நீ பதித்த தடங்கள் வழி காட்டட்டும். 

எழுந்திரு! இதயம் தளராது செயலாற்று. 
எந்த விதியையும் எதிர்கொள். 
இன்னும் சாதிக்க வேண்டும். 
இடைவிடாமல் தொடர்ந்து முன்னேறு. 
உழைப்பதற்கும், காத்திருப்பதற்கும் 
எப்போதும் கற்றுக்கொள்.

*******   *******   *******

மூலப் பாடல்

A Psalm of Life 

(by Henry Wadsworth Longfellow)



Tell me not, in mournful numbers,
Life is but an empty dream!
For the soul is dead that slumbers,
And things are not what they seem.
Life is real! Life is earnest!
And the grave is not its goal;
Dust thou art, to dust returnest,
Was not spoken of the soul.
Not enjoyment, and not sorrow,
Is our destined end or way;
But to act, that each to-morrow
Find us farther than to-day.
Art is long, and Time is fleeting,
And our hearts, though stout and brave,
Still, like muffled drums, are beating
Funeral marches to the grave.
In the world’s broad field of battle,
In the bivouac of Life,
Be not like dumb, driven cattle!
Be a hero in the strife!
Trust no Future, howe’er pleasant!
Let the dead Past bury its dead!
Act,—act in the living Present!
Heart within, and God o’erhead!
Lives of great men all remind us
We can make our lives sublime,
And, departing, leave behind us
Footprints on the sands of time;
Footprints, that perhaps another,
Sailing o’er life’s solemn main,
A forlorn and shipwrecked brother,
Seeing, shall take heart again.
Let us, then, be up and doing,
With a heart for any fate;
Still achieving, still pursuing,
Learn to labor and to wait.

*******   *******   *******

4 கருத்துகள்:

  1. அழகான,
    தெளிவான,
    மொழிபெயர்ப்பு.

    வாழ்த்துக்கள்.

    ராஜன்.சே

    பதிலளிநீக்கு
  2. நிச்சயமாக சொல்வேன்..

    நீங்கள் மிகுந்த ரசனையான ஒரு மனிதர்.. அற்புதமான கவிதை மொழிபெயர்ப்பு...

    பல வட்டங்களில் சுழன்று பல விடயங்களை அறிய தருகிறீர்கள்..

    நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும் உற்சாகமான பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.:)

      நீக்கு