வியாழன், 19 செப்டம்பர், 2019

கடலோடு உறவாடி

நானும் எனது கடலும்.., 



மசூதியை ஒட்டிச் செல்லும் அந்தச் சாலை
வளைந்து நெளிந்து செல்லும் 

கருநாகம் போல் படுத்துக் கிடக்கின்றது.
கார்கூந்தல் எனச் சொல்ல
ஏனோ இப்போது மனமில்லை


சாலைக்கு அப்புறம் சலசலக்கும் கடல்.

பெரும்பாலும் அந்தச் சாலை
ஆள் அரவமற்று 
அமைதியும் 
கடலின் சலசலப்புமாக இருக்கும்.

கடலுக்கும் எனக்குமான உறவு
ஏதோ ஒரு பூர்வ ஜென்ம பந்தம்


கடலுக்கு எதையும் சொல்லிப்
புரியவைக்கத் தேவையில்லை
ஆகவே அது ஆதித் தாயாக
இருந்திருக்கக்கூடும்


ஒவ்வொரு நாளும் அதற்கு முன்பாக 
ஆவலுடன் அமர்ந்திருக்க ஓடுவேன்

கடல் காத்திருந்ததா எனத் தெரியாது
ஆனால் எதிர்பார்த்திருக்கும் 
என நானே எனக்குள் சொல்லிக் கொள்வேன்

மகிழ்ச்சி, கண்ணீர்
துள்ளல், ஆற்றாமை
ஆசை, இழப்பு
எதிர்பார்ப்பு, தவிப்பு
உற்சாகம், ஏக்கம்
காதல், மோதல்
என எனது உணர்வுகள் எதுவாயினும்
கடல் முன்பாக அமர்ந்தால்
பிரமாண்டத்தின்
முன்பாக நான் ஓர் சிறு துளி


ஆக அதற்கு என் அத்துணை 
உணர்வுகளும் அத்துப்படி
எனினும் கடல் உணர்வுகளை
அலைகள் மூலமே அறியமுடியும்
இங்கும் அங்குமாக மாறி மாறி
பொங்கிச் சலசலக்கும்

உண்மையில் கடலைப் பற்றி
எனக்கு அவ்வளவாய் 
தெரியாது
தெரிந்து கொள்ள முயன்றாலும் முடியாது 
அதுவாகவே எதுவும் சொல்லாத வரை

எனது கடலின் அழகு அதன் நிறத்தில்
பச்சோந்தி போல

ஒவ்வொரு மணிக்கும் 
ஒவ்வொரு நிறமாக மாறும்
அதிகாலை செந்நிற சாம்பல்
பின் வெளிர் நிற பச்சை 
மதியம் அடர்த்தியான நீலம் 
அதைத் தொடர்ந்து கரும் பச்சை
மாலையில் தங்க மஞ்சள்
செவ்வான சூரியனை விழுங்கி அடர் கறுப்பாக 
என தினுசு தினுசாக மாறி மாறி
புரிந்து கொள்ளவே இயலாததாக

எனினும் நீலம் எனக்குப் பிடிக்கும்
அதற்கும் கூட அப்படியே இருக்கலாம் 

ஏனெனில் அது பெரும்பாலும் 
நீலமாகவே இருக்கிறது

இன்று வானம் செவ்வானமாகத்
தங்க நிறத்தில் தகதகக்கிறது


பொன்னிற மண்ணில் 
சின்னஞ்சிறு குழந்தைகள் 
அலையோடும் மணலோடும் 
ஓடி விளையாடிக் களித்து 
வெடித்துச் சிரிக்கின்றனர்

கடற்கரை மணலில் நண்டுகள் 
அதன் வளைப் பொந்துகளுக்கும்
கடலுக்கும் இடையில் சர சர என 

அங்கும் இங்குமாக ஓடி ஓடி உறவாடுகின்றன

மணற்பரப்பு நெடுக 
இதயங்கள் வரையப்பட்டு 
அலைகள் அழிப்பதற்காகக் 
காத்து நிற்கின்றன

இன்றும் கடலுக்கு முன்பாக
பிரமாண்டத்தின் 
முன்பாக 
ஒரு சிறு துளியாக நான்

உடை நனையாது அதைச் சரி செய்து
பாதம் மட்டும் அலை தொடும்படி
எச்சரிக்கையாக அமர்ந்தேன்


பாதம் தொட்ட குளிர்ந்த நீரினால்
மனம் பரவசமானது


பரவச மயக்கத்தில் மனம் மயங்க
இன்னும் கொஞ்சம் முன் நகர்ந்தேன்

பாதம் தொட்டுத் தழுவி வழுவி
நுழைந்து புகுந்த நீர்
மனதில் உணர்வுகளோடும்
உடலோடும் உறவாடியது


கடலையேமெய் மறந்து பார்த்தேன்
மாறி மாறி அலைகள் மனதில்

சிறு குழந்தையாகக்
கற்பனை சிறகடித்தது


நானும் கடலும் சிறு பிள்ளைகளானோம்
காகிதக் கப்பல்களில் பயணித்தோம்

பாடல்கள் பாடினோம்
கதைகள் பகிர்ந்தோம்
கவிதைகள் செய்தோம்
பகடி செய்தோம் சிரித்தோம் 
பின்பு சிரித்ததை நினைத்து அழுதோம்
அழுததும் அழகானது

கடலின் ஓர் சிறு துளி தெறித்து
என் நெற்றியின் மத்தியில்
சிறு பிறை வரைந்து அழகு பார்த்தது


சீறிய அலை சிதறடித்த நீர்
கண்ணத்தில் அழுத்தமாகப்
பதிந்து மெல்ல வழிந்து
உதடுகளை உப்பாக நனைத்தது


கடலின் பேரலை சீற்றமா
அல்லது
மசூதியின் தொழுகைப் பாடலா
எது எனத் தெரியவில்லை


சிந்தனை கலைந்தது
திடுக்கிட்டுப் பார்த்தால் எதிரில் பேரலை


வெடுக்கெனப் பின்வாங்கி
வாரிச் சுருட்டி எழுந்துப் பின் வாங்கினேன்.


விளைவுகளைப் பற்றிப் புரிந்து கொள்ளாது
அடைய ஆசைப்பட்டு அலைவதும்

அதை அடைந்ததும் அலட்சியப் படுத்துவது
அல்லது பதறி விலகுவதும்
மனித இயல்பாக இருக்கிறது


கடல் எப்போதும் போல் தனது 
உவர்ப்பு மிகு அலைகளைச் 
சிறிதும் பெரிதுமாக மாறி மாறி எழுப்பி
இயல்பாகச் சலசலக்கிறது








4 கருத்துகள்:

  1. அருமையான வரிகள்.

    /பிரமாண்டத்தின் முன்பாக
    ஒரு சிறு துளியாக நான்/

    இயற்கையிடம் கற்றுக் கொள்ள ஏராளமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /பிரமாண்டம்/ உங்கள் அபிமான வார்த்தை. அந்த வரி உங்கள் எழுத்துக்களின் பாதிப்பு.

      உங்கள் பாராட்டு உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது.

      ஆம். தொடர்ந்து கற்றுக் கொள்வேன். :)

      நன்றி மேடம்.

      நீக்கு
  2. எழுத்தாக வந்த எண்ணங்கள் அருமை

    ராஜன்.சே

    பதிலளிநீக்கு