ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

32. கடிவது மற

ஆத்திசூடி - வார்த்தைகளால் எவரையும் காயப்படுத்தாதே.

(ககர வருக்கம்)





கடிவது மற : கோபத்திலும் எவர் மனதும் புண்படுத்தும் விதத்தில் பேசாதே.

இரண்டு விஷயம் : ஒன்று சினம். மற்றது வார்த்தை.

வாளால் ஏற்படும் காயத்தைவிட வார்த்தைகள் ஏற்படுத்தும் வலி கொடூரமானது.

அடிப்படையில் "நாம் விரும்பும்படி காரியங்கள் நடக்கவில்லை" எனில் கோபம் ஏற்படுகிறது.

பெரும்பாலும் கோபம் தன்னை விட வலிமை குறைந்தவர்கள் மீதே வெளிப்படுகிறது. 

கோபம், வன்முறை, கடுஞ்சொல் இவற்றால் சிறு குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

கடும் சொற்கள் முக மலர்ச்சியையும் அக மலர்ச்சியையும் கொல்லும்.

கோபம் ஒரு  நெருப்பு. அதைச் சரியாகக் கையாளாவிட்டால் சினமுற்றவரையே அழித்துவிடும்.

கட்டுப்படுத்தாத கோபம் கடுஞ் சொற்களாக வெளிப்படும். அந்த விஷச் சொற்கள் உள்ளத்தை உருவக்குத்தும். மனதில் வாழ்நாள் வடுவாகத் தங்கும்.

எத்தனை காலங்கள் கடந்தாலும் அது மறையாது. உறவுகளில் அது என்றும் இடறலாகவே இருக்கும்.

கோபத்திற்கு மாற்று அமைதியும் பொறுமையும்.

தமக்குத் தீங்கு செய்தவருக்கும் நன்மை செய்வது என்பது இறைமையின் பண்பு.

இனிய வார்த்தைகளை மட்டுமே பேசுவேன் என்பதை ஆழ் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்தல் மிக நல்லது.

இனிய வார்த்தைகள் பேசுவது ஒரு அறம்.

இனிய வார்த்தைகள் என்பது அன்புடனும் கரிசனையுடனும் பேசுவது.

இனிய சொற்களில் பொய் அல்லது வஞ்சனை இருக்காது.

தனக்கும் கேட்பவருக்கும் நன்மை தரும் இனிய சொற்கள் பாவம் நீங்கி  புண்ணியம் வளரும் எனத் திருக்குறள் போதிக்கிறது.

இனிய சொற்கள் இன்பத்தையும், நன்மையையும் தரும்.

இனிமையாகப் பேசுபவரை அனைவரும் விரும்புவார்கள்.

ஒரு வார்த்தைப் பேசும் முன்பாக அது ஏற்படுத்தும் விளைவுகளை அறிந்து பேசுபவர் அறிவு நிறைந்தவர்.

இதயத்தின் சிந்தனைகள் அன்பால் நிறையும்போது இனிய வார்த்தைகள் வெளிப்படும்.

அன்பை, மனித மாண்பை, இயற்கையை நேசிக்கத் தூண்டும் நூல்களை வாசிப்போம். நற்சிந்தையை வளர்ப்போம்.


இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.


திரு. சாலமன் பாப்பையா அவர்கள் உரை : மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.


4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. பல கருத்துக்கள் திருக்குறளிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது.
      மிக்க நன்றி திரு. தனபாலன்.

      நீக்கு
  2. அன்பு கலப்பில்லாத எந்த ஒரு சொல்லுமே கடுஞ்சொல் தான்.

    ராஜன்.சே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சுருக்கமாகச் சொல்லி விட்டீர்கள் Sir. நன்றி.

      நீக்கு