திங்கள், 25 மே, 2020

1. கடவுள் வாழ்த்து

திருவடி சரணம்.

(அறத்துப்பால்  - 1. கடவுள் வாழ்த்து)



மையக் கருத்து : 

இறைவனது உயர்ந்த குணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுவே  ஞானம். அவரது தூய  பண்புகளை உணர்ந்து அன்புடன் பணிந்து வணங்க வேண்டும். அதுவே பக்தி. அவரது திருவடிகளைச் சரணடைய வேண்டும். அதுவே பயன் நிறைந்த வாழ்வு.  

கருத்து சுருக்கம் :

இறைவன் உலகம் அனைத்திற்கும் முதன்மையானவர். பேரறிவுடைய அவரைப் புரிந்து பணிந்து வணங்குவதே நல்லறிவு. மலர்ந்த உள்ளம் அவர் இருப்பிடம். அவருக்குப் பிடித்தவர், பிடிக்காதவர் எனும் பாரபட்சம் கிடையாது. அவர் ஈடு இணையற்றவர். 

இறைவன் திருவடிகளில் தஞ்சமடைந்தால் புகழ் நிறைந்த பெருவாழ்வு அமையும். பிறவித் துன்பம் நீங்கும். இன்ப, துன்ப உணர்வுகள் பாதிக்காது. தீய உணர்வுகளின் தூண்டுதலில் சிக்காமல் விலகிப் பாதுகாப்பாக வாழ முடியும். மனக்கவலை நீங்கும். வாழ்க்கையில் கரையேற முடியும். பிறவி எனும் பெருங்கடலைக் கடக்க முடியும்.

சிறப்புச் சொற்கள் :

வாலறிவன் - பேரறிவு உடையவர்.
மலர்மிசை - மலரின் கண். (மையம்)
இருள்சேர் - அறியாமை
ஆழி - கடல்
எண்குணத்தான் - எட்டு குணங்கள் :
1. அளவற்ற அறிவு, 
2. அளவற்ற இன்பம், 
3. அளவற்ற காட்சி, 
4. அளவற்ற வலிமை, 
5. உறவின்மை, 
6. பெயரின்மை, 
7. காலமின்மை, 
8. அழிவின்மை.

*******   *******   *******


1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

"அ" எனும் ஓசை ஒலித்தே அனைத்து முதல் எழுத்துக்களும் துவங்கும். அதுபோல இவ்வுலகின் படைப்புகள் அனைத்தும் இறைவனிலிருந்தே துவங்குகின்றன.

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழாஅர் எனின்

பேரறிவுடைய இறைவனது திருவடிகளைப் புகழ்ந்து வணங்காவிடில் படித்து அடைந்த அறிவால் என்ன பயன்?

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 
நிலமிசை நீடுவாழ் வார்

மலர்ந்த உள்ளத்தில் இறைவன் அமர்ந்திருக்கிறார். அந்த திருவடிகளைச் சரணடைந்தவர் நீடித்த நிலை வாழ்வு அடைவர்.

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல

இறைவனுக்கு விருப்பு வெறுப்பு கிடையாது. பாரபட்சம் இல்லாதவர். அவரது திருவடிகளைச் சரணடைந்தவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை.. 

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

இறைவனது பண்புகளைப் புரிந்து அதினிமித்தம் அன்பு செலுத்துங்கள். அப்போது அறியாமையால் ஏற்படும் இன்பம், துன்பம் ஆகிய இரு உணர்வின் விளைவுகளும் பாதிப்பை ஏற்படுத்தாது.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 
நெறிநின்றார் நீடுவாழ் வார்

கண், செவி, நாசி, வாய் மற்றும் உடல் இவை மனதின் ஆசை உணர்வைத் தூண்டும் கருவிகள் ஆகும்.  

இறைவனுக்கு உண்மையான மனவுறுதியுடன் கீழ்ப்படிந்தவர் தீய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மேன்மையான நிலையை அடைவர்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

இறைவன் ஈடு இணையற்றவர். அவர் திருவடிகளைச் சரணடைந்து இடைவிடாமல் நினைப்பவருக்கு மனக்கவலை அரிக்காது.

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் 
பிறவாழி நீந்தல் அரிது

அறம் என்பது கடல்.  இறைவனின் திருவடி படகு. சரணடைந்தவர் அல்லாத மற்றவர்களால் இக்கடலைக் கடக்க முடியாது.

9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் 
தாளை வணங்காத் தலை

உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஐந்து உறுப்புகளால்  பயனில்லை. அவ்விதம் எட்டு குணங்களை உடைய இறைவனது திருவடிகளை வணங்காதவரின் அறிவும் பயனற்றது.

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

இறைவனது திருவடியைச் சரணடைந்தவரே பிறவியாகிய சமுத்திரத்தை நீந்திக் கடக்க முடியும். அவர் துணையைச் சேராதவர் கடலில் மூழ்கி ஆழ்வர்.

*******   *******   *******

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

6 கருத்துகள்:

  1. இந்த பிறவி எடுத்துள்ளதே இறைவனின் திருவடியை அடைந்து பிறப்பு என்னும் துன்பத்தை அறுத்தெடுக்கவே. அதற்கும் அவருடைய திருவடியை சரணடைந்தால் தான் முடியும்.

    நன்றி பாண்டியன் 🙏

    பதிலளிநீக்கு
  2. அவரது திருவடிகளைச் சரணடைய வேண்டும். அதுவே பயன் நிறைந்த வாழ்வு.
    உண்மை..

    பதிலளிநீக்கு
  3. நமஸ்காரம். திருகுறள்களை தமிழுக்காக படிப்போர் பலர். நல்ல தமிழுக்காக. அந்த நல்ல தமிழை படித்து புரிந்து கொண்டு அதன் படி வாழ்வோர் சிலரே. அவரின் தமிழும், அதில் இறைவனடி தொழுது, பற்றி இறைவனை சேரும் முறை பற்றி இவ்வளவு சொல்லியும் புரிந்து கொள்ளாதார் பலர். திருவள்ளுவரையும் அவரின் குறள் கூறும் நல்லிணக்க நெறிகளையும் உலகம் (நம் மக்கள்) உணர வேண்டும். அதை ஆச்சாரியார் திருவள்ளுவரும் எல்லாம் வல்ல இறைவனுமே செய்ய வேண்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் ரவி. வாழ்வில் கடைப்பிடிக்க இறையருள் வேண்டும். எட்டு குறள்களில் இறைவனைப் பண்புகளாலே குறிப்பிடுகிறார். ஐந்து மற்றும் பத்தாவது குறள்களில் இறைவன் என்கிற வார்த்தையை நேரிடையாக பயன்படுத்துகிறார். மிக்க நன்றி ரவி.

      நீக்கு