வெள்ளி, 15 மே, 2020

புத்திசாலி

கற்பாறையின் மேல் கட்டப்பட்ட வீடு 

(Christ's Parables   - 2)


ஒரு மனிதர் வீடு கட்டுவதற்கு மேடானதொரு நிலத்தைத் தெரிவு செய்தார். அந்த நிலம் ஒழுங்கற்று கரடு முரடாக இருந்தது. இடம் முழுவதும்  பெரிய  கற்பாறைகள். செல்வதற்கு நேர்த்தியான பாதை இல்லை. ஒற்றையடிப்பாதை தான் வழி. அதுவும் நெடுக முட்கள். இப்படிப்பட்டதொரு இடத்தை வாங்கியதற்காக அவரைச் சிலர் கேலி செய்தனர்.

"இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்தில் ஓர் வீட்டைக் கட்டுவது தேவையா?" என விமர்சித்தனர். அவரோ காது கேளாதவர் போல் நடந்து கொண்டார். பெரிய பாறைகளை உடைத்து சீர் செய்வது கடினமான வேலையாக இருந்தது. அவர் பயப்படவில்லை. கலங்கவில்லை. நல் நம்பிக்கையுடன் மனம் தளராது பொறுமையாக உழைத்தார். வேலை அதிக காலம் எடுத்தது. நிலம் கொஞ்சம் கொஞ்சமாகச் சமனானது. வீடும் மெதுவாக வளரத் துவங்கியது.

அவர் கிணறு ஒன்றை வெட்டத் தொடங்கினார்.  "இந்த பகுதியில் பொதுவாக நீர் கிடைக்காது; கிடைத்தாலும் அது வெகு ஆழத்தில் தான் இருக்கும்; அதுவும் சுவையாக இருக்காது" எனச் சிலர் அவநம்பிக்கையாகப் பேசினர்.

ஆனாலும் அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. கடும் பிரயாசத்துடன் கிணறு தோண்டப்பட்டது. ஆச்சரியமாகச் சிறிது ஆழத்திலேயே கிணற்றின் ஊற்றிலொன்றிலிருந்து தித்திப்பான நீர் சுரந்தது. வீட்டிற்கும், பாதைக்கும் தேவையான கற்களும் அதிலிருந்து கிடைத்தது. வெட்டி எடுக்கப்பட்ட கற்களால் பாதை அமைத்தார். இருபுறமும் மரங்கள் நட்டார். ஒவ்வொரு சமயத்திற்கு எதைச் செய்ய வேண்டும் எனும் புத்தியும், சரியான வழி நடத்துதலும் அவருக்குக் கிடைத்தது.

நம்பிக்கை, பொறுமை, விடாமுயற்சி, தைரியம், கடின உழைப்பின் பலனாக அவரது அழகிய கனவு நிறைவேறியது. நீண்ட காலம் காத்திருந்தது நல்லதொரு முடிவைத் தந்தது. ஒரு பயனற்ற நிலம் அழகிய இல்லமாக மாறியது.

மற்றுமொரு மனிதரும் வீட்டைக் கட்ட. தொடங்கினார். அவர் ஆற்றின் கரையோரம் சமமாக இருந்த மணற்பாங்கான நிலத்தைத் தெரிவு செய்தார். அந்த இடத்தைச் சுற்றிலும் பச்சைப்பசேலென செழுமையாக இருந்தது. பார்ப்பதற்கு அழகாகச் சோலை போல இருந்தது. மிக அருகில் நீர் ஓடியது.

வீட்டின் அஸ்திபாரம் தோண்டுவதற்கும் இலகுவாக இருந்தது. வேலைகள் துரிதமாக நடந்தது . மிகக் குறுகிய காலத்தில் அதிக உழைப்பின்றி குறைந்த செலவில் வீடு கட்டி முடிக்கப்பட்டது.  முதல் மனிதரைப் போல அதிகம் சிரமப்படாமல் சுலபமாக வீட்டைக் கட்டி முடித்ததற்காக அநேகர் இவரைப் பாராட்டினர்.

சில வருடங்கள் உருண்டோடியது. மாரிக்காலம் வந்தது. ஓர் கோரப்புயல் அந்தப் பகுதியைத் தாக்கியது. சூறைக்காற்று வீசியது. பெருவெள்ளம் வீடுகளைச் சூழ்ந்தது.

மேடான கற்பாறையின் மீது கட்டப்பட்ட வீடு புயலை எதிர்த்து நின்றது. காற்றால் அசைக்கப்பட முடியவில்லை.  வெள்ளம் நெருங்க இயலவில்லை. புயல், காற்று, பெருவெள்ளத்திலிருந்து அந்த வீடு  பாதுகாக்கப்பட்டது.

ஆற்றின் கரையோரம் கட்டப்பட்ட வீட்டின் மீதும் கடும் சூறைக் காற்று வீசியது. பெரு வெள்ளம் மோதியது.  அதற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் சுவர்கள் இடிந்தன. அது இருந்த இடம் தெரியாதபடி மூழ்கி முற்றிலுமாக அழிந்தது.





அறம் சார்ந்த கருத்துக்களைப் பலர் ஆர்வமாகக் கேட்பார்கள். ஆனால் வெகு சிலர் மட்டுமே கைக்கொள்வர்.

உண்மையான இறை நம்பிக்கை உடையவர்கள் உள்ளத்தில் அறத்தின் பலன் எழுதப்பட்டிருக்கும். அவற்றை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வர். அதை வாழ்வில் நம்பிக்கையுடன் கடைப்பிடிப்பர்.

அறத்தைக் கடைப்பிடித்தால் துன்பம் வரும். ஆனால் அந்தத் துயரைப் பொறுத்துக் கொள்வர்.

பொறுமையோடு நல் நம்பிக்கையை உறுதியாகப் பற்றிக் கொள்வர். துயரங்கள் சீர் படுத்துகிறது என உணர்வர். குற்றங்கள் ஏற்படுத்தும் வலி புரியும். நல்ல தீர்மானத்தில் உறுதியாக நிலைத்திருந்து வாழ்வில் முன்னேறிச் செல்வர்.

சுலபமாக இருக்கும் என்பதற்காகக் குறுக்கு வழியாக முன்னேற விரும்ப மாட்டார்கள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர்விளைவு உண்டு என்பது நன்கு அறிவர். எனவே தீமை செய்ய அஞ்சுவர்.

தவறுதலாகத் தீமையில் விழ நேரிட்டால் மனம் பதறுவர். திரும்பவும் நேர்மையின் பாதைக்கு வரும்வரை பதைபதைப்பு நீங்காது.

அவர்கள் வாழ்வில் புயல் வந்தாலும் நிலைகுலைய மாட்டார்கள். சூறைக் காற்று வீசினாலும் அசைந்து கொடுக்கமாட்டார்கள். வெள்ளம் சூழ்ந்தாலும் கரையேறிவிடுவார்.

இறை வார்த்தைகளைக் கேட்பவராக மட்டுமல்ல, அதன்படி செய்கிறவர்களே புத்தியுள்ள மனிதர். அவர் தனது வீட்டைக் கற்பாறையின்மேல் கட்டுகிற புத்தியுள்ள மனிதருக்கு ஒப்பாவர்.

புத்தியில்லாத மனிதரோ அதைக் கேட்டும் அதன்படி நடக்காதவர்கள். அவர்கள் தங்கள் வீட்டை மணலின் மீது கட்டுகிறார்கள்.

*******   *******   ******* 

Ref : 
St. Mathew :- 7:24 - 27 &  
St. Luke :- 6:47 - 49.

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.


10 கருத்துகள்:



  1. இறை வார்த்தைகளைக் கேட்பவராக மட்டுமல்ல, அதன்படி செய்கிறவர்களே புத்தியுள்ள மனிதர். அவர் தனது வீட்டைக் கற்பாறையின்மேல் கட்டுகிற புத்தியுள்ள மனிதருக்கு ஒப்பாவர்.
    சிறப்பு..

    பதிலளிநீக்கு
  2. அறத்தைக் கடைப்பிடித்தால் துன்பம் வரும். ஆனால் அந்தத் துயரைப் பொறுத்துக் கொள்வர்.. Unmaiyaana Vaarthaigal..

    பதிலளிநீக்கு
  3. நமஸ்காரம். நம் கண் முன்னே தெரிவதில் இருந்தும் நம் காதுகளில் விழுவதில் இருந்தும் நல்லதை எடுத்து உபயோகிக்க பெரியோர் ஆசிர்வாதமும் கடவுளின் கருணையும் தேவை. அந்த நல்ல நேரத்திற்காக காத்திருப்பு மற்றும் நம்பிக்கை நம்மை அவர்களின் நிழல் பகுதிக்கு அழைத்து செல்லும். அவ்வழியே சென்று அமைதியாய் வாழ்ந்து அவரை அடைவோம். கிடைப்பதை அவர் கொடுத்ததாய் ஏற்போம். நன்றி. அறம் செய்து வாழ்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ரவி.

      நீக்கு
  4. இறை வார்த்தைகளைக் கேட்பவராக மட்டுமல்ல, அதன்படி செய்கிறவர்களே புத்தியுள்ள மனிதர்



    🙏🙏🙏

    பதிலளிநீக்கு