சனி, 2 மே, 2020

37. கூடிப் பிரியேல்.

நல்ல நட்பில் நிலைத்திருங்கள்

(ஆத்திசூடி ககர வருக்கம்)



கூடிப் பிரியேல் : "நல்லவர்கள் என்று அறிந்து, உணர்ந்தவர்களின் நட்பில், "எப்போதும் நிலைத்திரு". "பிரிந்து போகாதே".

நல்ல நட்பு வாழ்க்கையை இனிமையாக்குகிறது. நல்ல நட்பு திகைத்துத் தடுமாறும்போது நம்பிக்கை அளிக்கிறது ; நல்ல நட்பு துயரத்தில் ஆறுதல் தருகிறது.

மனதின் காயங்களை ஆற்றுகிறது. தவறான பாதையில் செல்வதைத் தடுத்து நிறுத்துகிறது, முன்னேற்றத்திற்கான ஆலோசனையை வழங்குகிறது, வருத்தங்களில் உடனிருந்து வாடுகிறது.

நல்ல நட்பில் பொறாமையில்லை ; உயர்வில் மகிழ்ச்சியடையும், தவறுகளைப் பொறுத்துக் கொள்ளும். நிபந்தனையின்றி மன்னிக்கும். கால நேரம் பார்க்காது தேவையில் உடனிருக்கும்.

அனைத்தையும் நம்பும், அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும். இரகசியங்களை வெளிப்படுத்தாது. மானம் காக்கும். முக மலர்ச்சியுடன் தன்னால் இயன்ற உதவி செய்யும்.

எனினும் நல்ல நட்பைப் பெறுவது எளிதன்று.

இன்றைய உலகில் தனது சுயநலத்திற்காக நண்பர்கள் போல ஒட்டிக் கொள்பவர்களே மிகுதி. பணத்திற்காக, பொருட்களுக்காக, தேவைகளுக்காக, சுயலாபத்திற்காக நட்பு பாராட்டுபவர்கள் மிகுந்த உலகத்தில் நாம் வாழ்கிறோம்.

கடினமான சூழல்களே நல்ல நட்பை அடையாளம் காட்டும். நல்ல நண்பர்கள் துயரத்தில் நம்முடன் இருந்து தோள் கொடுப்பர்.

நல்ல நட்பு உறுதியான நம்பிக்கை (Trust) என்னும் அஸ்திவாரம் மேல் கட்டப்படுகிறது.

ஒத்த உணர்வு நிலை இருப்பவர்கள் சிறந்த நண்பர்களாக நிலைத்திருக்க முடியும். பெரியாரும், இராஜாஜியும் நேரேதிர் கருத்துடையவர்கள். எனினும் எளிய மக்களின் சமூக முன்னேற்றம் எனும் ஒத்த உணர்ச்சி இருவரையும் இறுதிவரை நண்பர்களாக இனைத்து வைத்தது.

நல்ல நட்பு அமையாவிடினும் பரவாயில்லை; தீய நட்பில் விழாதவாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது உடனிருந்து கொல்லும்.

எவ்வளவு விலைக்கிரயமாயினும் அதைக் கொடுத்து, தீய நட்பை விட்டு விலக வேண்டும். சமூக ஊடகங்கள் வழியாக இனைந்து அந்த நட்பை உண்மையென நம்பித் தங்கள் வாழ்வை இழந்து தவிப்பவர் அநேகர்.

நல்ல நட்பு என்பது Virtual world இல் வாழ்வது அல்ல. சுக துக்கங்களில் உடனிருந்து பொறுப்புகளைச் சுமப்பது. கடினமான வாழ்க்கைச் சூழலில் தனது நேரத்தையும், பொருளையும்,கொடுத்து உடனிருந்து பாதுகாப்பதே உயர்ந்த நட்பு.

இனிக்க இனிக்கப் பேசுபவர்கள்  சிறந்த நண்பர்கள் அல்ல. பேச்சு அல்ல செயல்களே ஒரு மனிதனின் பண்பை வெளிப்படுத்துகிறது.

தீய மனிதர்களை அடையாளம் காண்பிப்பது அவர்கள் செயல்களே.

நம்மைப் பார்க்கும்போது புன்னகைத்து இனிதாகப் பேசி, நாம் இல்லாத இடத்தில் அவதூறாகப் பேசுபவர்கள் வஞ்சகர்கள்.

மகிழ்ந்திருக்கும்போது அல்லது துயரத்திலிருக்கும் போது உல்லாசமான பாவச் செயல்கள் செய்யும்படி தூண்டுபவர்கள் ஏமாற்றுப் பேர்வழி.

ஒரு காரியத்திற்காக இனிமையாகப் பழகி அந்த தேவை முடிந்தவுடன் கண்டும் காணாது செல்பவர்கள் காரியவாதிகள்; சுயநலமுடையவர்கள்.

நமது துயரமான தருணத்தில் போலியாக வருத்தத்தைக் காண்பித்து உள்ளுக்குள் மகிழ்பவர் பொறாமைக்காரர்கள்.

தான் சொல்வதைக் கேட்டால் மட்டுமே நட்பு பாராட்டுபவர்கள் வீம்புக்காரர்.

இனம், மொழி, மதம், சாதி இவற்றிற்காக மட்டும் நட்பு பாராட்டுபவர்கள் பெருமை உணர்வு மிக்கவர்கள்.



திருவள்ளுவர் உயர்ந்த கருத்துக்களைச் சுருக்கமாக ஆனால் ஆழ்ந்த பொருள் பொதிந்த வார்த்தைகளால் விளக்குபவர். ஒரு கருத்தை பத்து குறளில் வரையறுத்துவிடுவார்.

ஆனால் அவரே நட்பைக் குறித்து நேரிடையாக ஐந்து அதிகாரங்கள் எழுதியுள்ளாரெனில் இதன் முக்கியத்துவத்திற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

79. நட்பு,
80. நட்பு ஆராய்தல்,
81. பழமை,
82. தீ நட்பு,
83. கூடா நட்பு

இந்த ஐம்பது குறள்களும் நேரிடையாக நட்பின் இலக்கணத்தை வரையறை செய்கிறது.

அதில் ஓர் அற்புத கருத்தை ஆத்திசூடி ஒற்றை வாக்கியத்தில் சொல்கிறது : "நல்லவரோடு நட்பு பாராட்டி பின் பிரியாதே".

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.


8 கருத்துகள்:

  1. நட்பின் சிறப்பு.. அருமை..

    பதிலளிநீக்கு
  2. நல்ல நட்பில் பொறாமையில்லை ; உயர்வில் மகிழ்ச்சியடையும், தவறுகளைப் பொறுத்துக் கொள்ளும். நிபந்தனையின்றி மன்னிக்கும். கால நேரம் பார்க்காது தேவையில் உடனிருக்கும்.
    அனைத்தையும் நம்பும், அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும். இரகசியங்களை வெளிப்படுத்தாது. மானம் காக்கும். முக மலர்ச்சியுடன் தன்னால் இயன்ற உதவி செய்யும்.

    நல்ல நட்பு உறுதியான நம்பிக்கை (Trust) என்னும் அஸ்திவாரம் மேல் கட்டப்படுகிறது.

    👌👌🙏🙏🙏

    பதிலளிநீக்கு
  3. நட்பு அன்பால் இணைந்தால் ஆழம். புரிதல் தொடர்ந்தால் சிறப்பு. காலம் கடந்தும் தொடர்ந்தால் தெய்வீகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரவி.

      நீக்கு