வெள்ளி, 22 மே, 2020

இமயத்தை வென்றவர்

அருணிமா சின்ஹா.
(Arunima Sinha)

வாழ்க்கை புதிரானது. சவால் நிறைந்தது. எதிர்பாரா தருணத்தில் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் நிகழ்வுகளைச் சந்திப்போம்.. நினைத்தும் கூடப் பார்க்காத இழப்புகள் வாழ்க்கையை முடக்கும். கோர விபத்துக்கள் வாழ்வைச் சிதைக்கும். அத்தகைய பேரிடர் சூழலில் மனம் சோர்ந்து போகாமல் துணிவுடன் எதிர்கொண்டு  மீள்பவர்கள் சாதனையாளர்களாக மிளிர்வர். அவர்கள் மனம் உடைந்து தடுமாறுபவர்க்கு வழிகாட்டும் ஆதர்ச சக்தியாகவும் மாறுவர்.

அருணிமா சின்ஹா, 1988ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி  உத்திரப் பிரதேசத்தில் அம்பேத்கர் நகரில் பிறந்தார். சட்டம் பயின்றவர். தேசிய கைப்பந்து வீராங்கனை.

2011ம் வருடம் ஏப்ரல் மாதம் 12ம் தேதி CSIF பாதுகாப்புப் படையின் தேர்வில் கலந்து கொள்வதற்காகப் பத்மாவதி இரயிலில் லக்னௌலிருந்து டெல்லி நோக்கிப்  பயணப்பட்டார். அந்தப் பயணம் அவரது வாழ்க்கையையே தடம் மாற்றப் போகிறது என அப்போது அவர் அறியவில்லை.

அந்த துயரமான சம்பவம் ஓடும் இரயிலில் தீடிரென அரங்கேறியது. சில வழிப்பறிக்  கொள்ளையர்கள் அவரைத் தாக்கி கைப்பையையும், கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையையும் பறிக்க முயன்றனர்.

அந்த நிகழ்வை அவர் நினைவு கூறும்போது

"நான் முழு வலிமையுடன் அவர்களை எதிர்த்துப் போராடினேன். அவர்கள் என்னைக் கடுமையாகத் தாக்கினார்கள். மிதிக்கப்பட்டு ஓடும் வண்டியிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டேன். அடுத்த இணைத் தண்டவாளத்தில் விழுந்தேன். என்னால் கொஞ்சம் கூட அசைய முடியவில்லை. அந்த எதிர் பாதையில் இரயில் வருகிறது. நான் எழுந்து தப்பிக்க முயன்றேன். என்னால் இயவில்லை. முழு பலத்துடன் புரண்டு விழுந்தேன்.  ஒரு நொடியில்  எதிர்புறம் வந்த இரயிலின் சக்கரங்கள் எனது இடது காலின் மேல் ஏறிச் சுற்றிச் சுழன்று சென்றது."




ஓர் தேசிய வீராங்கனைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நாடு கொதித்தது. கடும் கண்டனம் எழுந்தது. இந்திய விளையாட்டுத் துறை இந்த விபத்திற்குக் கருனை தொகையாக இருபத்து ஐந்தாயிரம் இழப்பீடு கொடுத்தது. பின்பு அந்த உதவித் தொகை இரண்டு இலட்சம் என உயர்த்தப்பட்டது.

அடுத்த சோதனை காவல் துறை வடிவில் வந்தது. இந்த விபத்தை ஒரு தற்கொலை முயற்சி எனக் காவல் துறைப் பதிவு செய்தது. அருணிமா இந்தப் பொய்க் குற்றச்சாட்டிற்கு எதிராகவும் போராடினார். இதைத் தொடர்ந்து அலஹாபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு ஜந்து இலட்சம் இழப்பீடு வழங்கவும், உயர்தர மருத்துவச் சிகிச்சை வழங்கவும், அரசுப்பணி அளிக்கவும் உத்தரவிட்டது.

2011ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி டெல்லி AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நான்கு மாதம் சிகிச்சை தொடர்ந்தது. அவரது துண்டிக்கப்பட்ட இடது காலில்  கம்பியுடன் இணைக்கப்பட்ட செயற்கை கால் பொருத்தப்பட்டது. வலது காலின் முறிவு, முதுகு தண்டுவடத்தின் காயங்கள் குணப்படுத்தப்பட்டது.

அவரால் சுற்றி இருப்பவர்களின் பரிதாப பார்வையை எதிர் கொள்ள முடியவில்லை. எதுவும் தனித்துச் செய்ய இயலாத இயலாமை வாட்டியது. காலை இழந்த வேதனையைவிடப் பிறரைச் சார்ந்து வாழ வேண்டிய நிர்க்கதியான சூழல் மனதில் ஆழ்ந்த வலியை ஏற்படுத்தியது. அந்த கழிவிரக்கத்தைத் துடைத்து வீசிட விரும்பினார். மனதில் ஓர் தீர்மானம் உதித்தது. தனது சுயமதிப்பைக் காத்திட உறுதி பூண்டார். ஓர் மாபெரும் கனவு பிறந்தது. அது "ஒற்றைக் காலுடன் இமயத்தின் சிகரத்தை மிதிக்க வேண்டும்" எனும் தீர்க்கமான இலக்கு.

2011ம் ஆண்டிலேயே இந்தியாவின் மதிப்புமிக்க பெண் மலையேற்ற நிபுணர் பச்சேந்திரி பால் (Bachendri Pal) அவர்களைத் தொடர்பு கொண்டார். தனது கதையை விவரித்தார்.

பச்சேந்திர பாலின் மறுமொழி அற்புதமானது.

"என் அன்பு குழந்தை, இந்தச் சூழலிலும் ஒற்றைக் காலுடன் இமயத்தின் சிகரத்தைத் தொட்டுவிடத் தீர்மானித்து விட்டாய். நீ நிச்சயம் ஒருநாள் மலையில் ஏறுவாய். சிகரத்தைத் தொடுவாய். அது எந்த தேதியில் என்பதை மட்டும் அறியவே இந்த உலகம் காத்திருக்கிறது."


அருணிமா உத்தரகாசியில் உள்ள TSAF (Tata Steel Adventure Foundation) இல் பயிற்சி பெற இணைந்தார். செயற்கை காலுடன் கடும் பயிற்சி. விடா முயற்சி தொடர்ந்தது.  பலமுறை சறுக்கி விழுந்தார். மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்ட அனுபவங்கள் நேர்ந்தது. காயங்கள் ஏற்பட்டது. இந்தப்பயிற்சி காலம் கடுமையாக இருந்தது. ஆனால் எதுவும் அவரது மன உறுதியையும் தீர்மானத்தையும் அசைக்க முடியவில்லை.

2012ம் ஆண்டில் 6150 மீட்டர் உயரத்தில் அமைந்திருந்த Island peak எனும் உயரத்தைத் தொட்டார். அதே ஆண்டிலேயே அருணிமா, சூசனுடன் (Susan Mahot) இணைந்து சேஷர் சங்கிரியா (Chaser Sangriya) எனும் 6,622 மீட்டர் உயரத்திலிருந்த மலைச் சிகரத்தைத் தொட்டார்.

2013ம் ஆண்டு எவரெஸ்ட்டை நோக்கிய அவரது சாகச பயணம் துவங்கியது. 17 மணி நேர நீண்ட பயணம். சிகரத்துக்கு அருகில் நெருங்கிய தருணத்தில் மீண்டும் சோதனை. ஆக்ஸிஜன் பற்றாக்குறை. உடன் பயணித்தவர் ஆபத்தைக் கூறி எச்சரித்தார். இப்போது மலையேற்றத்தை முடித்து திரும்புவோம். மீண்டும் மற்றொரு முறை முயலலாம் என ஆலோசனை கொடுத்தார். அருணிமா அதை ஒப்புக் கொள்ளவில்லை. மனவுறுதியுடன் அஞ்சாது முன்னேறினார். அடுத்த இரண்டு மணி நேரத்தில், மே மாதம் 21ம் தேதி காலை 10.55 மணியளவில் எவரெஸ்ட் அவரது காலின் கீழ் இருந்தது.


அந்த மகிழ்ச்சியான தருணங்களைப் பற்றிக் கூறும்போது,

"என் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் சாதித்து விட்டேன். அதை முழு உலகத்துக்கும் கேட்கும்படி கத்த வேண்டும் போல இருந்தது".

ஒரு துணியில் "கடவுளுக்கு நன்றி" எனக் கைப்பட எழுதி அதைப் பனிப் பாறையில் பதித்தார். இந்தச் சாதனையை இறைவனுக்கும்  தனது வாழ்வின் குருவாக ஏற்றுக்கொண்ட சுவாமி விவேகானந்தருக்கும் அர்ப்பணித்தார்.

உலகின் உயரமான மலைகளிலும் அவரது சாகச பயணம் தொடர்ந்தது. ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ (Kilimanjaro), ஐரோப்பாவின் எல்பிருஸ் (Elbrus), ஆஸ்திரேலியாவின் கொஸ்கியஸ்கோ (Kosciuszko), அர்ஜெண்டினாவின் அக்கன்கஹுவா (Aconcagua), இந்தோனேஷியாவில் கர்டென்ஸ் (Carstensz Pyramid) கொடுமுடிகளைத் தொட்டார்.

2019ம் ஆண்டில் ஜனவரி முதல் தேதி அன்டார்டிகாவில் உள்ள வின்ஸன் (Mount Vinson) சிகரத்தையும் தொட்டார்.



2014ம் ஆண்டில் இவரது சுயசரிதை "Born again on the Mountain" (மலை உச்சியில் மறுபிறப்பு) வெளியானது.

2015ம் ஆண்டு பத்மஸ்ரீ  விருது வழங்கப்பட்டது. "Tenzing Norway Highext Mountaineering award" ம் அளித்துக் கவுரவிக்கப்பட்டார். 2016ம் ஆண்டில் Limca Book of Records அவரை "People of the Year" பட்டியலில் இனைத்தது. "Malala Award", "Yash Bharat Award" "Rani Laxmi Bai Award" என விருதுகள் அவரைத் தேடி வந்தன.


உ.பி அரசு "அருணிமாவின் கடின உழைப்பு, விடா முயற்சிக்கு முன் இமயமும் பணிந்தது" எனப் பாராட்டி ஊக்கத் தொகையாக  25 இலட்சம் ரூபாய் பரிசாக அளித்தது. பாராட்டு மழை குவிந்தது.

அருணிமாவின் தரிசனம் விரிவடைந்தது :

"நான் எனது கனவுகளை அடைந்து விட்டேன். ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டு வாழும் ஏழை ஊனமுற்ற குழந்தைகளின் கனவுகளை நனவாக்க உழைக்க விரும்புகிறேன். அவர்களும் பரிதாபமான பார்வையிலிருந்து விடுபட்டு சுய மதிப்புடன் வாழவேண்டும்" .

அவர்களுக்காக "Shaheed Chandra Shekhar Vikalang Khel Acadamy" எனும் இலவச விளையாட்டுப் பயிற்சி அமைப்பை நிறுவினார். தனது பரிசு, சுய முன்னேற்ற ஊக்கமளிக்கும் கருத்தரங்குகளில் பேசுவதால் கிடைக்கும் வருமானம் என முழுவதையும் அதன் வளர்ச்சிக்காக அளித்தார்.

ஒரு விபத்தால் உடலை ஊனமாக்க முடியும். ஆனால் கனவை முடக்க முடியாது. அவரது ஆன்மாவின் உற்சாகத்தை எந்த எதிர்ப்புகளாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

வாழ்வை நொறுக்கிப் போடும் மன வலியிலிருந்து மீள்வதே ஓர் சாதனை. அத்துடன் அதே வித வலியை அனுபவிக்கும் துயருற்றவரின் கண்ணீரைத் துடைப்பதையும், அவர்கள் கனவை நனவாக்க உழைப்பது எனத் தனது வாழ்வை அர்ப்பணிப்பதும் மாபெரும் சாதனை.

உயர்ந்த சாதனைகள் வலிகளாலே அடையப்படுகிறது. சிறந்த வரலாறுகள் அர்ப்பணிப்பாலே எழுதப்படுகிறது.  அவை காலம் கடந்தும் பேசப்படுகிறது. நிலைத்தும் நிற்கிறது.

*******   *******   *******


Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.

6 கருத்துகள்:

  1. வாழ்வில் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. நமஸ்காரம். கனவும் விடா முயற்சியும் நம்மை வேறு வேறு எல்லைகளுக்கு கூட்டி செல்லும். இறைவன் துணை இருந்தால் அது நம் காய் வசம் ஆவது மிக உறுதி. இடர்களை ஏற்கவும் எதிர்கொள்ளவும் மிகுந்த மன வலிமை/தைரியம் வேண்டும். நன்றி. (Arunima Sinha Ji,Jai Hind)

    பதிலளிநீக்கு
  3. உள்ளத்தை ஊனமாக்க விடாமல் இறை நம்பிக்கையுடன் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர வைத்துள்ளார் அருணிமா சின்ஹா.

    நன்றி பாண்டியன் 🙏

    பதிலளிநீக்கு