வியாழன், 7 மே, 2020

மார்கஸ் அரேலியஸ் : வாழ்வியல் சிந்தனைகள் - 2

ஆத்ம ஞானம்.



1. ஒவ்வொருவர் உள்ளத்திலும் தெய்வத் தன்மையுடைய ஆன்மா ஒன்று உறைந்திருக்கிறது. அதற்குத் தீங்கு நேரிடாமல் சுத்தமாக வைத்துப் பாதுகாப்பது ஞானம். உள்ளத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டு அறிவுள்ளவராக நடந்து கொள்வதென்பது அவரவர் சுதந்திரம். இறையச்சம், சத்தியம், நீதி, தெளிந்த புத்தி, தைரியம் இவற்றை விட ஆன்மாவிற்கு நன்மையும் ஆனந்தமும் அளிப்பது இவ்வுலகில் வேறொன்றுமில்லை.

2. வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறி மாறி நிகழும். இந்த சுக துக்க உணர்வுகளால் அலசலடிப்படாதவாறு மனதை அதனின் விலக்கி வைத்துப் பயிற்றுவிப்பது ஞானம்.

3. பயனற்ற சொற்களைப் பேசாதிருப்பது ஞானம். எண்ணங்களைச் சீர் செய்தால் சொல்லும், செயலும் சிறப்படையும். நம்முடைய வார்த்தைகளிலும் செயல்களிலும் பத்தில் ஒன்பது பங்கு யாருக்கும் வேண்டாதவை. தேவையற்ற பேச்சைத் தவிர்த்தால் கவலையும் மனக்கசப்பும் அகலும். காலமும் வீணாகாது.

4. ஒவ்வொருவர் உள்ளத்திலும் அறத்தைப் பற்றி நிற்கும் தெய்வாம்சம் ஒன்று இருக்கிறது. ஆகவே எவருக்கும் தீங்கு செய்யக் கூடாது. ஒருவரை மனதில் பகைத்து துவேஷம் செய்யும் எண்ணங்கள் தன்னிச்சையாகவே  வார்த்தையிலும் செயலிலும் பாவத்தைப் பிறப்பிக்கும். இந்த விழிப்புணர்வு ஞானம்.

5. மோகம், கபடம், சினம் போன்ற தீய உணர்ச்சிகளுக்கு ஆட்படாது மனதை நெறிப்படுத்துவது ஞானம். பிறர் விஷயத்தில் ஒருபோதும் பயனின்றி தலையிட வேண்டாம்.

6. மனதை அடக்கி, எண்ணங்களைக் காத்து, புலன்களால் இழுக்கப்படாமல் விலகிநின்று, தெய்வத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து உலகத்தின் நன்மையை நாடி வாழ்வதே ஞானம். 

7. தெய்வ பக்தி, நல் வாழ்க்கை, உண்மை அன்பு இவற்றை உடையவருடன் நெருங்கிப் பழகுவதும், பெரியவர்கள் எதை விரும்பினார்கள், எதை விட்டு விலகிச் செல்கிறார்கள் என்பதை நன்றாகக் கவனித்து அந்தப் பாதையில் செல்வதும் ஞானம்.

8. பிறர் அறியாமல் இரகசியமாகத் திரைக்குப் பின் மறைந்து வஞ்சகமாகத் திட்டமிட்டு அனுபவிக்க நினைக்கும் எந்த சுகமும் நன்மையைத் தராது எனும் தெளிந்த புத்தி ஞானம்.

9. ஒருவர் காரணமின்றி தீங்கு செய்தால் அவர் செய்த தீமைகளைத் திரும்பத் திரும்ப மனதில் எண்ணக்கூடாது. தீயவர் நம் மனதில் எதை உண்டாக்க விரும்புகிறாரோ அதற்கு இடமளிக்காமல் விலகி வாழ்வது ஞானம்.

10. விஷயானுபவங்களை வெறுக்க வேண்டியதில்லை. பற்றுதல் கொள்ளவும் தேவையில்லை. அவைகளினின்றும் மன ஈர்ப்பின்றி  ஒதுங்கிய அளவு மனிதர் விடுதலையாவர். விஷயானுபவங்களால் ஆன்மாவில் துயரம் நிகழ்வதில்லை. அதைக் குறித்த ஆசையும் எதிர்பார்ப்பும் நிறைந்த எண்ணங்களே துயரத்தைத் தருகின்றன.

11. இவ்வுலகத்தில் அடையக்கூடிய மேன்மை ஒன்றே. சத்தியமும் நடுநிலைமையுடன் வாழ்வதும், பொய்யரிடமும் அநீதி செய்பவரிடமும் எவ்விதமான வெறுப்பின்றியும் நடந்து கொள்வதும் ஞானம்.

12. எவர் பிறரிடம் நெறி தவறி நடக்கிறாரோ அவர் தனக்கே கேடு விளைவித்துக் கொள்கிறார். எவர் பிறருக்கு அநீதி செய்கிறாரோ, அவர் தன் சுபாவத்தைத் தீமையாக்கிக் கொண்டு தனக்கே அநீதி செய்து கொள்கிறார். 

13. ஆராய்ந்து உணர வேண்டியது ஞானம் இது : 

  • மனிதர் இறைவனை எவ்விதம் அணுக முடியும்? 
  • தன்னிலிருக்கும் எந்த அம்சம் தெய்வீகமானது? 
  • எந்தச் சூழலில் தெய்வீக உணர்வு மேலோங்குகிறது?

14. ஒருவர் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை அறம் சார்ந்து, உண்மையும், எளிமையும், பெருந்தன்மை பொருந்திய முறையில் காலத்தை வீணடிக்காது செய்து முடிப்பது ஞானம். அதை ஜீவகாருண்யம், சுதந்திரம், நீதி, நியாயம் இவற்றைப் புறக்கணிக்காது செய்தல் முக்கியம்.

15. படைப்பின் அழகை உணர்ந்து அனுபவிக்கத் தெரிந்தவர்கள் எதிலும் குற்றம் குறை பார்ப்பதில்லை. ஒவ்வொரு படைப்பும் அதனியல்பில் அழகானது. பதமாக வெந்த சப்பாத்தியில் அங்கங்கே சில கருப்பு புள்ளிகள் கொண்டிருப்பதில் ஒரு தனித்துவ அழகு இருக்கிறது.  அதுவே நம்முடைய சுவை உணர்வைத் தூண்டுகிறது. இயற்கையைப் பற்றிய ஞானம் அடைந்தவர் மாசுபடாத பார்வையைச் செலுத்தி அழகை மட்டும் அனுபவிப்பர்.  இயற்கையின் படைப்பில் பயனற்றது என்று எதுவும் கிடையாது.

*******   *******   *******

குறிப்பு : பேரரசர் மார்கஸ் அரேலியஸ் :

மார்கஸ் அரேலியஸ் ரோமாபுரியில் அரச குடும்பத்தில் பிறந்தவர். அவர் கி.பி. 121 ஆம் ஆண்டு முதல் கி.பி.180 ஆம் ஆண்டு வாழ்ந்தார். மார்கஸ் அரேலியஸ் ரோம் பேரரசர் மட்டுமல்ல மிகச்சிறந்த தத்துவஞானியும் கூட.

மனம் மற்றும் எண்ணம் குறித்த இவரது போதனைகள் உலகப் புகழ்பெற்றவை. ரோமானியர் வரலாற்றில் இவரது ஆட்சி பொற்காலமாகக் கருதப்படுகிறது. ரோமப் பேரரசர்களில் மிகவும் மரியாதைக்குரிய ஒருவராகப் போற்றப்படுகிறார். அவர் எழுதி வைத்த சிந்தனைகள் நூல் வடிவம் பெற்றுப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 

துணை நின்ற நூல் : மூதறிஞர் இராஜாஜி அவர்கள் எழுதிய "ஆத்ம சிந்தனைகள்" (வானதி பதிப்பகம்).

Kindly note that the "Pictures" used in these blogs are taken from different sources with thanks. This is a non - commercial blog intended to share the personal experiences as well as translations and explanations towards spread knowledge.


4 கருத்துகள்:

  1. இவை எல்லாம் ஒரு குறளுக்கு ஈடு என்று கூட சொல்ல முடியாது... ஏனெனில் திருக்குறள் அத்தகையது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குத் திருக்குறள் மீது உள்ள ஆழ்ந்த பற்றும் காதலும் புரிகிறது:). நன்றி திரு. தனபாலன்.

      நீக்கு
  2. ஒவ்வொருவர் உள்ளத்திலும் தெய்வத் தன்மையுடைய ஆன்மா ஒன்று உறைந்திருக்கிறது. அதற்குத் தீங்கு நேரிடாமல் சுத்தமாக வைத்துப் பாதுகாப்பது ஞானம். உள்ளத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டு அறிவுள்ளவராக நடந்து கொள்வதென்பது அவரவர் சுதந்திரம். இறையச்சம், சத்தியம், நீதி, தெளிந்த புத்தி, தைரியம் இவற்றை விட ஆன்மாவிற்கு நன்மையும் ஆனந்தமும் அளிப்பது இவ்வுலகில் வேறொன்றுமில்லை.

    மனதை அடக்கி, எண்ணங்களைக் காத்து, புலன்களால் இழுக்கப்படாமல் விலகிநின்று, தெய்வத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து உலகத்தின் நன்மையை நாடி வாழ்வதே ஞானம்.


    படைப்பின் அழகை உணர்ந்து அனுபவிக்கத் தெரிந்தவர்கள் எதிலும் குற்றம் குறை பார்ப்பதில்லை. ஒவ்வொரு படைப்பும் அதனியல்பில் அழகானது. பதமாக வெந்த சப்பாத்தியில் அங்கங்கே சில கருப்பு புள்ளிகள் கொண்டிருப்பதில் ஒரு தனித்துவ அழகு இருக்கிறது. அதுவே நம்முடைய சுவை உணர்வைத் தூண்டுகிறது. இயற்கையைப் பற்றிய ஞானம் அடைந்தவர் மாசுபடாத பார்வையைச் செலுத்தி அழகை மட்டும் அனுபவிப்பர். இயற்கையின் படைப்பில் பயனற்றது என்று எதுவும் கிடையாது.

    👌👌👌



    அருமையான கருத்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் உங்களைக் கவர்ந்த கருத்துக்களைத் தொகுத்து அளித்ததிற்கும் மிக்க நன்றி குமாரவேலு.

      நீக்கு