சனி, 10 ஆகஸ்ட், 2019

அவர்கள் அப்படித்தான்





அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.

அது ஆச்சரியம்தான்

அவர்கள் அப்படி இருக்கும்படி 
படைக்கப்பட்டார்களா 
எனத் தெரியவில்லை.

ஆனால் அப்படி வாழும்படி விரும்பி
அதைத் தெரிந்து கொள்கிறார்கள்.

அவர்கள் அலமாரிகளில் 
துணிகளை விட 
வித விதமான முகமூடிகளே 
தொங்கிக் கொண்டு இருக்கிறது.

ஒவ்வொரு மனிதருக்கும் 
ஏற்ற விதமாக அணிகிறார்கள்.

தங்களுக்கானது எது என
உறுதிப்படுத்திக் கொண்டு 
சிரிக்கிறார்கள்

பிறரை ஏமாற்ற அழுகிறார்கள்

பிடிக்காதவர்களைச் 
சிறைப்படுத்தி வசை பாட 
வஞ்சகமாக வழி தேடுகிறார்கள்

முன்னேறிச் சென்றால்
இழிவு படுத்தி
மகிழ்கிறார்கள்.

அவர்கள் நாவின் கீழ் 
விரியன் பாம்பின் 
விஷம் இருக்கிறது.

ஆனாலும் 
புனிதர்களைப் போலப்
புன்னகைக்கிறார்கள்.

அவர்கள் எங்கும் 
நிறைந்திருக்கிறார்கள்

வலது புறம் 
இடது புறம் 
முன்பாக 
பின்பாக 

பணிபுரியும் இடத்தில் !

தவிர்த்து விலகி
வாழ இயலாத உறவுகளாக!

துரதிருஷ்டமாகச்
சிலருக்கு இல்லத்திலும்!

முகத்துக்கு முன்பாக 
சிரித்துப் புகழ்ந்து
பின்புறமாக இகழ்ந்து
தூற்றித் திரிகின்றனர்.

எப்படி இவர்களை 
எதிர் கொள்வது?

ஓடி ஒளிய முடியாது

ஒதுங்கிப் பதுங்கவும் 
வழியில்லை

தவறு செய்பவன் 
நன்மை செய்பவனைக் 
குற்றம் சாட்டி 
காயப் படுத்துகிறான்.

வாழ்க்கை இவ்விதம்
முரண்களின் வழியாகவே
பொறுமையையும் 
தைரியத்தையும்
நம்பிக்கையும் 
வைராக்கியத்தையும்
படிப்பிக்கிறது.

மகிழ்ச்சி அல்ல
துயரங்களே 
வாழ்வின் அதி உன்னத 
பாடங்களைப் புகட்டுகிறது.

வார்த்தைகளால் 
காயப்படுத்தி 
மனதை இரணமாக்குபவர்க்கு
மகிழ்ச்சியைப் பரிசளியுங்கள்

அழ வைக்க 
விரும்புபவர்கள் 
முன்பு புன்னகைத்து 
நன்றி சொல்லுங்கள்

சிறுமைப் படுத்துபவரை 
அன்புடன் நேசியுங்கள்.

மூலையில் முடக்கி 
சிறை வைப்பவர்க்கு
முன்பாக சிறகை விரித்துப்
பறந்து செல்லுங்கள்

இகழ்வோர் முன்பாக
வாழ்ந்து காட்டுவதே
மிகச் சிறந்த தண்டனை

தெரிந்தே தவறு செய்பவரை 
ஒரு போதும் திருத்த
முற்படாதிருங்கள்.

அப்படியென்றால் 
துயரங்களுக்கு 
விடிவே இல்லையா?

கொஞ்சம் அமைதி!

ஒவ்வொரு மலரும் 
அதன் நறுமணத்தால் 
உணரப்படுகிறது

நீங்கள் நீங்களாகவே
இருங்கள்.

அவர்கள் அவர்களாகவே 
இருக்கட்டும்

அவர்களை மாற்றுவது
உங்களது பணி அல்ல.

பிறர்க்கின்னா 
முற்பகல் செய்யின் 
தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்

நாம் விரும்பும்
பிற்பகல்  அல்ல

அவர்களுக்கெனக்
குறிக்கப்பட்ட பிற்பகல்.

அது தாமதம் போல் 
தோன்றினாலும் 
நிச்சயம் வரும்
ஒரு பொழுதில்

உங்களுக்கு
அதிர்ஷ்டம் இருந்தால் 
வாழும்போதே
பார்க்கலாம்.

அவர்கள் படும்
துயரைத்தைக் கண்டு
சந்தோசப்பட்டு
களிகூறுவதற்கு அல்ல

ஒரு தீய ஆன்மா
நன்மையாக 
உருமாறுவதைத் 
தரிசிக்க மட்டுமே.

பஞ்ச பூதங்களும் 
புன்னகையோடும்
ஆவலோடும்
காத்துக் கொண்டு 
நிற்கின்றன.


ஒளிப்படம் நன்றியுடன் : ராமலக்ஷ்மி ( http://tamilamudam.blogspot.com )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக