திங்கள், 4 டிசம்பர், 2017

புதிய பாதை - அழகிய பயணம் .

புதிய பாதை - அழகிய பயணம் .





ஒரு புதிய வருடத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டோம். மறுபடியும் நீள்வட்டப் பாதையில் ஒரு புதியப் பயணம் துவங்க இருக்கிறது.

தேடலின் பாதையில் பயணிப்பவர்க்கு வாழ்க்கை என்பது தொடர்ந்து கற்றுக்கொண்டே முன்னேறுவதுதான்.  கடந்து சென்ற வருடத்தின் அனுபவங்கள் நிச்சயம் பல புதியப் படிப்பினைகளை நமக்குக் கற்றுக்கொடுத்து இருக்கும்.

வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி இடைவிடாது நிகழ்ந்து மனதில் பல புதிய அனுபவங்களைப் பதிவு செய்கிறது. 

நம்முடைய நம்பிக்கைகளின் அடிப்படையில் மனம்  அதை நன்மை, தீமையென இனம் பிரித்து, தரம் பிரித்து ஆழ்மனதில் சேமித்து வைக்கிறது.

இயல்பாகவே மனம் மகிழ்ச்சிதரும் பாதையில் செல்லவேத் துடிக்கிறது.

ஆனால் துன்ப அனுபவங்களும், ஏமாற்றங்களும், தோல்விகளுமே நம்மை முதிர்ச்சியான மனநிலைக்கு நேராக வழிநடத்துகின்றன.

குறிப்பாக நன்மை செய்து, நேர்மையாக வாழ்பவர்கள் வாழ்வில் இடைப்படும் துன்ப நிகழ்வுகள், அவர்களைப் பொன்னை புடமிடுவதுபோலப் புடமிட்டு மாசு மருவற்றவர்களாக மாற்றி ஒளிவீசச் செய்கிறது.

நேர்மையானவர்களை துன்பப்படுத்துபவர்கள் உண்மையில் அவர்களுக்கு நன்மையையே செய்கின்றனர். அவர்கள் நல்லவர்களை மேலும் தூய்மையாக வாழும்படி தூண்டுகின்றனர். அவர்கள் மனதில் திட சங்கல்பத்தை உருவாக்குகின்றனர்.

ஒவ்வொரு வெற்றிக்குப் பின்பாகவும் ஒரு வலியும், அவமானமும், நிராகரிப்பும் நிச்சயம் மறைந்திருக்கும்.

அடிப்படை சத்தியம் 


இந்தப் பிரபஞ்சம் ஒரு நேர்த்தியான ஒழுங்குமுறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் பிரபஞ்ச சக்தியோடு மனித மனம் தொடர்பு கொள்ள மூன்று அறநெறிகள் முக்கியம்.  

அன்பு, உண்மை, ஒழுக்கம்.

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு செயல்களுக்கான எதிர் விளைவுகளில் மாறத்தன்மையுடைய ஒர் ஆதாரமான  அடிப்படை விதி உள்ளது. 

நன்மை செய்பவர் எவ்வளவு துன்பத்தையும், அவமானத்தையும் சந்தித்தாலும் இறுதியில் புகழையும் மேன்மையும் அடைவர்.

தீமையின் வழியில் செல்பவர் எவ்வளவு இன்பத்தில் மூழ்கித் திளைத்தாலும் இறுதியில் அவமானத்தையும், பரிகசிப்பையும் தீராப் பழியையும் அடைவர்.

இஃது எந்த யுகத்திலும் மாற்றவே முடியாத சத்தியம்.

நல்லது.

இந்தப் புரிதலின்அடிப்படையில் வருகின்றப் புதிய வருடத்தின் சில நல்லத் தீர்மானங்களை எடுத்து அதை நம்  வாழ்க்கையில் கைக்கொள்ள முயற்சிக்கலாமே.

🔸 இயற்கையைப் போற்றுவோம்.


இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் உரிமையானது. ஒவ்வொரு உயிரினமும் மற்றொன்றைச் சார்ந்தே ஜீவிக்கின்றன. இயற்கையின் படைப்புகள் போற்றப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும். 

இதற்கு நம்மால் எவ்விதம்  ஒத்தாசையாக உதவ முடியும் எனச் சிந்திப்போம். 
நம் முன்பாக ஆயிரம் வாய்ப்புகள் உள்ளது. 
ஒரு சிலவற்றை கடைப்பிடிக்க பிரதிக்ஞை எடுப்போம்.

🔹 மனநலம் மேம்பாடு


உயர்ந்த எண்ணங்களே மேன்மையான வாழ்வுக்கு அச்சாரம். 

ஆனால் மனதின் ஆசைகளும் விருப்பங்களுமே நமது சிந்தனையின் போக்கைத் தீர்மானிக்கிறது. 

நமது ஆழ்மன விருப்பங்கள், தேடல்களே நமது  குணங்கள் மற்றும்  பண்புகளாக பரிமளிக்கிறது.

ஆகையால் நாம் எதை விரும்புவது நல்லது என்பதை உணர்ந்துகொள்ளப் புத்தி அவசியமாகிறது. 

பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி.

இறை நம்பிக்கை மற்றும் சிறந்த நூல்கள் புத்தியை தெளிவிக்க உதவுகின்றன.

கடவுளுக்குப் பயப்படுதலும், அவருக்குப் பிரியமாக வாழத் துவங்குவதுமே ஞானத்தின் துவக்கம். 

மனதை மேம்படுத்தும் பலவித உபாயங்களைப் பிரியமுடன் தேடி அவற்றுள் சிலவற்றை அனுதினம் பின்பற்றத் தீர்மானியுங்கள்.

🔸 உடல்நலம் மேம்பாடு.


சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம். 

நல்ல தேக ஆரோக்கியமே மகிழ்ச்சியான வாழ்வின் அடிப்படை. 

உடல் நலம் பிரதானமாக மூன்று காரியங்களை உள்ளடக்கியது.
  • உணவு
  • உடற்பயிற்சி
  • ஓய்வு.
  • உணவு குறித்து விழிப்புணர்வு ஊட்டும் ஏராளமான கட்டுரைகள் உண்டு. சிறந்த உணவுப் பழக்கத்தை பின்பற்றத் தீர்மானியுங்கள்.
  • நடைப்பயிற்சி, விளையாட்டு, தியானப் பயிற்சி, யோகா, மூச்சுப் பயிற்சி, மலையேற்றம், நீச்சல் என எதாவது ஒன்றைக் கிரமமாக செய்யத் துவங்குங்கள். நேரம் இல்லை என உதாசினம் செய்தால் பிற்காலத்தில் மிகவும் வருத்தப்பட வேண்டியதாக இருக்கும்.
  • ஓய்வு என்பது பொழுதை போக்குவது அல்ல. சும்மா முடங்கிக் கிடப்பதும் அல்ல.  பொழுதைப் பயனுள்ளதாக்குவது. 
எந்த ஒரு செயல் உங்களுடைய மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறதோ அதுதான் பரிபூரண ஓய்வு.

இயற்கையின் அமைதியில் நீண்ட நெடியதொரு நடை, புண்ணியத்தலப் பயணங்கள், கடற்கரையின் காற்று, உறவினர், நண்பர்கள் கூடுகை, எளிய மனிதர்களுக்கான சேவையில் பங்கெடுத்தல், சமுக மேம்பாடு குழுவில் அங்கம் வகித்தல், கலை சார்ந்த படைப்புகள் படைத்தல் என நல்ல பயனுள்ள முறையில் ஓய்வுநேரத்தைச் செலவிடும் செயல்களில் ஈடுபடத் தீர்மானிக்கலாம்.

நல்ல தீர்மானங்களை எடுத்து வாழ்வு பயனுற அமையட்டும்.

வாழ்க வளமுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக