செவ்வாய், 12 டிசம்பர், 2017

உடையது விளம்பேல்.

🌸 உடையது விளம்பேல்.

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்)


உடையது விளம்பேல் : 

தன்வசம் அருமையாக உள்ளதை வெளிப்படையாக அனைவரிடமும் சொல்லித் திரியாதே.

அல்லது

தன்னிடம் உள்ளதை (சிறப்புகளை) தற்பெருமை பேசாதே

எந்த பிற நலங்களுக்கும் அடங்காத சிறப்பு சொல்வன்மைக்கு உண்டு.
நல்லவையும், தீயவையும் நமது பேச்சால் வரும். எனவே பேசும் பேச்சின் பின் விளைவுகளை உணர்ந்து பேசுதல் நல்லது.

நுட்பமான அறிவுடையவர்கள் மறந்தும் அறிவற்ற சொற்களைப் பேசமாட்டார்கள்.

நமது வலிமையை தற்பெருமை பேச்சால் வெளிப்படுத்தினால் நாம் செய்ய இருக்கும் செயலுக்கு கேடு வரும்.

அத்துடன் அருமையான அந்தப் பொருளின் மதிப்பும், தன்மையும் குறைந்துவிடும்.

இதை விளக்க இராமயணத்திலிருந்து ஒரு சிறு கதை : 


இராவணன் சீதையை தூக்கிச் செல்லும் பொழுது துக்கம் தாளாமல் சீதை வாய்விட்டுக் கதறி அழுதாள். சீதையின் அழுகுரலைக்கேட்ட ஜடாயு என்னும் கழுகரசன் அதி வேகமாகப் பறந்து வந்து இராவணனை எதிர்த்து போர் செய்தார்.

வெகு நேரம் அவர்கள் இருவரும் வெற்றி தோல்வி இல்லாமல் சண்டையிட்டார்கள்.

இராவணன் ஜடாயுவை வஞ்சனையாகக் கொல்ல நினைத்து ஜடாயுவிடம்
"உன் உயிர்நிலை எங்கே இருக்கிறது?" என்று கேட்டான்.

ஜடாயு சத்தியவான். ஆதலால் பொய் சொல்லக் கூடாது என்று இராவணன் கேட்டதும் தன் உயிர் நிலை தன்னுடைய இறகில் இருப்பதாக உண்மையைச் சொன்னார்.

பிறகு இராவணனுடைய உயிர் நிலை எங்கே இருக்கிறது எனக்கேட்ட ஜடாயுவிடம் இராவணன் தன் உயிர் நிலை தன் கால் கட்டை விரலில் இருக்கிறது என்று பொய்யை சொன்னான்.

உடனே ஜடாயு இராவணனின் கால் கட்டை விரலை வெட்டினார். அதே சமயத்தில் ராவணன் ஜடாயுவின் இறகுகளை வெட்டி எறிந்தான்.

தன் உயிர் நிலை வெட்டப்பட்டதால் ஜடாயு துடி துடித்து கீழே விழுந்து மாண்டார். இராவணனோ ஒரு தீங்கும் இல்லாமல் வெற்றி பெற்று சீதையைத் தூக்கிச்சென்று விட்டான்.

தன் அருமையான உயிர் நிலையை எதிரியான இராவணனிடம் வெளிப்படுத்தியதால் நல்லவர் ஜடாயு தன் உயிரை இழக்கும்படி நேர்ந்தது.

இந்தக் காரணங்களினால்தான் நமது பெரியோர்கள் உயர்ந்த சிந்தனைகளை பெறத் தகுதியானவர்களுக்கு மட்டுமே புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதி வைத்துள்ளனர். 

அந்த உயர்ந்த நெறிகளை கடைப்பிடிப்பவர் அன்றி  மற்றவர்கள் அதை வாசித்தாலும் அதன் பொருள் புரியாது.

நீதிக்கதை : http://athichudi.blogspot.com இல்  இருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டுள்ளது.

2 கருத்துகள்: