வியாழன், 14 டிசம்பர், 2017

ஏற்பது இகழ்ச்சி

🌸 ஏற்பது இகழ்ச்சி.

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்)


8 - ஏற்பது இகழ்ச்சி : 

பிச்சை எடுத்தல் அவமானம்.

பிறரிடம் யாசித்து பொருள் பெறுவது இரத்தல் எனப்படும்.

இல்லாதவன், இருப்பவனிடம் ஒன்றை வேண்டி நிற்பதைப் பார்த்தால் மனம் வேதனைப்படும்.

அந்த நேரத்தில் பிச்சை கேட்கிறவன் உடல், மனம் கூசி குன்றிப் போய் விடுகிறான். அதைப் பார்க்கும்போது உள்ளம் உருகுகின்றது.

அப்படி பிச்சைக் கேட்பவனுக்கு,  வசதியிருந்தும் கொடுக்க மறுத்து, அவர்களை அவமதிக்கும் கொடுமையானவர்களைப் பார்க்கும்போது, உள்ளம் உடைந்து அக் கொடூரர்களை மனம் சபிக்கிறது.

எனவே பிறரிடம் சென்று பிச்சை எடுத்து இரக்காமல், தன் சொந்த முயற்சியால் கிடைக்கும்  கஞ்சியைக் குடிப்பது அமுதத்தைவிடச் சிறந்தது.

வாழ்க்கை கடலை கடக்க, யாசித்தல் என்னும் பாதுகாப்பற்ற படகில் பயணம் செய்தால், கொடுக்க மனமற்ற செல்வந்தர் என்ற பாறையை அடையும்போது படகு சின்னாபின்னமாகும்.

கடன் வாங்காது இருப்பதை வைத்து, எளிமையாக வாழ்வது நிறைவான, உண்மையான மகிழ்ச்சியைத் தரும்.

உடல் நலம் குன்றியோர், மன நலமற்றவர், முதியோர், உழைக்க வழியற்றோருக்கு அவர்கள் கேட்காமல் நம்மால் முடிந்த  உதவிகளைச்செய்வது மாபெரும் நற்பேறு.

சிறு குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போரை ஒருபோதும் ஆதரிக்கக்கூடாது.

சொகுசான வாழ்க்கைக்காகப் பிறரை ஏமாற்றி, வஞ்சனையான வழியில் பொருள் ஈட்டுவது, பிறரை ஏய்த்துப் பிழைப்பது ; இவை பிச்சை எடுப்பதிலும் மிகக் கேவலமானது.

வியர்வை, உழைப்பு, கண்ணீர், விடா முயற்சி மூலமாக ஈட்டப்படும் செல்வம் மட்டுமே குடும்பம் தழைக்க உதவும். உழைக்காது மற்ற வழியில் வரும் பொருள்கள்  முதலில் குதுகலத்தை அளிப்பது போல இருந்தாலும் முடிவில் அழ அழ வைத்து விட்டுச் செல்லும்.

எச் சூழலிலும் பிறரிடம் கையேந்தி வாழாமல் இருப்பது மேன்மை.

2 கருத்துகள்: