வெள்ளி, 29 டிசம்பர், 2017

இணக்கம் அறிந்து இணங்கு.

🌸 இணக்கம் அறிந்து இணங்கு.

(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்)


19. இணக்கம் அறிந்து இணங்கு :

நற்குணமும், நற்செய்கையும் உடையவர் என்பதை உறுதியாகப் புரிந்து கொண்டு ஒருவரோடு நட்பு செய்.

ஒருவருடன் நட்பு கொள்ளும் முன்பாக கவனமாக ஆராய்ந்து, பின்பு பழக வேண்டும்.

தொடர்பில் (Contact List) இருப்பவர்கள் எல்லாம் நண்பர்கள் கிடையாது.

வாழ்வின் கடினமான நேரங்களில்  தனது நேரத்தை, தனது பொருளை, தனது சக்தியை நம்முடன் பகிர்ந்துகொள்ள ஆயத்தமாக இருப்பவர்களே உயிர் நண்பர்கள்.

இன்னும் எளிமையாகப் புரிந்து கொள்ள, நாம் சுகவீனமாகி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அந்த நடைபாதையில் நமக்காகக் காத்திருக்கும் அன்பர்களே நம்முடைய உண்மையான நண்பர்கள்.

ஒரு மனிதனது மிகச் சிறந்த நட்பு அவரது வாழ்க்கைத் துணையாகவே இருக்க வேண்டும். தனது குடும்ப உறவுகளில்  உண்மையாக நட்பு பாராட்டுபவரே நம்பத்தகுந்தவர்.

எந்தச் சூழலிலும் தவறான வழிகளில் துணிந்து வாழ்பவருடன் இணக்கமாக நட்பு பாராட்டி  நடக்கத் தேவையில்லை.  தான் செய்யும் தவற்றை உணர்ந்து மனம் திருந்தும்வரை அப்படிப்பட்டவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது.

தவறு செய்பவரோடு உள்ள தொடர்பு அக்கினி கங்கை துணியில் சுற்றி மடியில் வைப்பதற்குச் சமம்.

அனைவரையும் நேசித்து அன்பு பாராட்டுதல் வேண்டும். மனதாலும் பிறர்க்கு தீங்கு நினைக்கக் கூடாது.

எனினும் பழகுபவர் தீயவர் என உணர்ந்தால் அஃது எத்தகைய உறவாக இருப்பினும் அத் தீயவருடன் நட்பு பாராட்டக்கூடாது.

தவறாகக் குறுக்கு வழியில் பணம் சேர்ப்பவர், பிறரை ஏமாற்றி அவர் உடைமைகளை கொள்ளையிடுபவர்,  உழைக்காது சோம்பித் திரிபவர், தற்பெருமை மிக்கவர், இரகசியங்களைத் தூற்றித் திரிபவர், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்,  வீண் பிடிவாதக்காரர், சுயநலமிக்கவர், ஒழுக்க நெறியற்றவர், தனது காரியத்திற்காக பழகுபவர், முன் கோபக்காரர் இது போன்ற குணமுடையவர்களிடம், தாமரை இலைத் தண்ணீராக விலகி வாழ்தல் சமர்த்தானது.

ஒத்த கருத்துடைய சமூகவலைத்தள நட்புகள் கருத்துப் பரிமாற்றத்துக்கு மட்டுமே உதவும். வாழ்வில் எதிர்ப்படும் சிக்கல்களுக்குத் தீர்வாக பலவிதமான ஆலோசனைகள் இவ்வகை நட்புகள் மூலம் கிடைக்கும்.

எனினும் முகமறியா நட்புகளிடம் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வது நல்லதல்ல. ஒருவரது பேச்சு, எழுத்தின் மூலமாக அவரது தனிப்பட்ட குணத்தை ஒருபோதும் நம்மால் தீர்மானிக்க முடியாது.

ஒருவர் நல்ல குணமுடையவர் என்பதை அவரது செயல்களே வெளிப்படுத்தும்.

மாறுபட்ட சிந்தனை இருப்பினும் ஒத்த நோக்கமுடையோரே எளிதில் நட்பாக இருக்க முடியும்.

நட்பின் எண்ணிக்கை எவ்வளவு குறைவாக உள்ளதோ அந்த அளவு அது வலிமையுடையதாகவும் இருக்கும்.

நம்மால் பகிர்ந்து அளிக்கக் கூடிய நேரம் மற்றும் பொருள் வளம்,  பண விவகாரங்களில் நேர்மையாக இருப்பது நீடித்த நட்பிற்கு மிக முக்கியம்.

எனவே ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.

2 கருத்துகள்: