வியாழன், 21 டிசம்பர், 2017

அஃகஞ் சுருக்கேல்

🌸 அஃகஞ் சுருக்கேல்

(ஆத்திசூடி - உயிர் வருக்கம்)


13 . அஃகஞ் சுருக்கேல் :

தட்டுப்பாடு நிறைந்த தானியங்களை பதுக்கி வைத்து அதிகவிலைக்கு விற்று பணம் சம்பாதிப்பது கூடாது. 

அஃகம் என்றால் தானியம் என்று பொருள்.

தானியத்தை அளந்து விற்கும்பொழுது அளவிற் குறைக்காது சீராக அளந்து கொடுத்தல் வேண்டும்.

பணம் நடைமுறையில் இல்லாத அந்த காலத்தில் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்தது.

விவசாய விளை பொருட்களே பெரும்பாலும் எளியவர்களுக்கு, அவர்கள் செய்யும் வேலைக்குக் கூலியாக வழங்கப்பட்டது.

அதனை மரக்கால், படி ஆகியவற்றால் அளந்து வணிகம் செய்தனர்.

இந்த வாக்கியத்தின் மையக்கருத்து பிறரை ஏமாற்றி ஆதாயம் தேடாதே.

வணிகம் என்பது நெறிமுறை பிசகாது செம்மையாக நடைபெற வேண்டும்

வர்த்தகம் பெருகியுள்ள இந்நாட்களில்  இந்த நெறிமுறையைப் பின்பற்றுவது, சமூகம் நன்னெறியிற் செல்லுதற்குப் பெரிதும் உதவும்.

இயேசு கிறிஸ்து சொன்னதொரு கதை இங்கு நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும்.

ஒரு மிகப்பெரிய விவசாயி இருந்தான். அவனுக்கு ஏராளமான நிலங்கள் இருந்தது. அது நன்றாய் விளைந்தது.

அப்பொழுது அவன் : நான் என்ன செய்வேன்? என் தானியங்களை சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே? எனக் கவலைப்பட்டான்.

இந்த விளைச்சலை யாருடனும் நியாயமாகப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.

அதைப் பதுக்கிவைத்து அதனால் கிடைக்கும் கொள்ளை இலாபத்துக்கு பேராசைப்பட்டான்.

அவன் தனது களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி விளைந்த தானியங்களை சேர்த்து வைத்து அதன் மூலம் மிகப் பெரும் செல்வத்தை ஈட்டத் திட்டமிட்டான்.

இந்தக் கொள்ளை வருமானம் மூலம் அநேக வருஷங்கள் உல்லாசமாகச் சுகித்து வாழலாம் என மனதில் சிந்தித்தான்.

இயேசு அந்த மனிதனை பெரும் முட்டாள், மதிகேடன் என்றார்.

அந்த மனிதனுக்குத் தான் எத்தனை வருடம் உயிரோடு இருப்போம் எனத் தெரியாது.

ஒருவேளை அவன் அந்த இரவிலேயே மரணமடைந்தால் அவனது கொள்ளை இலாபத்தால் சேர்த்த இந்தச் சொத்துக்களால் என்ன இலாபம் இருக்கக் கூடும்.?

மகிழ்ச்சி என்பது செல்வத்தை அநீதியான வழிகளில் சேர்ப்பதினால் அடைவதல்ல.

நியாயமாகப் பொருளீட்டுவதும், அதைப் பகிர்ந்து வாழ்வதிலும் அடங்கியுள்ளது.


4 கருத்துகள்: