சனி, 23 டிசம்பர், 2017

ஙப் போல் வளை

🌸 ஙப் போல் வளை 

(ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்)


15 - ஙப் போல் வளை : 


பெரியோர் சொல்படி பணிந்து வளைந்து கொடுத்து வாழ்தல் நலம். 

தமிழ் மொழிக்கென உள்ள சிறப்பெழுத்துக்கள் "ழ”  மற்றும் “ங”. 

"ங" - இந்த எழுத்தின் வடிவத்தைக் கூர்ந்து கவனித்தால் அது ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல இருப்பதைக் காணலாம்.

இந்த எழுத்தின் மற்றுமொருச் சிறப்பு : மழலை எழுப்பும் முதல் ஒலி சப்தம் ”ங்கா..,”.

ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு புரளும்போது, கரையோரத்தில் இருக்கும் வலிமைமிகும் காட்டு மரங்களைக்கூட பெயர்த்து எடுத்துவிடும்.

ஆனால் காட்டாற்று வெள்ளம் வடிந்த பின்பு பார்த்தால், கரையோர நாணல்கள் அழியாது நிலைத்து நிற்கும்.

அது போல நமது வாழ்வில் எதிர்ப்படும் எதிர்ப்புகள், இடையூறு, துன்பங்களில் சில சமயங்களில் இதயத்தை கடினப்படுத்தகூடாது. அத்தகைய நிலைப்பாடு அழிவையேத்தரும்.

வாழ்வின் கடினமான சூழல் ஏற்படுத்தும் துன்பத்தால் உடைந்து போகாது, நெளிவு சுளிவோடு வளைந்து கொடுத்து அத்துன்பைச்சூழலில் இருந்து முதலில் கடக்க முயற்சிக்க வேண்டும். 

"ங" இந்த எழுத்து வடிவமும் சிறப்பானது.

இந்த எழுத்தை எழுதும்போது முதல் கோடு கற்றுத் தருவது வாழ்வில் நிமிர்ந்து மேல் நோக்கி எழும்பு.

எதிர்ப்பு எதிர்படும்போது சற்று வளைந்து சாய்ந்து கொடு.

தொடர்ந்து வாழ்வில் எதிர்ப்பான கடினமான சூழலா?

அந்தச் சூழலோடு மல்லுக்கட்டாது கீழ் நோக்கி வா!

ஆனால் சோர்ந்து போகாது மறுபடியும் தலை எடுத்து வளைந்து பார்,

பின்பு ஆசுவாசப்படுத்தக் கிட.

இறுதியில் முழுபெலத்துடன் நிமிர்ந்து நில்.

மற்றுமொருப் பொருள் :


'ங' என்னும் எழுத்தானது வாக்கியத்தின் முதலில் வராது.

ஆனால் அஃது தான் பயனுள்ளதாக இருந்து தன் வருக்க எழுத்துக்களை தழுவும்.

அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களைக் காக்க வேண்டும். 

வெப்பம் மிகும் கோடைக்காலத்தில் தன்னை அடைந்தார்க்கு எல்லாம் மரம்  நிழலைத்தரும். தனது கனியை உண்ணத் தரும்

அது போல தன்னைச் சார்ந்த சுற்றத்தாரையெல்லாம் நேசித்து, வளைந்து நெளிந்துக் கொடுத்து ஒரே தன்மையாகக் காத்து  பழுத்த மரம் போலப் பலரும் பயன் நுகர வாழ்வதே சிறப்பானது.

2 கருத்துகள்: